வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்


ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன்அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது.

1. ரமழானின் சிறப்பு.

2. குர்ஆனின் சிறப்பு

3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும்.

ரமழானின் சிறப்பு:
ஒரு வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும் இம் மாதங்களிற் சில மார்க்க ரீதியில் சிலாகித்து நோக்கப்படுகின்றது. அவற்றில் ரமழான் மாதம் பிரதானமானதாகும். இம்மாதம் தீய ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். இதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் இபாதத்துக்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவதை விடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு இம்மாதத்தில் வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்லவழி நோக்கித் திருப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் கொண்டுள்ளது. இம்மாதத்தின் சிறப்புக்களுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?

அல்குர்ஆன் அருளப்பட்டது:
ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. அதுவே ரமழானின் அனைத்துச் சிறப்புக்களுக்கும் அடிப்படையாகும். அது அருளப்பட்ட மாதம் சிறப்பானது. அது அருளப்பட்ட நேரம் மகத்தானதாகும்.

“நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். நிச்சயமாக (அதன்மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்” (44:03)

அந்த இரவு எவ்வளவு பாக்கியம் பெற்றது என்று கூறும்போது “1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்” என குர்ஆன் (பார்க்க – 97:1-3) கூறுகின்றது.

மேற்படி சூரா அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு 1000 இரவுகளை விட அருள் வளம் பொதிந்தது என்று கூறுகின்றது.

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்திற்கும், இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதர்களுக்கான வழிகாட்டல்:
அது சாதாரண நூல் அல்ல. சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவரும் சாதாரணமானவரல்ல. மலக்குகளின் தலைவரும், சக்தியும் நம்பிக்கை நாணயமுமுடைய ஜப்ரீல்(அலை) அவர்கள் அதனை சுமந்து வந்தார்கள். அதனைப் பெற்று மக்களுக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவரும் சாதாரண மானவரல்ல. படைப்பினங்களில் சிறந்த, இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அதனை மனித குலத்துக்குப் போதித்தார்கள். இவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.

இந்த வேதம் ஏனைய வேதங்களைப் போன்று சுருங்கிய வட்டத்தைக் கொண்டதல்ல. இது வாழும் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. ஏற்கனவே உள்ள வேத மொழிகள் செத்துவிட்டன. ஆனால், அரபு வாழும் மொழியாகும். இருப்பினும் இது அரபியர்களுக்குரிய வழிகாட்டியல்ல. அகிலத்தாருக்குரிய வழிகாட்டியாகும்.

ஏனைய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்கு, மூஸாவின் சமூகத்தாருக்கு, ஆதின் கூட்டத் தாருக்கு என்று இருக்கலாம். இது முஹம்மதின் சமூகத்திற்கு அருளப்பட்ட வேதம் இல்லை. முழு மனித சமூகத்திற்கும் அருளப்பட்ட வேதமாகும்.

அதேவேளை, முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்க்கை காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. அது உலகம் உள்ள அளவு வாழும் மனிதர்களுக்கான வழிகாட்டி வேதமாகும். இந்த வகையில் அல்குர்ஆனின் வருகை என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல.

வழிகாட்டலின் முக்கியத்துவம்:
வழிகாட்டல் என்பது மனிதனுக்குப் பிரதானமான அம்சமாகும். இன்று பல இலட்சியங்களுடன் வாழும் மக்கள் உள்ளனர். இலட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் இயல்பும் இவர்களிடம் இருக்கின்றது. ஆனால், சரியான இலட்சியத்திற்கும் அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான அணுகுமுறைக்குமான வழி காட்டல்தான் இல்லாமலுள்ளது.

வறுமையில் வாடுபவனுக்குப் பொருள் தேட வழிகாட்டல் தேவை. பொருள் தேடியவனுக்கு அதனை முதலீடு செய்யவும் செலவழிக்கவும் வழிகாட்டல் தேவை. கற்கும் ஆர்வமும் அயராத முயற்சியுமுள்ள மாணவனுக்கு எதை, எப்படி கற்பது என்ற வழிகாட்டல் தேவை. கற்பிப்பதற்கு, உண்பதற்கு, உறங்குவதற்கு அனைத்துக்குமே வழிகாட்டல் அவசியமானதாகும்.

இவ்வகையில் அல்குர்ஆன் வழிகாட்டலாக அதுவும் அகில உலக மக்கள், முஸ்லிம், காபிர் என அனைவருக்குமான வழிகாட்டலாகத் திகழ்கின்றது.

ஏனைய வேதங்கள் போன்று இது குறிப்பிட்ட காலத்திற்கோ, இடத்திற்கோ, இனத்திற்கோ, மொழியினருக்கோ சுருங்கியதாக இல்லாத, பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக் கூடியதான முழு மனித சமூகத்திற்குமுரியதாக இருப்பதால் இந்த வேதம் அருளப்பட்ட மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இன்று மனித குலம் நல்ல வழிகாட்டல் இல்லாது துடுப்பு இழந்த படகு போல் தத்தளிக்கின்றது. அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல திட்டங்களை முன்வைக்கின்றனர். ஆனால், அவை மனிதனை அதள பாதாளத்தை நோக்கித் தள்ளி விடுபவையாகத் திகழ்கின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண் – பெண் சரிநிகர் சமமாக ஒன்றுபோல் பேச, பழக இடமளிக்க வேண்டும் என்றனர். பாலியல் பலாத்காரத்தை நீக்க பெண்கள் மூடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு திறந்த நிலைக்கு வரவேண்டும். அப்போது ஆண்கள் மத்தியில் இருக்கும் அறியும் ஆற்றல் குறைந்து பார்த்துப் பார்த்துப் பழகிப்பேய்விடும் என்றனர். இந்தக் கொள்கைளெல்லாம் ஐரோப்பிய உலகில் பாலியல் பலாத்காரத்தை வளர்க்கவே வகை செய்தது.

அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றனர். சீனாவில் வீட்டுக்கு ஒரு பிள்ளைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டன. இன்று சீனா பாரிய பெண்கள் பற்றாக்குறையையும் குடிமக்களிடம் தனித்து வாழ்ந்ததால் சகோதர பாசமோ குடும்ப பாசமோ அற்றுப்போய் குற்றச் செயல்களின் எண்ணிக்கை எகிறிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் நிம்மதியாக வாழ்வதற்கு அரசியல், ஒழுக்கவியல், பொருளியல், ஆன்மீகம் அனைத் துக்கும் நல்ல வழிகாட்டலை வேண்டி நின்கின்றது. அகில உலகம் நிம்மதியாக வாழத்தக்க வழிமுறையாக குர்ஆன் திகழ்கின்றது என்பது மகத்தான விடயமே. குர்ஆனுடன் சாதாரண பரிச்சயம் இருந்தாலே முட்டிவிட்டுக் குனியும் இந்த முட்டாள் தனமான போக்கிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.

யாருக்கு வழிகாட்டும்?:
அல்குர்ஆன் அனைத்து மக்களுக்குமான வழிகாட்டல்தான். காஃபிரான அரசு ஒன்று குர்ஆனின் சட்டப் பிரகாரம் ஆட்சி செய்தாலும் கூட அதன் பிரதிபலனான அமைதி, நீதி, நியாயம், அச்சமற்ற வாழ்வு போன்ற அருட்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் இது அனைவருக்குமான வழி காட்டல்தான். எனினும் அல்குர்ஆனிலிருந்து நேர்வழியைப் பெற்று சீர்வழியில் வாழும் பாக்கியம் கிடைக்க இறையச்ச சிந்தனை அவசியமாகும்.

“இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.” (அல்குர்ஆன் 02:02)

இங்கு பயபக்தியுடையோருக்கே இது நேர்வழியைக் காட்டும் என்று கூறப்படுகின்றது. இதனை முரண்பாடாக நாம் கொள்ளக் கூடாது. நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் நமது கண்ணிலும் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி இருக்க வேண்டும். நன்றாகப் பார்வை உள்ள ஒருவர் இருளில் உள்ள பொருளைப் பார்க்க முடியாது. ஏனெனில், அங்கு பொருளில் ஒளி இல்லை. கண்பார்வை இழந்தவர் வெளிச்சத்தில் உள்ளதையும் பார்க்க முடியாது. ஏனெனில், அவரது கண்ணில் ஒளி இருக்காது. கண் பார்வை இழந்தவருக்கு அது இருளாகத்தான் தெரியும். இது சூரியனின் குறைபாடல்ல.

அல்குர்ஆன் சூரியனைப் போன்று ஒளியுடன் திகழ்கின்றது. தக்வா எனும் இறை யச்சம் பார்வையற்றவருக்கு அது வழிகாட்டாது என்பது குர்ஆனின் குறைபாடல்ல. அதைப் பார்ப்போரின் குறைபாடாகும்.

ஆனால், ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை குர்ஆனை ஓதும்போதே தனக்கு நேர்வழி கிடைப்பதற்காக ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். ஹிதாயத்தை அல்லாஹ்விடம் வேண்ட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர் கூட சத்தியத்தைத் தேடும் நோக்கத்தில் குர்ஆனை அணுகினால் அவர் நிச்சயம் அதை அங்கே அடைந்துகொள்வார்.

தெளிவான சான்றுகள்:
இந்த மறை வசனம் தொடர்ந்து ரமழானைப் பற்றி கூறாமல் குர்ஆன் பற்றியே குறிப்பாகப் பேசுகின்றது. அதில் ரமழானில் அருளப்பட்ட அல் குர்ஆன் எனும் மனிதகுல வழிகாட்டி தெளிவான சான்றுகளைக் கொண்டது என்று வர்ணிக்கப்படுகின்றது.
குர்ஆன் வெறும் இறைவேதம் அல்ல. அது இறைவேதம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அதிலேயே தெளிவான சான்றுகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. 1500 வருடங்களுக்கு முன்னர் மனித கற்பனையில் கூட உதித்திருக்க முடியாத அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது. தொள்பொருள் ஆய்வுகள் இன்று உறுதிப்படுத்தும் எத்தனையோ வரலாற்றுச் சான்றுகளை அது தருகின்றது. இவ்வகையில் அது தெளிவான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது.

பிரித்தறிவிப்பது:
அடுத்து இந்த வேதம் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக் கூடியது. ஏனைய மதங்கள் போல் ஒரு கொள்கையை மட்டும் முன்வைத்துவிட்டு இது மௌனியாக இருக்காது. இறைவன் ஒருவன் என்று கூறுவதோடு ஈஸாவோ, வேறு இறைத் தூதர்களோ, மலக்குகளோ இறைமையைப் பெறமுடியாது என்று தெளிவாக அளந்து கூறும்.

நல்லோர்களின் அந்தஸ்த்தைக் கூறும் போதும் நடுநிலை தவறாது அவர்கள் மனித தன்மைக்கு மேல் உயர்த்தப்படமாட்டார். இவ்வாறு எல்லா வகையிலும் சத்தியமும் அசத்தியமும் அல்குர்ஆனால் தெளிவாகக் கூறுபோட்டுக் காட்டப்படும்.

இதனால்தான் படித்தவர்களெல்லாம் கல்லையும், மண்ணையும் வணங்கிக் கொண் டிருக்கும் போது சாதாரண ஒரு முஸ்லிம் கல்லைக் கல்லாகவும், மண்ணை மண்ணாகவும் பார்க்கின்றார். மண்ணால் செய்த சிலை எந்த சக்தி யையும் பெற்றிடாது; வழங்கிடாது என்று அதனைப் பிரித்து அறிந்து கொள்கின்றார். மாட்டை மாதா வாகப் பார்க்காது மாடாகப் பார்க்கின்றான். மனிதனை அவதாரமாகப் பார்க்காது மனிதப் பிறவியாகவே பார்க்கின்றான்.

நோன்பு பிடியுங்கள்:
இத்தகைய அருள் பொதிந்த அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை எவர் அடை கின்றாரோ அவர் அல்லாஹ் அருள்மறையை வழங்கியதற்கு நன்றி செலுத்து முகமாக அம்மாதம் முழுவதும் நோன்பிருக்கட்டும் என்று இம்மறை வசனம் கூறுகின்றது.

