இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா?

பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும். கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறி ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே? அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா? ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஜயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள். எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும். இறைவனையும், மறுமையையும் கண்ணால் பார்த்த பின்னரே ஏற்பேன் என்பது பகுத்தறிவு வாதமே அல்ல. விருந்து கொடுத்த அந்த கண்ணியமான கனவானைப் போல் ஏன் அதைவிட ஆயிரம் மடங்கு கண்ணியத்திற்கும், உண்மைக்கும் உரித்தானவர்களான இறைத்தூதர்களை ஏற்று அவர்களின் உபதேசங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்பதே பகுத்தறிவாகும். விருந்துடைய குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் விருந்து கொடுப்பவரின் வீட்டுக்குப் பொயே விருந்துடைய ஏற்ப்பாட்டைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமையின் வாழ்க்கையை இவ்வுலகிலிருந்து கொண்டே கண்ணால் பார்க்க முற்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதைச் சிந்தியுங்கள். மேலும் கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஜயறிவே தாரளாமாகப் போதும். இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா? அல்லது பார்த்தறிவாளர்களா அதாவது ஜயறிவாளர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

முன்னோர்கள்

முன்னோர்கள்

இவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத மீட்க முடியாத நஷ்டமாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனதில் பதித்துக் கொள்வோம்.

இறைவன் எதை ஏவி இருக்கிறானோ அதைதான் நாம் செய்யவேண்டும். நமது முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்து அதைக்கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரை குறையாக எழுதினாலும் மார்க் உண்டு. கேட்கப்படாத கேள்விகளுக்கு எவ்வளவு திறமையாக எழுதினாலும் கிடைப்பது பூஜ்யம்தான். அதுபோல் இறைவனால் ஏவப்படாததைச் செய்வதால் சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனதில் பதித்துகொள்வோம்.

உலகத்தில் முன்னோர்களின் அறிஞர்களின் அனுபவம் ஆற்றல் நமக்கு பயன்படலாம். காரணம் அனுபவம் ஆற்றலை லாப நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள். கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் மறுமை விஷயத்தில் மனிதனின் ஆற்றல் அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ அதைப் அப்படியே ஏற்றுச் செயல்படுவதே அறிவுடமையாகும்.

மனிதன் தனது அறிவு ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு செயல்படுவதும் கூடாது. அதை மற்றவர்களுக்கு போதிக்கவும் கூடாது. உலக விஞ்ஞான விஷயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது முன்னேற்றத்தை தரலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் பின்னேற்றத்தையும் தோல்வியைத்தான் அது தரும்.

ஆனால் முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் கூற்றில் உண்மையில்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக்கூடியவர்கள் அதை இவ்வுலகில் முதலில் செய்து காட்டவேண்டுமல்லவா? முன்னோர்கள் ஏழைகளாக இருந்தால் இவர்களும் ஏழைகளாக இருக்க ஆசைப்பட வேண்டுமல்லவா?

அவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ ஆசைப்படவேண்டுமல்லவா? அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா? இவை எல்லாம் இழிவு இவையெல்லாம் விட்டு சுகமாக வாழவேண்டுமென்று அல்லாவா அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படியானால் இவர்கள் மத விஷயத்தில் மட்டும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா?

ஏழைகளாக இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல, மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால்  அவர்களால் அவ்வாறு சொல்ல முடியாது.

இவ்வுலகின் சாதாரணத் துன்பங்களை விட்டு விடுதலைப்பெற பெரும் முயற்சி எடுக்கும் மனிதன் மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால் புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சிக்காமல் இருக்க முடியுமா? சொர்க்கத்திற்கு போனாலும் நரகத்திற்கு போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா?

சாத்தான் மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப்படுகுழியில் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாஸ்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால் மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால் இறைவனுக்கு இணைவைத்து அதன் மூலம் நரகில் விழச்செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அரிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும்  என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவதாகும். இதில் பெரும்பாலோர் சிக்கிவிடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டுப் போகிறார்கள்.

கடந்த கால சரித்திரத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை மிகவும் கடுமையாக எதிர்த்த அபூலஹப், அபூஜஹீல் இன்னும் இவர்கள் போன்ற வழிகேடர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள் என்ன கூறினார்கள்?  நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா? மார்க்கம் தெரியாதவர்களா? நீ புதிதாதகச் சொல்ல வந்துவிட்டாயோ! அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ? அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா? நரகவாதிகளா? என்று அடுக்கிக்கொண்டே போய் மக்களை வழி கெடுத்தார்கள்.

இறுதிவேதம் அல்குர்ஆனில் கூற்று இதனை உறுதிபடுத்துகிறது

2:170. மேலும், ”அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ”அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காாியத்தைச் செய்து விட்டால், ”எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். ”(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. ”அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ”(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

ஆகவே இறுதி வேதத்தின் உண்மையான நிலையை உணர்ந்து இறைவனின் முன்னோர்களின் அடிச்சுவட்டை கைவிட்டு உண்மையான மார்க்கத்தின் பால் திரும்பாறு இஸ்லாம் உலக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.

