அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (3)


சிறுவர்களைக் காணாத போது தேடுதல்:
தந்தை வீட்டுக்கு வந்ததும் தனது பிள்ளைகள் குறித்து விசாரிக்க வேண்டும். குழந்தைகள் எங்கேனும் சென்று வரத் தாமதித்தால் அவர்களைத் தேடவேண்டும். இது குழந்தைக்கு எமது பெற்றோர் எம்மீது அக்கறையாக உள்ளனர் என்ற உணர்வை ஊட்டும் நாம் வெளியிடங்களுக்குச் சென்றால் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும். இல்லை என்றால் எமது பெற்றோர் எமது வருகையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த உணர்வு குழந்தைகளைத் தவறான வழியில் செல்லாமல் காக்கும் அரணாகத் திகழும்.

வீணாக வீதிகளில் விளையாடித் திரியும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இன்று இளைஞர்கள் பலரும் வழிகெடுவதற்கு வீட்டுடன் அவர்களுக்கு இறுக்கமான தொடர்பின்மை என்பது முக்கிய காரணமாகும். நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். மேலதிக வகுப்பு, வீட்டுப் பயிற்சி எனப் பெற்றோரை ஏமாற்றி விட்டு கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நண்பர்களின் தூண்டுதலால் சிகரட் மற்றும் போதைப் பாவனைக்கு அடிமையாகின்றனர். எனவே பிள்ளைகள் நீண்ட நேரம் தம்மை விட்டும் பிரிந்திருந்தால் பெற்றோர்கள் அவர்களைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் பனூ கைனுகா கோத்திரத்தின் சந்தைக்குச் சென்று வந்தார்கள். பின்னர் தனது இரு முழங்கால்களையும் கைகளால் பிடித்துக்கொண்ட நிலையில் மஸ்ஜிதில் அமர்ந்தார்கள். பின்னர் ‘அந்த சுல்லான் எங்கே? அந்த சுல்லானை அழைத்து வாருங்கள்!’ எனக் கூறினார்கள். ஹஸன்(ரழி) அவர்கள் வந்ததும் பாய்ந்து அவரை அரவணைத்து அன்பு முத்தம் பொழிந்து ‘யா அல்லாஹ்! இவரை நான் நேசிக்கின்றேன்! எனவே நீயும் இவரை நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள் என அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

முத்தமிடுதல்:
முத்தம் அன்பைப் பரிமாறும் ஒரு ஊடகமாகும். சிறுவர்களுடன் உரையாடும் போது அன்பான ஸ்பரிசம் அவர்களது உடலில் ஊக்கத்தை ஊட்டும். தம்மைத் தொட்டுத் தழுவிப் பேசுபவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பையும், பாசத்தையும் பெறுவதாக உணர்கின்றனர். இந்த வகையில் அன்புப் பரிமாற்றத்தில் முத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு.

எல்லாப் பெற்றோர்களும் தமது பிள்ளைகள் மீது பெருமளவு பாசத்துடன்தான் இருக்கின்றனர். சிலர் பாசத்தை மனதில் வைத்துப் பூட்டி வைத்து விடடுத்தான் பழகுகின்றனர். இது தவறானதாகும். பெற்றோர்களின் மனதில் உள்ள பாசத்தைப் பிள்ளைகள் உணர முடியாது. எனவே பாசத்தைப் பேசும் வார்த்தைகள் ஊடாகவும், பழகும் முறையாலும், அன்பான அரவணைப்பின் மூலமும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் (தமது பேரக் குழந்தைகளான) ஹஸன்-ஹுஸைன்(ரழி) இருவரையும் முத்தமிட்டார்கள். அப்போது அங்கே இருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ்(ரழி) அவர்கள் (நீங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா!) எனக்குப் பத்துப் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்!’ எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி), ஆதாரம்:புகாரி)

இன்றைய பெற்றோர்களில் பலரும் தமது குழந்தைகள் தம்முடன் பாசத்துடனும், பரிவுடனும் நடப்பதில்லை; நம்மை மதிப்பதில்லை என்ற ஏக்கத்தில் காலத்தைக் கழிக்கின்றனர். மற்றும் சிலர் முதியோர் இல்லங்களில் தமது இறுதிக் காலத்தைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தாலும், கொடுக்காது விட்டாலும் அது பெரிய தாக்கத்தை அவர்களது மனதில் ஏற்படுத்தாது. இருப்பினும் தமது பெற்றோர்கள் தம்மீது போதிய அக்கறையும், கரிசனையும் காட்டவில்லை என்ற எண்ணம் அடிமனதில் அழகாகப் பதிந்து விட்டால் அது ஆபத்தாக அமைந்து விடும். எனவே, எமது குழந்தைகள் எமது இறுதிக் காலத்தில் எங்கள் மீது அன்பு காட்ட வேண்டுமானால் நாம் அவர்களது இளமைப் பருவத்தில் எமது அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான சிறந்த வழியாக முத்தமிடுவது அமைந்திருப்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

குழந்தை பெரியவர்களுடன் செய்யும் குறும்புத்தனங்களை அங்கீகரித்தல்:
குழந்தைகள் என்றால் குறும்புத்தனம் இருக்கவே செய்யும். பல நேரங்களில் அவர்களின் குறும்புத்தனங்கள்தான் நொந்து போன உள்ளங்களுக்கு ஒத்தடமாக அமைந்து விடுகின்றது. வீட்டில் நிலவும் விரும்பத்தகாத அமைதியை அவர்களின் குறும்புகள்தான் விரட்டியடிக்கின்றன. கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் தகராறுகள், மன முரண்பாடுகள் என்பவற்றைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகக் கூட அவர்களின் குறும்புத்தனம் அமைந்து விடுவதுண்டு! எனவே குழந்தைகளின் குறும்புத்தனம் வெறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. குழந்தைகளின் குறும்புத்தனம் ஆபத்தை விளைவிக்காமல் பார்த்துக்கொண்டால் போதுமானது.

குழந்தைகள் எதையும் அறிய வேண்டும் என்று ஆர்வம் கொள்வர். அவர்களின் குறும்புத்தனமும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் கூட்டணி அமைத்து அவர்கள் பேசும் பேச்சுக்களும், செய்யும் செயல்களும் உண்மையில் இரசிக்கத்தக்கவை. எனினும் வீட்டுக்கு வந்த பெரியவர்களிடம் அவர்கள் வித்தியாசமான வினாக் கணைகளைத் தொடுக்கும் போது சூழ இருப்பவர்கள் சிலபோது சங்கடப்பட நேர்வதுண்டு! சில சிறுவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவர்களிடம் ‘நீங்க ஏ எங்கட ஊட்டுக்கு ஒரே வார? ஒங்கட ஊட்டுல டீ இல்லயா?’ என்றெல்லாம் கேட்டுத் தொலைப்பார்கள். வந்தவர் சற்று நெளிவார். வீட்டாரும் இப்படிக் கேட்டு விட்டானே எனச் சங்கடப்படுவதுடன் பிள்ளைகளைக் கண்டிக்கவும் செய்வர். சிலர் குழந்தைத்தனத்தை இரசிக்கத் தெரியாமல் ‘எங்கட வருகயப் பத்தி ஊட்டுல தப்பாகப் பேசீக்குறாங்க! அதுதான் சிறுவன் இப்படிக் கேக்குறான்!’ எனத் தவறாக எண்ணி விடுகின்றனர். இது தவறாகும்.

சிறுவர்கள் பல விடயங்கள் குறித்தும் சிந்திக்கின்றார்கள். அவர்களிடம் கள்ளம்-கபடம் இல்லாததினால் தமது மனதில் எழுந்த எண்ணத்தை பளிச்சென வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றனர். இது அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு. இதைத் தடுத்து அவர்களின் சிந்திக்கும் திறனையும், கற்பனை வளத்தையும் முளையிலேயே முடக்கி விடக்கூடாது.

இவ்வாறே சில பிள்ளைகள், பெரியவர்கள் சிலரின் உடையைப் பிடித்து இழுப்பர்; சீண்டிப் பார்ப்பர்; தாடியைப் பிடிப்பர். இதுவெல்லாம் குழந்தைகள் உள்ளத்தில் அச்சத்தை அகற்றி அவர்கள் அடுத்தவர்களுடன் சகஜமாகப் பழகும் ஆளுமையை அடைந்து வருகின்றனர் என்பதற்கான அடையாளங்களாகும். எனவே எமது நிலையிலிருந்து இதை நோக்காமல் சிறுவர்கள் என்ற அவர்களது மனநிலையிலிருந்து நோக்கி இச்செயல்பாடுகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

‘அப்படிச் செய்யாதே!’, ‘இப்படிப் பேசாதே!’ என்று அவர்களை அதட்டி அவர்களின் குறும்புத்தனத்தை அழிப்பதோ, அவர்களின் உள்ளத்தை உடைப்பதோ, குழந்தை உள்ளத்தைச் சிதைப்பதோ தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

நபி(ஸல்) அவர்களிடம் கறுப்புப் புள்ளிகள் போடப்பட்ட ஒரு ஆடை கொண்டுவரப்பட்டது. ‘இதை நாம் யாருக்கு அணிவிக்கலாம்?’ என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் மௌனம் காத்தனர். எனவே நபி(ஸல்) அவர்கள் ‘ஹாலித் இப்னு ஸயித்(ரழி) அவர்களின் மகள் உம்மு காலிதை அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். அச்சிறுமி சுமந்து வரப்பட்டாள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியை எடுத்துத் தன் கையாலேயே அந்த ஆடையை அவளுக்கு அணிவித்தார்கள்.

பின்னர், ‘ஸனா! ஸனா!’ என்று கூறினார்கள். இது அறபு வார்த்தை அல்ல. இது அபீஸீனியப் பாஷையாகும். ‘ஸனா’ என்றால் அழகு என்று அர்த்தமாகும். இந்தச் சிறுமி அபீஸீனியாவிலிருந்து வந்திருந்ததால் அந்தச் சிறுமிக்குப் புரியும்படி அவளது பாஷையில் ‘அழகாக இருக்கிறது!’ என்று கூறினார்கள். அது மட்டுமன்றி அச்சிறுமியின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள். இந்தச் சிறுமி, தான் பெரியவளான போது இந்த ஹதீஸை அறிவிக்கும் போது;

‘பின்னர் நான் நபி(ஸல்) அவர்களை அண்டி அவர்களின் இறுதி நபித்துவ முத்திரை அடையாளத்தைப் பிடித்து விளையாட ஆரம்பித்தேன். அப்போது (நான் நபி(ஸல்) அவர்களுடன் மரியாதைக் குறைவாக நடப்பதாக எண்ணிய) எனது தந்தை என்னை அதட்டினார். அதற்கு நபியவர்கள் எனது தந்தையைப் பார்த்து ‘அவளை அவள் பாட்டில் விட்டு விடு!’ எனக் கூறினார்கள்.

உண்மையாக நடந்துகொள்ளுதல்:
பிள்ளைகள், பெரியவர்களை முன்மாதிரியாகக் கொள்கின்றனர். இந்த வகையில் பெரியவர்கள் – குறிப்பாகப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும். குழந்தைகளுடன் பேசும் போது பொய் பேசலாகாது! வாக்களித்தால் மீறக்கூடாது! போலி வாக்குறுதிகள் அளிக்கவும் கூடாது! இந்த விடயத்தில் பெற்றோர்கள் – குறிப்பாகத் தாய்மார்கள் தவறு விடுகின்றனர்.

அழுகின்ற பிள்ளையைச் சமாளிப்பதற்காகவும், பிள்ளைகளிடமிருந்து வேலை வாங்குவதற்காகவும் அது தருவவேன், இது தருவேன் என அரசியல்வாதிகள் போன்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். பின்னர் தேர்தல் முடிந்த கதை போன்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பொய்யையும், வாக்களித்து விட்டு மாறு செய்வதையும், ஏமாற்றுவதையும் சர்வ-சாதாரண விஷயங்களாக எடுத்துக்கொள்வர். இவை மூன்றும் முனாஃபிக்குகளின் பண்பாகும். இந்த மூன்று குற்றத்தையும் சாதாரணக் குற்றங்களாக அவர்கள் கருத ஆரம்பித்து விட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்வில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணி விடும். இந்த வகையில் பிள்ளைகளிடம் பொய் சொல்லவோ, போலி வாக்குறுதி அளிக்கவோ கூடாது. அவர்களைச் சின்ன விஷயத்தில் கூட ஏமாற்றக் கூடாது!

இதற்கு மாற்றமாக நடந்தால் பெற்றோர் பற்றிய நல்லெண்ணம் பிள்ளைகளிடம் எடுபட்டு விடும். ‘எனது தாய் பொய் சொல்பவள்; எனது தந்தை ஏமாற்றுபவர்’ என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் பெற்றோரின் எந்தப் போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இது விடயத்தில் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்!

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘எங்களது வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது எனது தாய் என்னை அழைத்தார்கள். அப்போது ‘வா! ஒரு சாமான் தருவேன்!’ எனக் கூப்பிட்டார். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க விரும்புகின்றீர்களா?’ எனக் கேட்டார்கள். எனது தாய் ‘நான் பேரீத்தம் பழம் கொடுப்பேன்!’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (இப்படி அழைத்து விட்டு) குழந்தைக்கு எதையாவது நீங்கள் வழங்காவிட்டால் பொய் சொன்ன குற்றம் உங்கள் மீது பதியப்படும்!’ எனக் கூறினார்கள்.

எனவே குழந்தைகளை ஏமாற்றவோ, அவர்களிடம் பொய் பேசவோ, போலி வாக்குறுதிகளை வழங்கவோ கூடாது. இது அவர்களின் ஆளுமையில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணும் என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆடை விடயத்தில் அவதானம்:
‘ஆள் பாதி! ஆடை பாதி!’ என்பர். ஆடையை வைத்து மனிதன் மதிப்பிடப்படுகின்றான். எனவே மனிதன் அணியும் ஆடை அவனுக்கு கண்ணியத்தையும், ஆளுமையையும் அளிக்கின்றது. சில ஆடைகள் குப்பார்களின் அடையாளமாகவும் மற்றும் சில ஆடைகள் குற்றச் செயல்களைச் செய்பவர்களினதும், நாகரிகமற்றவர்களினதும் ஆடைகளாக உள்ளன. மற்றும் சில ஆடைகள் ஒழுக்கங்கெட்டவர்களின் அடையாளமாக இருக்கின்றது. எனவே எமது குழந்தைகளின் ஆடை விடயத்தில் நாம் மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும்.

சில பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்குப் பெண்பிள்ளைகளினதும், பெண்பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைகளினதும் ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கின்றனர். ஆண்பிள்ளை இல்லாத பெற்றோர் தனது பெண்பிள்ளைக்கு ஆண்பிள்ளைகளுக்குரிய ஆடைகளை அணிவித்துத் தமது ஆசையைத் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். இதை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஆண் போன்று ஆடை அணியும் பெண்ணையும், பெண் போன்று ஆடை அணியும் ஆணையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். உங்கள் குழந்தைகள் நபி(ஸல்) அவர்களின் சாபத்துக்குள்ளாகுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?

இவ்வாறு பால் மாறி ஆடை அணிவது பழக்க-வழக்கத்திலும், பண்பாட்டிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆணிடம் பெண் தன்மையையும், பெண்ணிடம் ஆண் தன்மையையும் ஏற்படுத்தி விடும். இதனால் அவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படுவதுடன் சமுகத்தின் கேலிப் பொருளாகவும் அவர்கள் மாறி விடுவார்கள்.

அடுத்து, அணியும் ஆடை கண்ணியமானதாக இருந்தால் அதை அணிந்தவனின் செயல்பாடும் கண்ணியமானதாக இருக்கும். இன்றைய பெற்றோர் சினிமா நடிகர்களின் ஆடைகளைத் தமது குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்க்க ஆசைப்படுகின்றனர். அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ப அவர்களிடம் செயல்பாட்டிலும் மாற்றம் இருக்கும். முரட்டுத்தனமான ஆடை அணிபவர்களிடம் நீங்கள் மென்மையை எதிர்பார்க்க முடியாது. அநாகரிகமான ஆடைகளை அணிபவர்களிடம் நீங்கள் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே ஆடை விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். கண்ணியமான தோற்றத்தைத் தரும் ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளின் ஆடை விடயத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள்.

அம்ரிப்னுல் ஆஸ்(ரழி) அவர்களின் மகன் அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘நான் மஞ்சள் சாயம் பூசப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். ‘உனது தாய்தான் இந்த ஆடையை அணிவித்தாளா? இது நிராகரிப்பாளரின் ஆடை. இதை அணிய வேண்டாம்!’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களின் ஆடையில் அவதானம் செலுத்தியிருப்பதை அவதானிக்கலாம். எனவே, பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆடை எடுக்கும் போது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். சில பெற்றோர் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் ஆடை விடயத்தில் கூட அலட்சியமாக இருக்கின்றனர். ‘ஜீன்ஸ்’, டீ-சேர்ட் சகிதம் தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு பாதையில் பவணிவர அனுமதிக்கின்றனர். இது ஹறாமாகும். நாளை மறுமையில் நிச்சயமாக இதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆடை என்பது ஒரு மனிதனின் ஆளுமையிலும், ஒழுக்கத்திலும் அதிக தாக்கத்தைச் செலுத்தும் அம்சமாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகளின் ஆடை விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல்(2)


சிநேகம் கொள்ளுதல்:
பெரியவர்களிடமிருந்து அறிவையும், ஒழுக்கத்தையும், சமூகப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் விதமாகச் சிறுவர்கள் பெரியவர்களுடன் சினேகம் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர். இளம் பிராயத்தினருடன் சமூக அந்தஸ்த்துப் பெற்ற பெரியவர்கள் நெருக்கமாகப் பழகும் போது அவர்கள் மகிழ்வடைகின்றனர். அதைத் தமக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றனர். தாமும் சமூகத்தில் மதிக்கத்தக்க பிரஜையாக மாறிவிட்டதாக உணர்கின்றனர். இந்த வகையில் சமூக-சமயப் பெரியவர்கள் சிறுவர்களுடன் சிநேகம் கொள்வது அவர்களது ஆளுமையை விருத்தி செய்யும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் இளம் சிறுவர்களுடன் சிநேகமாகப் பழகியுள்ளார்கள். அவர்களது அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அவர்களுக்குப் போதனை செய்துள்ளார்கள். அனஸ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் என நபி(ஸல்) அவர்களின் சினேகத்தைப் பெற்ற சிறுவர்கள் ஏராளம் உள்ளனர்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போது, ‘சிறுவனே! நான் உனக்குச் சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அவற்றைப் பேணிக்கொள்! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அவற்றைப் பேணிக்கொள்! அவனை உன் முன்னால் காண்பாய். நீ பிரார்த்தித்தால் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். நீ பாதுகாவல் தேடினால் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பாதுகாவல் தேட வேண்டும். அறிந்துகொள்! மனித சமூகம் ஒன்றுசேர்ந்து உனக்கு உதவ முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு எழுதியதைத் தவிர அதிகமாக எந்த உதவியையும் செய்திட முடியாது. அவ்வாறு மனித சமூகம் உனக்குத் தீங்கு செய்ய எண்ணி விளைந்தாலும் உனக்கென அல்லாஹ் விதித்ததைத் தவிர அதிகமாக எந்தத் தீங்கையும் அவர்களால் செய்து விட முடியாது. பேனைகள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறே ஒரு முறை பழ்ல் இப்னு அப்பாஸ்(ரழி) என்ற சிறுவர் நபியவர்களுடன் வாகனத்தில் இருந்தார். ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க விடயம் தொடர்பாகக் கேள்வி கேட்டார். பழ்ல் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் காண முடிகின்றது. இவை நபி(ஸல்) அவர்கள் இளம் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த இறுக்கமான சினேகத்திற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

சிறுவர்களின் உள்ளத்தை ஈர்க்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்:
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் நெருக்கமான சினேகம் கொண்டு அவர்களின் ஆளுமை விருத்திக்குப் பங்காற்றினார்கள். இவ்வாறே சிறுவர்களின் உள்ளத்தை ஈர்க்கும் மென்மையான, அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

சிலபோது ‘யா குலாம்!’ (பையனேஃசிறுவனே) என அழைப்பார்கள். சிலபோது ‘அருமை மகனே!’ எனச் செல்லமாக அழைப்பார்கள். தனது பணியாளான அனஸ்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ‘யா புனைய!’ (எனது அன்பு மகனே! சின்ன மகனே! என்று அர்த்தம் தொணிக்கும் பதம்) கொண்டு அழைத்துள்ளார்கள்.

சிலபோது புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள். அதில் சிலபோது நகைச்சுவையும் இழையோடியிருக்கும். அலி(ரழி) அவர்கள் கோபத்தோடு மண்ணில் படுத்திருந்து மண் ஒட்டிய நிலையில் காட்சியளித்த போது, ‘யா அபத்துராப்!’ (மண்ணின் தந்தையே!) என அழைத்துள்ளார்கள். இவ்வாறு ஒரு நபித்தோழரை ‘இரண்டு காதுகளையுடையவரே!’ என்றும், மற்றும் ஒருவரை ‘துல்யதைன்!’ (இரு கைகளையுடையவரே!) என்றும் அவர் கூறி அழைத்துள்ளார்கள். சிலபோது ‘யப்ன அஹீ!’ (என் சகோதரனின் மகனே!) என்று அழைப்பார்கள். இவ்வாறு உரையாடும் போது அவர்கள் தயக்கமின்றிப் பெரியவர்களுடன் பழகும் பக்குவத்தை அடைவார்கள்.

சிறுவர்களின் உணர்வுகளை மதித்தல்:
சிறுவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கும் போது அவர்கள் தாம் சமூக அந்தஸ்த்தைப் பெறுவதாக உணர்கின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தால் அவர்கள் உள ரீதியாக ஊனமுறுகின்றனர். எனவே அவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும்.

ஒரு சபையில் நபி(ஸல்) அவர்களுக்குப் பால் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி விட்டு நபி(ஸல்) அவர்கள் வலது பக்கம் பார்த்தார்கள். அங்கே இப்னு அப்பாஸ் எனும் சிறுவர் இருந்தார். இடது பக்கம் அபூபக்கர்(ரழி) போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். அப்போது பால் கிண்ணத்தைப் பெரியவர்களுக்குக் கொடுக்க விரும்பிய நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ‘பெரியவர்களுக்குக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதியளிப்பாயா!’ எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது கிண்ணத்தை அவரது கையிலேயே கொடுத்தார்கள்.

சிறுவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நோக்கியுள்ளார்கள் என்பதற்கு இந்த நபிமொழி நல்ல சான்றாகும்.

விளையாட அனுமதியுங்கள்!
சிறுவர்கள் விளையாட்டையும், வெளியில் பயணம் செல்வதையும் விரும்புவார்கள். குறிப்பாகப் பெற்றோர்களுடன் பயணிப்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு. எனவே இவற்றைப் பெற்றோரும், பெரியோர்களும் மதித்து நடக்க வேண்டும்.

சில பெற்றோரும், பெரியோரும் சிறுவர்கள் விளையாடுவதை அனுமதிக்க மாட்டார்கள். ‘திண்டால் உண்டால் சும்மா இருக்க வேண்டியது தானே!’ எனத் தமது நிலையிலிருந்து சிறுவர்களை நோக்குவர். சிறுவர்களை விளையாட அனுமதிப்பது அவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்யும்.

விளையாடும் போது சட்டத்திற்குக் கட்டுப்படவும், தோல்வியைத் தாங்கிக்கொள்ளவும், கூட்டு முயற்சியில் ஒருவருக்கொருவர் உறுதுணையாகச் செயல்படவும், தலைமை தாங்கவும், தலைமைக்குக் கட்டுப்படவும் அவர்கள் பழக்கப்படுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் ஆகுமான விளையாட்டுக்களை அங்கீகரித்துள்ளார்கள். அபூதல்ஹா(ரழி) அவர்களது மகன் அபூ உமைர் குருவிக் குஞ்சோடு விளையாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. ஆயிஷா(Ë) அவர்கள் திருமணத்தின் பின் நபி(ஸல்) அவர்களின் வீடு செல்லும் போது தனது விளையாட்டுப் பொருட்களையும் எடுத்துச் சென்றார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். ஆயிஷா(Ë) அவர்களின் தோழிகள் அவர்களுடன் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் விளையாடுவதையும் அங்கீகரித்தார்கள். இந்த அங்கீகாரம் விளையாட்டின் அவசியத்தையும், அதன்பால் சிறுவர்களுக்குள்ள தேவையையும் உணர்த்துகின்றது.

இன்றைய சிறுவர்கள் தமது விளையாடும் உரிமையை இழந்து நிற்கின்றனர். ‘படி! படி!’ என்ற பெற்றோரின் திணிப்பு, பாடசாலை-பள்ளிக்கூடம்-டியூஷன் என அவர்களது இயல்பு வாழ்வு இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. இது தவறாகும்.

படிப்பு என்பது களைப்பும் சோர்வும் தரும் ஒரு அம்சமாகும். அந்தக் களைப்பும் சோர்வும் நீங்கிப் புத்துணர்ச்சி பெற விளையாட்டு மிக அவசியமாகும். தொடர்ந்து சிறுவர்கள் படிப்பது உள்ளத்தைச் சாகடித்து விடும். அவர்களது கனவுகளை நசுக்கி விடும். இதன் பின் அவர்கள் படிப்பது ஒழுங்காக ஏறாது. எனவே இடைக்கிடையே அவர்கள் விளையாட வேண்டும். அந்த விளையாட்டுக்கள் அவர்களது உள்ளத்திற்கு ஊக்கமளிப்பதாகவும், உடலுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். இன்று எமது சிறுவர்களிடம் வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கேம்ஸ், ஃபோன் கேம்ஸ் என்பன உடலுக்கு உற்சாகமளிக்காதவை. அவை பார்வைக்குச் சோர்வை அளிக்கும். ஓரளவு இந்த விளையாட்டுக்களை அனுமதித்தாலும் தொடர்ந்து மணிக்கணக்கில் இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவது விளையாட்டின் எத்தகைய நன்மைகளையும் அளிக்காது என்பது கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

விளையாடும் சிறுவர்களை உற்சாகப்படுத்துதல்:
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடும் போது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்கள். அம்பெறிந்து விளையாடியவர்களைப் பார்த்து, ‘இஸ்மாயீலின் பிள்ளைகளே! நீங்கள் அம்பெறியுங்கள்! உங்கள் தந்தை அம்பெறிபவராக இருந்தார்’ எனக் குறிப்பிட்டார்கள். இதேவேளை மோசமான விளையாட்டில் ஈடுபடும் போது கண்டித்தும் உள்ளார்கள். அம்பெறிந்து விளையாடும் போது உயிருள்ள பிராணிகளை இலக்காக வைத்து எறிபவர்களைச் சபித்துள்ளார்கள். இந்த வகையில் விளையாட்டை ஊக்குவித்த நபி(ஸல்) அவர்கள் சிறுவர்கள் விளையாடும் போது பார்வையாளராக இருந்து அவர்களை ஊக்குவித்துமுள்ளார்கள். ஒரு முறை அனஸ்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ஒரு வேலைக்காகத் தேடிய போது அவர் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் கூறி அனஸ்(ரழி) அவர்களை ஒரு தேவைக்காக அனுப்பி விட்டு ஒரு நிழலில் அமர்ந்து அனஸ்(ரழி) வரும் வரை விளையாட்டை அவதானித்தார்கள். பெரியவர்களும், பெற்றோர்களும் தம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அறிந்தால் சிறுவர்கள் இன்னும் அதிக உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

பிரிக்கக் கூடாது:
குழந்தைகளையும், பெற்றோர்களையும் அல்லது அந்தக் குழந்தைகள் ஒட்டி உறவாடி வாழ்ந்தவர்களையும் பிரிப்பது கொடிய குற்றமாகும். பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வது என்பது குழந்தைகளின் உரிமையாகும். இன்று இந்த உரிமைகளும் தந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டது.

வறுமை, சீதனம் சேர்த்தல், ஆடம்பர மோகம், பிறரைப் போல வாழும் ஆசை, பிறரின் தூண்டுதல் போன்ற பல காரணங்களால் பல தாய்மார்கள் பெற்றெடுத்த பிள்ளைகளைப் பிறரின் பொறுப்பில் போட்டு விட்டு வெளிநாடு செல்கின்றனர். தனது பிள்ளைகளை ஏக்கத்தில் தவிக்க விட்டு விட்டு பணத்திற்காகப் பிறரின் பிள்ளையை அரவணைத்து வளர்க்கின்றனர். தாய்ப்பாசம் இல்லாது வாழும் இந்த மலர்கள் செய்த குற்றம் என்ன?

இவ்வாறே தந்தையரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பால் தந்தையின் அரவணைப்பைக் குழந்தைகள் இழக்கின்றனர். போர்க் காலத்தில் கூட குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஆடு-மாடு போன்ற கால்நடைகள், பறவைகள் என்பன போன்ற உயிரினங்களுக்குள் கூடத் தாய்க்கும், சேய்க்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஆடு-மாடுகளை விற்கும் போது தாயையும், கன்றையும் தனித்தனியாகப் பிரித்து விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். குழந்தைகள் பெற்றோரை விட்டும் பிரிந்து வாழ்ந்தால் அவர்களது மன வளர்ச்சியும், ஆளுமை விருத்தியும் பாதிக்கப்படும். பின்வரும் ஹதீஸ் மூலம் இவ்விடயத்தில் இஸ்லாம் காட்டிய கரிசனையைக் கண்டுகொள்ள முடியும்.

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், இரு சகோதரர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுபவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அதுமட்டுமன்றி சபையில் வரும் போது தந்தைக்கும், பிள்ளைக்குமிடையில் அமர்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். தந்தை, தான் தனது குழந்தையின் இயல்புகளையும், பழக்கங்களையும், தேவைகளையும் அறிந்திருப்பார். குழந்தை சிலபோது பசியை உணரலாம்; தூங்க விரும்பலாம்; மலசல தேவையை வெளியிடலாம். சபையில் பெற்றோர் பிள்ளையிடம் இருக்கும் போது இந்தத் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். அந்தக் குழந்தைக்கு வழிகாட்டலாம். இதற்கு மாற்றமாகக் குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையில் அமர்வது பல சங்கடங்களை ஏற்படுத்தும்.

குழந்தை, தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வை அடையலாம். கூட்டம் எப்போது கலையும்? என்ற எதிர்பார்ப்பே குழந்தையிடம் இருக்கும். கூட்டம் கலைந்ததும் தந்தையைப் பிரிந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் அதை ஆட்கொள்ளும். அந்தக் கூட்டத்திலிருந்து அந்தப் பிள்ளை எந்தப் பயனையும் பெறாது. எனவேதான் தந்தைக்கும், அவரது குழந்தைக்கும் நடுவில் அவைகளில் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இப்னுமாஜா)

எனவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அல்லது அந்தப் பிள்ளையை அன்புடன் அரவணைப்பவர்களுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்துவது குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு ஆபத்தானது என்பதை அறியலாம்.

எனவே சிறுவர்களுக்கும், அவர்கள் அன்புடன் பழகுபவர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். தனிப்பட்ட ரோசம், கோபத்திற்காகப் பெரியவர்கள் இளம் பிஞ்சுகளின் இதயத்தில் அம்பைப் பாய்ச்சக் கூடாது.

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்


குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.

 • இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
 • அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.
 • ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.
 • ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • நபி(r) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
 • தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.
 • இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 • பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
 • உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
 • அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
 • தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.
 • உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
 • உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
 • அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
 • உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
 • பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
 • சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.
 • குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.
 • காஃபிர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது என்பதையும், எமக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். காஃபிர்களது பெருநாட்கள்-திருநாட்கள் கொண்டாட்டங்களுக்கு அவர்களை அனுப்பவோ, அவற்றில் கலந்துகொள்ளச் செய்யவோ வேண்டாம்!
 • ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.
 • குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
 • விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.
 • பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.
 • மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.
 • ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். பழழன அழசniபெ போன்ற அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.
 • அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
 • அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
 • பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.
 • உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.
 • அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின,; அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.
 • குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
 • தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.
 • பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
 • குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
 • குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
 • குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
 • பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.
 • பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.
 • அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.
 • திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.
 • நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
 • உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.
 • பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;
 • இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;
 • இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;
 • இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.
 • பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.
 • உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.
 • இது போன்ற வழிமுறைக;டாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆச் செய்யுங்கள்.

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல்


திட்டுவதையும், குறை கூறுவதையும் தவிர்த்தல்:
சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை; புகழ்வதுமில்லை. இதனைப் பின்வரும் விதமாக ஒரு கவிஞன் பாடுவதை இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்;

ஊக்கமருந்தினைப் போன்றது பெற்றோர் போற்றும் புகழுரைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றது கற்றோர் கூறும் அறிவுரைகள்

 

பிள்ளைகள் பெற்றோரின் புகழுரைகளை விரும்புகின்றனர். இது அவர்களை ஊக்கப்படுத்தும்; உற்சாகப்படுத்தும். அவர்களின் ஆற்றல்களை அதிகரிக்கும்.

சில பெற்றோர் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்துகொள்வர். ஆனால் பிள்ளைகளைப் போற்ற மாட்டார்கள். வகுப்பில் மகன் இரண்டாவது வந்துள்ளான் என்றால் முதலில் இரண்டாவது வந்ததைப் போற்றாமல் ‘ஏன் முதலாவது வரவில்லை எனக் கண்டிப்பர். சில பெற்றோர் பெண் பிள்ளைகளின் வேலைகளைப் பார்த்துக் குறை கூறுவர். யாருடைய நினைப்பில் வீட்டைக் கூட்டினாய்? என்ற தொணியில் பேசுவர். பிள்ளைகளுடன் இப்படி நடந்துகொண்டால் எதையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளின் உள்ளத்தில் பிறப்பதில்லை. நான் எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் எனது பெற்றோர் குறைதான் கூறுவார்கள் என்ற மனநிலையுடன்தான் செயற்படுவார்கள். எனவே சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று கவனமெடுத்துக் கருமமாற்ற மாட்டார்கள். அவர்களின் பணியைப் பார்த்துப் பெற்றோர் பாராட்டுவர் என்ற நிலையிலிருந்தால் பாராட்டைப் பெறுவதற்காக, பெற்றோரின் மனதைப் பரவசப்படுத்துவதற்காகக் கூடிய அவதானிப்புடன் செயற்படுவர். இது குழந்தைகளிடம் ஆற்றலையும், ஆளுமையையும், ஆக்கத்திறனையும் அதிகரிக்கும்.

சிலர் பிள்ளைகளின் குற்றங்களின் போது அவர்களை மட்டரகமாகப் பேசுவர். ‘இவன் ஒன்றுக்கும் உதவமாட்டான்!’, ‘இவன் மாடு மேய்க்கத்தான் சரிப்படுவான்!’, ‘இவனைப் பெற்றதற்கு ஒரு உலக்கையைப் பெற்றிருக்கலாம்!’ இப்படியெல்லாம் குழந்தைகளைக் குறைத்துப் பேசிக்கொண்டிருந்தால் அவர்களது உள்ளத்திலேயே அவர்களைப் பற்றிய மட்டரகமான எண்ணம் எழுந்து விடும். இதன் பின்னர் இவர்கள் எந்தப் பொறுப்புக்களையும் ஏற்க அஞ்சுவர். நான் எதற்கும் இலாயக்கற்றவன் என்ற எண்ணம் அவர்களது ஆழ்மனதில் பதிந்து அவர்களது முயற்சிகளுக்கும், திறமைகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கும். எனவே குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டோ, மட்டரகமாகக் குறைத்து மதிப்பிடும் வண்ணமோ பேசிக்கொண்டிருக்கலாகாது. அவர்களைப் போற்றும் வார்த்தைகளால் வார்த்தெடுக்க வேண்டும்; வளர்த்தெடுக்க வேண்டும். குறைகளை நிதானமாகவும், முறையாகவும் சுட்டிக்காட்டி அவர்களின் திறமைக்கான வாயில்களைத் திறந்து விடவேண்டும்.

‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னைப் பார்த்து ‘சீ..!’ என்றோ, நான் செய்த ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்யவில்லை?’ என்றோ கேட்டதில்லை’ என்ற அனஸ்(ரழி) அவர்களின் கூற்றுக் குறித்துச் சிந்திப்பது அவசியமாகும்.

இதேவேளை, குழந்தைகளுக்கு எதிராகப் பெற்றோர்கள் சபிப்பதையும், திட்டுவதையும் அவசியம் நிறுத்தியாக வேண்டும். சில பெற்றோர் – குறிப்பாகத் தாய்மார்கள் தமது பிள்ளைகளைச் ‘சனியன் பிடித்தது! செத்துத் தொலைஞ்சால் நிம்மதி! இதுல வாயில மண்ணப் போட..!’ என்று திட்டித் தீர்ப்பார்கள்.

திட்டுவதைப் பொதுவாக இஸ்லாம் தடுக்கின்றது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்யும் துஆக்கள் விரைவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் பெற்றோர் தமது குழந்தைகளின் நலனுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். இதற்கு மாற்றமாகக் குழந்தைகளுக்கு எதிராகத் திட்டுவது கண்டிக்கத் தக்கதாகும்.

‘உங்களுக்கு எதிராகவோ, உங்கள் குழந்தைகளுக்கு எதிராகவோ, உங்கள் பணியாளர்களுக்கு எதிராகவோ, உங்கள் சொத்துக்களுக்கு எதிராகவோ நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். கேட்பதை அல்லாஹ் வழங்கும் ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் துஆக் கேட்கப்பட்டு விட்டால் பதிலளிக்கப்பட்டு விடும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி) – முஸ்லிம்)

குழந்தைகளைத் திட்டுவோர் இந்த ஹதீஸைக் கவனத்திற்கொண்டு தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

உற்சாகமூட்டப் பரிசில்கள் வழங்குதல்:
குழந்தைகளின் ஆற்றல்களையும், ஆளுமையையும் வளர்ப்பதற்காக அவர்களிடையே போட்டி வைத்துப் பரிசில்கள் வழங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் – அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், கதீர் இப்னு அப்பாஸ் போன்றோரை ஒரு வரிசையில் நிறுத்தி வைத்து, யார் என்னிடம் முதலாவது வருகிறாரோ அவருக்கு இப்படி இப்படிப் பரிசு வழங்குவேன் என்று கூறுவார்கள். அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவார்கள். வந்த வேகத்தில் அவர்கள் நபி(ஸல்) அவர்களது மார்பின் மீதும், தோளின் மீதும் விழுவார்கள். நபியவர்களும் அச்சிறுவர்களை வாரியணைத்து அன்பு முத்தம் பொழிவார்கள்’ என அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே, பாராட்டுடன் பரிசில்களும் இணைந்துகொண்டால் அவர்களின் உற்சாகமும், உத்வேகமும் உச்சக் கட்டத்திற்கு உயரும்.

அறிவைத் தூண்டல்:
குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்காக அவர்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் சரியான பதிலளிக்கும் போது அவர்களைப் பாராட்டலாம்.

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு மரம் உள்ளது. அதன் இலை விழாது. அது முஸ்லிமுக்கு ஒப்பானது. அது என்ன மரம்? என்று எனக்குக் கூறுங்கள்!’ என்றார்கள். மக்கள் ஏதோ பாலைவன மரம் என எண்ணினர். எனினும் அது ஈத்தமரம் என நான் நினைத்தேன். ஆனால் வெட்கத்தால் கூறவில்லை. பின்னர் ‘அது என்ன மரம்?’ என்று நீங்களே கூறுங்கள்!’ எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ‘அது ஈத்தமரம்!’ என்று கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

இது போன்ற கேள்விகள் சிறுவர்களைச் சிந்திக்கத் தூண்டும். பழமொழிகள், விடுகதைகள், புதிர்க் கணக்குகள் என்பவையும் இந்த வகையில் பெரிதும் உதவக் கூடியவையாகும்.

குழந்தைகளிடையே பாரபட்சம் வேண்டாம்:
சில பெற்றோர் தமது குழந்தைகளுக்கிடையே பாரபட்சம் காட்டுவர். ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்குமிடையில் பாரபட்சம் காட்டுவர். சில வீடுகளில் மூத்தபிள்ளை-இளைய பிள்ளைக்கிடையே பாரபட்சம் காட்டப்படுவதுண்டு. இது தவறாகும். இந்த நடைமுறையால் குழந்தைகளுக்கு இடையே சகோதர பாசம் செத்துப் போய் விடுகின்றது. குரோத எண்ணம் ஏற்படுகின்றது. போட்டியும், பொறாமையும் அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அவர்களது உள்ளம் சுருங்கி விடுகின்றது. விட்டுக் கொடுக்கும் இயல்போ, தாராளத் தன்மையோ, பணிந்து போகும் பண்போ, பகிர்ந்துண்ணும் பக்குவமோ அவர்களிடம் ஏற்பட வழியற்றுப் போகின்றது. எனவே பெற்றோர் இது விடயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

உங்கள் குழந்தைகள் அனைவரும் உங்கள் குழந்தைகளே! அவர்கள் மீது பாசம் வைப்பதில் உள்ளத்தைச் சமநிலையில் வைத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏற்றத் தாழ்வோ, வித்தியாசங்களோ ஏற்பட்டு விடக்கூடாது.

‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! உங்கள் குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடந்துகொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

ஒரு நபித்தோழர் தனது ஒரு குழந்தையை அன்போடு மடியிலும், மற்றொரு குழந்தையை ஒதுக்கியும் வைத்த போது ‘இவ்விருவர்களையும் நீ சமமாக நடத்தக் கூடாதா?’ என நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்.

ஒரு நபித்தோழர் தனது ஒரு பிள்ளைக்கு ஒரு தோட்டத்தை அன்பளிப்பாக வழங்குவதாகவும், அதற்கு நபி(ஸல்) அவர்களைச் சாட்சியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு வேறு பிள்ளைகள் இருக்கின்றார்களா?’ எனக் கேட்டார்கள். அவர் ‘இருக்கின்றார்கள்!’ என்று கூறியதும், ‘இதே போன்று அவர்களுக்கும் வழங்கியுள்ளாயா?’ எனக் கேட்டார்கள். நபித்தோழர் ‘இல்லை!’ என்றதும், ‘இந்த அநியாயத்திற்கா என்னைச் சாட்சியாக்குகின்றாய்?’ என நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டி அவர்களின் ஆளுமையை ஆணி வைத்து அறையும் அநியாயத்தை அவசியம் அகற்றியேயாக வேண்டும்.

ஒழுக்க விழுமியங்களைப் போதித்தல்:
நபி(ஸல்) அவர்கள் தம்மோடு அண்டி வாழ்ந்த சிறுவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, நலன் அனைத்திலும் அக்கறை காட்டியுள்ளார்கள்.

ஹிஜாப் சம்பந்தப்பட்ட சட்டம் இறக்கப்படுவதற்கு முன்னர் அனஸ்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் ‘சர்வசாதாரணமாக அனுமதியின்றியே வந்து செல்வார்கள். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட போது அனஸ்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; ‘மகனே! அப்படியே நில்லுங்கள்! உள்ளே நுழைவதற்கான சட்டம் மாற்றப்பட்டு விட்டது. நீங்கள் உள்ளே நுழைவதென்றால் அனுமதி பெற்றே வரவேண்டும்’ எனக் கூறினார்கள்.
(ஆயிஷா(ரழி): புகாரி – அதபுல் முப்ரத்)

சிறுவர்கள் – குறிப்பாக 3 நேரங்களில் வீட்டில் அறைகளுக்குள் நுழைவதாக இருந்தால் கூட அனுமதி பெறவேண்டும்.

‘நம்பிக்கை கொண்டோரே! உங்களது அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதவர்களும், பஜ்ரு தொழுகைக்கு முன்னரும், உங்கள் (மேலதிக) ஆடைகளைக் களைந்திருக்கும் நண்பகல் வேளையிலும், இஷாத் தொழுகையின் பின்னரும் ஆகிய மூன்று வேளைகளிலும் (உங்களிடம் நுழைய) உங்களிடம் அனுமதி கோரிக்கொள்ளட்டும். (இவை) மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க நேரங்களாகும். இவை அல்லாத வேளைகளில் (அவர்கள் உங்களிடம் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் மற்றும் சிலரைச் சுற்றி வருபவர்களே!’ (24:58)

பெண்கள் தங்கள் ஆடைகளைத் தளர்த்தியிருக்கும் சந்தர்ப்பங்களில் அனுமதி பெற்றே உள்ளே வரவேண்டும் என்பதைச் சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் அவர்களின் ஆளுமையை வளர்க்கின்றது.

பாதுகாப்புத் தேடுதல்:
குழந்தைகளின் வெளிப்படையான பாதுகாப்பில் மட்டுமன்றி, ஆன்மிக ரீதியான பாதுகாப்பிலும் பெற்றோரும், மற்றோரும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவருக்குமாக பின்வருமாறு பாதுகாப்புத் தேடுவார்கள்;

பொருள்:
அனைத்து வகைச் ஷைத்தான்களை விட்டும், விஷஜந்துக்களை விட்டும், நோவினை தரும் அனைத்து வகைக் கண்ணூறுகளை விட்டும் அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

குறிப்பு:
நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) ஆகிய இருவருக்குமாகப் பாதுகாப்புத் தேடும் போது ‘உயீதுகுமா’ (உங்கள் இருவரையும் பாதுகாக்க வேண்டுகின்றேன்!) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஒரு ஆண்மகனுக்காகப் பிரார்த்திப்பதாயின், ‘உயீதுக’ என்றும் பெண்பிள்ளைக்கு ‘உயீதுகி’ என்றும் மாறுபடும்.

அதே வேளை, இஸ்மாயீல்-இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்கும் இவ்வாறு பிரார்த்தித்ததாகவும் கூறுவார்கள்’ என இப்னு அப்பாஸ்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அஹ்மத்)

எனவே, கண்ணுக்குப் புலப்படாத பாதிப்புக்களிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாக்கும் விடயத்திலும் பெற்றோர் கவனஞ்செலுத்த வேண்டும்.

தீய நேரங்களைத் தவிர்த்தல்:
சிறுவர்கள் விளையாடுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. இருப்பினும் அவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தும் நேரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘சூரியன் மறையும் நேரம் ஷைத்தான்கள் (இரவுதங்க இடம் தேடி) பரவும் நேரமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இரவு ஆரம்பமாகும் போது உங்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருங்கள்! ஏனெனில் அப்போது ஷைத்தான்கள் பரவித் திரிகின்றன. இரவானதும் நீங்கள் அவர்களை விடலாம். ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி உங்கள் கதவை மூடுங்கள்! ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி விளக்கை அணையுங்கள்!. ‘பிஸ்மில்லாஹ்!’ கூறித் தண்ணீர்ப் பையைக் கட்டுங்கள்! ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி உங்கள் பாத்திரங்களை மூடுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

எனவே, மஃரிப் வேளையில் குழந்தைகள் வீட்டிற்குள் வந்து விடும் விதத்தில் அவர்களுக்கான விளையாட்டு நேரத்தை மட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் வளரும் சந்ததியின் இரவு நேரங்களில் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கலாம். விளையாட்டின் பெயரில் இளம் சந்ததியினர் ஆபாசப் படங்களைப் பார்க்கவும், சிகரட்-போதைப்பொருள் பாவனை-ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபடவும் இந்தச் ஷைத்தான் பரவும் நேரம் பயன்படுத்தப்படுவதையும் தவிர்க்கலாம்.

படுக்கையை விட்டும் பிரித்தல்:
சிறுவர்கள் வளர்ந்து 7 வயதைத் தாண்டும் போது பெற்றோர்கள் அவர்களைத் தனியான படுக்கைக்கு மாற்ற வேண்டும். அவர்கள் தனியாகப் படுக்கும் போது தானும் பெரிய மனிதனாகி விட்டதாக உணர்கின்றனர். அவர்களுக்கு எனத் தனியறை-தனிக்கட்டில்-தனிமேசை என்று ஒதுக்கப்பட்டால் அதைப் பராமரிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றனர். இது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அடுத்து, சிறுவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து உறங்குவதில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கான பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறுவர்கள் எதையும் அறியும் ஆவலில் உள்ளனர். சிலபோது பெற்றோரின் இல்லற நடத்தைகளைத் தூங்குவது போன்ற பாவனையில் அவர்கள் அவதானிக்கலாம். இதனால் அவர்களது நடத்தையில் பாரிய மாற்றம் ஏற்படும். ‘இது என்ன?’ எனச் செய்து பார்க்க முற்படுவர். சிலபோது பார்ப்பதில் ஆர்வம் அதிகரித்து விட்டால் இதற்காக முயற்சி செய்து பார்க்கும் மனநிலைக்கு மாறிவிடுவர். சிலர் இதில் உச்சக்கட்ட மனநிலைப் பாதிப்புக்குக் கூட ஆளாகுகின்றனர்.

இஸ்லாம் குழந்தைகள் 7 வயதைத் தாண்டிய பின்னர் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுக்க வைப்பதையும், ஒரே போர்வையில் ஒன்றாகப் போர்த்திப் படுக்கும் நிலையைச் சகோதரர்களுக்கு மத்தியில் கூட தவிர்க்குமாறும் கட்டளையிடுகின்றது.

நல்ல நட்பு:
மனிதனின் மன அமைதிக்கு நல்ல நட்பு அவசியமாகும். சிறுவர்களும், இளைஞர்களும் நட்பை மதிக்கின்றனர். எனவே குழந்தைகளின் நட்பு விஷயத்தில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்ல நட்புகளை ஏற்படுத்த வேண்டும். 10 வயதுப் பையன் 20 வயது இளைஞனுடன் நெருங்கிப் பழகுவது போன்ற நட்பு முறைகளைத் தவிர்க்க வேண்டும். தன்னினச் சேர்க்கையும், தவறான பாலியல் நடைமுறைகளும் பரவி வருவதால் குழந்தைகளின் நட்பு விடயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் தீய நட்பின் தீங்கு பற்றியும் எச்சரிக்க வேண்டும்.

தவறுகளைக் களைதல்:
குழந்தைகள்-வளர்ந்த வாலிபர்களின் நடத்தைகளை உன்னிப்பாக அவதானித்து அவர்களை வழிநடத்துவது அவசியமாகும்.

பழ்ல் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார். அப்போது கருப்புக் கன்னங்களையுடடைய ஒரு அழகான பெண் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கத்தைக் கேட்பதற்காக வந்தாள். இந்த இளைஞர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். நபி(ஸல்) அவர்கள் அவர்களது முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன. இங்கே நபி(ஸல்) அவர்கள் அந்த இளைஞனின் இயல்பைப் புரிந்து அவரது நடத்தையை அவதானித்து வழிநடத்தியிருப்பதை அவதானிக்கலாம்.

அவர்களின் உரிமைகள் விடயத்தில் அனுமதி பெறல்:
குழந்தைகளின் உரிமைகள் விடயத்தில் பெற்றோர் நிதானமாகச் செயற்பட வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளைப் பெற்றோரோ, பெரியவர்களோ அலட்சியம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் ஒரு சபையில் இருந்த போது பால் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தி விட்டு வலது பக்கம் பார்த்த போது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இருந்தார்கள். இடது பக்கத்தில் பெரிய ஸஹாபாக்கள் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பெரிய ஸஹாபாக்களுக்குப் பாலை வழங்க விரும்பினார்கள். அந்தச் சிறுவரிடம் ‘இந்தப் பெரியவர்களுக்கு முதலில் பாலை வழங்க எனக்கு நீ அனுமதி தருவாயா?’ எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது அவரிடமே முதலில் வழங்கினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பாலை முதலில் பெறும் உரிமையைக் கூட நபி(ஸல்) அவர்கள் மறுக்க விரும்பவில்லை. எனவே குழந்தைகளின் நியாயமான உரிமைகள் பெற்றோர்களால் பறிக்கப்படக் கூடாது.

நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுத்தல்:
குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுக்கு மார்க்க ஒழுக்கமுள்ள நல்ல துணையை மணமுடித்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் சம்மதிக்காதவர்களுடன் நிர்ப்பந்தமாக நிச்சயதார்த்தம் செய்யக் கூடாது. சில தாய்மார் ‘நீ எனது மருமகளைத்தான் முடிக்க வேண்டும்!’ என்று மகனையும், ‘அவன்தான் உனது முறைமாப்பிள்ளை!’ எனப் பெண்ணையும் நிர்ப்பந்திக்கின்றனர். இது தவறாகும்.

சில பிள்ளைகள் பெற்றோர்களைப் பற்றிச் சிந்திக்காமல் அனைத்தையும் தாமே செய்து முடித்து விடுகின்றனர். இதுவும் தவறாகும். பிள்ளைகள் காதலித்துத் திருமணம் செய்வதை அனுமதிக்க முடியாது. இதை இஸ்லாம் கண்டிக்கின்றது. எனினும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்க்கைத் துணை பற்றிய ஆசைகளும், ஆர்வங்களும், கற்பனைகளும் இருக்கும். இதனைக் கவனத்திற்கொண்டு அவர்களின் ஆசைக்கு ஏற்ப தகுதியான துணையைப் பெற்றோர் திருமணம் செய்து வைப்பது பெற்றோரின் கடமையாகும்.

இதுவரை குழந்தைகள்-சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பல வழிகாட்டல்களை ஆய்வு செய்தோம். சிறுவர் உளவியல் தொடர்பான அறிவும், ஆராய்ச்சியும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் பழகிய விதத்தினை ஆழமாக ஆய்வு செய்தால் இன்னும் பயனுள்ள பல தகவல்களைப் பெறமுடியும். இது எனது அறிவுக்கு எட்டிய விதத்தில் முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாத சில அவதானங்கள் மட்டுமே! என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இதில் ஏதும் குறைகள் இருந்தால் அது எனது ஆய்வினதும், அனுபவத்தினதும் குறையே தவிர நபி(ஸல்) அவர்களது வழிகாட்டலில் உள்ள குறையாக நிச்சயமாக அது இருக்காது என்பதை கவனத்திற்கொள்க!

ஆராய்ச்சியாளரின் சிந்தனை?! (நீதிக்கதை)


Story சிங்கம், சிறுத்தை, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை ஸர்கஸில் பார்த்திருக்கிறோம்.

நீர்வாழ் உயிரினத்தில் டால்ஃபின், அதைப் பழக்குபரின் சொல்படி (முடிந்தவரை) சாகசங்கள் செய்வதும் நமக்குத் தெரியும்.

இவற்றின் தொடர்ச்சியாக ஓர் ஆராய்ச்சியாளர் தவளையைப் பழக்குவதற்கு முயற்சி செய்தார்.

பல நாட்கள் ஒரு தவளையைப் பழக்கி, அவர் “ஜம்ப்” என்று சொன்னதும் அத்தவளை ஒருமுறை குதித்துத் தாவும். இன்னொருமுறை “ஜம்ப்” சொன்னால், இன்னொரு தாவு தாவும்வரை பழக்கி விட்டார்..

ஆராய்ச்சியாளர் ஆயிற்றே! அத்தோடு விட முடியுமா?

தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு “ஜம்ப்” சொன்னார். வலியைப் பொறுத்துக் கொண்டு மற்ற மூன்று கால்களையும் பயன்படுத்தித் தவளை தாவியது.

அந்தத் தவளையின் இரண்டாவது காலையும் வெட்டி விட்டு “ஜம்ப்” சொன்னார். முயற்சியெடுத்துத் தவளை தாவி விட்டது.

பின்னர், மூன்றாவது காலையும் வெட்டி விட்டு “ஜம்ப்” சொன்னர். மிகவும் கஷ்டப் பட்டு, தன் எஜமானின் கட்டளையைத் தவளை நிறைவேற்றியது.

நான்காவது காலையும் வெட்டி விட்டு “ஜம்ப்” சொன்னபோது தவளை தாவவில்லை.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்,

‘நான்கு கால்களையும் வெட்டி விட்டால் தவளைக்குக் காது கேட்காது’

(இவ்வாறுதான் தம் ஆய்வுக் குறிப்பில் அந்த ஆராய்ச்சியாளர் எழுதினாராம்.)

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

Storyமாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர் என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகர சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன.

அலுவலகத்தின் உள்ளமர்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அலுவலகம் சாத்துவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தன. அப்போது அரக்கப் பரக்க வந்த அந்த இரு மண்ணின் மைந்தர்களுடன் பின் தொடரும் ஆடு போல வந்தார் அவர். தமிழர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.
மண்ணின் மைந்தர் தான் முதலில் வாய் திறந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வ அலைக்கும் ஸலாம்”

(தொடரும் உரையாடலை நாம் தமிழில் பார்ப்போம்)

“நாளை மதறாஸுக்கு ஏதும் விமானம் உள்ளதா?” என்றார் வந்தவர். பொறுப்பாளர் (கஃபீல்) போலத் தெரிந்தார்.

கணினியில் சோதித்த என் சக ஊழியர் மோகன் “இன்று இரவுக்கே உள்ளது” என்றார்.

உடனே அந்த தமிழர் பக்கம் (அவர் தான் பயணி போலும்) திரும்பிய அந்த ஆள் “இன்று இரவு இருக்கிறதாம் – போகிறாயா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

அவருக்கு பதிலளிக்காத அந்த தமிழர் மோகனிடம் தமிழிலேயே “நாளைக்கு இருக்கான்னு பாருங்களேன்” என்றார். ஏதோ ஒரு சோகம் போல காணப்பட்டார்.

“இல்லீங்க! நாளைக்கு சவூதியா கிடையாது, கல்ஃப் ஏர் தான் – அது உங்களுக்குப் பரவாய்ல்லியா”

“கல்ஃப் ஏர் சுத்திக்கிட்டுப்போவாங்க! – அப்படீன்னா நாளை மறுநாள் சவூதியா இருக்குமா பாருங்களேன்?”

“நாளை மறுநாளெல்லாம் கிடையாது – இதை விட்டா அடுத்து வெள்ளிகெளம தான்”

இதற்கிடையில் சவூதிக்காரர் குறுக்கிட்டு “எஷ் ஃபீ?” ( என்ன சேதி?) என்று கேட்க, மோகன் அவருக்கு விளக்கினார். அவர் உடனே “போகணும்னு முடிவு பண்ணி விட்டாய். இன்று இரவே போவதற்கென்ன?” என்று தன் ஊழியரைப் பார்த்துக் கேட்டார்.

அவர் அதற்கு ஏதோ சொல்ல வாய் திறக்குமுன் அங்கு தேனீர் கொண்டு வந்த ரஷீத் அவரை சற்று உற்றுப் பார்த்துவிட்டு
“நீங்க ஜாஃபர் இல்லே? ‘சஜினி’ ல கூட இருந்தீங்களே?”

“ஆமா ரஷீத் பாய், என்ன மறந்துட்டீங்களா? நாந்தான் இங்கு அழைச்சிட்டு வந்தேன்”

“சஜினிலருந்து முடிச்சிட்டு போயிட்டீங்கன்னு சொன்னாங்க, எப்படி இருக்கீங்க?”

“ம் இருக்கேன். நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க?”

“நமகென்னங்க, அதுபோகட்டும், புது விசாவுல எப்ப வந்தீங்க?, என்ன வேலை?, எங்கே வேலை?”