நோன்பு முடிந்ததும் நாம் பெருநாள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அந்நாளில் அல்லாஹ்வுக்காக தக்பீர் செய்து எமது மகிழ்ச் சியை வெளிப்படுத்துகின்றோம். இது கூட அல்குர்ஆன் அருளப்பட்டதற்கான நன்றிக்காகவே என்பதை அனேகர் அறிவதில்லை. இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில்,

“உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதையுமே (இதன் மூலம் அல்லாஹ் நாடுகின்றான்)” (2:185)

எனவே, ரமழான் என்றாலும் நோன்பு என்றாலும் அல்குர்ஆனின் மகத்துவத்தை உணர்த்துபவை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு அல்குர்ஆனுக்கு உரிய உயரிய அந்தஸ்தினை வழங்க முன்வர வேண்டும்.

நோன்பு தக்வாவுக்கான வழி:
நோன்பு ஏன் நோற்கப்பட வேண்டும் என்பதுபற்றித் திருமறை கூறும்போது,

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)

என்று கூறுகின்றது. நோன்பின் நோக்கம் இறையச்சமே என்று மேற்படி வசனம் கூறுகின்றது.

நோன்பு என்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் குறித்த நேரம் உணவையும், பானத்தையும் உடலுறவையும் தவிர்த்து வைத்து அல்லாஹ் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். உணவையும் தவிர்ப்பேன், உடல் உறவையும் தவிர்ப்பேன் என்று உறுதியெடுக்கும் பயிற்சியே நோன்பாகும்.

இந்தப் பயிற்சி அல்லாஹ் ஏவியவைகளை எடுத்து நடக்கவும் தடுத்தவைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்க்கும்.

பொறுமையை, நல்ல பண்பாட்டை வீணான காரியங்களில் ஈடுபடாத பக்குவத்தை நோன்பு வழங்க வேண்டும் என்பது நோன்பின் எதிர்பார்ப்பாகும்.

நோன்பும் குர்ஆனும்:
ஹதீஸ்கள் நோன்பையும், குர்ஆனையும் பல கட்டங்களில் இனைத்துப் பேசுகின்றன. நோன்பும் குர்ஆனும் மறுமையில் அவற்றைப் பேணிய அடியார்களுக்காகப் பரிந்து பேசும் என ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் தான் நோன்பும் கடமையாக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, ஆரம்பத்தில் அல்குர்ஆன் தக்வாவுடையவருக்குத்தான் நேர்வழியாக அமையும் என்பதை அவதானித்தோம். இங்கே நோன்பு, தக்வா உணர்வு ஏற்படுவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம்.

நோன்பின் நோக்கத்தைச் சரியாக அடையக்கூடிய வகையில் கட்டுப்பாடாக நோன்பு நோற்கப்பட்டால் அவர் தக்வாவைப் பெறலாம். தக்வாவைப் பெற்றால் அல்குர்ஆன் அவருக்கு நேர்வழியைக் காட்டும். அந்த நேர்வழியை அல்லாஹ் வழங்கியதற்காகத்தான் பெருநாளில் தக்பீர் கூறுகின்றோம்.

சிந்திக்க வேண்டியது:
சிலர் நோன்பு காலத்தில் குர்ஆனை ஓதுவர். அத்துடன் அதை மூடிவைத்து விடுவர். தக்வாவுடையவருக்கு குர்ஆன் நேர்வழி காட்டும் என்றால் அவர் அதில் நேர்வழியைத் தேட வேண்டும். குர்ஆனை ஓதாமல் அது என்ன கூறுகின்றது என்பதை அறியவோ, ஆராயவோ முயலாமல் அல்லது அறிந்தவர் கூறுவதைக் கேட்காமல் இருந்துவிட்டு குர்ஆன் நேர்வழி காட்டும் எனக் கருதமுடியாது. எனவே, தக்வாவுடைய உணர்வுடன் சத்தியத் தாகத்துடன் அல்குர்ஆனை உங்கள் கரங்களில் ஏந்துங்கள். உள்ளங்களில் ஒளியைப் பெறுவீர்கள்.

ரமழானும் தர்மமும்

 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.

ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.

“அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).

எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.

நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).

மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.

பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.

ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).

மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).

ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள். எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.

ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள். இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.

உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.

தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

ரமளானை வரவேற்போம்!

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தை சந்திக்கும் முஸ்லிம்களுக்கு, அந்த ஒவ்வொரு ரமளான் மாதத்தையும் புதிதாக எதிர்கொள்வது போலவே உவகையுடன் – களிப்புடனும் வரவேற்பார்கள். வருடத்தில் பதினோரு மாதங்கள் பகல் பொழுதில் உண்ணுவதையும், பருகுவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தவர்கள், இதற்கு நேர் எதிர்மறையாக பகல் பொழுது முழுவதும் – உண்ணுவதையும், பருகுவதையும் கைவிட்டு – ஏக இறைவனின் திருப்திக்காக மட்டுமே உண்ணா நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்.

வணக்க வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியது. அனைத்து வழிபாடுகளிலும் ”நோன்பு” என்ற வணக்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒருவர் மற்ற வணக்கங்களை தாம் தனித்தே செய்தாலும் அதைப் பிறர் காணும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் உண்ணா நோன்பிருக்கும் வணக்கத்தில் அவர் உண்ணவில்லை, பருகவில்லை என்பதை மற்றெவரும் காண வாய்ப்பில்லை. தனிமையில், எவரும் அறியாமல் உண்ணவும், பருகவும் செய்துவிட்டு நான் உண்ணா நோன்பிருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள முடியும்.

தனிமையில் இருந்தாலும் உண்ணாமல், பருகாமல் இருப்பது இறைவனுக்காக மட்டுமே என்பதால், அடியான் நோன்பென்ற வணக்கத்தைத் தனக்காகவேச் செய்கிறான் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். ரமளான் மாதத்ததை வரவேற்று உண்ணா நோன்பை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்களுக்கு ரமளான் மாதத்திற்கான சில சட்டங்கள் இங்கே..

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

அல்லாஹ் கூறுகிறான்..

விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)

நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)

பிறை பார்த்து நோன்பு..

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு..

மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையைப் பார்த்தேன்’ என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.

நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்..

ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.

ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு..

நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது..

என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.

இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு..

அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ”இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ (ரலி) நூல்கள்- முஸ்லிம், நஸயீ.

(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

சக்தி பெற்றவருக்கே நோன்பு..

யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.

நோன்பாளி மறந்து விட்டால்..

நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

நோன்பாளி என்று கூறி விட வேண்டும்..

உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொய் சொல்லலாகாது..

(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

தண்ணீர் தூய்மைப் படுத்தும்..

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.

உணவிற்கே முதலிடம்..

இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்- புகாரி.

இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் (ரலி) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.

விடுபட்ட நோன்புகள்..

ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.

நோன்பாளி தன் மனைவியிடத்தில்..

நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்- அபூதாவூத்.

(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)

நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்..?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்’ என்றார்,

”என்ன நாசமாகி விட்டீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

‘ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்’ என்றார்,

”ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,

”தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,

அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இயலாது’ என்றார்,

பின்பு நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது,

(அதை அவரிடம் வழங்கி) ”இதை தர்மம் செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு அவர் ‘என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..’ என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள், பின்பு ”இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக” என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.

”அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா..?

நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா (ரலி) உம்மு ஸல்மா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அல்குர்ஆனின் மாதம்

முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான்
இந்த ரமழான்.
இது நோன்பின் மாதமாகும்,
இது அல்குர்ஆனின் மாதமாகும்,
இது பொறுமையின் மாதமாகும்,
இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,
இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,
இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: ‘எண்ண முடியுமான சில நாட்களாகும்’ (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை

1. ‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

2. ‘உங்களில் எவர் அம்(ரமழான்)மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

3. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிலைபெற்றுள்ளது:

முதலாவது: ‘ஷஹாதது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்).

இரண்டாவது: தொழுகையை நிரைவேற்றல்,

மூன்றாவது: ஸகாத் கொடுத்தல்,

நான்காவது: ஹஜ் செய்தல்,

ஐந்தாவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல்.’

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

4. ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபியிடத்தில் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எதை அல்லாஹ் என் மீது விதியாக்கினான் என வினவினார். அதற்கு நபியவர்கள், ஐந்து நேரத்தொழுகையாகும் அதைத்தவிர உபரியானவைகளை நீ விரும்பி செய்தால் உண்டு. நோன்பில் அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினான் அதற்கு நபியவர்கள், ரமழான் மாத நோன்பாகும் அதைத்தவிர உபரியானவைகளை நீ விரும்பி நோற்றால் உண்டு. ஸகாதில் அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினான் அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அதன் சட்டங்களை தெளிவு படுத்தினார்கள். சத்தியத்தின் மீது அனுப்பி எவன் உங்களை கண்ணியப்படுத்தனானோ அவன் மீது சத்தியமாக அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினானோ அதில் எந்தக்குறைவும் நான் செய்யமாட்டேன், உபரியானவைகளை நான் செய்யமாட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், இவர் சொல்வதில் உண்மையாளராக இருப்பாரென்றால் வெற்றி பெற்று விட்டார் என்றோ, அல்லது உண்மையாளராக அவர் இருப்பரானால் சுவர்க்கம் நுழைந்து விட்டார் என்றோ’ கூறினார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

5. அப்துல் கைஸ் குழுவினர் நபியிடத்தில் வந்த போது இவர்கள் யாரென நபியவர்கள் கேட்டார். அவர்கள் ரபீஆ கோத்திரத்தார் என கூறினர். எந்தக்கவலையும் துக்கமும் அற்ற வரவாக உங்கள் வரவு அமையட்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! புனிதமான மாதங்களில் தவிர உங்களை சந்திக்க வருவதற்கு எமக்கு முடிவதில்லை. எமக்கும் உங்களுக்கும் மத்தியில் நிராகரிப்பாளர்களான முழர் கூட்டத்தினர் வசிக்கும் இடம் உள்ளது. அல்லாஹ்வின் தூதரே எம்மை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் காரியங்களை எமக்கு கட்டளையிடுங்கள் அதை நாம் நிறைவேற்றுவதுடன் எம்முடன் இருப்போருக்கும் அதை நாம் அறிவிப்போம். இன்னும் அவர்கள் குடிபானங்களை பற்றியும் கேட்டனர். நபியவர்கள் அவர்களுக்கு நான்கை கட்டளையிட்டதுடன், நான்கை விட்டும் அவர்களை தடுத்தார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துமாறு ஏவினார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துவது என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தான் மிகவும் அறிந்தவர்கள் என அவர்கள் கூறினர், ‘அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்). இரண்டாவது: தொழுகையை நிறைவேற்றல், மூன்றாவது: ஸகாத் கொடுத்தல், நான்காவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல், கனீமத்தில் ஐந்தில் ஒன்றை கொடுத்தல்’ என கட்டளையிட்டனர். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

6. குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷுரா தினம் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர், பிறகு நபியவர்களும் ரமழான் நோன்பு கடமையாகும் வரை அந்த தினத்தில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் பின் உங்களில் நாடியவர்கள் (ஆஷுரா) நோன்பை நோற்கவும், நாடியவர்கள் விடவும் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி.

நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களின் மூலம், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையென்பதை விளங்க முடிகிறது. இதை எவர் மார்க்கம் அனுமதித்த தகுந்த காரணமின்றி அலட்ச்சியப்படுத்துவாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய குற்றத்தை செய்தவராவார். நம்மில் சிலர் இந்த ரமழான் மாத நோன்பை அலட்சியமாக விட்டு விடுவதையும் அதைப் பற்றி எந்தக் கவலையுமின்ற இருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.

மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

காரணமில்லாமல் ரமழானின் நோன்பை விடுவது கூடாது. அது பெரும்பாவங்களில் ஒன்றாகும். வேண்டுமென்று அவர் நோன்பைவிட்டால் அவர் பாவியாகிவிடுவார். அதற்காக அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதுடன் அதை அவர் நோற்க வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னிடத்தில் இரு மனிதர்கள் வந்து எனது மேல்கையை பிடித்து கரடு முரடான ஒரு மலைக்கு கொண்டுசென்று அதில் ஏறுமாறு கூறினார்கள். அதற்கு நான் என்னால் முடியாது என்று கூறினேன். அவ்விருவரும் உமக்கு நாம் வழியமைத்து தருகின்றோம் என்று கூறியதும், நான் மலையின் நடுப்பகுதிக்கு செல்லும்வரை ஏறினேன். அப்போது கடுமையான சத்தத்தைகேட்டு இது என்ன சத்தம் எனக்கேட்டேன். அதற்கவர்கள் இதுதான் நரகவாசிகள் ஓலமிடும் சத்தம் என்றார்கள். மீண்டும் அவ்விருவரும் என்னை நடத்திச் செல்கின்றார்கள். அப்பொழுது நான் ஒரு கூட்டத்தை (கண்டேன்) அவர்களின் குதிகால்கள் கட்டப்பட்டும், அவர்களுடைய கன்னங்கள் கிழிக்கப்பட்டு அதனால் அவர்களின் கன்னங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து இவர்கள் யாரென கேட்டேன். (அதற்கு) அவ்விருவரும், இவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக நோன்பை திறந்தவர்கள் எனக்கூறினார்கள்.
(அறிவிப்பவர்:- அபூஉமாமா அல் பாஹிலி(ரழி) (அந் நஸாயி பிஃல் குப்ரா)

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.

சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்:
‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நரகத்திற்குரியவர்கள் விடுதலை:
‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

பாவங்களுக்கு பரிகாரம்:
‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் குழந்தைகள், தன்னில், தன் அண்டை வீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகியவை பரிகாரமாக அமைகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புஹாரி).

நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு:
‘ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம் புரியும் ஜின்களும் விழங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர் நன்மையை விரும்புபவர்களே அதிகம் நன்மை செய்யுங்கள், பாவங்களை விரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா).

ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு:
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

நன்மையில் நிறைவான மாதம்:
துல் ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் குறையாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), புஹாரி).

இந்த ஹதீஸுக்கு இஸ்ஹாக் (ரஹ்) விளக்கமளிக்கும் போது: (எண்ணிக்கையில் இருபத் தொன்பது நாட்களாகக் குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்’ என்று இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு:
‘எவர் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். எவர் ரமழானின் இரவுக்காலங்களில் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் நின்று வணங்குவாராயின் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பு பரிந்து பேசும்:
‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை:
‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

கணக்கின்றி கூலி வழங்கப்படும்:
‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நோன்பின் கூலி சுவர்க்கம்:
‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நரகத்தை விட்டு பாதுகாப்பு:
அல்லாஹ்வின் வழியில் ஒருவர் ஒரு நாள் நோன்பு வைத்தால், அந்த நாளிற்கு பகரமாக அவரின் முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் அல்லாஹ் தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

‘நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:
‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:
‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்).

கஸ்தூரியை விட சிறந்த வாடை:
‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள் நான் பார்த்திருக்கிறேன்.’ (அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபீஆ (ரழி), புஹாரி). என்ற இந்தச் செய்தி இவர்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம்.

நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு:
‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

ரமழான் மாத நோன்பை நாம் எவ்வாறு உறுதி செய்வது:

இரண்டு அம்சங்களில் ஒன்றைக்கொண்டு ரமழானை உறுதிப்படுத்துதல்

1. நோன்பு மாதத்திற்கான பிறையை காணுதல்:
எவர் நோன்பு மாதத்திற்கான பிறையை காண்கின்றாரோ அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். அல்லது பருவ வயதையடைந்த நீதமான ஒருவர் பிறையைக்கண்டதாக சாட்சி கூறினால் அந்த சாட்சியத்தின் அடிப்படையில் நோன்பு நோற்பது கடமையாகும்.

2. ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூரணமாக்குதல்:
இருள் அல்லது மேகம் அல்லது பிறையைக் காண முடியாது தடுக்கக்கூடிய காரணிகள் எதுவும் இல்லாவிட்டால் ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூர்த்தியாக்க வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக்கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது நாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

‘மனிதர்கள் பிறையை பார்த்தனர், நான் பார்த்ததை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு அறிவித்தேன். நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தார்கள், மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.’ (அறவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: அபூதாவுத், தாரமி, இப்னு ஹிப்பான், ஹாகிம்).

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது தடை:
யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பாரோ அவர் காஸிமின் தந்தை (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களு)க்கு மாறு செய்து விட்டார் என அம்மார் (ரலி) கூறினார்கள் (புஹாரி).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

பிறையை பார்க்கும் போது கூறவேண்டிய பிரார்த்தனை:
நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் ‘அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு’ என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).

நோன்பின் நிய்யத்:
பர்ழான நோன்பை நோற்பதற்காக இரவில் நிய்யத்தைக் குறிப்பாக்குவது அதாவது நோன்பு நோற்பதாக மனதால் நினைப்பது கடமையாகும். அது ரமழான் மாத நோன்பா? அல்லது குற்றப்பரிகாரத்திற்கான நோன்பா? அல்லது நேர்ச்சைக்குரிய நோன்பா? என்பதை அவரது நிய்யத்தின் மூலம் நாடவேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் பஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை. (அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

இந்த ஹதீஸிலிருந்து, இரவின் ஆரம்பம் அல்லது அதனுடைய மத்தி அல்லது அதன் கடைசி போன்றவற்றிற்கிடையில் நிய்யத் வைப்பதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அறியமுடிகின்றது.

இரவில் நோன்பு நோற்பதாக நிய்யத்வைத்து பஜ்ர் உதயமானதற்குப்பின் அவர் விழித்தால் அவர் உணவைத் தடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடினால் அவருடைய நோன்பு சரியானதாகும். ஸுன்னத்தான நோன்பிற்கு பஜ்ர் உதயமானதற்குப் பின்னிருந்து எந்த உணவையும் உண்ணாமலிருந்தால் பகல் வேளையில் நிய்யத் வைப்பது கூடும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாள் நபிகளார்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உங்களிடம் ஏதாவது உணவு இருக்கின்றதா? என்று கேட்டார்கள். அதற்கு நாம் இல்லை என்று கூறினோம். அதற்கவர்கள் அப்படியென்றால் நான் நோன்பாளி என்று கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா).

நிய்யத்தின் இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வழி கேடான பித்அத்தாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தாரத எந்த ஒன்றும் மார்க்கமாகாது, அவ்வாறு ஒருவர் செய்வாராயின் அது அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்படும். நோன்பிருக்கும் பலர் நிய்யத் வைக்கிறோம் என்ற பெயரில் ‘நவய்து ஸவ்ம அதின் அன்னதாயி பஃர்ழ ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ (இந்த வருடத்தின் பஃர்ழான ரமழான் நோன்பை அல்லாஹ்விற்காக நாளை பிடிக்க நிய்யத் வைக்கிறேன்) என்று சில வார்த்தைகளை வாயால் மொழிகின்றனர். இது தெளிவான வழிகேடாகும், மாறாக நிய்யத்தை மனதால் என்னுவது தான் நபிகளாரின் வழி முறையாகும்.

ஸஹருடைய நேரத்தின் சிறப்பு

நோன்பிருக்கும் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஸஹர் செய்வதை தவற விடுகின்றனர். அவர்கள் இரவில் தூங்கச் செல்லும் போதே நோன்பின் நிய்யதை வைத்து விடுகின்றனர். இதன் மூலம் பலருக்கு ஃபஜ்ர் தொழுகை கூட தவறிப் போய் விடுகிறது. எவ்வாறு ஒரு முஸ்லிமின் மீத நோன்பு கடமையோ அதே போன்று பஃஜுருடைய தொழுகையும் அவன் மீது கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமும் ஃபஜ்ர் தொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஸஹர் நேரத்தின் சிறப்பு, ஸஹர் செய்வோருக்கு கிடைக்கும் அல்லாஹ்வின் அருள் பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருந்தால் ஒரு போதும் அதை தவர விடமாட்டார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இறையச்சமுடையோர் பற்றி குறிப்பிடும் போது:

‘(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.’ (3: 17).

‘அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்க மாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (ஸஹர் நேரத்தில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.’ (51: 17,18).

ஓவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது எமது ரப் (அல்லாஹ்) துன்யாவின் வானத்திற்கு இறங்கி, என்னிடம் யார் பிரார்த்திப்பார்களோ அவர்களது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னிடம் கேட்கக்கூடியவர்களுக்கு நான் கொடுப்பேன், என்னிடம் பாவ மன்னிப்பு தேடுபவர்களுக்கு நான் மன்னிப்பை வழங்குவேன்.’ என கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

மேற்குறிப்பிட்ட இறை வசனங்களின் மூலமும், நபி மொழியின் மூலமும் ஸஹர் நேரத்தின் சிறப்பை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அந்த நேரம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும், தேவைகள் நிறைவேற்றப்படும் உயர்ந்த நேரமாக இருக்கின்றது. எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் கைகளை ஏந்தி பிரார்த்தித்து அல்லாஹ்வுடைய அருளை பெற்றுக்கொள்ள முனைவோமாக!

ஸஹர் செய்வதன் சிறப்பு:

நீஙகள் ஸஹ்ர் செய்யுங்கள், ஏனெனில் ஸஹ்ர் உணவில் பரக்கத் உள்ளது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

அல்லாஹ் அருள் புரிகிறான்:
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்தல்:
‘நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ஸஹர் செய்வதை பிற்படுத்தல்:
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்தோம். பின்பு தொழுகைக்காக நாங்கள் நின்றோம் என்ற ஸைத் (ரலி) கூறியதும், ‘அவ்விரண்டுக்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு’ என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘நான் என் குடும்பத்தாருடன் ஸஹர் செய்து விட்டு நபி (ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத் தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்’ (புஹாரி).

நபி (ஸல்) அவர்களிடம் பாங்கு கூறுபவர்கள் இருவர் இருந்தனர். ‘பிலால் (ரழி) அவர்கள் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்’ என்று குறிப்பிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

வானொலி, தொலைக்காட்சி மூலமாக ஸஹர் முடிவு நேரம் இது என்று பஃஜ்ருடைய அதானுக்கு முன் ஒரு நேரத்தை அறிவிக்கின்றனர், ஒரு சிலர் அறிவிக்கப்பட்ட அந்த நேரத்துக்குப் பின் எழுந்து விட்டால் எந்த ஒன்றையும் சாப்பிடாமல், குடிக்காமல் பசியுடனே நோன்பு இருக்கின்றனர். இது அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ சுமத்தாத வீணான ஒரு சுமையாகும். மேலே உள்ள ஹதீஸிலிருந்து நமக்கு தெளிவாக விளங்குவது என்னவென்றால் பஃஜுடைய அதான் வரை தாராளமாக ஒருவருக்கு உண்ணுவதற்கு பருகுவதற்கு முடியும் என்பதை. தனது மனோ இச்சைகளை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவிப்பவர்களுக்கு அல்லாஹ் பின் வரும் வசனத்தின் மூலம் கடுமையாக எச்சரிக்கின்றான்:

மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33: 36).

அதே போன்று இன்னும் சிலர் பஜ்ருடைய அதான் சொல்லப்பட்டுவிட்டது என்பதை உறுதியாக தெரிந்ததன் பின்பும் சாப்பிடுவதை ஆரம்பிக்கின்றனர். இது அவர்களது அன்றைய தின நோன்பை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடும். நபியவர்கள் பஃஜ்ருடைய அதானை கேட்கும் போது உண்ணுவதை பருகுவதை மேலே உள்ள ஹதீஸில் நிறுத்த சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே சுற்றிக்காட்டப்பட வேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவெனில், அபூதாவுத், இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் பதிவாகி இருக்கும் ஒரு செய்தியில் ஒருவர் ஸஹருடைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பஃஜ்ருடைய அதான் சொல்லப்பட்டால் அவர் அதில் தேவையானதை எடுத்துக்கொள்ளட்டும் என வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்ளில் எவராவது உணவுத் தட்டு கையில் இருக்கும் போது (பஃஜ்ருடைய) பாங்கோசையை செவிமடுத்தால் அவர் தமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் வரை தட்டை வைக்க வேண்டாம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், இப்னு மாஜா). இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் உள்ளது என ஷைகு அல்பானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளி செய்யவேண்டியவைகள்:

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்:
நோன்பிருக்கும் பலர் தொழுகை விஷயத்தில், தொழுகையை கூட்டாக நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். ஒரு முஸ்லிம் எவ்வாறு நோன்பு என் மீது கடமை என்பதை உணர்ந்து அதை நோற்கின்றானோ அதே போன்று தொழுகையும் என் மீது கடமை என்பதை தெளிவாக விளங்கி அதை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். அனைத்து வணக்கங்களை விட தொழுகைக்கு இஸ்லாத்தில் ஒரு மகத்தான இடமிருக்கின்றது. ‘தொழுகையை ஒருவர் வேண்டுமென்று விடும் போது அவர் காஃபிர், நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள உடன்படிக்கை தொழுகை, எவர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்.’ என்று நபியவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவாகி இருக்கும் போது எவ்வாறு இதில் ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்? இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது தொழுகையை விடும் ஒரு முஸ்லிமுடைய நோன்பே கேள்விக்குறியாகி விடுகின்றது.

அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்:
அல்குர்ஆனுக்கும், ரமழானுக்கும் உள்ள நெறுங்கிய தொடர்பை நாம் மேலே விளக்கியுள்ளோம். அல்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை இன்னும் சரியான முறையில் விளங்காமல் முஸ்லிம்களில் பலர் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். மரணித்தவர்களுக்கு ஓதுவதற்கும், வீட்டில் பரக்கத்துக்காக வைப்பதற்கும், தொங்கவிட்டு அழகு பார்ப்பதற்கும் அல்குர்ஆன் அருளப்பட்டதாக பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
‘மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!’ (முஸ்ஸம்மில்: 4)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் யார் அதனை ஓதினார்களோ அவர்களுக்கு அது மறுமையில் பரிந்துரை செய்யும்.’ (முஸ்லிம்).

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனை ஓதிய மனிதருக்கு மறுமையில் உலகில் நீங்கள் குர்ஆனை ஒதியவாறு, இங்கும் நன்றாக ஓதிக் கொண்டு, சென்று கொண்டேயிருங்கள், நீங்கள் ஓதி இறுதியாக நிறுத்துமிடம் தான் உங்கள் தங்குமிடமாகும் என்று கூறப்படும்.’
(திர்மிதி, அபூதாவூத்).

‘அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஒருவர் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் அதற்காக வழங்கப்படும்.’ (திர்மிதி, தாரமி).

அல்குர்ஆனை விளங்குவது:
‘அவர்கள் அல்குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டாமா? அவர்களின் உள்ளங்களுக்கு என்ன பூட்டு போடப்பட்டுள்ளதா?’ (47: 24).

‘அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.’ (4: 82).

அதன்படி செயல்படுவது:
‘அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால் )கள் (இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.’ (39: 23).

‘நாம் ஒரு சாய்ந்திருந்த மனிதனின் பால் வந்தோம், மற்றொருவர் மிகப் பெரிய பாராங்கல்லை எடுத்து அவனது தலையில் போடுகிறார், அவனது தலை சுக்கு நூறாகி விடுகிறது. மறுபடியும் அவர் போய் அந்தப் பெரும் பாராங்கல்லை எடுத்து வருகிறார், அவனது தலை பழைய நிலைக்கு திரும்பி வீடுகிறது, மறுபடியும் அந்த பெரும் பாராங்கல்லை அவனது தலையில் போடுகிறார் அது நொறுங்கிப் போகிறது. இவ்வாறு இவன் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் இவன் யார் என கேட்டபோது, இவன் தான் அல்குர்ஆனைப் படித்து எனினும் அதை புறக்கனித்தவனாக, கடமையாக்கப்பட்ட தொழுகைகளையும் நிறைவேற்றாமல் தூங்கியவன் என பதிலளிக்கப்பட்டது.’ (புஹாரி, முஸ்லிம்).

ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்:
உபரியான வணக்கங்களை செய்வதன் மூலம் ஒரு அடியான் அல்லாஹ்வின் பால் நெறுங்கிக்கொண்டே இருக்கிறான் என்பது நபி மொழியாகும். எனவே நாம் அதிகம் அதிகம் உபரியான வணக்க வழிபாடுகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வினுடைய நெறுக்கத்தைப் பெற முயலவேண்டும். ரமழான் என்பது குறிப்பிட்ட சில நாட்களாக இருப்பதால் இந்த நாட்களை தூக்கத்தின் மூலம், வீணாண காரியங்களின் மூலம் செலவிடாமல் அல்லாஹ்வின் அன்பை பெற முடியுமான உபரியான வணக்கங்களை அதிகம் அதிகம் செய்வோமாக!

தான தர்மம் செய்தல்:
‘நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகம் தர்மம் செய்பவராக இருந்தார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் ரமழானில் மிக அதிகமாக நன்கொடையளிப்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்து, குர்ஆனை அவருக்கு கற்றுக்கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் வேகமாக வீசும் காற்றைவிட அதிக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி), புஹாரி, முஸ்லிம்).

அல்குர்ஆனின் மூலமும், நபிகளாரின் பொன் மொழிகளின் மூலமும் அதிகம் ஆர்வப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் தான் தான தர்மமென்பது. நோன்புடைய காலமென்பது ஒவ்வொரு முஸ்லிமும் பசியின், தாகத்தின் கொடுமையை நன்றாக உணரக்கூடிய ஒரு காலப்பகுதியாகும். நமது பல சகோதர முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும் நமது ஊர்களில், பல நாடுகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே நாம் அவர்களுக்கு உதவுவென்பது மிக உயரிய நன்மைகளை பெற்றுத் தரும் ஒரு செயலாகும். அது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தான தர்மமென்பது ரமழான் காலத்தில் அதிகமாக செய்ய வேண்டிய ஒன்றென்பதை மேற் சொன்ன ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

உம்ராச் செய்தல்:
ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா என்பது ஹஜ்ஜுடைய கூலியை பெற்றுத்தரும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்:
நோன்பு காலங்களில் நோன்பாளியின் பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் தனி இடம் உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. எனவே நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்னை என்பது உயரிய ஒரு வணக்கமாகும். நாம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திக்கக்கூடியவர்களாக, அவனிடம் உதவி தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நோன்பாளி செய்யக்கூடாதவைகள்

இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவன் எல்லாக்காலங்களிலும் உயரிய பண்புகளுடன் நடப்பதற்கும், அநாகரீமாக, அறிவீனமாக நடப்பதை விட்டு விலகி இருப்பதற்கும் வேண்டப்பட்டுள்ளான். அல்லாஹ் தனது திருமறையில் இறை விசுவாசிகளின், இறை நல்லடியார்களின் உயரிய பண்புகளை பற்றி குறிப்பிடும் போது:

‘இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.’ (23: 3).

‘அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து, ‘எங்களுக்கு எங்கள் செயல்கள், உங்களுக்கு உங்கள் செயல்கள், ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள்.’ (28: 55).

‘இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று), சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.’ (25: 63).

‘அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள், மேலும், அவர்கள் வீணான காரிய(ம்நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.’ (25: 72).

இறை நம்பிக்கையாளனிடம் நோன்பு காலங்களில் அதிகம் அதிகம் இந்தப் பண்பு வேண்டப்படுகிறது என்பதற்கு பின் வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகும்:

‘நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் தீய வார்த்தைகளை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம், கூச்சலிட வேண்டாம், அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை சொல்லிவிடட்டும்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

‘எவர் பொய் பேசுவதையும், பொய்யாக நடப்பதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் தங்கள் நோன்பினால் தாகத்தை தவிர வேறெதையும் பெற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ இரவில் நின்று வணங்குபவர்கள் தங்கள் இரவு வணக்கத்தின் மூலமாக கண் விழித்திருந்ததைத் தவிர வேறெதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: தாரமி).

‘நோன்பு ஒரு கேடயமாகும், எவர் (பகல் காலங்களில்) இல்லறத்தில் ஈடுபட வேண்டாம், அறிவீனமாக நடக்கவேண்டாம். எவராவது அவரை ஏசினாலோ, அவருடன் சண்டையிட்டாலோ நான் நோன்பாளி என்று இரண்டு முறை சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். ஆவன் தனது உணவை, பானத்தை, இச்சை உணர்வை எனக்காகவே விட்டு விடுகிறான். நோன்பு எனக்குரியதாகும். நூன் தான் அதற்கு கூலி கொடுப்பேன், ஒரு நற்செயல் அது பத்து மடங்காக பெறுக்கப்படுகின்றது.’ (புஹாரி).

‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு வைத்தால், அந்நாளில் அவர் தீயதைப் பேச வேண்டாம். மேலும் கூச்சல் போட வேண்டாம். ஒருவர் நோன்பு வைத்தவரை திட்டினால் அல்லது சண்டை போட்டால், ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு 1) நோன்பு திறக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி, 2) அல்லாஹ்வை சந்திக்கும் போது நோன்பின் மூலம் கிடைக்கும் நன்மைகளால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பாளியைப் பொறுத்த வரையில் அவன் தனது வாயையும், வயிறையும், (பசியையும், தாகத்தையும்) கட்டுப்படுத்தி தியாகத்திற்கு மத்தியில் செய்யும் நோன்பென்ற வணக்கம் அவனது வீணாண காரியங்களால் பலனற்றுப் போய் விடுகின்றது என்பது மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களின் மூலம் விளங்கும் ஒரு உண்மையாகும்.

சினிமாக்கள், கேலிக்கைகள், இசைகளை செவிமடுத்தல், பிறரை பற்றி புறம் பேசுதல் இவ்வாறான வீணாண காரியங்களின் மூலம் நேரத்தை செலவளிப்பது எல்லாக்காலங்களிலும் ஹராமாக்கப்பட்ட செயல்களாக இருக்கும் போது நோன்பு காலங்களில் எவ்வாறு இவ்வாறான கேலிக்கைகளில் நேரத்தை விரயம் செய்ய முடியும்? இவ்வாறு நேரத்தை செலவளிப்பவர்களின் நோன்பில் எந்தப் பயனுமில்லை என்ற எச்சரிக்கை மேற்கூறப்பட்ட பொன் மொழிகளின் மூலம் விளங்க முடிகிறது.

நோன்பு திறத்தல்

நோன்பு திறப்பதை அவசரப்படுத்தல்:
‘மனிதர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலமெல்லாம் நன்மையில் இருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதார நூல்: புஹாரி).

நானும், மஸ்ரூக் அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தோம். அவர்களிடம் மஸ்ரூக் ‘நபித்தோழர்களில் இருவர் உள்ளனர். அவ்விருவருமே நல்லவற்றில் குறைவு செய்வதில்லை. அவர்களில் ஒருவர், மஃரிப் தொழுகையையும், நோன்பு துறப்பதையும் விரைந்து செய்கிறார். மற்றொருவர் மஃரிப் தொழுகையையும், நோன்பு திறப்பதையும் தாமதப்படுத்துகிறார் என்று கேட்டார். மஃரிபையும் நோன்பு திறப்பதையும் விரைந்து செய்பவர் யார்? என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)’ என்று பதில் கூறினார்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள்’ என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (முஸ்லிம்).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

எதைக்கொண்டு நோன்பு திறப்பது சிறந்தது:
செங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும் இல்லாவிட்டால் தண்ணீர் அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது முடியுமான உணவு, பானங்களைக்கொண்டு நோன்பு திறப்பது ஸுன்னத்தாகும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஃரிப்) தொழுகைக்கு முன் செங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும் இல்லாவிட்டால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

‘உங்ளில் எவராவது நோன்பு திறக்கும் போது பேரித்தப் பழங்களைக் கொண்டு நோன்பு திறங்கள், ஏனெனில் அது பரக்கத் நிறைந்ததாகும். நீங்கள் பேரித்தப்பழங்களை பெற்றுக் கொள்ளவில்லையானால் தண்ணீரைக்கொண்டு திறங்கள், அது பரிசுத்தமானதாகும்.’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிர் காலத்தில் பேரித்தம் பழங்களைக் கொண்டும், கோடை காலத்தில் தண்ணீரைக் கொண்டும் நோன்பு திறப்பார்கள்.’ (திர்மிதி).

‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்து, பகல் அங்கிருந்து திரும்பிச் சென்று, சூரியன் மறைந்து விட்டால், நோன்பாளி நோன்பு திறப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)

நோன்பாளியை நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு:
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

பிறரிடத்தில் நோன்பு திறந்தால் ஓத வேண்டிய துஆ:

أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ

‘அஃப்தர இன்தகுமுஸ் ஸாஇமூன வஅகல தஆமுகுமுல் அப்ரார வஸல்லத் அலைகுமுல் மலாஇகா’ (அபூதாவுத்).

பொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்தனர், உங்கள் உணவை நல்லவர்கள் உண்டனர், உங்கள் மீது வானவர்கள் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.’

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை:
‘நிச்சயமாக நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் போது மறுக்கப்படாத ஒரு பிரார்த்தனை உண்டு’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த ஹதீஸ் இப்னு மாஜா என்ற கிரந்தத்தில் 1753 ஹதீஸாக பதிவாகி உள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமானது என ஷைகு அல்பானி தனது அல் இர்வாஃ என்ற நூலில் (921) குறிப்பிடுகிறார்.