உலக அமைதி


தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் ஒரு காரணமாகும்.

மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ‘மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா’ என்று அல்லாமா இக்பால் கவிதை பாடினார். எந்த மதமும் தங்களுக்குள் பேதங்களைப் பாராட்ட சண்டையிட்டுக்கொள்ள கற்றுத்தரவில்லை. என்பது இதன் அர்த்தமாகும். பிறகு மதங்களின் பெயரால் இந்தச் சண்டை ஏன்? இந்தக் கேள்விக்கு நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.

மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாக சிந்தப்படுகின்றது என்ற நாத்திகர்களின் வாதம் பொய்யானது. அடிப்படை இல்லாதது.

உலகில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தங்களான கருதப்படுவது முதலாவது உலக யுத்தமும், இரண்டாவது மகா உலக யுத்தமும்தான். இந்த யுத்தங்கள் ஈவு இறக்கமில்லாமல் லட்சக்கணக்கான மனித உயிர்களை அநியாயமாக பலிவாங்கின. இந்த யுத்தங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்பெற்ற யுத்தங்கள் அல்ல. இனத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களாகும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் மகாபாரத யுத்தம் போல் இதுவரை ஒரு யுத்தம் நடந்ததில்லை. இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. ஆதிக்க வெறியால் நடபெற்ற யுத்தமாகும். அடுத்து இலங்கை என்ற நாட்டையே இராமர் எரித்து சாம்பலாக்கிய மகாயுத்தம், இதில் மோதிய இராமரும் இராவணரும் இருவரும் இந்துக்கள்தான். இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தமல்ல. பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடத்தப்பட்ட யுத்தம். இவையெல்லாம் புராண இதிகாசகால யுத்தங்கள்.

வரலாற்று ரீதியாக பார்ப்போமானால் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய யுத்தம் கலிங்கத்துப் பரணியில் சாம்ராட் அசோகன் நடத்திய யுத்தம். இதுவும் மத்ததின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த யுத்தங்களாகும். சந்திரகுப்தன், அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றோர் நடத்திய யுத்தங்களும் நாடு பிடிக்கும் யுத்தங்களே. அன்மையில் நடைபெற்ற யுத்தமான வளைகுடாப் போர் கூட நாடு பிடிக்கும் யுத்தமே.

இன்று உலகில் வல்லரசுகள் மோதுவது மதத்தின் பெயரால் அல்ல. ஆதிக்கத்தின் பெயரால்தான் மோதுகின்றன. ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி மதத்தின் பெயரால் நடைபெற்றதல்ல. அது வர்க்கப் போராட்டம். இதில் பத்து லட்சத்திற்கும் மேலாக மக்கள் மடிந்தார்கள். ஆப்ரிக்கா கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் நடைபெறுவது வெள்ளையன் கருப்பன் என்ற இனப்போராட்டம். நம் நாட்டிலும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என இனத்தின் பெயரால்தான் மனிதனின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. தங்களை பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் என்று தமிழகத்தில் வலம்வரும் இவர்கள் நடத்தும் போராட்டங்களும் இனப்போராட்டங்களே. இலங்கையில் நடபெற்று வரும் இரத்தக் களரிக்குக் காரணம் இன வெறியே தவிர மதவெறி அல்ல.

இனம், மொழி, நாடு, வர்க்க நலன் என்ற எண்ணங்கள் தலை தூக்கும் பொழுதெல்லாம் உலகில் மனித இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. உலகில் சாந்தியும் சமாதானமும் இல்லாமல் போனதற்கு இப்படிப்பட்ட வாதங்கள்தான் காரணமாகும். வகுப்பு வாதம் வளருவதற்கு இவைகள்தான் துணைபோகின்றன. இப்படிப்பட்ட வகுப்பு வாதங்களுக்கு சாவு மணி அடிக்க இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம் ஒன்றே வழி. அது ஒன்றுதான் இனவாதத்திற்கும், வகுப்பு வாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. எந்த மார்க்கம் வகுப்பு வாதத்திற்கு எதிராக இருக்கின்றதோ, அந்த மார்க்கத்தவர்களை வகுப்பு வாதிகள் என்ற பட்டம் சூட்டி இந்த திருடர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர்.

மதத்தின் பெயரால் சண்டைகளே நடக்க வில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நடக்கின்றன. ஆனால் இனத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடைபெறும் சண்டைகளுக்கு முன்னால் இந்த சண்டைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய சண்டைகள் அல்ல. உதாரணத்திற்கு சொல்கின்றேன்: இஸ்லாத்தை நிலைநாட்ட நபி(ஸல்) அவர்களும் சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். இதைப் பற்றி பேராசிரியர் K.S.ராமாகிரிஷ்ணராவ் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்)” என்ற தலைப்பில் எழுதிய நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

இறைத்தூதர் யுத்த களத்தின் அணுகுமுறையை முழுக்க மாற்றினார். அரேபிய தீபகற்பம் முழுக்க அவர் ஆளுகையின் கீழ் வந்தபோது, அவர் வாழ்நாளில் ஏற்பட்ட எல்லா போர்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தாண்டவேயில்லை. அவர் அரேபியாவின் காட்டுமிராண்டிகளுக்கு தொழக்கற்றுக் கொடுத்தார். தனியாகவல்ல; யுத்தத்தின் ஆரவாரங்களுக்கு நடுவேயும், கூட்டமாகத் தொழக் கற்றுத் தந்தார். எப்பொழுதெல்லாம் தொழுகை நேரம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழுகையை கைவிடக்கூடாது; ஏன் ஒத்திப் போடக்கூடாது என்று அவர் போதித்தார். படைகளில் ஒரு பிரிவினர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு பிரிவினர் தொழுகையை முடித்த பிறகு போர் செய்ய செல்வார்கள். காட்டுமிராண்டித்தனம் நிலவிய காலத்தில் யுத்தங்களே மனிதத் தன்மை உடையதாக ஆக்கப்பட்டது. கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், வாக்கு முறித்தலுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. குழந்தைகள், பெண்கள், வயதான ஆண்களை காயப்படுத்தக்கூடாது; கொல்லக்கூடாது என்று கட்ட்ளைகள் வெளியிடப்பட்டன. பேரிச்ச மரத்தை, பல மரங்களை வெட்டக்கூடாது என்றும், மத குருமார்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

மெக்காவை அவர் கைப்பற்றியபோது அவரது அதிகாரம் உச்சகட்டத்தில் இருந்தது. எந்த நகரம் அவரது போதனைகளை கேட்க மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரை பின்பற்றுவோரையும் பெரும் சித்திரவதை செய்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் துரத்தி அடித்ததோ, 200 மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையிலும் இடையறாத பகையில் தாக்குதல்களை தொடுத்ததோ, அந்த நகரம் இப்பொழுது அவரது காலடியில் கிடந்தது. தன்மீதும் தன்னை பின்பற்றுவோர் மீதும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக யுத்த விதிகளின்படி அவர் பழி தீர்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார்? முஹம்மதுவின் இதயத்திலிருந்து அன்பும் இரக்கமும் பெருக அவர் “உங்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை” என்று கூறினார்.

தற்காப்புக்காக மனித உள்ளங்களை ஒன்று படுத்த யுத்தத்தை அவர் ஏன் அனுமதித்தார் என்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கம் நிறைவேறிய பொழுது அவர் தன்னுடைய மோசமான எதிரிகளைக்கூட மன்னித்துவிட்டார். தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்ஸாவை கொன்றவர்கள் அவரது உயிரற்ற உடலை கீறி ஈரலை வெளியே எடுத்து கடித்த மிகவும் கொடூரமான எதிரிகளைக் கூட அவர் மன்னித்துவிட்டார்.

உலகம் தழுவிய சகோதரத்துவம், மனித குலத்தின் சமத்துவம், போதித்த கொள்கைகள் மனித இனத்தை மேம்படுத்த அவர் தந்த போதனைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா பெரிய மதங்களும் அந்தக் கொள்கைகளை போதித்துள்ளன. ஆனால் இறைத்தூதர் முஹம்மது மட்டும்தான் அந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப் படுத்தியவர் ஆவார். அதன் மதிப்பு எதிர்காலத்தில் சர்வதேச உள்ளுணர்வு முழுக்க விழித்தெழும் வேளையில் முழுமையாக உணரப்படும். இன வேற்றுமைகள் மறையும். வலிமை வாய்ந்த உலக சகோதரத்துவக் கொள்கை நிலை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று உலகில் நடைபெறும் மதச்சண்டைகளுக்கு அந்த மதங்களல்ல காரணம். இனவெறி பிடித்த ஆதிக்க சக்திகள். தங்கள் சக்திகளை மறைக்க விலை போகும் சில மதவாதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் தில்லுமுல்லு, சூழ்ச்சிகளை மறைக்க மதங்கள் மீது பழிபோடுகின்றனர். சிலுவை யுத்தங்களுக்கு காரணம் கிறிஸ்துவ பாதிரிமார்கள். பாலஸ்தீன யுத்தங்களுக்கு காரணம் யூதகுருமார்கள். ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு காரணம் சில சுயநலமிக்க முல்லாக்கள். பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதற்கும், அதன் பின் நடந்த கலவரங்களுக்கும் சில சாதுகளும், சன்னியாசிகளும்தான் காரணம். முஸ்லிம்களிடையே நடைபெறும் சுன்னத் ஜமாஅத், ஷியா கலவரங்களுக்கு சில முஸ்லிம் முல்லாக்களே காரணம். ஆக இந்த சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் காரணம் இந்த மதங்களை தங்கள் கைக்குள் வைத்து ஆட்டி படைக்கும் மதக்குருக்கள்தான் காரணம். இவர்களை ஓரங்கட்டினால், தனிமைப்படுத்தினால் இந்த சண்டைகள் தானாக நிற்கும்.

மதங்கள் வேண்டும். மதங்கள் தான் மனிதனை மேன்மைப்படுத்தும். மதங்கள்தான் உலகில் அமைதியை கொண்டுவரும். ஆனால் குருக்கள், சன்னிதானங்களை தலையில் தூக்கி ஆடுவோமேயானால் அமிர்தமும் விஷமாகிவிடும். உலக பிரச்னைக்கு ஒரே தீர்வு மதங்களை தூய்மைப்படுத்துவது, புரோகிதரர்களின் கைகளிலிருந்து மதங்களை விடுவிப்பது. இதை விடுத்து மதங்களை குற்றம் சொல்வதில் பயனில்லை. உலக அமைதிக்கு ஒரே வழி. ஒன்று இன வெறி, ஜாதி வெறி, மொழி வெறி, ஆதிக்க வெறி, வகுப்பு வெறி இவை அனைத்தும் களையப்படவேண்டும். மதங்களிலிருந்து புரோகிதரர்களைக் களையெடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

இஸ்லாம் ஒரு அதிசயம்

 

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.

இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?

ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.

முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.

தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?

இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;

يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

 
 

 

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் எனும் உண்மையை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதியான சான்று ஆகும். வான வீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், பாலைவனங்களில் திரியும் ஒட்டகைகள், தென்துருவத்தில் வசிக்கும் பறக்கவியலாத ஆனால் நீந்தக்கூடிய கடற்பறவைகள், பென்குயின்கள், மனித உடலில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள், பழங்கள், செடிகள், மேகங்கள், கோளங்கள், முழுமையாக நிறைவான நிலையில் சஞ்சரிக்கும் விண்மீன்கள், பால்மண்டலங்கள், ஆகிய யாவற்றையும் மிக நுண்ணிய அமைப்புகளோடும் மிகச் சிறந்த இயல்புகளோடும் இறைவன் படைத்தான்.

இதுபோலவே இந்தப் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு உறுதுணையாக அமைந்த எல்லா அமைப்புகளும் மிக நுணுக்கமான சமநிலை பேணும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இந்த சமநிலையில் மில்லிமீட்டர் அளவு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்பட்டாலும் புவியில் வாழ்வது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். அந்தச் சமநிலை பற்றிச் சிறிது உற்று நோக்கினால் மிகச் சிறந்த முறையில் அவை கணிக்கப் பெற்றிருப்பதும் அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப் பெற்றிருப்பதும் புலனாகும். எடுத்துக்காட்டாக பூமி சற்றே குறைந்த வேகத்தில் சூரியனைச் சுற்றி சுழன்றால் பகலுக்கும் இரவுக்கும் இடையில் மிக அதிகமான அளவில் வெட்பநிலை வேறுபாடு உண்டாகும்; வேகமாகச் சுழன்றால் சூறாவளியும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு புவி வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடும்

இதுபோல, இந்தப் புவியை உயிர்வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோளாக அமைய உதவும் பல நுண்ணிய சமநிலை பேணும் படைப்பினங்கள் உள்ளன. இவையாவும் எதேச்சையாக எழுந்தவை என்று கூறவியலாது. இத்தகைய நேர்த்தியான திட்டங்களும் சமநிலைகளும் எல்லாம் குருட்டாம் போக்கில் உண்டானவை என்று எந்த அறிவுடைய மனிதனும் கூறமாட்டான். ஒரு காரோ, கேமராவே – படம் பிடிக்கும் கருவியோ – அதை வடிவமைத்த விழிப்புடைய ஒருவரை நினைவூட்டுகிறது. இதுபோலவே, ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பல இணைப்பு முறைகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், தானாகவே உருவான தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய ஒரு பருப்பொருள் என யாரும் முடிவு கட்ட முடியாது. இறைவன், இவையாவும் அவனால் படைக்கப்பட்டவை எனும் உண்மையை நமக்கு குர்ஆனில் அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டி ருக்கிறான்.

மேகத்திலிருந்து உங்களுக்கு மழையை பொழியச் செய்பவன் அவன் (இறைவன்)தான். அதிலிருந்து தான் நீங்கள் நீர் அருந்து கிறீர்கள்; நீங்கள் உங்கள் கால் நடைகளை மேய்க்கும் புற்பூண்டுகளுக்கு நீரும் அதிலிருந்தே பெறுகிறீர்கள். அதிலிருந்தே உங்க ளுக்காக பயிர்பச்சைகளையும், ஆலிவ் பழங்களையும் காய்க்கச் செய்கின்றான். சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி உள்ளது. இரவையும் பகலையும் உங்களுக்குப் பயன்படும் வகையில் படைத்துள்ளான். சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் இணங்கிச் செயல்படும்படி படைத்திருக்கிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி இருக்கின்றது. மேலும் விதவிதமான வண்ணங்கள், அவன் உங்களுக்காக படைத்தவை யாவற்றையும் கவனிப் பவர்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது. (அந்நஹ்ல் 16:10-13)

இவையாவைற்றையும் படைத்தவன் படைக்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஒத்தவனாவானா? நீங்கள் இதைக் கவனிக்க வேண்டாமா? (அந்நஹ்ல் 16 :17)

மேலே கூறப்பட்டவற்றை ஆழ்ந்து சிந்தித்தால், மார்க்க(மத) அறிவு அறவே இல்லாதவரையும் கூட இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணரச் செய்து அவனுடைய வல்லமையையும் ஆற்றலையும் பாராட்டத்தூண்டும்; தன்னுடைய உடலைப் பற்றி சிந்தித்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் மிகச் சிறந்த படைப்பை உணரத் தூண்டும்.