“வந்து இருபது நாள் தாங்க ஆகுது, இங்க தான் எக்ஸிட் 10ல”

“வந்து இருபது நாள்ல ஊருக்குப் போறேன்றீங்க, ஏதும் எமர்ஜென்ஸியா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, எனக்குப் பிடிக்கலைங்க – முடிச்சுட்டுப் போறேன்”

அதற்குள் என் பக்கம் ரஷீத் திரும்பி ‘ஜாஃபர்’ பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். ரஷீதும் நானும் பேசிக்கொண்டிருந்த போது ராஜு (இன்னொரு ஊழியர்) அவரருகில் அமர்ந்துக்கொண்டு “ஏதாச்சும் வேலையில கஷ்டமிருக்கா?” – சக தமிழனுக்கு உதவும் துடிப்பு கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் போல.

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்றவர் மென்று விழுங்கி

“ஹவுஸ் டிரைவர் வேலை தான். வேலை ஒண்ணும் கஷ்டமில்லீங்க, ஆனால், ரெஸ்ட் இல்லீங்க” என்றார்.

அவர் சொன்ன தோரணையிலும் தொனியிலும் அவர் சொல்வது உண்மை இல்லை என்று விளங்கி விட – இப்போது ராஜு அவரை நோக்கி “நீங்க நம்மாளுங்கறதால கேட்கிறோங்க, ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க இவங்கிட்ட பேசிப்பார்க்கலாம்”

ரஷீத் தொடர்ந்தார் “ஜாஃபர், புது விசாவுக்கு எத்தனி செலவு பண்ணி வந்திருப்பீங்க, அந்த செலவையாவது எடுக்க வேண்டாமா? – சொல்லுங்க உங்க கஷ்டத்தை – முடிஞ்சா ‘ரிலீஸா’வது கேட்டு பேசிப்பார்ப்போம்”

ரிலீஸ் என்கிற ஆங்கில வார்த்தையை காதில் வாங்கிய அந்த ஆள் வேகமாக கடங்காரனை கண்டவன் போல திரும்பி “என்ன பேசுகிறீர்கள்?” என்று ரஷீதைப் பார்த்துக் கேட்க ரஷீத் அதற்கு “வந்து இருபது நாளில் ஊருக்குப் போகிறாரே, ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்”

அந்த ஆள் முழுதுமாக ரஷீத் பக்கமாகத் திரும்பி தன் தலையில் இருந்த குறுவட்டை எடுத்து சரி செய்தப் படி, “நீயாவது கேட்டுச் சொல்லு – நான் எவ்வளவோ கேட்டும் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறான்”

ராஜு குறுக்கிட்டு “ரெஸ்ட்டே இல்லை என்று சொல்கிறார்”

“தய்யிப், அதை என்னிடம் சொல்லலாமில்லையா..” என்று கூறியவர் தன் ஊழியரை நோக்கித் திரும்ப அவர் அவசரம் அவசரமாக கைகளை ஆட்டி ரஷீதை நோக்கி “அவங்கிட்ட ஏதும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க” என்கிறார்.
அவருக்காக உதவ முன்வந்த ரஷீதுக்கும் ராஜுவுக்கும் அதிர்ச்சி. ‘என்ன இந்த ஆள் இப்படிச் சொல்கிறார்’ என்பது போல.

சன்னமான குரலில் அவரே தொடர்ந்து, ‘நான் ஊருக்குப் போனாப் போதுங்க’ என்று சொல்ல அதற்கு மேல் அவருக்காக பேச ஏதுமில்லாத ஏமாற்றத்தில் “சரி, உங்க இஷ்டம், கிளம்புங்க” என்று சொல்லி விடுகிறார். அதன் பின் ஒருவழியாக அன்றைய இரவு விமானத்துக்கே டிக்கட் வாங்கிக்கொண்டு அவர்கள் சென்று விட்டாலும் நமது அலுவலர்களுக்கிடையில் தூவானம் போல தொடர்கிறது அந்தப் பேச்சு.

“ஆளு முன்ன மாதிரி இல்ல. ஏதொ ஒடஞ்சிப்போயிதெரியறார்” – இது ரஷீத்.

“ஆமாங்க, ஏ…அதோ இருக்கு” – ராஜு தன் பாணியில்

“ஒண்ணு இவர்கிட்டயோ இல்ல அவங்கிட்டயோ ஏதோ விஷயம் இருக்கு” என்கிறார் சைஃபுல்லா – காசாளர்.

“நான் நினைக்கிறேன்….. என்று பலவிதமாக அனைவரும் அதையே அசைப்போட்டப்படி பேசிக்கொண்டிருக்க கடைசியாக மோகனே,

“உண்ம என்னன்னு தெரியாமல் ஆளாளுக்கு பேசிகிட்டிருக்கிறோம் – சரி, சரி, ராஜு சாத்துங்க போலாம்”
புதிய விசாவில் வந்து இருபதே நாட்களில் போக வேண்டுமென்றால்….? என்ன காரணமிருக்கும் – எனக்கும் யோசிக்க யோசிக்க ஒன்றும் சரியாக புலப்படவில்லை அல்லது நிறைய தவறாகப் புலப்பட்டது.

வெளியே வந்து என் வாகனத்தை திறக்குமுன் மகள் வாங்கிவரச் சொல்லியிருந்த ஸ்ட்ராபெர்ரி நினைவுக்கு வர, அருகிலிருக்கும் தமீமி மார்க்கெட்க்கு சென்றேன். அங்கு எனக்கு காத்திருந்த ஆச்சர்யம் போல அவர். அதே ஜாஃபர். சாக்லேட்டுகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னங்க, இன்னும் ஏர்போர்ட் கிளம்பலையா?” என்றேன்.
“தோ, டிரைவர் வண்டியோட வாசல்ல இருக்கிறார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்” என்றார். முகத்தில் சற்று மலர்ச்சி தென்பட்டது. தூக்கத்திலிருந்து விழித்து முகம் கழுவி வந்தவரைப் போல.

ஒரு குழந்தை போல சாக்லேட்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கேட்டேன்: “எத்தன குழந்தைங்க உங்களுக்கு”

மந்தகாசமாய்ப் புன்னகைத்துச் சொன்னார்: “கல்யாணம் ஆகியே ரெண்டு மாசந்தாங்க ஆகுது”.

நிழல் தந்த மரம்! (நீதிக்கதை)

நிழல் தந்த மரம்! (நீதிக்கதை)

Storyதோப்பு ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

Apple tree

காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன் சொன்னான், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை.”

அந்த மரம் சொன்னது, “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்.”

அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.

சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.

அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது.”

அந்த மரம் சொன்னது, “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்.” அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.

நீண்ட காலம் கழித்து அந்த இளைஞன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது அவன் இளைஞனல்ல. மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”

அந்த மனிதன் விரக்தியாக சொன்னான், “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?”

மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.

இந்த கதையை படிக்கும் நாம் அந்த சிறுவன் எத்தகைய கொடூரமான சுயநலவாதியாக இருந்திருக்கிறான் என அவன் மேல் கோபமடைவோம். கொஞ்சம் பொறுங்கள்! ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!

மரம் என உருவகமாக சொல்லப்பட்டது நமது பெற்றோர்களைத்தான் என கொண்டு சற்று யோசனை செய்து பாருங்கள்!

நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம்.

அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பாசமிகு பெற்றோர் நமக்காக நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான். இதை நாம் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறோமா?

உங்கள் பெற்றோரை மறந்து விடாதீர்கள். முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்கள் பாசத்தையும் பரிவையும் அவர்களிடம் காட்டுங்கள். நீங்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தானும் சந்தோசமடையும் ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்.

 

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் “சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)

Storyகாலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.

காலித்தைப் பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.

“உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால் அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.

“இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.

“இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம்.. வருகிறாயா?” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய்விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே..! ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது தெருத் தோழர்களிடம் பெருமையாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே!” என்றான் காலித். மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.

“அதோ.. அந்த வீட்டு வாசல் படிக்கருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன், “கொஞ்ச நேரம் பொறுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்தபோது அவனது முதுகில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்துக் கொண்டிருந்தான்.

நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன், “தம்பி! இதோ பார்த்தாயா.. நான் சொன்ன கார் இதுதான்! இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தாராம். ஒரு பைசா கூடச் செலவில்லாமல் இவருக்கு இந்தக் கார் கிடைத்திருக்கிறது. நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச் சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேயே பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.

காரை விட்டிறங்கிய காலித் அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன் இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள்.

“ஒரு இறைநம்பிக்கையாளர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையின் உண்மையான பொருளை அன்று புரிந்துக் கொண்டான் காலித்.

அது ஒரு காகம்! (நீதிக்கதை)

அது ஒரு காகம்! (நீதிக்கதை)

Story வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)