இரவு வணக்கம்:

இறை நம்பிக்கையாளன்:
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள், அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள், மேலும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானதர்மங்கள்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆத்மாவும் அறிந்த கொள்ள முடியாது. (32: 15,16,17).

ரஹ்மானின் அடியார்கள் யார்?
‘இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். எங்கள் இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக, நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். (25: 64,65).

அறிவுடையோர் யார்?
‘எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜுது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: ‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?’ நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’ (அஸ்ஸுமர் 39: 9).

அகிலத்துக்கே வழிகாட்டியாக அனுப்பப்பட்டவரை அல்லாஹ் எவ்வாறு பன்படுத்தினான்?
‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக! அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப் படுத்திக் கொள்வீராக. மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக! நிச்சயமாக நாம் விரைவில் கனமான – உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம். நிச்சயமாக இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப் படுத்தவல்லது. (முஸ்ஸம்மில் 1- 7).

இரவு வணக்கம் என்பது எல்லாக் காலங்களிலும் செய்வதற்கு சுன்னத்தாக்கப்பட்ட ஒன்றாகும் என்றாலும் ரமழான் காலத்தில் இரவு வணக்கம் சிலாகித்து சொல்லப்பட்ட ஒன்றாகும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாகும்:

நபி (ஸல்) அவர்கள் ரமழானில் நின்று வணங்கிட தன் தோழர்களுக்கு உறுதியாக கட்டளையிடாமல் ஆர்வமூட்டினார்கள். அப்போது அவர்கள், ‘எவர் இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமழானில் நின்று வணங்குவாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இரவுத் தொழுகையின் எண்ணிக்கை:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

இரவுத் தொழுகையின் சிறப்பு:
‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்களெல்லாம் நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், என்று (மகிழ்ச்சி பொங்க) கூறியவர்களாக விரைந்தனர். நானும் மக்களோடு மக்களாக நபியை பார்ப்பதற்காக சென்றேன், அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஒரு பொய்யரின் முகம் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டேன். நபியவர்கள் முதலாவது பேசிய வார்த்தைகள், “மனிதர்களே ஸலாத்தை பரப்புங்கள், உணவின்றி தவிப்போருக்கு உணவலியுங்கள், மனிதர்கள் தூங்குகின்ற போது எழுந்து தொழுங்கள் அமைதியாக சுவர்க்கம் நுழைவீர்கள்” என கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ஆதாரம்: திர்மிதி).

இரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றல்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு மஸஜிதில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிய போது மக்களும் அன்னாருடன் இரவுத்தொழுகையை நிறைவேற்றினர், இரண்டாவது நாள் இரவு கூட்டம் அதிகமாகியது, மூன்றாவது அல்லது நான்காவது நாள் இன்னும் கூட்டம் அதிகமாகவே, நபியவர்கள் ஸுபஹ் நேரம் வரும் வரை தனது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, அதன் பின் மக்களை பார்த்து இந்த இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்ற அச்சம் தான் என்னை உங்களிடம் வருவதை தடுத்தது என கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், “இந்த இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான் (என்னை உங்களிடம் வருவதை தடுத்தது) என வந்துள்ளது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

இமாமுடன் இறுதி வரை தொழுதவருக்கு இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மை:
‘நாம் ரமழானில் நபியவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றோம், (ரமழான்) மாதத்தில் ஏழு நாட்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் போது நமக்கு நபியவர்கள் இரவினுடைய மூன்றில் ஒரு பகுதி வரை தொழுகை நடத்தினார்கள், ஆறாவது நாள் நபியவர்கள் தொழுகை நடத்தவில்லை. ஐந்தாவது நாள் பாதி இரவு வரை நமக்கு தொழுகை நடத்தினார்கள், நாங்கள் நபியிடத்தில் இரவின் மீதிப்பகுதியிலும் தொழுதிருக்கலாமே என்று சொன்னோம். அதற்கு நபியவர்கள் எவர் இமாமுடன் இறுதி வரை தொழுவாரோ அவர் இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மையை அல்லாஹ் அவருக்கு எழுதி விடுகிறான் என கூறினார்கள். பிறகு நபியவர்கள் மாதத்தில் மூன்று நாள் எஞ்சியிருக்கும் வரை நமக்கு தொழ வைக்கவில்லை. மூன்றாவது நாள் அவரது உறவினர், மனைவியர் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கு சஹர் தவறிப்போய் விடுமோ என்று நாம் பயப்படுமளவுக்கு இரவில் நமக்கு தொழுகை நடத்தினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர் (ரழி), ஆதாரம்: நஸாஈ).

பித்அத்துக்கு ஆதாரம் தேடுபவர்கள் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் தான் இரவுத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது எனவே இஸ்லாத்தின் பெயரால் பித்ஆக்களை உருவாக்க முடியும் என, உமர் (ரழி) அவர்களின் நிகழ்ச்சியை வைத்து வாதிடுகின்றனர். நபியவர்கள் இரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றிய நாம் மேலே குறிப்பிட்ட ஆதாரத்தை வைத்துத் தான் உமர் (ரழி) அவர்கள் பள்ளியில் பிரிந்து தொழுதவர்களை உபை இப்னு கஃப் (ரழி) அவர்களின் இமாமத்தின் கீழ் ஒன்று படுத்தினார்கள். நபியவர்கள் எந்த அச்சத்தின் காரணத்தால் கூட்டாக நிறைவேற்றுவதை விட்டார்களோ அந்த அச்சம் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் வர வாய்ப்பில்லை, காரணம் நபியவர்களின் பிரிவோடு இஸ்லாம் என்ற மார்க்கம் முழுமை படுத்தப்பட்டுவிட்டது. எனவே அதற்குப்பின் எதுவும் கடமையாவதற்கு வாய்ப்பில்லை. சில பித்அத் வாதிகள் இந்த உண்மையை புரிந்து கொள்ளத் தவறியதனால் ஏற்பட்ட விளைவாகும்.

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்). அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமழான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ் படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமழான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்விடுத்தி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான். இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்: ‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா – 183 வது வசனம்). இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை. இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். ‘பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்’ என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள். -: பொய் பேசாமை :- பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. ‘ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ”என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.” (அத்தியாயம் 40 ஸூரத்துல் முஃமின் – 28வது வசனம்) ‘..(நபியே!) நீர் கேளும் – மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ்; இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.’ (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 144வது வசனத்தின் கடைசிப் பகுதி). என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமழானில்தான் பொய்களை அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில ‘அமல்’களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை. ‘உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்). பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால்; எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது. ‘எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதைவிடும் வரை நயவஞ்சகனாவான். 1. பேசினால் பொய்யுரைப்பான் 2. வாக்களித்தால் மாறு செய்வான் 3. வழக்காடினால் அநீதியிழைப்பான் 4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.) இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சி பெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக் கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரமழான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் போசுவது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும். ‘கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்’ (முஸ்லிம்). மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு ஆதாரமாகிகிட்டது. மூன்று நாள், பத்து நாள், நாற்பது நாள் என்று ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் சென்று வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப் படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம் என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில் அதிகரித்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுக் கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறை இல்ல நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்’ (அஹ்மத்) எனவே நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழி நடத்துகிறது. பொய், பொய்சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக் கூடத்தை இஸ்லாம் ஒருமாத காலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும் இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு நிலவும். ‘எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (புகாரி, முஸ்லிம்). -: தீய நடவடிக்கையிலிருந்து ஒதுங்குதல் :- நாம் நோற்கும் நோன்பு, நம்மைத் தீய நடவடிக்கையிலிருந்து தடுக்க வேண்டும். இது நம்மை நல்ல வழிகளில் செல்லத் தூண்ட வேண்டும். ரமழானிலும் நாம் நமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், நமது ஈமானை நாம் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ‘இபாதத்’ செய்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும் நோன்பு ஓர் அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்தவில்லையெனில் நாம் துர்பாக்கியசாலிகள். குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமான தீமைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறாக நடந்து கொள்கின்றனர். இளைஞர்களின் பெற்றோர்கள் கூட இவர்களைக் கண்டிக்க முடியாத நிலை. அல்லது கண்டிக்கத் தவறுகின்றனர். ‘ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ”உண்மையான ஓட்டாண்டி (நஷ்டவாளி) யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்க, அதற்குத் தோழர்கள் யாரிடம் திர்ஹமோ, பொருட்களோ அற்ற வறுமை நிலை தோன்றுகின்றதோ அவரே ஓட்டாண்டியாவான்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் சமூகத்தில் உண்மையான ஓட்டாண்டி யாரெனில், அவர் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளையும் அதிகமாக நிறைவேற்றியவராக மறுமையில் வருவார். அதே நேரம் அம்மனிதர் ஒருவரை ஏசியிருப்பார். இன்னொருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பார். வேறொருவரின் சொத்துக்களை (அநியாயமான முறையில்) சாப்பிட்டிருப்பார். அடுத்தவரின் இரத்தத்தை (நியாயமற்ற முறையில்) ஓட்டியிருப்பார். மற்றொருவரை அடித்திருப்பார். (இவ்வாறான நிலையில், இவரால்) குறித்த அநியாயத்திற்குட் படுத்தப்பட்டவர்கள் தமது முறையீடுகளை (அல்லாஹ்விடம்) தெரிவித்து விண்ணப்பிப்பர். அவ்வேளை அவர்களின் மத்தியில் இவரது (இபாதத் மூலம் கிடைத்த) நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். குறித்த அநியாயக்காரன் பற்றிய (குற்ற) முறையீடுகள் முடிவடையும் முன்னர் அவரது நன்மைகள் முடிவடைந்துவிடும். எனவே முறைப்பாடு செய்பவர்களின் தீமைகளிலிருந்து எடுத்து, இவன் மீது சுமத்தப்படும். பின்னர் நரகில் எறியப்படுவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: முஸ்லிம்). ரமழான் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாழிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும், சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னா பின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின் இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற வேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும் முஃமீன்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான் பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு அறிவு வழியில் அமைதியான விடயங்களைக் கருத்தாடலுக்கு வழிவகுக்க உடன்பட வேண்டும். ‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று கூறட்டும்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, திர்மிதி). நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமழானில் நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில் ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர, இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால் புனித ரமழானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள். அதேபோல் நம் சமுதாயத்தின் இளம்யுவதிகள் அரட்டை அடிப்பதிலும், புறம்பேசுவதிலும், கோள் சொல்வதிலும், ‘சூரியன்’ ‘வெற்றி’ ‘சக்தி’ ‘தென்றல்’ போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒலி-ஒளி பரப்பப்படும் மெகாத்தொடர்கள் முதல் கெகாத் தொடர்கள்வரை பார்ப்பதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதிலும் கழிப்பார்கள் என்றால் அவர்கள் நோற்ற நோன்பால் எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை. இன்று நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி, இலஞ்சம், ஊழல், போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது பொய், புறம், பேசுவது ஆகிய காரியங்களில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஈடுபடுவர்கள் தாம் பசியோடு இருப்பது மட்டும்தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகிறார்களா? -: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் :- ஹதீஸின் இறுதிப்பகுதி அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்று கூறி நிறைவடைகிறது. பல ஹதீஸ்களும், ஹதீஸ் குத்ஸியும் அல்லாஹ் மனிதர்களிடமும், ஏனையவற்றிடமும் தேவையற்றவன் என்று பிரகடனப்படுத்துகின்றன. நாம் நோன்பு நோற்பதால் அல்லாஹ்வின் மாட்சிமையில் எதுவும் கூடிவிடுவதுமில்லை: நாம் நோன்பு நோற்காததால் அவனது ஆட்சி அதிகாரத்தில் எதுவும் குறைவதுமில்லை. ‘அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.’ (அத்தியாயம் 112- ஸூரத்துல் இக்லாஸ் – 2வது வசனம்). நாம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, வழிப்பட்டு நடப்பது நமது நலனுக்குத்தான். உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்விடம் தமது தேவையை வேண்டி, அவன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கினாலும், அவனது அருளில் ஒரு ஊசிமுனையளவு கூட குறைந்து விடாது. அதேபோல் அனைவரும் ஈமான் கொண்டு பயபக்தியுடன் வணங்கினாலும் அவனுக்கு எதுவும் கூடப்போவதுமில்லை. எனவே தூய்மையான எண்ணமில்லாத, வணக்கவழிபாடுகளில் எத்தகைய பயனும் இல்லை. முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று வழிபட்டு நடந்து மறுமையில் அல்லாஹ் வழங்கக் காத்திருக்கும் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நாம் மாற முனைய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் தமது காலத்தையும், நேரத்தையும் வீணடித்துவிடாது இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள முஃமீனாக வாழ்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த விதத்தில் நிலைநாட்ட வேண்டும். எனவே நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக! ‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’ (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா – 183 வது வசனம்). புனிதமிகு ரமழான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம். இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக..!