அகில உலகங்களையும் காத்தருளும் இறைவனே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயற்கையையும், மனிதனையும் படைத்தவன் ஆவான். உயிரினங்கள், மனிதன் உட்பட யாவற்றுடையவும் தேவைகளை நன்கறிந்தவனும் அவனே ஆவான். அதனால் தான் மனிதனுக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை முறையாக இறைவன் வழங்கிய மார்க்கம் விளங்குகிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்தாலே மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இறைவன் வழங்கி அருளிய நெறி நூலைப் பற்றி அறியாத மனிதன் கூடத் தன்னைச் சூழ்ந்துள்ளவற்றை, உற்று நோக்கிச் சிந்தித்தால், இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ள கூடிய மக்களுக்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ( 3:191,192)

வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள். (3:191,192)

இந்தச் சந்தர்ப்பத்தில் மார்க்கத்தின் தேவை வெளிப்படுகிறது. இதற்குக் காரணம், படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த மனிதன் நிச்சயமாக அவனை நெருங்கவே விரும்புவான். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைவான். அவனுடைய நேசத்தையும் கருணையையும் பெறுவதற்குரிய வழிகளைக் காண நாடுவான்; இதற்குரிய ஒரே வழி குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை நன்றாக அறிந்து கொள்வதுதான். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு, மாற்றம் ஏதும் இல்லாதது; இஸ்லாமின் வழிகாட்டும் நூல்; இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்.


நாஸ்திகர்கள்

   
 

நாஸ்திகர்கள் இறைவனையும் மறுமையையும் மறுத்துக்கூற பிரதான காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். சமத்துவ சகோதரத்துவ சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை.

மனித சமுதாயத்தின் பெரும்தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன. நாய்க்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையை பார்க்கிறோம். ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது. இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகவே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுபடுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்றுவிடுகின்றது என்று நிலை நாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நாஸ்திகர்களின் எண்ணமாகும்.

நாஸ்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அதை அனைத்தையும் அகற்றி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான திட்டமாகும். அவர்களின் திட்டம் குறிப்பாக தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை நேர்வழியை மதங்களாக்கி மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதரர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.

கள் குடிப்பது கூடாது; குடி குடியைக் கெடுக்கும்; இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணரவைத்து அவர்களை குடியை விடச் செய்வதே அறிவுடையவர்கள் செய்யும் நல்ல முயற்சிகள். தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பலன்களை மக்கள் இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் குடிக்கவில்லை என்பதற்காக குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சி குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை விடமாட்டான். இதே போல் மூட்டைப் பூச்சித் தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான். அறிவுள்ள மனிதன் வீட்டிலிருந்தே கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்.

இப்படிப்பட்ட ஒரு அறிவற்ற முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்கு பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னயிலிருந்து பெறப்படும் பயன்களை மனிதன் இழப்பதுபோல் சமூகத்தில் சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்.

நாஸ்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர். மக்களுக்கு அத்தியவாசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே அவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர் அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன. இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசிமானவற்றை அவசியமில்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாஸ்திகர்கள் சொன்னால் அதை எந்த அறிவாளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றைச் சொல்கிறோம்.

மனிதனுடைய வாழ்க்கைக்கு உணவு பிரதானமானதாக இருக்கிறது. உணவில் பிரதானமாக நாம் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆகவே அரிசி நமக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. இந்த அரிசி நமக்கு கிடைக்க செய்ய அரிசி வியாபாரிகள் என்ற இடத்தரகர்கள் உண்டாகி விடுகிறார்கள். இந்தத் தரகர்களின் எண்ணிக்கை அரிசியை இவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடும் மக்கள் தொகையைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. இவர்கள் முறையாக அரிசியைப் பெற்று ஒரு நியாயமான ஆதாயத்தோடு கலப்படம் எதுவும் செய்யாமல் மக்களுக்கு கொடுத்தால் இது உண்மையில் ஒரு சேவையாகும். ஆனால் இந்த நாட்டில் நடைமுறையில் என்ன நடக்கிறது?

மக்களின் அத்தியாவசிய தேவையை அறிந்துகொண்ட அந்தத் தர்கர்கள் அந்த அரிசியில் மண்ணையும், கல்லையும் கலந்து அரிசி என்று விற்கிறார்கள். அதாவது மக்களின் அவசியத் தேவையை துஷ்பிரயோகம் செய்து கல்லையும் மண்ணையும் அரிசியாக்கி காசாக்குகிறார்கள். இந்த ஈனச் செயலை மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் செய்ய மாட்டான். இந்த ஈனச் செயலுக்குரிய கொடிய தண்டனையை மறுமையில், தான் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுள்ள எவனும் செய்ய மாட்டான். மனித உருவத்தில் வாழும் மிருகங்கள் மட்டுமே இந்தச் செயலை செய்ய முடியும்.

இங்கு நாஸ்திகர்கள் நமக்கு அரிசி தேவையிருப்பதால்தானே இந்த ஈனர்களுக்கு கல்லையும் மண்ணையும் அரிசியாக்கி காசாக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. எனவே மக்களே யாரும் அரிசி வாங்காதீர்கள், அரிசியை சமைத்து சாப்பிடாதீர்கள் என்று போதிக்க வருவார்களா? அப்படி அவர்கள் வந்தால் அவர்களை யாரும் அறிவாளிகளாக ஏற்றுக்கொள்வார்களா? இப்போது மனிதன் உபயோகிக்கும் பெரும்பாலும் எல்லா உணவுப் பொருள்களிலும் கலப்படங்கள் பெருத்து விட்டதை அறிகிறோம். கலப்படம் செய்ய முடியாத உணவுப் பொருள்கள் மட்டுமே தப்பியுள்ளன. அதிலும் நாஸ்திகர்கள் மக்களிடையே இருந்த இறை நம்பிக்கையை போக்கியபின் இந்த உணவுப் பொருள் கலப்படங்கள் அதிகமாகிவிட்டன.

கல்வியில் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள்

அடுத்து மனிதன் கல்வியறிவை அடைய விரும்புகிறான். மக்களுக்கு கல்வியை போதிக்கிறோம் என்று ஒரு சாரார் கிளம்புகிறார்கள். உண்மையில் இதனை ஒரு சேவையாகக் கருதி அவர்கள் செய்வார்களானால் அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் நாட்டின் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது?

சாதாரண L.K.G யிலிருந்து கல்வியின் பெயரால் எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் அநியாயங்கள், லஞ்ச லாவன்யங்கள், தில்லுமுல்லுகள், மோசடிகள் சொல்லித்தீராது, எழுதித் தீராது. நாஸ்திகர்களுக்கும் இவை அனைத்தும் நன்றாகவே தெரியும். கல்வியின் பெயரால் ஒரு சிறுவர்க்கம் சமுதாயத்தையே ஏய்த்துப் பிழைக்கின்றனர். எனவே இந்த சமுதாயத்திற்கு கல்வியே தேவையில்லை, கல்வியற்ற ஆதிகால மக்களை போல் வாழ்க்கை நடத்துவோம் என்று எந்த நாஸ்திகர்களூம் சொல்லமாட்டார்கள். இப்படி மனித சமுதாயத்திற்கு, மனித வாழ்விற்கு அத்தியாவசியமான அனைத்துத் துறைகளிலும் இடைத்தரகர்களாக ஒரு சிறு வர்க்கம் புகுந்துகொண்டு முழு சமுதாயத்தையும் ஏமாற்றி வருகின்றனர்.

மனிதனுக்கு தேவை என்று வந்துவிட்டால் அந்த தேவையின் அளவை அனுசரித்து ஒரு சிறுவர்க்கம் அதை துஷ்பிரயோகம் செய்து அவர்கள் பிழைப்பு நடத்துவது தவிர்க்க முடியாததாகவே மனித வாழ்க்கையில் அமைந்து விடுகிறது. மனிதன் இவ்வுழகில் வாழ்வதாக இருந்தால் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டே ஆகவேண்டும். தேவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைத் துறந்து வாழ் என்று மனிதனுக்கு உபதேசம் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்ட மோசடிகள், தில்லுமுல்லுகள், ஏமாற்று நடத்தும் துறைகள் மனித வாழ்வுக்கு அவசியமில்லை என்று கூறத்துணியாத நாஸ்திகர்கள், மனித சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையான இறை நம்பிக்கை மட்டும் அவசியமில்லை என்று கூறத்துணிவதேன்?

மனித வாழ்க்கையின் வெற்றியே அந்த இறை நம்பிக்கையின் அடிப்படியிலேயே இருக்கிறது. மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சீர்கேடுகள், சீராக இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் மிகமிக அத்தியாவசியமாக இருக்கின்றன. அதன் காரணமாக அவற்றின் அத்தியாவசியத்திற்கு ஏற்றால் போல் அந்த துறையில் ஒரு சாரார் புகுந்து தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக அரிசியின் பெயரால், அரிசியில் கல்லையும் மண்ணையும் கலப்பது போல் சத்திய மார்க்கத்தில், சத்திய மார்க்கத்தின் பெயரால் அசத்திய மதங்களைக் கலக்கத்தான் செய்வார்கள்.

அரிசியில் கல்லிருந்தால் அதிலுள்ள கல்லை அகற்ற முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், அரிசியை சாக்கடையில் கொட்ட துணியக்கூடாது. அதே போல் சத்திய மார்க்கத்தில் கலக்கப்பட்டுள்ள அசத்திய மதங்களை அகற்ற பாடுபட வேண்டுமேயல்லாது, சத்திய மார்க்கத்தையும் அழித்துவிட முற்படக் கூடாது. இது மனித சமுதாயத்திற்கு பயங்கர நஷ்டத்தையும் அழிவையும் வீழ்ச்சியையுமே ஏற்படுத்தும். இதை நாஸ்திகர்கள் நிதானமாக சிந்தித்து விளங்க முற்பட வேண்டும்.

 

இஸ்லாம் சமய(மத)மல்ல!

இஸ்லாம் சமய(மத)மல்ல!


மற்ற சமயங்களைப் போல் மதங்களைப்போல் “இஸ்லாம்” ஒருசமய(மத)மாகவே மாற்றார்களால் கணிக்கப் பட்டுள்ளது. இது வி„யத்தில் அவர்களைக் குறைகூறி விமர்சிக்கும் இடம்பாடு மிகக்குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், இன்றைய முஸ்லிம்களின் புரோகித மோகம், உண்மை மார்க்கத்தை சமயமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது.

மற்ற சமயங்களில் நியதியாக்கப்பட்டுள்ள மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் பெரும்பாலானவைகள் அப்படியே  அல்லது சிற்சில மாற்றங்களுடன் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையை அனுசரித்து நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்களின் அங்கீகாரத்துடன், இவைகள் அவர்களாலேயே நடத்தி வைக்கப்படுகின்றன. அதனால், இதுவும்  இஸ்லாத்திற் குட்பட்டதே என்பது இன்றைய முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

இஸ்லாத்திற்கு இன்றைய  முஸ்லிம்கள்  மாற்றாருடன்  போட்டிக் போட்டுக்கொண்டு  பாரம்பரிய  சொந்தம் கொண்டாடுவதால் மற்ற சமயத்தவர்கள் மூடச்சடங்கு சம்பிரதாயங்களை நியாப்படுத்த செய்யும் விதண்டா வாதங்களே இங்கும் நியாயங்களாகின்றன.

இந்நிலையில்,இன்றைய  முஸ்லிம்கள்  நன்றாகச் சிந்திப்போர் கூட இஸ்லாத்தைப் பாரம்பரிய அடிப்படியில் அணுகி, இஸ்லாமும், மற்றசமயங்களைப் போல் ஒருசமயம் என்ற மாயையில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் போன்றவர்கள் மூலம்தான் மாற்றார்கள் இஸ்லாத்தை அறியும் சூல்நிலை பரவலாகக் காணப்படுகின்றது.

ஏற்கனவே மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய முஸ்லிம்கள் (தவறான) நடை முறைகளைக் கண்டு இஸ்லாத்தை மாற்றார்கள் தவறாகக் கணித்து வைத்துள்ளனர். சில போற்றத்தக்க நடைமுறைகள் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டாலும், அவைகள் மாற்றார்களிடம் இஸ்லாத்தை நிƒத் தோற்றத்தில் அறிமுகப்படுத்த ஏற்றதாய் இல்லை.அதனால் மற்ற சமயத்தவர்கள் போல் இன்றைய முஸ்லிம்களும்  ஒரு சமயத்தவர்களே!

சடங்கு சம்பிரதாயங்களைத் தோற்றுவித்தவர்கள் புரோகிதர்கள். இறைவன் கூறுகிறான்:
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்; அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி,  அல்லா‹வுடைய வழியிலிருந்து, அறிவின்றி (ƒனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.(அல்குர்ஆன் 31:6)

மற்ற சமயங்களைப் போல் இஸ்லாமும் ஒரு சமயமே மதமே என்ற (தவறான) தோற்றம் எப்படியோ ஏற்ப்பட்டுவிட்டது. இது போலித் தோற்றம், உண்மையல்ல. இதற்கு இன்றைய முஸ்லிம்களும், அவர்களின்  முன்னோர்களும், மார்க்கத்தைப் புரோகிதமாக்கிய முல்லா வர்க்கமும் முழுப் பொறுப்பாளர்களாகிறார்கள்.


இஸ்லாம் பொறுப்பு அல்ல!
இஸ்லாம்
ஒரு மதமல்ல!
இஸ்லாம் ஒரு சமயம் அல்ல!
இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல!
இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம்.
அல்லா‹ முஸ்லிம்கள் அனைவரையும் உண்மையான மார்க்கத்தை  விளங்க வைப்பானாக.

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு!

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு!

  • இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை – பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே – புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக – பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

தலைவர்களுக்கு சிலை தேவையா?

images/index_r1_c1.gif
 

தலைவர்களுக்கு சிலை தேவையா?

மக்களுக்கு தொண்டு செய்து, அதன் முலம் மக்களிடையே பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது உருவத்தை மாலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.

மாலை மரியாதை என்பது போய் கால ஓட்டத்தில் அக்கற்சிலைகள் தெய்வங்களாக உயர்வு பெற்று விடுகின்றன. மனிதனின் கால் மிதிபடும் கல் அந்த மனிதனே தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்வதற்கு யார் காரணம்? மனிதனின் அறிவற்ற செயலே இதற்குக் காரணம். தங்களை பெரும் பகுத்தறிவாளர்கள் என   கூறிக்கொள்வோரும் இதற்கு விதிவிலக்குப் பெற்றவர்களாக இல்லை.

மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசை பாடியவர்கள், இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள். இந்த சிலைகளே சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உண்மையை விளங்காதவர்களாக இருக்கிறார்கள்.

மனிதன், ஆரம்பத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் சமாதி, பின்னர் கற்சிலை வடித்தல் என்று ஆரம்பித்துப் பின்னர் அதுதான் சிலை வணக்கமாக மாறுகிறது என்பதை இறுதி மறை அல்குர்ஆன் 71:23 அம்பலப்படுத்துகிறது.

மனிதர்களாக வாழ்ந்து இறந்தவர்களுக்கு மரியாதை என்ற பெயரால் நிறுவப்படும் கற்சிலைகளே குட்டி, குட்டி தெய்வங்களாக உருவாகி மனிதர்களிடையே பல தெய்வ வழிபாட்டை உருவாக்குகின்றன. தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் இந்த பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்கு பதிலாக, இவர்களே மேலும் பொய்க் கடவுள்கள் தோன்ற வழி வகுத்துக்கொண்டு அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரேயொரு இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களாக ஆகிவிடுகிறார்கள். இவர்களும் மனிதனின் சீரழிவுக்கு புரோகிதரகளைப் போலவே ஒரு வகையில் காரணமாகிவிடுகிறார்கள்.

இந்த சிலைகள் இறைவன் மன்னிக்காத, இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் செயலை மனித வர்க்கம் பக்தியுடன் செய்ய வைப்பது ஒருபுறம் அச்சிலைகளே மனிதர்களிடையே பெரும் கலவரங்கள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒரு சமூகத்தாருக்கு பெரும் தலைவராகத் தெரியும் ஒருவர், இன்னொரு சமூகத்தாரின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கிறார். எனவே ஒரு சமூகத்தாரின் சிலையை பிரிதொரு சமூகத்தார் அவமானப்படுத்தும் நிலையும் அரங்கேறி வருகிறது.

அதனால் சிலைகளை பாதுகாக்க அதனைச் சுற்றி கம்பி வேலி போடுகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். தலைவர்களின் சிலைகள் சிறைக் கைதியாகவும் அவர்களின் தலைகள் பரவைகளின் மலக்கூடமாகவும் காட்சி அளிப்பதை பார்க்கிறோம். சிலைகளை சிறையிலிட்டு பாதுகாப்பு அளித்தும், அவற்றை உடைத்து அவமானப்படுத்தும் செயல்களும் நிற்பதாக இல்லை.

உத்திர பிரதேசத்தில் அம்பேத்கார் சிலையை யாரோ உடைத்து அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால் மஹாராஷ்டிராவில் பெருங்கலவரம் ஏற்பட்டு தொடர்வண்டிகள், நூற்றுக்கணக்கான பேருந்துகள், வாகனங்கள் எரிப்பு, உயிர்ச் சேதம் என பல கோடிகள் நாசமாகின.

பலருக்கு ஞாபகம் இருக்கலாம், தலைவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டங்களுக்கு அத்தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்படி ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவரின் பெயர் வைக்கப்போய் அங்கு பெரும் கலவரங்கள் மூண்டன. அரசு அக்கலவரத்தை அடக்க முடியாமல் தவித்தன. இறுதியில் அந்த மாவட்டத்திற்கு அந்தத் தலைவரின் பெயர் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன.

இதே அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இன்னொரு அழகிய முடிவை எடுத்தால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதாக அமையும். அதுவே நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதாகும். தலைவர்களுக்கு மரியாதை செய்வது என்பது, அவர்களின் நல்ல போதனைகளை எடுத்து நடப்பது என்பதாகும். அவர்களின் அழகிய செயல்முறைகளைப் பின்பற்றுவதாகும். இதுவே அவர்களை உண்மையில் மதிப்பதாகும். அதற்கு மாறாக அவர்களுக்கு சிலைவடித்து, சிறையிலிட்டு, அவர்களின் தலையை பறவைகளின் மலக்கூடமாக ஆக்குவது உண்மையில் அவர்களுக்கு மரியாதை செய்வதாக ஆகாது.

எனவே நாட்டிலுள்ள சிலகளை அகற்றுவது பல தெய்வ வணக்க வழிபாடுகளை ஒழிக்க வழி வகுப்பதோடு, சமூகங்களில் ஏற்படும் சச்சரவுகளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பல கோடி நஷ்டத்தோடு, பொன்னான மனித உயிர்களும் மாய்க்கப்படுவது தவிர்க்கப்பட வழி ஏற்படும்; சிலை விரும்பிகள் சிந்திப்பார்களா?

அழிவுப் பாதையில் மனிதன்!

 


இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.

பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.

ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?

இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.

ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.

மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.

இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.

இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.

மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.

அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?

அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.

இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.

மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் – நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்