நாவைப் பேணுக!

உண்மை பேசுக!
அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

 

கோபம் தன்னையே அழித்து விடும்

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்


கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து – பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

 

நயவஞ்சகம் கொள்ளமாட்டார்

நயவஞ்சகம் கொள்ளமாட்டார்
உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும். இவ்வாறு புகழ்வது  பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.

புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.

ரஜா (ரஹ்) அவர்கள் மிஹஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ”இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ”போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ”அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்” என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்” என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.” என்றும் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்’ என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.

புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ”அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ”மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே!” என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ”அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்” என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார்
உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

”மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.” முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்…

அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர் களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ”மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ”அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்” என்று கூறுவான். அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது” என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.

மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ”அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்பான். அவன் ”நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.

இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ”அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்கப்படும். அவன் ”எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்” என்று கூறுவான். ”அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.” (ஸஹீஹுல் புகாரி)

உறுதிமிக்கவர்
உண்மை முஸ்லிம் நேர்வழி பெற்றவராக, தெளிவான சிந்தனை உடையவராக இருப்பார். சத்தியத்தைவிட்டும் முகம் திருப்புவதை, சத்தியத்தை மறைப்பதை, பொய் கூறி மக்களை ஏமாற்றுவதை அவர் விரும்பமாட்டார். சத்தியத்தின் மீது நிலைத்திருப்பதில் ஏற்படும் சிரமங்கள், துன்பங்களின் காரணமாக சங்கடமோ, சஞ்சலமோ, தடுமாற்றமோ இல்லாமல் சமூக வாழ்வில் அதை எளிதாக எதிர்கொள்வார்.

சத்தியத்தில் நிலைத்திருப்பது, அவரது வாழ்வில் விரும்பினால் கைக்கொள்வது, விரும்பாவிட்டால் விட்டுவிடுவது என்பது போன்ற சடங்கல்ல. மாறாக, ஈமானுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற, அல்லாஹ் இன்னும் அவனது தூதரால் கட்டளையிடப்பட்ட மிக அவசியமான பண்பாகும்.

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) ”நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்” என்றும்,

”நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்” என்றும் ”பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக அதில் (தங்கி) இருங்கள்” என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,31,32)

உறுதியுடன் நிலைத்திருக்கும் இறை விசுவாசிகளுக்குத்தான் எவ்வளவு மகத்தான நற்கூலி! மறுமை நாளில் அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது! அவர்களுக்கு மலக்குகள் அளிக்கும் வரவேற்பும் நற்செய்தியும் எவ்வளவு அழகானது என்பதைப் பாருங்கள்!

ஏனெனில் உறுதியாக நிலைத்திருப்பது கடினமான காரியமாகும். இது அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்ட இறையச்சமுள்ள உண்மை முஃமின்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் தீமைகளுக்கு அடிபணியமாட்டார்கள். இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இன்பங்கள், ஆட்சி அதிகாரங்கள், பட்டம் பதவி, செல்வங்களுக்கும் அடிபணிய மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான நன்மைகளை அடைந்து கொள்வார்கள்.

”நிலையாக இருப்பது” என்பதன் பொருளை நபி (ஸல்) அவர்கள் மிக ஆழ்ந்து அறிந்ததன் காரணமாகத்தான் அது அவர்களை மிகவும் பாதித்தது. இதுவே நிலையாக இருப்பதென்பது சிரமமானது என்பதற்கு ஆதாரமாகும்.

(நபியே!) உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் இருக்கும் இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகியவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள்… (அல்குர்ஆன் 11:112)

இந்த திருவசனத்தின் விரிவுரையில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ”திருகுர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இந்த வசனத்தைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த கடினத்தையும், சிரமத்தையும் அளித்த வேறெந்த வசனமும் கிடையாது” என்று குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் தலைமுடி விரைவாக நரைத்துவிட்டதன் காரணத்தை விசாரித்தபோது நபி (ஸல்) அவர்கள், ”என்னை ஹுது (என்ற சூராவு)ம் அது போன்ற கருத்துடைய சூராக்களும் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டது” என்று கூறி மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ… (அல்குர்ஆன் 41:30)

அல்லாஹ்வின் இந்த சொல்லுக்கு ஒப்பாகவே ரசூலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கு உபதேசித்தார்கள். ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ”அல்லாஹ்வின் தூதரே! இனிமேல் இஸ்லாமைப் பற்றி யாரிடமும் கேட்கத் தேவைப்படாத வகையில் எனக்கு ஓர் உபதேசத்தைக் கூறுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ”ஆமன்த்து பில்லாஹ் (அல்லாஹ்வை விசுவாசித்தேன்) என்று சொல்லி அதில் உறுதியாக இரு” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் முஸ்லிம் (ரழி) அவர்கள் தனது தொகுப்பில் ‘உறுதியாக இருப்பது’ என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ‘இஸ்லாமியப் பண்புகளை ஒருங்கிணைக்கும் தன்மை’ எனத் தலைப்பிட்டு, அதன் கீழ் இந்நபி மொழியைக் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் ‘உறுதியாக இருப்பது’ என்பதில்தான் பல்வேறு மாண்புகளும், நற்குணங்களும் ஒன்றிணைந்துள்ளன.

‘இஸ்திகாமத்’ உறுதியாயிருப்பதில் முதன்மையான பண்பாகிறது முஸ்லிம் ஒரே முகத்துடன் மனிதர்களை சந்திப்பவராக இருக்க வேண்டும். வஞ்சகர்கள், மோசடிக்காரர்களைப் போன்று நிறம் மாறக்கூடாது என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”மனிதர்களிலேயே மிகக் கெட்டவன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

சத்தியத்தின்பால் அழைப்பார்

உண்மை முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார். அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி) வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவரின் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.” (ஸஹீஹ் முஸ்லிம்) நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ”…என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்…” (ஸஹீஹுல் புகாரி) ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும். நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்து கொள்கிறார்கள்.” (ஸுனனுத் திர்மிதி) இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.” (ஸுனன் அபூதாவூத்) மேலும் கூறினார்கள்: ”தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.” (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி) நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார் அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்) ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும். நபி (ஸல்) அவர்கள், ”மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது” என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் ”யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்) பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும். சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கெªரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் ‘நீ அநியாயக்காரன்’ என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அநியாயக்காரனிடம் ‘நீ அநியாயக்காரன்’ என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.” (முஸ்னத் அஹமத்) அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி) நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், ”மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவர்” என்று கூறினார்கள் (முஸ்னத் அஹமத்) இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் ‘அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா’ என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.” (ஸுனன் அபூதாவூத்) முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும். அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, ”விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது…” (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வதில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ”மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.” (ஸுனன் அபூதாவூத்) ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை. தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.” (முஃஜமுத் தப்ரானி) அழைப்புப் பணியில் மிருதுவாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வார் முஸ்லிம் அழைப்பாளர் தனது ஏகத்துவ அழைப்புப் பணியில் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். (நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக!……(அல்குர்ஆன் 16:125) அல்லாஹ்வின்பால் அழைப்பவர் இதயங்களை ஊடுருவும் ஆற்றல் பெற்று, அதில் ஈமான் மீதான நேசத்தைப் பதிய வைத்து, மார்க்கத்தின் பால் மக்கள் விரைந்துவரும் ஆர்வத்தைத் தூண்டுபவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு சிரமத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே அவர் மனிதர்களிடம் தன்னிடமுள்ள கல்வி, ஞானங்களை ஒரே நேரத்தில் கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன் வைத்து அவர்களது உணர்வுகளையும் இதயங்களையும் அவ்வப்போது தொடவேண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் சிரமப்படுத்தும் நீண்ட உபதேசங்களை தவிர்த்திட வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிடையே நடந்து கொண்ட முறையாகும். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழனன்றும் மக்களுக்கு உபதேசம் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒருவர் ”அபூ அப்துர் ரஹ்மானே! நீங்கள் தினந்தோறும் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்” என்றார். இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ”உங்களுக்கு சடைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே தினந்தோறும் உபதேசிப்பதிலிருந்து என்னைத் தடுக்கிறது. எங்களுக்கு சடைவு ஏற்படக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எப்படி நாட்களை நிர்ணயித்தார்களோ அவ்வாறே நானும் உங்களுக்கு உபதேசம் செய்ய நாட்களை நிர்ணயித்துள்ளேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அழைப்புப் பணியில் நீண்ட பிரசங்கத்தை தவிர்த்துக் கொள்வது விவேகமான அணுகுமுறையாகும். அதிலும் மிகப்பெரிய கூட்டங்களில் உரையாற்றும்போது அதில் வயோதிகர்கள், பலவீனர்கள், நோயாளிகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சுருக்கமாக உரையாற்றுவது பிரசங்கம் செய்பவர் அழைப்புப்பணியை நன்கறிந்தவர் என்பதையும் மக்களின் மனநிலையை விளங்கியவர் என்பதையும் வெளிப்படுத்துவதாகும். அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நிச்சயமாக ஒரு மனிதரின் நீண்ட தொழுகையும், சுருக்கமான குத்பாவும் அவர் அறிவாளி என்பதற்கான அடையாளமாகும். தொழுகையை நீளமாக்குங்கள், குத்பாவை சுருக்கிக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (ஸஹீஹ் முஸ்லிம்) அறிவும், விவேகமும் கொண்ட அழைப்பாளர் பிறரை சத்தியத்தின்பால் மென்மையாக அழைப்பார். மக்களின் அறியாமையையும், அவர்களுக்கு விளங்குவதில் ஏற்படும் தாமதத்தையும், அவரை சோர்வடையச் செய்யும் மிக அதிகமான கேள்விகளையும், தவறுகளையும், பொறுமையுடன் சகித்துக் கொள்ளவேண்டும். இது விஷயத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு தனது இதயத்தை விரிவாக்கி அவர்களுக்கு பதிலளிப்பதிலும், போதனை செய்வதிலும் விவேகத்தைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். முஆவியா இப்னு ஹகம் அஸ்ஸலமி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு மனிதர் தும்மினார். நான் ‘யர்ஹமுக்கல்லா?’ என்று கூறினேன். உடனே மக்கள் என்னைப் பார்வையால் துளைத்தார்கள். நான் ”உங்களது தாய் உங்களை இழக்கட்டும்! என்னை இவ்வாறு பார்க்கின்றீர்களே. உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்டேன். அம்மக்கள் கரங்களால் தங்களது தொடைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அவர்கள் என்னை மெªனமாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் மெªனம் காத்தேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, எனது தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அதற்கு முன்னாலும் அதற்குப் பிறகும் அவர்களைப் போன்ற ஓர் அழகிய போதனையாளரை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை கடுகடுப் போடு பார்க்கவில்லை; திட்டவுமில்லை; அடிக்கவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இது தொழுகை. இதில் உலகப் பேச்சு பேசுவது முறையாகாது, தொழுகை என்பது தஸ்பீஹும், தக்பீரும், குர்ஆனை ஓதுவதும்தான்” என்றோ அல்லது இதைப் போன்ற வார்த்தைகளையோ கூறினார்கள். நான் கேட்டேன்: ”அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்துக்கு சமீபமானவன் (நான் சமீபத்தில்தான் இஸ்லாமை ஏற்றேன்). இப்போது அல்லாஹ்வே இஸ்லாமைத் தந்தான். எங்களில் சிலமனிதர்கள் சோதிடக்காரனிடம் செல்கிறார்கள்!” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”நீர் அவர்களிடம் செல்லாதீர்.” நான், ”எங்களில் சிலர் சகுனம் பார்க்கிறார்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள்,”அது அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படும் ஓர் உணர்வாகும். அது அவர்களைத் தடுத்து விடவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) (அது அவர்களை தடுத்துவிட வேண்டாம் என்பதின் பொருள்: மனதில் ஏற்படும் தடுமாற்றத்தால் எந்த காரியத்தையும் நிறுத்திட வேண்டாம் என்பதே.) நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கும் போது தீங்கிழைத்தவரை நேரடியாக கண்டிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இவ்வழி முறையால் அவரது உணர்வுகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும். மேலும் இவ்வழிமுறை உள்ளங்களில் கருத்துக்களை ஆழமாக பதியவைத்து, தவறுகளைக் களைவதில் வெற்றிகரமான அணுகுமுறையாகும். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் ‘அம்மனிதர் இப்படிச் சொல்கிறாரே!’ என்று கூறமாட்டார்கள். மாறாக ‘சிலர் இப்படி, இப்படிக் கூறுகிறார்களே!’ என்றே கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா) வெற்றிகரமான அழைப்பாளனுக்கு வேண்டிய பண்புகளில் ஒன்று தனது பேச்சை தெளிவாக, விரிவாக எடுத்துரைப்பதாகும். முக்கியமான கருத்துக்களை பலமுறை கூறவேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்கள் பேசினால் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை மூன்றுமுறை கூறுவார்கள். ஏதேனும் ஒரு கூட்டத்தாரிடம் வந்து ஸலாம் கூறினால் அவர்களுக்கு மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி) அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நபி (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான பேச்சாக அமைந்திருக்கும், அதை கேட்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.” (ஸுனன் அபூதாவூத்)

ரகசியம் காப்பார்

ரகசியம் காப்பார்
ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.

உமர் (ரழி) அவர்கள் தனது விதவை மகளான ஹஃப்ஸா (ரழி) அவர்களை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரிடத்தில் கேட்டுக்கொண்டபோது அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணியது, அவர்கள் ரகசியம் பேணுவதில் எத்தகு சிறப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதற்குச் சான்றாகும்.

அப்துல்லாஹ இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) அவர்கள், தனது மகள் ஹஃப்ஸா (ரழி) விதவையானபோது கூறுகிறார்கள்: நான் உஸ்மான் (ரழி) அவர்களைச் சந்தித்து அவரிடம், ”நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை மணம் முடித்து வைக்கிறேன்” என்று கூறினேன். உஸ்மான் (ரழி) ”என் விஷயத்தில் நான் யோசனை செய்து கொள்கிறேன்” என்றார். சில நாட்கள்வரை நான் எதிர்பார்த்திருந்த பின், உஸ்மான் (ரழி) என்னைச் சந்தித்து, ”இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கமில்லை” என்று கூறிவிட்டார். பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களை சந்தித்து, ”நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்” என்று கூறினேன். அபூபக்கர் (ரழி) எதுவும் பதில் கூறாமல் மெªனமாக இருந்தார். அப்போது நான் உஸ்மான் (ரழி) மீது கோபம் கொண்டதைவிட அதிகமாகக் கோபமடைந்தேன்.

சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள்; மணமுடித்துக் கொடுத்தேன். அப்போது அபூபக்கர் (ரழி) என்னைச் சந்தித்து, ”நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்பதற்காக என் மீது கோபமடைந்தீர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்” என்றேன். ”நீங்கள் என்னிடம் கூறியபோது என்னை பதில்கூறத் தடுத்த காரணம் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பற்றி (விசாரித்ததை) நினைவு கூர்ந்ததை நான் அறிந்தி ருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நான் ஹஃப்ஸாவை ஏற்றுக் கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ரகசியம் பேணுவது, நமது முன்னோர்களான ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என அனைவரிடமும் இருந்தது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ”நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். என்னை அழைத்து ஒரு வேலைக்காக அனுப்பி வைத்தார்கள். என் தாயிடம் நான் தாமதமாகச் சென்றபோது, ”ஏன் தாமதம்?” என்று என் தாய் கேட்டார். நான், ”நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வேலையாக அனுப்பி வைத்தார்கள்” என்றேன். என் தாயார், ”என்ன வேலை?” என்று கேட்டார். நான் ”அது ரகசியம்” என்றேன். தாயார், ”நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பற்றி எவரிடமும் சொல்லிவிடாதே…” என்று கூறினார்.

அனஸ் (ரழி) அவர்களின் மாணவர் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், ”ஸாபித்தே! அல்லாஹவின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தை யாரிடமாவது நான் சொல்வதாயிருந்தால் அதை உம்மிடம் சொல்லி இருப்பேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணுவதில் தனது மகன் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்த்து அதற்கு மதிப்பளிக்கிறார்கள். அவர் யாரிடமும் சொல்லிவிடாதே என்று கூறியதால் அந்த ஹதீஸை அறிவிக்கும் ஸாபித்துல் புனானி (ரஹ்) அவர்களிடமும் கூறவில்லை. அந்தத் தாய் தனது சிறிய மகன் தன்னிடம் மறைக்கும் ரகசியத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதுதான் இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சியாகும். அது ஆண், பெண், சிறுவர் என அனைவரையும் உயர்வை நோக்கி இட்டுச் செல்வதற்கான வழிமுறையாகும்.

ரகசியத்தை வெளியிடுவது மனிதனை பெரிதும் பாதிக்கும் இழிவான செயலாகும். வாழ்வில் தானறிந்த அனைத்தையும் வெளியிடுவது என்பது முறையற்ற செயலாகும். பல விஷயங்களை மறைப்பதில் மனிதனின் ஆண்மை, கம்பீரம், கெªரவம், கண்ணியம் போன்றவை காக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இல்லறம் சம்பந்தமான விஷயங்களில் ரகசியம் பெரிதும் பேணப்பட வேண்டும். அறியாமையும் மூடத்தனமும் நிறைந்த பைத்தியக்காரனே அதை வெளிப்படுத்துவான். அவன் அல்லாஹவிடம் இழி மக்களில் ஒருவனாக கருதப்படுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மறுமைநாளில் அல்லாஹவிடம் மனிதர்களில் மிகக் கீழ்த்தரமானவன் யாரெனில் அவன் தனது மனைவியை நெருங்குகிறான். அவளும் கணவனுடன் இணைகிறாள். பின்பு அவளது அந்தரங்கத்தை பிறரிடம் வெளிப்படுத்துகிறான்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசுவது
மார்க்க சட்டங்களை நன்கறிந்த முஸ்லிம் நுண்ணறிவு மிக்கவராகவும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவும் அவர்களுக்கு தீமை செய்வதிலிருந்து விலகியுமிருப்பார். அவர் உரையாடும் கலையை நன்கறிவார். அதில் சிறந்த பண்பு, மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசாமல் இருப்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உணர்வுள்ள முஸ்லிம் மேன்மையான அணுகுமுறையும், சிறந்த அறிவுடையவராகவும் இருப்பார். சபையில் மூன்று நபர் மட்டும் இருக்கும் நிலையில் ரகசியமாகவும் கிசுகிசுப்பாகவும் பேசுவது அவருக்குத் தகுதியல்ல. அதனால் அங்கு இருக்கும் மூன்றாம் நபரின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மனநெருக்கடியும் வெறுப்பும் தோன்றிவிடும். ஒருவரிடம் மட்டும் பேசியே தீரவேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த மூன்றாம் நபரிடம் அனுமதி பெற்று, அவரிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, சுருக்கமாகப் பேசிட வேண்டும்.

உள்ளங்களில் இஸ்லாம் ஊடுருவி, இஸ்லாமியப் பண்புகளும் போதனைகளும் உதிரத்தில் கலந்து நின்ற நபித்தோழர்கள் மக்களோடு பழகும் சூழ்நிலைகளில் அவர்களது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதிலிருந்து எப்போதும் பின்தங்கியதில்லை.

அவர்களது உன்னதமான சமூக வாழ்க்கையைப் பற்றியும், மனித உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பைப் பற்றியும் அறிவிக்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

அப்துல்லாஹ இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக் கொண்டார்கள்.

இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ”நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றார்கள். (அல் முவத்தா)

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள்.

பெருமை கொள்ளாதவர்
உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும்

அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல்குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.

(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான்.  (அல்குர்ஆன் 28 : 83)

கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ விரும்ப மாட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 31: 18)

நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையை ஆராய்ச்சி செய்பவர் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெறிய வேண்டும். இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக அவர் திகைத்து விடுவார்.

நபி (ஸல்) அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவருடைய இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவனம் புகமாட்டார்.” ஒரு மனிதர் கேட்டார், ஒருவர் தனது ஆடைகள், பாதணிகள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். (அது பெருமையடிப்பதாகுமா?) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ அழகானவன். அழகாக இருப்பதையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களை இழிவாக எண்ணுவதுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஹாரிஸா இப்னு வஹப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” (ஸஹீஹுல் புகாரி)

ஆணவம் கொண்டோரை அல்லாஹ மறுமைநாளில் பார்க்க மாட்டான் என்பதே அவர்களை இழிவுபடுத்தப் போதுமானதாகும். பூமியில் அவர்கள் பெருமையடித்துத் திரிந்து மக்களிடம் ஆணவமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர்களோடு பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இது மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கும் உணர்வுப் பூர்வமான இழிவாகும். இது நரகில் வீசி எறியப்பட்டு வேதனை செய்யப்படும் உடல் ரீதியான துன்பத்தைவிட சற்றும் குறைந்ததல்ல.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: ”மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஸஹீஹ் முஸ்லிம்)

ஏனெனில், பெருமை என்பது அல்லாஹவின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹவின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர். மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்.

”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையில் இதுகுறித்த எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. பலவீனமான மனித இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வினாடியில் கூட அகந்தை எனும் நோய் உள்ளத்திற்குள் புகுந்துவிடாமல் முஃமின்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (அல் அதபுல் முஃப்ரத்)

பணிவுடையவர்
பெருமையடிப்பவர்களைப் பற்றியும், அவர்கள் மறுமையில் அடையவிருக்கும் இழிவு, வேதனை குறித்த பல சான்றுகள் உள்ளன. அதுபோன்றே பணிவைப் பற்றி ஆர்வமூட்டும் சான்றுகளும் உள்ளன. பணிவுடையவர்கள் அல்லாஹவின் ஏவலை ஏற்று பணியும் போதெல்லாம் அவர்கள் அல்லாஹவிடத்தில் உயர்வும் மேன்மையும் அடைகிறார்கள்.

அதற்கான நபிமொழிகளில் சில:
”எவரேனும் அல்லாஹவிற்காகப் பணிந்தால் அவரது அந்தஸ்தை அல்லாஹ உயர்த்தியே தீருவான்.” (ஸஹீஹ முஸ்லிம்)

”பணிவாக இருங்கள். நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அகந்தை கொள்ள வேண்டாம், அநியாயம் செய்ய வேண்டாம்” என அல்லாஹ எனக்கு வஹீ அறிவித்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை பணிவிலும், அடக்கத்திலும், மென்மையிலும், பரந்த மனப்பான்மையிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டால்கூட அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லி, அவர்களை மகிழ்வூட்டி, புன்னகை புரிவதற்கு அவர்களின் நபி என்ற அந்தஸ்து தடையாக அமையவில்லை.

அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் உரைப்பார்கள். மேலும் கூறினார்கள் ”நபி (ஸல்) அவர்களும் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் பணிவைப் பற்றி அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ”மதீனாவின் அடிமைப் பெண்களில் ஓர் அடிமைப் பெண் நபி (ஸல்) அவர்களின் கரம்பற்றி தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வாள். நபி (ஸல்) அவர்கள் அவளது தேவையை நிறைவேற்றித் தருவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய சட்டங்களைக் கேட்டறிய தமீம் இப்னு உஸைத் (ரழி) மதீனாவுக்கு வருகிறார். அந்தப் புதியவர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவரான நபி (ஸல்) அவர்களுக்கும் தனக்குமிடையே தடையாக எவரும் இல்லாமல் மிம்பரில் நின்று நபி (ஸல்) மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே விளக்கம் கேட்கத் துணிந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பணிவோடும், அன்போடும் அவரை முன்னோக்கி அவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். அது குறித்து தமீமே கூறுகிறார் கேட்போம்:

”நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களைச் சென்றடைந்தேன். ‘அல்லாஹவின் தூதரே! மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்த புதிய மனிதர் (நான்)’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் உடனே என் பக்கம் திரும்பினார்கள். தனது பிரசங்கத்தை விட்டுவிட்டு என்னருகே வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதன்மீது அமர்ந்தார்கள். அல்லாஹ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். பிறகு பிரசங்கம் செய்யத் தொடங்கி அதைப் பூர்த்தி செய்தார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு எளிமையும், பெருந்தன்மையும் கூடிய பணிவையும் கற்றுக் கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஓர் ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதியை விருந்தாக்கி அந்த விருந்துக்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.” (ஸஹீஹுல் புகாரி)

என்னே அவர்களது பணிவு…! எளியோரையும் அவர்கள் மதித்த பாங்குதான் என்னே…!
பரிகாசம் செய்யமாட்டார் பணிவை விரும்பவேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறரை கேவலமாகக் கருதுவது, பரிகாசம் செய்வது என்பதெல்லாம் வெகுதூரமான விஷயமாகும். பணிவை விரும்ப வேண்டும், பெருமையடிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் பிறரைப் பரிகாசம் செய்யக் கூடாது, கேவலமாகக் கருதக் கூடாது என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹவினிடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்). அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறைகூற வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு (தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். விசுவாசம் கொண்டதன் பின்னர் கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அக்கிரமக்காரர்கள். (அல்குர்ஆன் 49:11)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவன் தனது முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

 

பிறர் குறைகளை மறைப்பவர்

பிறர் குறைகளை மறைப்பவர்
உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங் குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கெªரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் குழப்பவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.

எவர்கள் (இதற்குப்பின்னரும்) விசுவாசிகளுக்கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 24:19)

யார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ”மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)

இஸ்லாமிய சமூகத்தில் வாழ்பவர் இழிவான, கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடுவதிலிருந்து மிகவும் வெட்கி விலகியிருப்பார். நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ‘பிறரது அந்தரங்கத்தில் தலையிடாமை’ என்ற பண்பை ஏற்று பாவங்களை பகிரங்கப்படுத்துவதிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வார். தன்னுடைய பாவத்தையும் அல்லது பிறரின் பாவத்தையும் அதை அவரே பார்த்திருந்தாலும் சரியே அல்லது பிறர் கூற கேட்டிருந்தாலும் சரியே, அதை வெளிப்படுத்தக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எனது உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். அந்தரங்கத்தை பகிரங்கப் படுத்துபவனைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு செயலைச் செய்கின்றான். அல்லாஹ் அவனது செயலை மறைத்துவிட்ட நிலையில் காலையில் அவன் ”ஓ! நேற்றிரவு நான் இன்னின்ன காரியத்தைச் செய்தேன்” என்று கூறுகிறான். அல்லாஹ் அவனது குறையை நேற்றிரவு மறைத்திருந்தான், அல்லாஹ் மறைத்ததை இவன் காலையில் பகிரங்கப்படுத்துகிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ”ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் ”எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள அண்டை வீட்டார் மது அருந்து கிறார்கள், சில தீயசெயல்களையும் செய்கிறார்கள். நாங்கள் இதைப் பற்றி ஆட்சியாளரிடம் தெரிவிக்கலாமா?” என்று கேட்டனர். உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் வேண்டாம்!. நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: ”எந்த ஒரு மனிதர் முஸ்லிமிடம் ஒரு குறையைக் கண்டு மறைத்து விடுகிறாரோ அவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டவராவார்” என்று கூறினார்கள். (அல்அதபுல் முஃப்ரத்)

மனிதனின் பலவீனங்கள் என்ற நோய்களுக்கான மருந்தாகிறது அவர்களது குறைகளை ஆய்வுசெய்து அதை பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்துவதல்ல. இது எவ்வகையிலும் நிவாரணமாகாது. உண்மை நிவாரணம் என்னவெனில், இம்மனிதர்களிடம் சத்தியத்தை எடுத்துரைத்து, நன்மைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தீய செயல்களின் மீது அவர்களுக்கு வெறுப்பை ஊட்ட வேண்டும். சண்டை, சச்சரவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது. நேசமும் மென்மையும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளால்தான் மூடிய இதயங்களைத் திறந்து, தூய்மைப்படுத்த முடியும். இதனால்தான் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தேடித்துருவி ஆராய வேண்டாமென இஸ்லாம் தடை செய்துள்ளது.

(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அல்குர்ஆன் 49:12)

இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ”இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது” என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ”நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

அதாவது முஸ்லிம்களின் குறைகளை துருவிப் பார்ப்பதும், அவர்களது பலவீனமான செயல்களையும் குறைகளையும் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதும், அது சம்பந்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமுதாயத்தையும் பாதிக்கும். ஒரு சமுதாயத்தில் மானக்கேடான காரியங்கள் பெருகி அவர்களுக்கு மத்தியில் புனையப்பட்ட பேச்சுகள் பரவிவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒற்றுமைக்கேடு உருவாகி பாவங்கள் இலேசாகி குரோதமும், வஞ்சமும், சூழ்ச்சியும் வேரூன்றி அச்சமுதாயத்தையே குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் ”நிச்சயமாக நீ முஸ்லிம்களின் குறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களை நீ பாழாக்கி விட்டாய்! அல்லது பாழ்படுத்த நெருங்கிவிட்டாய்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

இவ்விடத்தில் மக்களின் கெªரவத்தைக் குலைக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை அவர்களது வீட்டிலேயே அல்லாஹ் அவமானப்படுத்திவிடுவான் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.” (முஸ்னத் அஹ்மத்)

மக்களின் குறைகளை தேடித்திரியும் வீணர்களைக் கண்டிப்பதில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றி அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். வீட்டுக்குள்ளிலிருந்த பெண்கள்கூட செவியயேற்கக்கூடிய பிரசங்கமாக அது இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் ”நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கெªரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

நபி (ஸல்) அவர்கள் தங்களது இதயத்தில் ஈமான் நுழையாமல் நாவினால் மட்டும் ஈமான் கொண்டவர்களே! என்று கூறியது எவ்வளவு கடுமையான வார்த்தை? இது பிறர் குற்றங்குறைகளை தூண்டித் துருவி ஆராய்பவர்கள் உண்மையில் நாவினால் மட்டுமே ஈமான் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது இதயத்தில் ஈமான் நுழைந்திருந்தால் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற பொருளைத் தருகிறது.

இந்த இழிவான குணமுடையோர் பிறரை குறை காணுவதை மிக எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அது மகத்தான குற்றமாக உள்ளது. தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார்

தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல்  பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார். இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றிப் பிடித்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தனக்குத் தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகியிருப்பது ஒருவரின் அழகிய இஸ்லாமியப் பண்பில் உள்ளதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான், மூன்று குணங்களை வெறுக்கிறான். உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:
1. அவனையே நீங்கள் வணங்க வேண்டும் 2. அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது 3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.

அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் மூன்று குணங்கள்: 1. ‘அவர் சொன்னார். (இவ்வாறு) சொல்லப்பட்டது’ என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது 2. அதிகமாக கேள்விகள் கேட்பது 3. செல்வத்தை வீணடிப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை ஏற்றுள்ள சமூகத்தில் ‘அவர் சொன்னார், இவ்வாறு சொல்லப்படுகிறது’ என்பது போன்ற வதந்திகளுக்கும், அதிகமதிகம் சந்தேகித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டு மனிதனின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதற்கும் இடமில்லை.

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தின் உறுப்பினர் பூமியில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கலிமாவை உறுதிப்படுத்துவது மற்றும் அதைப் பரப்புவது போன்ற உன்னதமான செயல்களுக்காக தங்களை அர்ப்பணித்து, நாலா திசைகளிலும் ஏகத்துவக் கொடியை உயர்த்திக் கொண்டிருப்பார். மக்களிடையே ஏகத்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் தனது நேரங்களைச் செலவிடுவார்.

ஒரு முஸ்லிம் இத்தகைய மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும்போது பிறர்குறையை ஆராய்வதற்கு அவருக்கு அவசாசமிருக்காது.

வாக்குறுதியை நிறைவேற்றுவார்

வாக்குறுதியை நிறைவேற்றுவார்
இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார். வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும்.

முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும். ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்… (அல்குர்அன் 5:1)

….உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்அன் 17:34)

இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்…. (அல்குர்அன் 16:91)

இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.

விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்அன் 61:2,3)

வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான் 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: “அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹ்ஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும். அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார்.

எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.

இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள்.

பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.

“நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள்.” (அல்குர்அன் 4:145)

நற்குணமுடையவர்
உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை  மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “”நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் “சீ’ என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.” (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.” (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: “உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற் குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் அகியோரே.” (ஸுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்புமிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் “என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது.

முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.” (ஸுனனுத் திர்மிதி)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.” (ஸன்னனுத் திர்மிதி)

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?’ என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் குணத்தால் மிக அழகானவர்” எனக் கூறினார்கள்.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.” (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: “ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தங்களது சொல், செயலால் நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் “அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும்விட மிகக் கனமானவை” என்று வினவினார்கள். அபூதர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “”நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துகொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை” என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: “நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.” (முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள்: “யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக” என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)

….(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4)

அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி (ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன.

இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை.

இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.

இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்

முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்

முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், “நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?” என (இருமுறை) கேட்பார்கள். “ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: “ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தற்காலத்திலும் எத்தனையோ முஸ்லிமல்லாத வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு அருகில் அவர்கள் உயிர், பொருள், கொள்கை, கெªரவம் காக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் நகரங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமது ஆலயங்களை அமைத்து கொண்டு நிம்மதியாக வாழ்வது இதற்குச் சான்றாகும். குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கற்பித்த நெறியின்படி பிற மதத்தவர் பாதுகாப்பும், உதவியும், உபகாரமும் பெற்று நிம்மதியாக வாழ்கின்றனர்.

விசுவாசிகளே! மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர் களுக்கும் நீங்கள் நன்றி செய்ய வேண்டாமென்றும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளக் கூடாதென்றும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்அன் 60:8)

அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்களின் இந்த மேன்மையான வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்து அபூஹுரைரா (ரழி) கூறினார்கள்: “தனது அண்டை வீட்டாரில் அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.” (அல் அதபுல் முஃப்ரத்)

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம், அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார். நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டாரின் மனநிலையைக் கவனித்தார்கள்.

சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்
அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஒர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும். ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர். அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.” (ஸன்னனுத் திர்மிதி)

சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.” (முஸ்னத் அஹமத்)

நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருதினார்கள். ஸயீது பின் அஸ் (ரழி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம் “இது இந்த வீட்டின் விலையாகும். ஆனால், ஸயீது (ரழி) அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?” என்று கேட்டார். இதையறிந்த ஸயீது (ரழி) அந்த வீட்டுக்காரருக்கு ஒர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.

இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்பந்தப்பட்ட அழகிய உபதேசங்களைக் கண்டோம். இதோ இப்போது கெட்ட அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களைக் காண்போம்.

தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்
தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி(ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே அவர் யார்?” என வினவினர். நபி (ஸல்) அவர்கள் “எவருடைய தீங்குகளிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதி பெறவில்லையோ அவர்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.”

இது எவ்வளவு பெரிய பாவம்? தனது அண்டை வீட்டாரிடம் தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரிய அருட்கொடையை இழந்துவிட்டார்? “ஈமான்’ என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.

உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப் புரிந்துகொண்டு தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை, சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும்; மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரிய துரதிஷ்டம் என்னவாக இருக்க முடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இயம் திடுக்கிட்டுவிடும்.

தீய அண்டை வீட்டானின் நற்செயல்கள் அழிந்து விடும்
தீய குணமுடைய அண்டை வீட்டாரின் நற்செயல்கள் அழிக்கப்பட்டு விடும். அண்டை வீட்டாருக்கு நோவினையளிப்பவரின் நற்கருமங்களுக்கு எப்பலனுமில்லை. ஏனெனில் நற்செயல்கள் அனைத்தும் ஈமான் என்ற தூணின் மீதுதான் நிர்மாணிக்கப்படுகிறது. மேற்கண்ட சான்றுகள் அவனுக்கு ஈமான் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஈமானற்றவனின் எந்த நற்செயலையும் அல்லாஹ் ஒப்புக்கொள்ளாமல் அழித்துவிடுவான் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். அந்த நற்செயல்களுக்காக அவன் வாழ்வனைத்தையும் செலவிட்டிருந்தாலும் சரியே.

நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்மணி இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகலில் நோன்பு நோற்கிறார். தர்மமும் செய்கிறார். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்கிறார்.” நபி (ஸல்) அவர்கள், “அவளிடத்தில் எந்த நன்மையுமில்லை, அவள் நரகவாதி” என்றார்கள். நபித்தோழர்கள், “இன்ன பெண்மணி ஃபர்ளான தொழுகையை மட்டும் தொழுகிறாள். பாலாடைக் கட்டியை (மட்டும்) தர்மம் செய்கிறாள்; ஆனால் எவருக்கும் நோவினையளிப்பதில்லை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவள் சுவனவாசி” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

தீய குணமுடைய அண்டை வீட்டானை “மலடன்’ என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று நபர்கள் மலடர்களாவர். 1) ஒரு தலைவன். நீ அவனுக்கு நன்மை செய்தால் நன்றி செலுத்தமாட்டான்; (அந்த நன்மைக்குப் பிரதிபலனை அவனிடம் எதிர்பார்க்க முடியாது.) நீ தீங்கிழைத்தால் மன்னிக்கமாட்டான் 2) தீய குணமுடைய அண்டை வீட்டான். உன்னிடம் நன்மையைக் கண்டால் மறைத்து விடுவான்; தீமையைக் கண்டால் பகிரங்கப்படுத்துவான் 3) மனைவி, நீ இருக்கும்போது உனக்கு நோவினையளிப்பாள். நீ அவளிடம் இல்லாதபோது உமக்கு மோசம் செய்வாள்.” (முஃஜமுத் தப்ரானி)

இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விவரித்தது போன்று கெட்ட அண்டை வீட்டாரின் அருவருப்பான உருவம் இறையச்சமுள்ள முஸ்லிமின் சிந்தனையில் தோன்றியிருக்கும். எனவே அவர் தனது அண்டை வீட்டாருக்கு தீமை செய்வதிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார்.

அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்
முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன் மிகக் கவனமாக விலகிக் கொள்வார். எனெனில் அது பெரும் பாவமாகும். ஆதை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி தெளிவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விபச்சாரத்தைப் பற்றி வினவினார்கள். தோழர்கள் “ஹராம்; அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “”ஒரு மனிதன் தனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதைவிட பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது பாவத்தால் இலகுவானதாகும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் திருட்டைப் பற்றி கேட்டார்கள். தோழர்கள் “அது ஹராம். அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஹராமாக்கியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அப்போது “”ஒருவன் தனது அண்டை வீட்டில் திருடுவதைவிட வேறு பத்து வீடுகளில் திருடுவது பாவத்தால் இலகுவானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹமத்)

இஸ்லாம் அண்டை வீட்டாருக்கு கெªரவமான அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதை மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களாலும் அவர்களது பண்பாட்டு நெறிகளாலும் அறிந்துகொள்ள முடியாது. மாறாக இச்சட்டங்கள் அண்டை வீட்டாரின் கண்ணியத்தையும் கெªரவத்தையும் மதிக்காமல் வீணடிக்கின்றன. ஆம்! பெரும்பாலும் இவர்கள் அண்டை வீட்டாரின் கெªரவத்தில் விளையாடுவதை மிக இலேசாகக் கருதுகிறார்கள். அதை நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நமது இஸ்லாமின் நற்பண்புகள் நம்மை விட்டு விலகியபோது ஆபாசப் பாடல்கள் நம்மில் பரவ ஆரம்பித்தன. அதில் அண்டை வீட்டாரின் ஜன்னல் காட்சிகளைச் சித்தரிக்கிறார்கள். அது மட்டுமா? கலாச்சார ரீதியாகவும் இவர்களின் கொள்கைப் போரின் அலைகள் நம்மைச் சூழ ஆரம்பித்துவிட்டன.

இதோ வெட்கம் கெட்ட ஒரு அற்பத்தனமான வாலிபன் தனது அண்டை வீட்டுப் பெண்ணை பாட்டில் அமைத்து காதல் தூது விடுகிறான். சீ! இப்படிப்பட்ட அசிங்கத்தை இஸ்லாமுக்கு முந்திய அறியாமைக் காலத்தில் கூட நாம் காணவில்லை. அப்படியிருக்க இஸ்லாமில் அதை எப்படிப் பார்க்க முடியும்?

அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் காப்பது, அவரது கெªரவத்தைப் பேணுவது, அவருக்கு உதவிகள் புரிவது மற்றும் அவரது குறைகளை மறைப்பது, தேவைகளை நிறைவேற்றுவது, அவரது குடும்பப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது, அவருக்குத் தீங்கிழைப்பதிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் மனித சமூகத்தில் மிகச்சிறந்த அண்டை வீட்டுக்காரராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எனெனில், அவர் திறந்த மனதுடையவராக, சமூகத்தில் அண்டை வீட்டாரின் நிலை குறித்த இஸ்லாமின் கண்ணோட்டத்தை அறிந்தவராக இருப்பார். தனக்கும் அவருக்குமிடையே ஏதேனும் பிரச்சனைகள் தோன்றினால் அதில் ஈடுபடுவதற்கு முன் பலமுறை யோசிப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் முதன் முதலாக தர்க்கம் செய்து கொள்ளும் இருவர் அண்டை வீட்டார்கள்தான்.” (முஸ்னத் அஹமத்)

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்
இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு எற்படுவதை அஞ்சிக் கொள்வார்.

நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். “இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்” என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)

இந்நிலையைச் சந்திப்பது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்? எல்லோருக்கும் முன்பாக மறுமையில் தனது கஞ்சத்தனத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டுமே! இஸ்லாமியப் பார்வையில் முஸ்லிம்கள் உறுதியாக கட்டப்பட்ட கட்டிடமாவார்கள். இந்த உம்மத்தினர்தான் அதன் கற்கள். ஒவ்வொரு கல்லும் ஒன்றோடொன்று சமமானதாக மற்றோர் கல்லுடன் உறுதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்டிடம் உறுதியானதாகத் திகழும். இல்லையென்றால் அக்கட்டிடம் பலவீனப்பட்டுவிடும்.

இவ்விடத்தில் இஸ்லாம் தனது உறுப்பினரிடையே உயிரோட்டமான இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இஸ்லாம் என்ற அக்கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்கிறது. கால ஒட்டங்களில் ஏற்படும் அதிர்ச்சிகளும், சோதனைகளும் அக்கட்டிடத்தை அசைத்துவிட முடியாது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி மிகச் சிறந்த உதாரணம் ஒன்றைக் கூறினார்கள்:

“ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஒர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை எற்படுத்தியதாகும்.

அண்டை வீட்டாரின் இடையூறுகளை சகித்துக் கொள்வார்
மாண்புமிக்க மார்க்கத்தால் பிரகாசமான நேர்வழியைப் பெற்றுள்ள முஸ்லிம், தனது அண்டை வீட்டாரின் நடவடிக்கைகளில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். எதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அது விஷயத்தில் கோபம் கொள்ளாமல் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கில் அக்குறைகளை மறந்து மன்னித்துவிட வேண்டும். இவ்வாறு மன்னிப்பது என்ற நற்செயலை அல்லாஹ் வீணடித்துவிட மாட்டான்; அது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும் என்பதை உறுதி கொள்ள வேண்டும்.

இற்குச் சான்றாக அபூதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நீண்ட ஒரு பொன்மொழியை அறிவிக்கிறார்கள். அதில் வருவதாவது “மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் தனது கெட்ட அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்பவர்.”(முஸ்னத் அஹமத், முஃஜமுத் தப்ரானி)

அண்டை வீட்டார் செய்த தீமைக்கு பழிவாங்கமாட்டார்
நபி (ஸல்) கற்றுத்தந்த நற்பண்புகளில் ஒன்று அண்டை வீட்டாரின் தீமைக்கு பழிவாங்காமல் முடிந்த அளவு பொறுமைகாக்க வேண்டும் என்பதாகும். தான் இடையூறு செய்தும் தனது அண்டை வீட்டார் எவ்வித எதிர்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தீமைபுரிபவர் உணர்ந்து கொண்டால் மனம்மாறி தவறுகளிலிருந்து திருந்துவதற்கான வாய்ப்பு எற்படும். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் அதை எதிர்கொள்ள வேண்டும். இதுவே ஒழுக்கப் பயிற்சிக்கான சிறந்த வழிமுறையாகும்.

முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: “(அல்லாஹ்வின் தூதரே!) எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு துன்பமிழைக்கிறார்” நபி (ஸல்) அவர்கள் “பொறுமையாக இரு” என்றார்கள். அவர் மீண்டும் வந்து கூறினார்: “எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார்.” நபி (ஸல்) அவர்கள்: “பொறுமையாக இரு” என்று கூறினார்கள். அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கூறினார்: “எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினையளிக்கிறார்.” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(வீட்டிலுள்ள) உமது சாமான்களை எடுத்து வீதியிலே வைத்துவிடு. உம்மிடம் எவரேனும் வந்து காரணத்தை விசாரித்தால் என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார் என்று கூறும். (மக்கள் அனைவரும் அவனை ஏசுவார்கள்; அதனால்) அவர் மீது அல்லாஹ்வின் சாபம் எற்பட்டுவிடும். எவர் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டுக்காரரைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

அண்டை வீட்டாரின் உரிமைகளை அறிவார்
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஒவ்வொரு நிலையிலும் தான் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முஸ்லிம் அறிந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் சிரமப்படும்போது அவர்களுக்கு உதவுதல், அவரது வளமையில் மகிழ்வது, அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களில் தானும் மகிழ்ந்திருத்தல், தேவைப்பட்ட உதவிகளைச் செய்வது மற்றும் அவர் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரித்து அறுதல் கூறி உற்சாகப்படுத்துவது போன்ற நற்குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், அண்டை வீட்டார் மரணித்தால் மையித்துக்கான கடமைகளை நிறைவேற்றி அவருக்குப் பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும். அண்டை வீட்டாரின் உணர்வுகளை, அவரது குடும்பத்தாரின் உணர்வுகளை மதிப்பதில் ஒருபோதும் தவறிழைத்துவிடக் கூடாது. இந்நிலையில் ஒரு முஃமின் தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு செய்வதென்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகும்.

இதுதான் அண்டை வீட்டார் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமாகும். இந்த உன்னதமான பண்புகளைக் கற்றுத் தேர்ந்த முஸ்லிமே இஸ்லாமின் கோட்பாடுகளைப் புரிந்தவராவார். அந்தப் பிரகாசமான நேர்வழியை அடைந்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் இஸ்லாமிய சட்டங்களோடு பொருத்திக் கொள்வார். இந்நிலையில் உண்மை முஸ்லிம், மனித சமுதாயத்தில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்

முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்

குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.

மேற்கூறிய அனத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத் திகழ முடியும்.

அல்லாஹ் அவர்களைப் பற்றி தனது திருமறையில் வர்ணிக்கிறான்:
பொருளும் மக்களும் ஆவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே. (அல்குர்அன் 18:46)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தனது பிரியத்திற்குரியவருக்கு பின்வருமாறு துஆ செய்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களும் அவர்களது தாயும், தாயின் சகோதரியும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழ வைத்தபின் எல்லா நலவுகளையும் வேண்டி அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அனஸ் (ரழி) அவர்களின் தாயார் கூறினார்கள்: “இறைத்தூதரே! உங்களது குட்டி பணியாளருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.” நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்காக எல்லா நலவுகளையும் வேண்டி துஆச் செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் இறுதியில் “யா அல்லாஹ்! அவருடைய செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி அவருக்கு பரக்கத் செய்வாயாக!” என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி)

பெற்றோர், குழந்தை வளர்ப்பிலும் அவர்களைச் சிறந்த முறையில் கண்காணித்து கவனம் செலுத்துவதிலும் அசட்டையாக இருந்தால் அக்குழந்தைகள் சோதனையாக, கவலையாக உருவெடுத்து விடுவார்கள். அதற்குப் பின் அந்தப் பெற்றோருக்கு தூக்கமற்ற இரவுகளும் துன்பமான பகல்களும்தான் பரிசாகக் கிடைக்கும்.

மகத்தான கடமைகளை அறிவார்
அருள்மறை குர்ஆனின் கம்பீரமான எச்சரிக்கைக் குரலை செவியேற்கும் முஸ்லிம், குழந்தை வளர்ப்பு எனும் மகத்தான பொறுப்பை அறிந்து கொள்வார்.
விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். (அல்குர்அன் 66:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு ஈட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளிகளே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.” ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)

இஸ்லாம், இந்த முழுமையான பொறுப்பை உலகில் வாழும் அனைவரின் கழுத்திலும் பிணைத்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இஸ்லாம் கற்றுக் கொடுத்த முறையில் குழந்தைகளை வளர்ப்பதும், அதன் அழகிய நற்பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பாகும். நற்பண்புகளைப் பூரணமாக்கி, மக்களிடையே அதை உறுதிப்படுத்தவே ரஸுலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் நற்பண்புகளை பரிபூரணப்படுத்தவே அனுப்பப்பட்டேன்.” (முவத்தா மாலிக்)

பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை அல்லாஹ், அவனது ரஸுல் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் நபிமொழி மிகப்பெரிய ஒர் ஆதாரம் என அறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்”….. (ஸன்னன் அபூதாவூத்)

ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் தனது குழந்தைகளுக்கு ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால், பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்கவில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய, குறைபாடுகளுடைய இல்லமாகும். இதற்காக பெற்றோர் இருவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.

சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளரத் துவங்குகிறார்கள். அது குழந்தைகள் நற்பண்புகளுடன் மலர்வதற்கான முதல் கட்டமாகும். அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், பண்புகளும் உருப்பெறும் மையமாகும். எனவே இக்காலகட்டத்தில் அப்பிஞ்சு இதயங்களைப் பண்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மகத்தானது. அவர்களது உடல் அரோக்கியத்தைப் பேணுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா என அனைத்தும் பூரணத்துவம் பெற்றுத் திகழ பெற்றோர்கள் பாடுபட வேண்டும்.

விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்
குழந்தையின் தாயும் தந்தையும் அதன் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் தூய்மையான, மென்மையான உள்ளத்தினுள் ஊடுருவிச் சென்று அக்குழந்தையின்பால் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையில் மிக நுட்பமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

முஸ்லிம் தனது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேடவேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழகவேண்டும். அவர்களது வயது, அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி அவர்களை இன்புறச் செய்து அக்குழந்தைகளின் இதயங்களுக்கு மகிழ்வான அன்பான வார்த்தைகளைக் கூறவேண்டும். நேசம் மற்றும், மரியாதையின் காரணமாக கட்டுப்படுவதற்கும், மிரட்டல், நெருக்கடி, நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டுப்படுவதற்குமிடையே மிகுந்த வேறுபாடுண்டு. முந்தியது நிரந்தரமான அடிபணிதல். இரண்டாவது கண்டிப்பும் மிரட்டலும் இல்லாதபோது நீங்கிவிடும் தன்மை உடைய தற்காலிக அடிபணிதலாகும்.

சிலர், பெற்றோர் பிள்ளைகளுடன் எளிமையான முறையில் கலந்துறவாடினால் அது தங்களின் ஸ்தானத்துக்கே பெரும் இழுக்காகிவிடும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறானதாகும். பிள்ளைகளுடன் நற்பண்பு மிக்க அழகிய நடத்தையை மேற்கொள்வது, அறிவார்ந்த பெற்றோரின் வெற்றிகரமான வழிமுறை எனத் தற்கால குழந்தை வளர்ப்புத் திட்டங்களும் எற்றுக் கொள்கின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சொல்லாலும் செயலாலும் வலியுறுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரழி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸய்யிர் (ரழி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து “எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்னின்ன கிடைக்கும்” என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒடி வந்து அவர்களது முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது “அல் அதபுல் முஃப்ரத்’ என்ற நூலிலும் இமாம் தப்ரானி (ரஹ்) தனது “முஃஜம்’ என்ற நூலிலும் அபூஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களது பாதங்களை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு “நீ மேலே ஏறு” என்று கூறினார்கள்.

மகத்தான போதனையாளரான நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹுஸைன் (ரழி) அவர்களைச் சுமப்பதிலும் பாசத்தைப் பொழிவதிலும் நேசிப்பதிலும் காட்டிய நடைமுறைகள், பெற்றோர்களுக்கும் பாட்டனார்களுக்கும் எல்லாக் காலத்திற்குமான அழகிய முன்மாதிரியாக அமைந்துள்ளது. அந்த மென்மையான இளம் நாற்றுகளுடன் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடனும் மதிப்புடனும் இருந்தாலும் அது சிறுவர் சிறுமியரிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்கு தடையாகி விடக்கூடாது என்ற விஷயம் பின்வரும் ஹதீஸிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது:

ஷத்தாத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸனைச் சுமந்தவாறு வந்தார்கள். முன்னால் வந்து நின்று கீழே உறக்கிவிட்டு பின்பு தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். சந்தேகத்தில் நான் தலையை உயர்த்திப் பார்த்தபோது சிறுவர் நபி (ஸல்) அவர்களின் முதுகில் இருந்தார். உடன் நான் ஸஜ்தாவுக்குத் திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் வினவினர். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட ஸஜ்தா செய்தீர்களே (காரணமென்ன?)” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது மகன் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குள் நான் அவசரப்பட விரும்பவில்லை.”(ஸன்னனுன் நஸயீ)

முஸ்லிம் தங்களது பிள்ளைகளுடன் இம்மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். அவர்களுடன் கலந்துறவாடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் அப்பிஞ்சு இதயங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டவேண்டும்.

அன்பை உணரச் செய்வார்
பெற்றோரின் தலையாயக் கடமைகளில், அவர்கள் பிள்ளைகளிடம் தங்களது அன்பையும் நேசத்தையும் உணரச் செய்வதும் ஒன்றாகும். அப்போதுதான் பிள்ளைகள் மன ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அவர்களது உள்ளங்களில் உறுதியும் தெளிவும் நிறைந்திருக்கும். கருணை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிகச் சிறந்த பண்பாக இருந்தது. அவர்களது நடைமுறைகள் அனைத்திலும் கருணை வெளிப்பட்டது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களை விட குடும்பத்தாரிடம் கருணை கொண்ட எவரையும் நான் கண்டதில்லை.” மேலும் கூறினார்கள்: “மதீனாவின் மேடான பகுதியிலிருந்த ஒரு வீட்டில் நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரழி) அவர்களுக்கு பாலூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று வருவார்கள், நாங்களும் டனிருப்போம். வீட்டினுள் நுழைந்து அவரைத் தூக்கி முத்தமிடுவார்கள். பின்பு திரும்பி வருவார்கள்.” (ஸஹீீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தைகள் மீது மட்டும் அன்புடன் இருக்கவில்லை. மாறாக, விளையாடிக் கொண்டிருக்கும் இளம் சிறார்களைக் காணும்போது அவர்களிடமும் பாசத்தையும் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.” ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகளில் ஒன்று: “நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களின் கடமைகளை அறியாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.” (முஸ்னத் அஹ்மத்)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ரஃ இப்னு ஹ்ாபிஸ் (ரழி) அவர்கள் “எனக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எருவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “”கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் எப்போதும் மனிதர்களின் இதயங்களில் அன்பையும் கருணையையும் வளர்த்து வந்தார்கள். அதுவே மனிதத் தன்மைகளில் மிக விசேஷமான தன்மை என்பதை வலியுறுத்தினார்கள்.

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” ஊஎறு கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா (ரழி) வந்தால் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று முத்தமிடுவார்கள். அவரைத் தங்களது இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் சென்றால் அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களை மகிழ்வுடன் வரவேற்று கரத்தைப் பிடித்து முத்தமிடுவார்கள். இன்னும் தங்கள் இக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஃபாத்திமா (ரழி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்று முத்தமிட்டார்கள். ஸஹீஹுல் புகாரி)

உண்மை முஸ்லிம் இந்த உயரிய வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட முடியாது. தங்களது இதயங்கள் பசுமையற்று வறண்டதாக, கடின சித்தம் உடையதாக இருந்தாலும் சிறுவர்களுடன் பழகும்போது வன்மையாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இம்மார்க்கம் பிரகாசமான நேர்வழியைக் காட்டித் தருகிறது; இதயத்தை மென்மைப்படுத்துகிறது; அன்பின் ஊற்றுகளைப் பீறிடச் செய்கிறது.

சிறந்த கணவர்

 

சிறந்த கணவர்

இந்த ஆதாரங்கள், மனைவியிடம் நீதமாக அழகிய நடத்தையைக் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்துவதை முஸ்லிம் அறிந்திருப்பார். எனவே நிச்சயமாக அவர் சிறந்த கணவராகத் திகழ்வார். காலமும் வயதும் எவ்வளவு நீண்டாலும் அவரின் மிருதுவான குடும்ப வாழ்க்கையில் இன்புற்று அவரின் உன்னதமான உயர்ந்த தோழமையில் வாழ்வதை அவரது மனைவி பாக்கியமாகக் கருதுவாள். அவர் வீட்டினுள் நுழைந்தால் தனது மனைவி, மக்களை முகமலர்ச்சியுடன் அணுகுவார். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அல்லாஹ் ஏவிய பிரகாரம் மகத்துவமிக்க அழகிய முகமனைக் கூறியபடி அவர்களை எதிர்கொள்வார். அது இஸ்லாமுக்கே உரிய தனித்துவமிக்க முகமனாகும்.

….. ஆனால் நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வால் உங்களுக்கு கற்பிக்கப்பட்ட, மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (ஸலாமுன் என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! (அல்குர்அன் 24:61)

இந்த முகமனை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். அனஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள். “எனதருமை மகனே நீ உனது குடும்பத்தாரிடம் சென்றால் ஸலாம் கூறிக்கொள். அது உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் அருளாகும்.” ((ஸுனனுத் திர்மிதி)

ஒரு மனிதர் தனது குடும்பத்தாரை ஸலாம் கூறி சந்திப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய காரியம்! அவர்களது வாழ்வை மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் உரியதாக ஆக்கி இல்லத்தில் அன்பையும் அருளையும் திருப்தியையும் எற்படுத்துவார். தனது மனைவிக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்பட்டால் உதவிக்கரம் நீட்டுவார். வேலை பளுவின் காரணமாக அவளுக்கு களைப்பு, சடைவு, சஞ்சலம் எற்பட்டால் மென்மையாகப் பேசி அவளுக்கு ஆறுதலும் ஆனந்தமும் அளிப்பார்.

தன் மனைவியின் உள்ளத்தில் “தான் ஒரு சங்கைமிக்க உயர்ந்த குணமுடைய, கண்ணியமும் வலிமையும் கொண்ட கணவரின் நிழலில் இருக்கிறோம்’ என்ற உணர்வை ஏற்படுத்துவார். அவளைப் பாதுகாத்து, பராமரித்து அவளது காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார். தனது சக்திக்கு ஏற்ப அவளது முறையான தேவைகளை நிறைவேற்றித் தருவார். நேரிய மார்க்கம் அனுமதியளித்த பிரகாரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டு அவளது பெண்மையை திருப்திப்படுத்துவார். தனது தேவைகள், அல்லது நண்பர்கள் அல்லது சொந்த வேலைகள் அல்லது படிப்புகள் என்று தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நேரமனைத்தையும் செலவிட்டுவிடாமல் அவளது தேவைக்கெனவும் நேரங்களை ஒதுக்குவார்.

கணவனின் மூலம் சுகமனுபவித்துக்கொள்ளும் விஷயத்தில் மனைவியின் உரிமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. எனவேதான் அவர் தனது அனத்து நேரங்களையும் தொழுகை, நோன்பு, திக்ரு போன்ற வணக்க வழிபாடுகளில் செலவிடுவதைகூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இது இம்மகத்தான மார்க்கம் நிர்ணயித்துள்ள சமத்துவ அடிப்படைக்கு எதிராகும். இக்கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் அஸ் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் காணுகிறோம்.

அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் அளவுக்கதிகமான வணக்கங்களைப் பற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் “நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்! இறைத்தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள். நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள், தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி,  ஸஹீஹ் முஸ்லிம்)

உஸ்மான் இப்னு மள்வூன் (ரழி) அவர்களின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் (ரழி), நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் அழுக்கடைந்த ஆடையுடன், அலங்கோல நிலையில் வந்தார். அன்னையர்கள் “உனக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இந்தக் கோலத்தில் இருக்கிறாய்)” என்று கேட்டார்கள். கவ்லா (ரழி) அவர்கள் தனது கணவரைப் பற்றி “இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகல் காலங்களில் நோன்பு வைக்கிறார்” என்று கூறினார். அன்னையர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களைக் கண்டித்தவர்களாக “என்னிடத்தில் உமக்கு முன்மாதிரி இல்லையா?” என்றார்கள். அவர் “ஆம்! இருக்கிறது! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றார்கள். அதற்குப் பிறகு கவ்லா (ரழி) மணம் பூசி அலங்காரமாக வந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் “உஸ்மானே! நமக்கு துறவறம் விதிக்கப்படவில்லை, என்னிடம் உமக்கு முன்மாதிரி கிட்டவில்லையா? அல்லாஹ் மீது அணையாக! நான் உங்களைவிட அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை உங்களைவிட அதிகம் பேணுகிறேன்” என்று கூறினார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தங்களது அழகிய வழிமுறையை தோழர்களுக்கு கற்றுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலையுடன் நடக்கவேண்டும் என்று வழிகாட்டினார்கள். ஆகவேதான் மார்க்கத்தில் நடுநிலையை கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்கை பண்பாகவே மாறிவிட்டது. அவர்களில் ஒருவர் இதற்கு மாறுசெய்யும்போது மற்றவர் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவார்கள்.

அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்களுக்கும் அபூதர்தா (ரழி) அவர்களுக்குமிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அபூதர்தா (ரழி) அவர்களை சந்திக்க ஸல்மான் (ரழி) சென்றிருந்தார்கள். அங்கு அவர்களது மனைவி அலங்காரமற்றவராக இருந்தார். ஸல்மான் (ரழி) “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர் “உமது சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எதுவும் தேவையில்லை” என்றார்.

அபூதர்தா (ரழி) வந்தவுடன் ஸல்மான் (ரழி) அவர்களுக்கு உணவு தயார் செய்து “நீங்கள் சாப்பிடுங்கள், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்றார். ஸல்மான் (ரழி) அவர்கள் “நீர் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்” என்று மறுத்துவிட்டார். பின்னர் அபூதர்தா (ரழி) அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார். இரவானபோது அபூதர்தா (ரழி) நின்று வணங்க ஆயத்தமானார். ஸல்மான் (ரழி) “தூங்குங்கள்” என்று கூறியவுடன் தூங்கினார். பின்பும் அபூதர்தா (ரழி) தொழ முயன்றபோது “தூங்குங்கள்” என ஸல்மான் (ரழி) கூறினார்கள்.

இரவின் கடைசிப் பகுதியானதும் ஸல்மான் (ரழி) அவர்கள் “இப்போது எழுந்திருங்கள்” என்று கூறி இருவரும் தொழுதார்கள். அபூதர்தா (ரழி) அவர்களிடம் “உமது இறைவனுக்கு உம்மீது கடமை உண்டு. உமது ஆன்மாவுக்கு உம்மீது கடமை உண்டு. உமது குடும்பத்தாருக்கு உம்மீது கடமை உண்டு. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமையை நிறைவேற்றுங்கள்” என்று ஸல்மான் (ரழி) கூறினார்கள். ஸல்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் “ஸல்மான் உண்மையே உரைத்தார்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அறிவும் இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம் தனது மனைவியுடனான இல்லறத்தின் பசுமைகள் வாடிட அனுமதிக்கக் கூடாது. இன்பமூட்டும் விளையாட்டினாலும் ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும் தனது மனைவிக்கு அவ்வப்போது மகிழ்ச்சியூட்டி, தங்கள் இருவரிடையே உள்ள உறவை செழிப்பாக்குவார். இதுவிஷயத்தில் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மார்க்கத்தை நிலை நிறுத்துவது, முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவது, அறப்போருக்காக ராணுவத்தை தயார்படுத்துவது, இன்னும் இதுபோன்ற எத்தனையோ பல முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தும் இப்பொறுப்புகள் எல்லாம் அவர்களை ஒரு முன்மாதிரியான கணவராக, தனது மனைவிகளுடன் அழகிய பண்புகளுடனும் பரந்த மனத்துடனும் பழகி, அவர்களுடன் கொஞ்சி விளையாடுவதிலிருந்து அவர்களை தடுக்கவில்லை.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெரிவிப்பதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஹரீர் என்ற உணவை சமைத்தேன். நான் ஸவ்தா (ரழி) அவர்களிடம் “சாப்பிடுங்கள்!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் ஸவ்தா (ரழி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் ஸவ்தா (ரழி) மறுத்துவிட்டார். “”கண்டிப்பாக அதை சாப்பிட்டே ஆகவேண்டும் அல்லது அதை உங்களது முகத்தில் பூசிவிடுவேன்” என்று கூறினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். நான் ஹரீராவில் எனது கையை வைத்து அவரது முகத்தில் பூசிவிட்டேன். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக ஹரீராவில் ஸவ்தாவிற்காக தனது கரத்தை வைத்து ஸவ்தாவிடம் “ஆயிஷாவின் முகத்தில் நீ இதை பூசிவிடு” என்று கூறினார்கள். (அல் ஹைஸமி)

மனைவியின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அழகிய நடத்தையுடன் இனிமைதரும் விதமாக செயல்பட்டதிலிருந்து அவர்களது விசாலமான உள்ளத்தையும் பரந்த மனப்பான்மையையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

அன்னை அயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தார்கள். இருவரும் ஒட்டப்பந்தயம் வைத்தபோது ஆயிஷா (ரழி) அவர்கள் முந்திவிட்டார்கள். கொஞ்சம் சதைபோட்ட பிறகு இருவரும் ஒடினார்கள். அப்போது நபி (ஸல்) முந்திவிட்டார்கள். “இது அந்தப் பந்தயத்திற்கு பதிலாகிவிட்டது” என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவுத், முஸ்னத் அஹ்மத்)

தனது நேசமிகு இளம் மனைவியின் இதயம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பதற்காக அவர்களை அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளைக் காண்பித்து அதை அவர்கள் பார்த்து ரசித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது சிறுவர்கள், பெரியவர்களின் ஆரவாரத்தை செவியுற்றார்கள். அங்கு சில ஹபஷிகள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களை சூழ்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷாவே! இங்குவந்து பார்” என்றார்கள். எனது கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் மத்தியிலிருந்து பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷாவே உனக்கு திருப்தியா? ஆயிஷாவே உனக்கு திருப்தியா?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்துகொள்வதற்காக நான் “இல்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன், தங்களது இருபாதங்களையும் (வலியின் காரணமாக) மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தார்கள். (ஸன்னனுன் நஸயீ)

மற்றோர் அறிவிப்பில், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களை என்னுடைய அறையின் வாசலில் நிற்கக் கண்டேன். ஹபஷிகள் சிலர் மஸ்ஜிதில் ஈட்டியைக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் காதுக்கும் தோளுக்கிடையிலிருந்து அந்த விளையாட்டைக் காண்பதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டார்கள். நானாக திரும்பிச் செல்லும்வரை எனக்காக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுப் பாருங்கள்!” (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியரிடம் கொண்டிருந்த நல்லுறவு, நகைச்சுவை போன்ற பண்புகளைக் காணும் உண்மை முஸ்லிம், தனது மனைவியுடன் நல்லவராகவும் அவளுக்கு உறுதுணையாகவும் அவளுடன் அன்பான குணமுடையவராகவும் மிருதுவானவராகவும் நடந்துகொள்வார்.

உண்மை முஸ்லிம் அற்பமான காரணங்களுக்கெல்லாம் கோப நெருப்பை வெளிப்படுத்தும் மூடக்கணவர்களைப் போன்று நடந்து கொள்ளமாட்டார். விருப்பத்திற்கேற்ப உணவு தயார் செய்யவில்லை அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சமைக்கவில்லை என்பது போன்ற அற்பமான காரணங்களுக்கெல்லாம் சிலர் வீட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களை அடியொற்றி நடப்பவர் தனது ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளை நினைவில் நிறுத்தி அன்பும் நேசமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட கணவராகத் திகழ்வார்.

உண்மை முஸ்லிம் நபி (ஸல்) அவர்களின் நடத்தையை நினைவு கூர்வார். நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு உணவையும் குறை கூறியதேயில்லை. அதை விரும்பினால் சாப்பிடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியிடம் ஆணத்தைக் கொண்டு வருமாறு கேட்டார்கள். குடும்பத்தினர் “எங்களிடம் காடி (வினிகர்) மட்டும்தான் இருக்கிறது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வருமாறு கூறி சாப்பிட்டார்கள். மேலும் “”காடி மிகச்சிறந்த ஆணம். காடி மிகச்சிறந்த ஆணம்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது மனைவியிடம் ஏற்படும் சிறிய குறைகளைப் பார்த்து கோபித்துக் கொள்பவர்கள் சற்று நிதானிக்கவேண்டும். உணவு தாமதமாகுதல், தான் விரும்பிய ருசியின்மை போன்ற காரணங்களுக்காக கோபப்படும்போது அந்த பலவீனமான பெண்ணிடம் அக்குறை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் அவள் இதுபோன்ற தவறை செய்ததற்குரிய காரணங்கள் இருக்கலாம். அத தெரிந்துகொள்வதற்கு முன்பே சில ஆண்கள் கோபப்பட்டு விடுகிறார்கள். பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள் அல்லவா? ஆண்கள்தான் சகித்துக் கொள்ளவேண்டும்.

உண்மை முஸ்லிம் மனைவியிடம் மட்டுமல்லாது அவளது உறவினர், தோழியர்களிடமும் நல்லுறவைக் கடைபிடிக்கவேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஆதாரம் உண்டு. அன்னை அயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து செல்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அம்மூதாட்டியிடம் பரிவுடனும் கண்ணியத்துடனும் நடந்து, அவர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் நிலை எப்படி இருக்கிறது? நமது சந்திப்பிற்கு பிறகு எப்படி இருந்தீர்கள்?” என்று விசாரிப்பார்கள். அப்பெண்மணி “நலமாக இருக்கிறேன். என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறுவார்கள்.

அம்மூதாட்டி சென்றபிறகு அன்னை அயிஷா (ரழி) “இந்த மூதாட்டியை இந்தளவிற்கு நீங்கள் வரவேற்கிறீர்களே! நீங்கள் யாருக்குமே செய்யாத சில காரியங்களையெல்லாம் அவர்களுக்கு செய்கிறீர்களே!” என்றபோது நபி (ஸல்) அவர்கள் “இந்தப் பெண்மணி நாங்கள் கதீஜா (ரழி) அவர்களின் வீட்டில் இருக்கும்போது எங்களை சந்திப்பவராக இருந்தார்கள். நேசிப்பவர்களை கண்ணியப்படுத்துவது ஈமானில் கட்டுப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா?” என்று கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

சில சமயங்களில் கணவன்மீது மனைவிக்கு கோபம் ஏற்படலாம். எதேனும் ஒரு காரணத்தால் ஆத்திரத்தை வெளிப்படுத்துவாள். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் முஸ்லிம், பெண்ணின் குண இயல்புகளை ஆழ்ந்து அறிந்தவராக இருப்பதால் மிகுந்த சகிப்புத் தன்மையுடன் அதை எதிர்கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியர் கோபித்தால் அமைதி காப்பார்கள். மனைவியரில் சிலர் இரவுவரை நபி (ஸல்) அவர்களுடன் பேசாதிருப்பார்கள்.

உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “குரைஷி குலத்தைச் சேர்ந்த நாங்கள், பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனா வந்தபோது அந்நகரப் பெண்கள், ஆண்கள்மீது ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். எங்களது குடும்பப் பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக் கொண்டார்கள். நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமய்யா இப்னு ஜைத் கோத்திரத்தாருடன் வசித்துவந்தேன்.

ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு, என்னை அவர் எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை எற்படுத்தியது. அதற்கவர் “நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள் கூட நபி (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலிலிருந்து இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினார்.

பின்பு நான் எனது மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன். “ஹப்ஸாவே! நீ நபி (ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று கேட்டேன், “ஆம்” என்றார். “உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிலிருந்து இரவுவரை கோபமாக இருக்கிறார்களா” என்று கேட்டேன். அதற்கு ஹப்ஸா “ஆம்” என்றார். நான் கூறினேன்: “உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்து விடுவார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்கு கோபம் எற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து அழிந்துவிடுவோம் என்ற அச்சம் அவருக்கு இல்லையா? நீ இறைத்தூதரிடம் எதிர்த்துப் பேசாதே, அவர்களிடம் எதையும் கேட்காதே, உனக்குத் தேவையானதை என்னிடமே கேள்” என்று கூறினேன்.

பிறகு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும் தனது மகள் ஹப்ஸாவுக்குமிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களை நற்பண்புகளிலும் செயல்பாடுகளிலும் பின்பற்ற நினைக்கும் முஸ்லிம் இதுபோன்ற நற்குணங்களை தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இஸ்லாம் என்பது உயர்ந்த சமூக வாழ்க்கைக்குரிய மார்க்கம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டியவராவார். மேலும் இன்று தனிமனிதர் அல்லது குடும்பம் அல்லது சமூகத்தில் ஏற்படுகின்ற அதிகமான பிரச்சனைகள், பிரிவினைகள், நெருக்கடிகள், குழப்பங்கள் அனத்திற்கும் காரணம், இஸ்லாம் போதிக்கும் உயர்ந்த பண்புகளை விட்டு தூரமாக இருப்பதுதான் என்பதை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச்சொல்ல முடியும். உண்மையில் நற்பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளும் குடும்பமே ஈடேற்றம், நற்பாக்கியம், நிம்மதி ஆகியவற்றை அடந்துகொள்ள முடியும்.