நோன்பு கேள்வி – பதில்கள்!

கேள்வி: மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?  ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..?  

விளக்கம்: ஹஜ்-உம்ராவிற்கு தவிர மற்ற அமல்களுக்கு நிய்யத் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நிய்யத் என்றால் என்னவென்று விளங்காததால்தான் நாம் நியத்தை வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.எனவே முதலில் அதை விளங்குவோம்.

இன்னமல் அஃமாலு பின்னிய்யத்’| என்பது நபிமொழி.(புகாரி)

எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம் இதுதான் நிய்யத் ‘நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்’ என்று யாரும் வாயால் சொல்லி விட்டு தண்ணீர் குடிப்பதில்லை.

குடிப்பது-நடப்பது-தூங்குவது-பார்ப்பது-என்று நமது ஒவ்வொரு செயலும் நிய்யத் அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.

தொழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் ஒளுசெய்ய முடியும் தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் நிய்யத் செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாத மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். நிய்யத் செய்கிறேன் என்று அரபியிலோ தமிழிலோ சில வார்த்தைகளை கூறுவது நபி வழிக்கு மாற்றமான கட்டாயம் விட்டுத் தொலைக்க வேண்டிய செயலாகும்.

மன திருப்திக்காக செய்யலாமா..? என்பதுதான் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் வாதமாகும். தெளிவான ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

நோன்பை பொருத்தவரை பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட வேண்டும் என்று ஹதீஸ் வந்துள்ளது(திர்மிதி) எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் அமல் அவ்வளவுதான்.

ஒளுவிற்கு பிறகு மனைவியை தொட்டாலோ முத்தமிட்டாலோ ஒளு போகாது ஏனெனில் தொழுகையின் போது நபி அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலி அவர்களை தொட்ட விபரமும் அதே போல் ஆய்ஷா அவர்கள் தம் கணவர் நபி அவர்களை தொட்ட விபரமும் புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.


கேள்வி: சஹர்வுடைய நேரம் முடிந்த பிறகு நாம் தண்ணீர் குடிக்கலாமா?  

சஹர் முடியும் நேரம் என்று ஒரு சிலரால் குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டு அந்த நேரங்களையே ஒருசில ஜவுளிக்கடைகள் விளம்பர அட்டைகளில் பிரசுரித்துக் கொடுக்கிறார்கள். உண்மையிலேயே சஹர் முடியும் நேரத்திற்கும், இவர்கள் தொழுது கொண்ட நேரங்களுக்கும் மிகுந்த வேறுபாடுண்டு.

சுபுஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி முடியும்வரை சஹர் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு. சுபுஹு தொழுகைக்காக உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை சஹர் உணவை உண்ண நபி (ஸல்) ஏவியுள்ளார்கள். உம்மி மக்தூம் (ரலி) (சுபுஹுக்காக) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்பது நபி மொழி . அறிவிப்பாளர்:ஆய்ஷா(ரலி), (புகாரி,முஸ்லிம்,நஸயி)

நாங்கள் ஸஹர் செய்து விட்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுகைக்கு கிளம்புவோம் என்று ஜைத் பின் தாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிவதற்கும்,தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹர் முடிந்து தொழுகை ஆரம்பமாக ஏறத்தாழ பத்து நிமிடங்களே இடைவெளி இருந்தன. நபியுடைய இந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இன்றைய நடைமுறையுள்ளது. ஸஹர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் 20,25 நிமிடங்கள் கழித்தே பாங்கு சொல்லப்படுகிறது, அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது. ஆக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடித்து கொள்ள வேண்டும்! என்று போலியான சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். இந்த சட்டங்களை அலட்சியப் படுத்தி விட்டு பாங்கு சொல்லும் வரை உண்ணுவோம், பருகுவோம்.


கேள்வி: பெண்கள் நோன்பு வைத்துக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா? தெரியாமல் கொடுத்தால் அதற்கு பரிகாரம் உண்டா? ஷரீஃப்

விளக்கம்: கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும். (மேலதிக விளக்கம் ‘நோன்பு சட்டங்கள், சலுகைகள், பரிகாரம்’ என்றக் கட்டுரையில்)

எனவே நோன்பு நோற்பதால் உடல் நலத்திற்கு பிரச்சனை இல்லையெனில் நோன்பு நோற்று குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம்.


கேள்வி: ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..? இரவு நேரத்தில் குளிப்பதற்கு கஷ்டப்படுவதால் பலர் மனைவியுடன் சேருவதில்லை. குளிக்க வேண்டும் – குளிக்கத் தேவையில்லை என்று இரு கருத்து நிலவுகிறது. எனவே இது சம்பந்தமான தெளிவு வேண்டும். அபுதாபியிலிருந்து சகோ:அப்துர்ரஹ்மான்.

விளக்கம்: மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தூக்கத்தில் விந்து வெளிபட்டாலோ குளிப்பு கடமையாகிறது. இந்த குளிப்புக்கடமை என்ற சட்டம் தொழுகைக்குறியதாகும். நோன்பிற்கோ இதர நல்ல காரியங்களுக்கோ குளிப்புக் கடமையானவர் குளிக்கவேண்டும் என்று இஸ்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தயாரானால் ..(ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இறைவன் இங்கு விளக்குகிறான்..அதை தொடர்ந்து..) நீங்கள் குளிப்புக் கடமையானவராக இருந்தால் குளித்து சுத்தமாகிக் கொள்ளுங்கள்..என்கிறான்'(பார்க்க,குர்ஆன்:5,6)

எனவே ரமளானில் மனைவியுடன் கூடி குளிப்புக் கடமையானால் அவரோ அவர் மனைவியோ ஸஹருக்கு முன் குளிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே! நோன்பின் இரவுகளில் உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது……………..எனவே (விரும்பினால்) நீங்கள் அவர்களோடு உறவுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள்……… இன்னும் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள்.’|(பார்க்க குர்ஆன்:2:187)

இந்த வசனத்தில் உறவு கொள்வது-உண்ணுவது-பருகுவது எல்லாம் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று அனுமதியளிக்கிறான் இறைவன். சிலர் சொல்வதுப் போல் உறவுக்குப் பின் குளித்து விட்டுதான் ஸஹர் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றால் மூன்று காரியங்களும் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று இறைவன் கூறமாட்டான். இந்த வசனத்iதை ஆழமாக சிந்தித்தால் குளிப்புக் கடமையான நிலையிலேயே ஸஹர் செய்யலாம் நோன்பை தொடரலாம் என்பதை விளங்கலாம்.

ஸஹருக்கு அடுத்து பஜ்ர் தொழுகை இருப்பதால் – தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பதால்- கட்டாயம் குளிக்க வேண்டும். இது தொழுகைக்கான குளிப்புத்தானே தவிர நோன்புக்குறியதல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

நபி-ஸல்-அவர்களும் குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்து நோன்பை தொடர்ந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரம் புகாரி-முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.


கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்?

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான்.

நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். ‘இல்லை’ என்றேன். ‘நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால் நோன்பை முறித்துவிடு’ என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அலி(ரலி), ஜாபிர்(ரலி), ஜூனாதா(ரலி), அனஸ்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகிய நபித்தோழர்கள் மூலமாகவும் ‘வெள்ளிக் கிழமைகளில் நோன்பு தடைசெய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. (புஹாரியில் உள்ள ஹதீஸ் எண்: 1984, 1986, 1986, – திர்மிதி – 740)

வெள்ளிக்கிழமையை எப்படி சிறப்பிக்க வேண்டுமோ, அப்படி சிறப்பித்து விட்டான். அந்த சிறப்பின் காரணமாக அன்றைய தினம் நோன்பு வைத்தால் நன்மை அதிகம் என்ற நாமாக அதை தனிமைப் படுத்தக் கூடாது என்பதால் இந்த தடை வந்திருக்கலாம். வியாழன் – வெள்ளி, அல்லது வெள்ளி – சனி, என இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் நோன்பு வைக்க ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய பிறை நாட்களில் நோன்பு வைப்பதற்கும், வார நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதற்கும் புஹாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.


கேள்வி – நோன்பு காலத்தில் இரவில் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டு ஒலு செய்து விட்டு துங்கி விட்டோம் எழுந்திருக்கும்போது பாங்கு சொல்லி விட்டார்கள் பிறகு எழுந்திருத்து குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடினேன் ஆனால் பிரயாணத்தில் வந்து விட்டு அன்று மாலை திரும்புவதால் பிரயாணக்களைப்பில் இருப்பீர்கள் ஆகையால் களா செய்து கொள்ளாலாம் என்று என் மனைவி சொல்ல களைப்பின் காரணமாக அந்த நோன்பை களா செய்து ஆறு நோன்பில் வைத்தேன் சரியா விபரம் தேவை.

பிரயாணிகளும் நோயாளிகளும் நோன்பை களா செய்யலாம் என்று அனுமதியுள்ளது. (பார்க்க அல் குர்ஆன் 2:184,185) ஒருவர் உள்ளுர் திரும்பிய பிறகு அவர் பிரயாணியாக கருதப்பட மாட்டார் எனவே பிரயாணிக்குரிய சலுகை இவருக்குப் பொருந்தாது. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் போது உங்கள் மனைவி பிரயாண களைப்பை காரணம் காட்டி இருக்க வேண்டிய அவசியமில்லை. நோன்பு வைக்க முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு களைப்படைந்திருந்தால் இறைவன் அதை மிக்க அறிந்தவனாக இருப்பதால் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறகு களா செய்தது சரிதான். பாங்கு சொன்ன பிறகு குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

குளிப்பு கடமையான நிலையிலேயே நோன்பிற்குரிய நிய்யத்தை மனதில் எண்ணிக் கொள்ளலாம் எந்த பிரச்சனையும் இல்லை. குளிப்பு கடமையானவர்கள் நோன்பு நோற்கக் கூடாது நிய்யத் செய்யக் கூடாது என்று எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை. நபி(ஸல்) குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்றுள்ளார்கள். (புகாரி 1931,1932)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடமையான நோன்பிற்குரிய நிய்யத்தை நாம் நினைத்த நேரமெல்லாம் எண்ணிக் கொள்ள முடியாது. பஜ்ருக்கு முன்பே அந்த எண்ணம் நம்மிடம் வந்து விட வேண்டும்.

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

எனவே மனைவியுடன் குடும்ப வாழ்வில் இணைபவர்களாக இருந்தாலும் ‘காலையில் எழ முடியாவிட்டாலும் நோன்பை தொடர வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்து விட்டால் அவர்கள் நோன்பைத் தொடரலாம். எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விட்டு பஜ்ருக்கு பிறகு எழுந்து நோன்பு நோற்க எண்ணினால் அது அன்றைய தினத்திற்குறிய நோன்பில் சேராது. பின்னர் அதை களா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.


கேள்வி – நோன்பு காலங்களில் குர்ஆன் ஓதுவதை கட்டாயம் செய்ய வேண்டுமா… குர்ஆன் ஒதத் தெரியாதவர்களின் நிலை என்ன விளக்கவும்.

நோன்பு காலங்களில் மட்டுமல்ல முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் குர்ஆனுடன் தொடர்பு உள்ளவர்களாகவே இருக்க வேண்டும். குர்ஆன் இறங்கியதால் தான் ரமளான் என்ற ஒரு மாதமும் அதில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவும் மிக சிறப்புப் பெற்றுள்ளது. எதன் வெளிப்பாட்டால் ரமளான் சிறப்புப் பெற்றதோ அந்த குர்ஆனுடன் நாம் அதிகமாக ஐக்கியமாவதின் மூலம் தான் ரமளானை சிறப்பிக்க முடியும். குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்டிக் கழிப்பது அறிவுடமையல்ல. முயற்சி செய்தால் கண்டிப்பாக குர்ஆன் ஓத முடியும். உண்மையிலேயே ஓத முடியாவிட்டாலும் முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு இறைவன் கூலி கொடுப்பான்.


கேள்வி – நோன்பாளிகள் நறுமணம் பூசிக் கொள்ளலாமா..சென்ட் ஸ்ப்ரே இவைகளைப் பயன் படுத்தலாமா..

உண்ணுவது – பருகுவது – உடலுறவுக் கொள்வது போன்ற காரியங்களுக்கு மட்டுமே தடை வந்துள்ளது. அந்த முயற்சிகலோ – அது சார்ந்த முயற்சிகளிலோ ஈடுபடக் கூடாது. அதுவல்லாத செயல்களுக்குத் தடையில்லை. மணம் பூசிக் கொள்வது – பவுடர் போட்டுக் கொள்வது – எண்ணைய் தேய்த்துக் கொள்வது – விக்ஸ் – டைகர்பாம் – தைலம் போன்றவற்றை தேவைக்கு பயன்படத்துவது இவற்றிர்க்கெல்லாம் தடை எதுவுமில்லை.


கேள்வி : எனக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை. சில சமயம் 15 – 20நாட்கள் நாட்கள் வரை வருகிறது. இந்நிலையில் நான் எப்படி ரமளான் நோன்பை நோற்க முடியும்?

இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு முன் மாதாமாதம் உங்களுக்கு 1 முதல் 6 நாட்கள் வரை மாதவிடாய் வந்துக் கொண்டிருந்தால் அதுதான் உங்களின் வழக்கமான மாதவிலக்கு நாட்களாகும். சிலருக்கு 3 நாட்கள், சிலருக்கு 5 நாட்கள் 7நாட்கள் மிக அபூர்வமாக சில பெண்களுக்கு 15 நாட்கள் வரைக்கூட மாதவிலக்கு வரும். நாட்கள் மாறாமல், கூடுதல் குறைவு இல்லாமல் ஒரு பெண்ணுக்கு இயல்பாக எத்துனை நாட்கள் மாதவிலக்கு வந்தாலும் அந்த பெண்ணை பொருத்தவரை அது மாத விலக்கு தான்.

உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி துவங்கும் மாதவிலக்கு மாத கடைசி வரை (அதாவது 10 நாட்கள்)நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் இதுதான் வழமையாக உள்ளது. நாட்கள் மாறுவதும் இல்லை, 10நாட்கள் என்பது 12 நாட்களாக கூடுவதோ 8 நாட்களாக குறைவதோ இல்லை என்றால் அந்த பெண்ணின் மாதவிலக்கு நாட்கள் 10 தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அந்த பெண்ணை பொருத்தவரை அது குறைப்பாடும் அல்ல. அந்த பத்து நாட்களில் அந்த பெண் தொழக் கூடாது – நோன்பு வைக்கக் கூடாது. நோன்பை பின்னர் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றமாக ஒழுங்கீனமாக இப்படியும் – அப்படியுமாக மாறி -மாறி மாதவிலக்கை உணரும் பெண்கள் அதை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

மாதந்தோரும் 3 நாட்களோ – 5 நாட்களோ மதவிலக்கு வரும் பெண்ணுக்கு திடீரென்று அதற்கு மேற்பட்ட நாட்களும் நீடிக்கிறது என்றால் வழமையாக வரும் நாட்களை மட்டும் தான் மாதவிலக்கு நாட்களாக அந்தப் பெண் கணக்கெடுக்க வேண்டும். மேற்கொண்டு நீடிக்கும் நாட்கள் மாதவிலக்கு நாட்களில் அடங்காது.

நரம்பு கோளாரின் காரணமாக தொடர்ச்சியான இரத்தப் போக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படும் இரத்தப் போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தமில்லை.

மாதவிடாய் என்பது ஒரு நோயல்ல ஆனால் உதிரப்போக்கு என்பது நரம்பு நோய். வெளியேறும் இரத்தத்தின் தன்மையை வைத்துக் கூட இதை தெரிந்துக் கொள்ள முடியும். கரு முட்டை சிதைவினால் ஏற்படும் மாதவிடாய் இரத்தம் கருத்த சிவப்பில் அடர்த்தியாக இருக்கும். முடியும் தருவாயில் மஞ்சல் நிறமாகி விடும். அதன் வாடையும் வேறுவிதமாக இருக்கும். நரம்பு பிரச்சனையால் ஏற்படும் இரத்தப் போக்கிற்கு இந்த தன்மை இருக்காது.

எனவே மாதவிலக்கு அல்லாத இரத்தப் போக்கை காணும் பெண்கள் நோன்பையோ தொழுகையையோ விட்டுவிட அனுமதி இல்லை.

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இதுபற்றியெல்லாம் பெண்கள் கேட்டு தெளிவு பெற்றுள்ளனர்.

‘(மாதவிலக்கு அல்லாத நாட்களில் வெளிப்படும் மஞ்சல் நிற இரத்தத்தையும், மண் நிறத்து இரத்தத்தையும் நாங்கள் மாதவிலக்காக முடிவு பண்ண மாட்டோம்’ என்று நபித்தோழியான உம்மு அத்திய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாடம் மாவிடாய், எண் 326)

மாதவிலக்கு – இரத்தப் போக்கு சட்டங்கள்.

எனக்கு அடிக்கடி கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதுபற்றி சட்டத்தை தெரிந்துக் கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். ‘இது ஒரு நரம்பு நோயாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிலக்கு நாளாக கருதிக் கொள். பின்னர் குளித்து 23 அல்லது 24 நாட்கள் தொழு, நோன்பும் வை இது உனக்கு போதுமானதாகி விடும். மற்றப் பெண்கள் மாதவிடாய் காலத்தை எப்படி கழிக்கிறார்களோ அது போன்று ஒவ்வொரு மாதமும் செய்துக் கொள்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். (ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) திர்மிதி 118, அபூதாவூத், அஹ்மத்)

தொடர் இரத்தப் போக்கு அல்லது நாட்கள் நீடித்துக் கொண்டு போகுதல் போன்ற அறிகுறித் தென்படுபவர்கள் இந்த செய்தி அடிப்படையில் தன் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்

வழக்கமான மாதவிலக்கு நாட்கள் போக மீதியுள்ள நாட்களில் கீழாடையை இறுக்கமாக்கிக் கொண்டு – இரத்தம் வெளிப்படும் நிலையிலேயே நோன்பை வைத்துவிட வேண்டியது தான். தொழுகைக்கும் இதுதான் சட்டம்.


கேள்வி – நோன்பு வைத்துக் கொண்டு ஆற்றிலி மூழ்கி குளிக்கலாமா…

ஆற்றிலி மூழ்கி குளிக்க தடையில்லை ஆனால் வாய் வழியாக தண்ணீர் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


கேள்வி – வருடா வருடம் நோன்பில் கடைசி பத்து நாட்களில் ஊரார்களை அழைத்து இஃப்த்தார் பார்ட்டி என்று ஏழைகள் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லாஹ்வுக்கு பிடித்தமான செயல்தானா? இதற்கு விளக்கம் தேவை. 

மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய விருந்தாக இருக்கட்டும், நன்மையை எதிர்பார்த்துக் கொடுக்கக் கூடிய இது போன்ற விருந்தாகட்டும் எந்த விருந்திலும் ஏழைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாம் சொல்லும் அறிவுரை. அவ்வாறு புறக்கணிக்கபட்டால் அது கெட்ட விருந்தாகவே முடியும் என்றும் நபிமொழி எச்சரிக்கிறது.

பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்துதான் விருந்துக்களிலேயே மிகக் கெட்டது என்பது நபிமொழி. (அபூஹூரைரா(ரலி) புகாரி1577)

விருந்துக்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு பணக்காரர்கள் என்றுமே ஏங்குவதில்லை. ஏனெனில் அவர்களிடம் பணம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய உணவை அவர்களால் உண்ண முடியும். ஏழைகளை பொருத்தவரை இது போன்ற உணவுகளுக்கு அவர்களின் உள்ளம் ஏங்கத்தான் செய்யும். திருமணம் உட்பட இது போன்ற விருந்துக் காலங்களில் தமக்கும் அழைப்பு வந்தால் சென்று கலந்துக் கொள்ளலாமே.. என்று அவர்களின் உள்ளம் வெளிப்படுத்தும் ஆசையில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களை புறக்கணித்து எதிர்ப்பார்ப்பே இல்லாதவர்களை அழைத்து விருந்து கொடுக்கும் நடை முறைதான் பரவலாக இருந்து வருகின்றது. இத்தகைய விருந்து பகட்டுக்காகவோ – பெருமைக்காகவோ வழங்கப்படும் விருந்தாகத்தான் இருக்க முடியும். வயிற்றுப்பசியுடன் இருக்கும் ஏழைப் புறக்கணிக்கப்பட்டு பசி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை அழைத்து விருந்தளிக்கும் போது அது கெட்ட விருந்தாகவே முடியும் என்ற நபியின் வார்த்தை எத்துனை அர்த்தம் வாய்ந்தது என்பதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.

எனவே ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பகட்டுக்காக நடத்தப்படும் எந்த விருந்தும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருவதாக அமையவே அமையாது.


கேள்வி –     நோன்பு வைத்துக் கெண்டு மருத்துவர் இடம் ஊசி போட்டு கொள்ளலாமா?. உடம்பில் அடிபட்டு விட்டால் காயத்துடன் மருந்தும் தையலும் போடலாமா?.

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் நோன்பை சிரமமாகக் கருதினால்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல் குர்ஆன் 2: 184 – 185)

இந்த வசனம் இரு சாராருக்கு சலுகையை முன் வைக்கிறது.

1) நோயாளிகள். 2) பிரயாணிகள்.

இவர்கள் நோயின் காரணமாகவோ – பிரயாணத்தின் காரணமாகவோ நோன்பை விட்டு விடலாம். பின்வரும் காலங்களில் அதை நோற்று பூர்த்தி செய்து விட வேண்டும்.

நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பது எதை குறிக்கிறது?

பொதுவாக நோயாளி என்று இங்கு குறிப்பிடப்படுவதால் அனைத்து நோயையும் இது கட்டுப்படுத்தத்தான் செய்யும். இருப்பினும் நோய் என்றவுடன் நோன்பை விட்டு விடலாமா… என்று சிந்திக்கும் போது ஒரு அழுத்தம் இந்த வசனத்தில் இருப்பதை உணரலாம். அதாவது நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பதிலிருந்து அவர் நோன்பு வைக்க முடியாத அளவிற்கு நோயாளியாக இருக்க வேண்டும் என்பது விளங்குகிறது.

தலைவலி என்பதும் – கண்வலி – கால் வலி போன்ற வலிகளும் நோய்தான் என்றாலும் இத்தகையோர் நோன்பு வைக்காமலிருக்கலாம் என்று முடிவு செய்வதில் எந்த நியாயமுமில்லை ஏனெனில் நோன்பால் இவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. இவர்கள் தலைவலிக்கு மருந்து தடவிக் கொண்டு – கண்வலிக்கு கண்களில் சொட்டு மருந்து இட்டுக் கொண்டு நோன்பைத் தொடலாம்.

காலில் அடிப்பட்டு ஒருவர் கட்டுப்போட்டுள்ளார் – ஒருவர் ஆணிக்கால் நோயால் அவதிப்படுகிறார் என்றால் இத்தகைய நோயுக்கும் நோன்பிற்கும் சம்பந்தமில்லை. இவர்கள் மருத்துவம் செய்து கொள்ளும் நிலையில் நோன்பைத் தொடலாம்.

ஒருவருக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டு விட்டது இதனால் அவருக்கு எத்தகைய இரத்த இழப்பும் (இதனால் அவருக்கு அதிகப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கவில்லை) ஏற்படவில்லை என்றால் அவர் தையல் போட்டுக் கொண்டு நோன்பைத் தொடரலாம். இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தால் – இரத்தம் தேவைப்படும் நிலையில் அவர் இருந்தால் – ‘நான் நோன்பு வைத்துக் கொள்ளும் நிலையில் இரத்தம் ஏற்றிக் கொள்கிறேன்’ என்று சொல்லக் கூடாது. இவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். ஏனெனில் நோன்பாளி இரத்தம் குத்தி எடுப்பதை (இன்றைக்கு இதுதான் இரத்த தானம்) நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். நோன்பாளி பலவீனப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு தடுத்தார்கள் என்று நபித் தோழர் அறிவிக்கிறார்.

‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ”நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி – 1940)

பலவீனப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இரத்தம் கொடுக்கலாம் என்றாலும் ஏற்கனவே அடிப்பட்டு இரத்த இழப்பிற்கு ஆளானவர் பலவீனமற்றவராக இருப்பார் என்று கருத முடியாது. அவருக்கு இரத்தம் தேவைப்படும் நிலையிலிருந்தால் அவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். இரத்தம் ஏற்றப்பட்டு உடல் ஆரோக்ய நிலையைப் பெற்ற பின் தான் அவர் நோன்பு வைக்க வேண்டும்.

உண்ணக் கூடாது, பருகக் கூடாது, உடலுறவு கொள்ளக் கூடாது என்றத் தடையே வந்துள்ளது. இதிலிருந்து வாய் வழியாக வயிற்றை அடையும் எதுவும் நோன்பை முறித்து விடும் என்பதால் வாய் வழியாக உட் கொள்ளும் மாத்திரை – டானிக் போன்ற மருந்துகளை நோன்பாளி பயன்படுத்தக் கூடாது. ஊசி என்பது வாய்வழியாக உட்கொள்ளும் பொருளல்ல. ஊசி வழியாக ஏற்றப்படும் மருந்து வயிற்றை சென்று அடையப்போவதுமில்லை. அது நரம்பு மண்டல வழியாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதாகும். எனவே நோன்பாளி நோயாளியாக இருந்தால் அவர் ஊசி வழியாக மருத்துவம் செய்து கொண்டால் அவரது நோன்பு முறியாது. இந்த சந்தர்பத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் மருத்துவம் நோயிக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர உடல் ஆரோக்யத்திற்காக நோன்பு வைத்துக் கொண்டு மருத்துவம் செய்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக நோன்பு வைத்திருக்கும் நிலையில் நோன்பாளி பலவீனப்படுவார் என்பது நாம் அறிந்ததே.. நோன்பாளி ஒருவர் தம் பலவீனத்தைப் போக்கிக் கொள்ள ‘நான் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றிக் கொள்கிறேன் – இது நரம்பு வழியாகத்தான் உள்ளே போகிறது’ என்று முடிவெடுப்பாரேயானால் அது மருத்துவத்தில் அடங்காது. ஏனெனில் நோன்பாளி பலவீனப்படுவது நோன்பிற்குரிய இயல்பாகும். அது நோயல்ல என்பதால் அவர் செய்வதும் மருத்துவமாகாது. எனவே நோன்பாளி அவசியத்திற்காக நோன்பு வைத்துக் கொண்ட நிலையில் மருத்துவம் செய்து கொள்ளலாம்.


கேள்வி – நோன்பு காலங்களில் ஒரு பர்ளுக்காக 70 பர்ளுகளுடைய நன்மையும் ஒரு சுன்னத்துக்காக ஒரு பர்ளுடைய நன்மையும் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுகின்றது. எனவே நோன்பு காலங்களில் தொழுவதற்கும் பின்வரும் காலங்களில் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் அவற்றிற்கான நன்மைகள் தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கமாக குறிப்பிடுவீர்களா?

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஒரு பர்ளுக்கு எழுபது பர்ளுடைய நன்மை என்றோ – ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்றோ எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – (அபூஹூரைரா(ரலி) – புகாரி 1894)

ஒன்றுக்கு பத்து என்பது பொதுவாக எல்லா நன்மைகளுக்கும் உரியதாகும். (சில அறிவிப்புகளில் எழுநூறு வரை என்று கூறப்பட்டுள்ளது) ஆனால் ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்பதை காண முடியவில்லை.

 


கேள்வி – நோன்பிற்கு ஒவ்வொரு நாளும் நிய்யத் வைப்பது அவசியமா? அல்லது முதல் நோன்பின் போது நிய்யத் வைத்தால் முழு மாதத்திற்கும் அது போதுமானதாகுமா?

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

ரமளான் மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும் என்று இறைவன் கூறியுள்ளதிலிருந்து அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவரிடம் வந்து விட வேண்டும் என்பது தெரிகிறது. ‘இந்த மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று ஒருவர் மனதில் முடிவு செய்தால் அதுவே முழு நோன்பிற்குரிய நிய்யத் ஆகி விடும் என்றாலும் ஒருமாதம் என்பதால் இடையில் நோய் – பிரயாணம் இன்னபிற காரணங்கள் குறுக்கிட்டு நோன்பு வைக்க முடியாத சூழல் உருவாகலாம் என்பதால் தான் சூழ்நிலையை அனுசரித்து ‘பஜ்ருக்கு முன்’ நோன்பிற்கான எண்ணம் வர வேண்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே தினமும் அந்த எண்ணம் நம் மனதில் உதிக்க வேண்டும் என்பதுதான் சரியாகும்.


நோன்பாளி பேஸ்ட் உபயோகிக்கலாம்.

நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யலாமா.. என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவதுண்டு. சிலர் நோன்பின் காரணத்தால் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்வது நோன்பை பாதிக்கும் என்றும் விளங்கிக் கொண்டு வாயில் கை வைக்காமல் இருப்பார்கள். தொழுகையின் போது சரியாக வாய் கூட கொப்பளிக்க மாட்டர்கள். இது தவறான முடிவாகும். நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்ற தடையும் இல்லை.

இன்னும சொல்லப் போனால் நோன்புக் காலங்களில் இன்னும் கூடுதலாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நோன்புக் காலங்களில் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது வாய் வாடை அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த வாடை பிற மனிதர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வானவர்களைக் கூட பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

எந்த வாடையால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்களோ அதே போல மலக்குகளும் பாதிக்கப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் ‘வெங்காயம் பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருபவர்களை எச்சரித்த போது கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)

‘நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத முறை பார்த்திருக்கிறேன்!’ என்று ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆம்விடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ஜாபிர்(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் வழியாகவும் இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

”பல்துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார். (இவை அனைத்;தும் புகாரியின் நோன்புப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது)

நபி(ஸல்) நோன்பு வைத்திருக்கும் போது எண்ணிலடங்கா முறை பல் துலக்கியுள்ளார்கள் என்றால் வாயை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

பல் துலக்குவதாக இருந்தால் மிஸ்வாக் குச்சியால் துலக்க வேண்டும். பேஸ்ட் போட்டு விளக்கக் கூடாது ஏனெனில் பேஸ்டின் சுவையை வாய் உணர்கிறது என்றெல்லாம் சிலர் கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

பேஸ்ட்டால் பல்துலக்கும் போது வாய் உணரும் வாசனையையும் புத்துணர்வையும் புதிய மிஸ்வாக்கால் பல்துலக்கும் போதும் வாய் உணரத்தான் செய்யும்;. அவ்வளவு ஏன் தண்ணீரால் வாய் கொப்பளிக்கும் போது தண்ணீரின் சுவையைக் கூட வாய் உணரத்தான் செய்கின்றது. அதற்காக வாயே கொப்பளிக்கக் கூடாது என்று சொல்லி விடலாமா…? என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. எனவே நோன்பாளி பேஸ்ட் இட்டு பல் துலக்க எந்த தடையுமில்லை என்பதை நாம் விளங்கலாம்.

வாய் துற்வாடையை போக்க இப்போது ‘ஸ்ப்ரே’ வந்து விட்டது (மேற்கத்திய மோகம்) நோன்பாளி ஸ்ப்ரே பண்ணலாமா… என்ற சந்தேகத்தை எடுத்துக் கொண்டால் இதில் கவனம் தேவை ஏனெனில் ஸ்ப்ரே பண்ணும் போது அது தொண்டையைக் கடந்து விட வாய்ப்புள்ளது. அது நோன்பைப் பாழ்படுத்தி விடும் என்பதால் அதை உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.

இன்னுமொரு ஆட்சேபனை.

முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். (அபூஹூரைரா(ரலி) புகாரி 1904)

இந்த ஹதீஸை சிலர் எடுத்துக் காட்டி ‘சிறப்பு மிக்க’ அந்த வாடையை மாற்றக் கூடாது என்று வாதிப்பதையும் பரவலாகப் பார்க்கலாம்.

இவர்கள் விளங்குவதுதான் அந்த ஹதீஸூக்கு அர்த்தம் என்றால் நபி(ஸல்) நோன்புக் காலங்களில் பல் துலக்கி இருக்கவே மாட்டார்கள் என்ற சாதாரண விளக்கத்தைக் கூட புரிந்துக் கொள்ளாதவர்கள் இவர்கள்.

‘அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியது’ என்றால் அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நோன்பு வைப்பதால் வாயில் துர்வாடை வருகிறது என்று நோன்பையோ அதன் வாடையையோ வெறுக்க வேண்டாம். அந்த வாடை அல்லாஹ்விடத்தில் சிறப்புகுரியதாகும் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே தொண்டை வழியாக எதுவும் உள்ளே நுழையாத வகையில் வாயை எத்துனை தூய்மையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்காக பேஸ்ட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் தடையில்லை.

தொண்டைக்கு செல்லாத வகையில் உப்பு – காரம் போன்றவற்றைக் கூட வாயில் வைத்து சுவையை அறியலாம்.

வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.

பல் துலக்குதவற்குரிய அடிப்படையே இங்கும் பொருந்தி விடும். உண்ணுதல் – பருகுதல் – உடலுறவுக் கொள்ளுதல் ஆகியவைக் கூடாது என்பது நோன்புக்காக விதிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமாகும். ஒருவர் வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது ‘கூடாது’ என்று தடுக்கப்பட்ட எதுவும் அங்கு நிகழவில்லை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் வாசனைப் பொருளை மூக்கின் வழியாக நுகரும் போது இதிலிருந்து எதுவும் (துகல்கள் – ஸ்ப்ரேயில் பயன்படுத்தப்பட்டுள்ள இதர பொருள்கள்) வயிற்றுக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘நோன்பாளி மூக்கிற்கு தீவிரமாக தண்ணீர் செலுத்தாமல் இருக்கட்டும்’ என்ற ஹதீஸை நாம் இங்கு பொருத்திக் கொள்ள வேண்டும்.

நோன்பின் அவசியம்


    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

    ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

    நோன்பின் நோக்கம்

    யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

    உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

      நோன்பின் சிறப்பு

    ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

    சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

    நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

    காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது

    அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா

    நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

    எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)

    பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.

    பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்

    மக்கா  மாநகரம்  வெற்றிக்  கொள்ளப்பட்ட  ஆண்டு  ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம்  என்ற  டத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு  ருந்தனர்.  பின்னர்  நபி صلى الله عليه وسلم  அவர்கள்  ஒரு  கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர்   அதனைப்  பருகினார்.   தன்    பின் மக்களில்  சிலர்   நோன்போடு ருப்பதாக  நபி صلى الله عليه وسلم அவர்களிடம்  கூறப்பட்டது. அதற்கு  நபி صلى الله عليه وسلم   அவர்கள்  “அத்தகையோர்  பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர்.     (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)

    “இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்

    மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.

    மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்

    நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

    கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்

    கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா

    சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

    நோயாளிகள், முதியவர்கள்

    நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி

    நோன்பின் நேரம்

    சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)

       ஸஹர் உணவு

    நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ

     நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, திர்மிதீ

    (ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)

    ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

    மக்கள்  உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.

    நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.

    பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

    பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

    பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

    விடி ஸஹர்

   விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.

    பசி முன்னிற்கும்போது

    உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

    மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

    மறதியாக உண்பதும், பருகுவதும்

    ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

    வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்

    வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

    ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம்  நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.

    பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா  நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

    குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது

    நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

    நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

    நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்

    நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

    நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

    இரத்தம் குத்தி எடுத்தல்

    ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: தாரகுத்னீ

    நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி  நூல்கள்: புகாரி

    மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    நோன்பு துறத்தல்

    நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

    உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்

மறைவான வணக்கம்

    இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

     يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

    இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?

    நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.

    ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் ‘ஸஹ்ரில்’ சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.

    உறுதியான நம்பிக்கையின் அடையாளம்

    நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.

    அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!

    மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!

    இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! ‘மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.

    சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.

    இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.

    யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.

    அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.

    செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

    ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

    நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி”  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

    நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

    நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

    சஹர் செய்தல் 
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

    நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது