தேன் துளி -jabir hashim

வாழ்வு வளம் பெற திருமறையின் ஒளியில் நம் பாதை சுடர் வீசி மிளிரட்டும்

வாசிப்பு சிறந்த பொழுது போக்கு

வாசிப்பு சிறந்த பொழுது போக்கு

இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தமது பணிகளை செப்பனிடவும் செயற்படுத்தவுமே எத்தனிக்கின்றனர். பொழுது போக்கு விடயங்களில் ஈடுபட நேரமின்றி வேலைப்பழுக்கள் நிரம்பியவர்களாக உள்ளனர். அப்படி ஓய்வு கிடைத்தாலும் வீடியோ கேம்களுக்கும் வீனான தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கும் அடிமையாகி விடுகின்றனர். சிறந்த பொழுது போக்குகள் அறுகி வருவதனை யாரலும் மறுக்க முடியாது. உள்ளத்தையும் செயற்பாடுகளையும் புத்துயிர்ப்பிக்கும் பொழுது போக்குகள் இன்றளவும் மறக்கடிக்கப்பட்டும் மரணித்துக் கொண்டுமே உள்ளன.

காரணம் சிறந்த பொழுது போக்குகள் அனைத்தும் பழமைவாதமாக காட்டப்படுகின்ற அதே வேளை மனித உணர்வுகளை மளுங்கச்செய்யும் எதுவித பயனுமற்ற விடயங்கள் புதுமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டப்படுகின்றமையாகும்.

முன்னைய காலங்களில் வசதிவாய்புக்கள் காணப்படாவிடினும் சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் காணப்பட்டன. மனித அறிவையும் ஆற்றலையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் விதமாக அமைந்திருந்தன. ஆனால் இன்றைய பொழுது போக்கு அம்சங்கள் கால நேரங்களை வீனடிக்கக் கூடியதாகவும் அறிவு ஆற்றல் ஆளுமை போன்றவைகளை மழுங்கச் செய்வதாகவுமே உள்ளன.

இப்படி மறக்கடிக்கப்படுகின்ற பொழுது போக்குகள் ஏறாளமாக காணப்படுகின்றபோதிலும் இங்கு மனிதனை அறிவாளியாவும் ஆளுமையுள்ளவனாகவும் சிறந்த ஒழுக்கமுள்ள பிரஜையாகவும் மாற்றக்கூடிய வாசிப்பு எனும் பொழுது போக்கினைப்பற்றி கூறவேண்டியது காலத்தின் கட்டாயமாக உணரப்பட்டுள்ளது.

வாசிப்பு என்பது மொழித்திறன்களில் மூன்றாம் இடத்திலுள்ள முக்கிய திறனாகும். முதலில் வாசிப்பு என்றால் என்னவென்பதனை அறிய வேண்டும்.

வாசித்தல் என்பது மொழி ரீதியாக படித்தல், மனத்தல் என்ற நேரடி கருத்துக்களை கொண்டுள்ளது. எம்மில் பெரும்பான்மையானோர் வாசி> படி> ஓது என்ற சொற்கள் அனைத்தையும் ஒரே அர்த்தத்துடன் நோக்குவதுண்டு. முதலில் இம் மூன்று சொற்களும் வெவ்வேறு பொருளுடையவை என்பதனை வாசிப்பு என்றால் என்ன என்பதனை வரைவிலக்கணப் படுத்த முன் விளங்க வேண்டும்.

வாசி :– கண்களால் பார்த்து நாவினால் மொழிந்து சொற்களின் பொருளுணர்தல்.

படி :- கண்களால் பார்த்து நாவினால் மொழிந்து சொற்களின் பொருணர்ந்து மனதால் கிரகித்தல்.

ஓது :- கண்களால் பார்த்து நாவினால் மொழிந்து சொற்களின் பொருணர்ந்து மனதால் கிரகித்து செயலாய் உருவமைப்பது அல்லது நடைமுறைப்படுத்துவது.

கண்களால் பார்த்து நாவினால் மொழிந்து சொற்களின் பொருளுணரும் இச் செயற்பாட்டினை அறிஞர்கள்; வாசிப்பு என்பதுடன் அதனை பல்வேறுவிதமாக வரைவிலக்கணபடுத்தியும் உள்ளனர். இதில் DR.ந.சுப்பு ரெட்டியார் அவர்களது கருத்து அனைவராலும் வரவேற்றகப்படுகின்றது.

‘கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதை கண்களால் கண்டு நாவினால் மொழிந்து சொல்லின் பொருள் உணர்தல்’
கண்களால் கண்டு வாயினால் மொழிந்து சொல்லின் பொருள் உணர்தலே வாசிப்பு என சிறந்ததோர் வரைவிலக்கணத்தை அவர் வழங்கியுள்ளார். இவரது கருத்தின் பிரகாரம் வாசிப்பு என்பது காணல். உச்சரித்தல். பொருளுணர்தல் எனும் கூறுகளில் தங்கியுள்ளது.

எழுத்தும் வாசிப்பும் தோன்றியதன் பின்னரே மனித அறிவு விருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதனை அறிய முடிகிறது. கேட்டவைகளையும் பேசியவைகளையும் தொகுத்து எழுத்து வடிவமாக்கியதனால் பல் வேறு தகவல்களை அறிந்தவனாக மனிதன் மாறினான். பிற்காலத்தில் இது மனிதனின் பாரிய ஆற்றலாக போற்றப்படுகிறது.

அறிவியல் , ஆன்மீக , விஞ்ஞானம் , தொழில்நுட்பம் போன்றவைகளின் துரித வளர்ச்சிக்கு பல் வேறு மொழிகளிலும் காணப்பட்ட கையெழுத்து பிரதிகளும் நூல்களும் வாசிக்கபட்டமையும் , மொழி மாற்றம் செய்யப்பட்டதுவுமே காரணமாகும். உலக வரலாற்றில் மெச்சி பேசப்படும் அனைத்து அறிஞர்களும் வாசிப்பு என்பது மனிதனை பூரண மனிதனாக மாற்றும் சக்திவாய்ந்த ஆயுதம் என அடையாளப்படுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய மார்க்கம் வாசிப்பினை , கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துகின்ற மார்க்கமாகும். அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து அறிவு பூர்வமாக விளங்கவும் , சர்ச்சையான விடயங்களை தெளிவுபடுத்தவும் கட்டளைகளை பிறப்பிக்கின்றது.

இவ்வாறு அறிவினை முக்கிய படுத்துகின்ற மார்க்கம் என்பதனால்தான் புனித அல்குர்ஆனில் ஆரம்பமாக அருளப்பட்ட வசனம் கூட ‘ஓதுவீராக’ என்ற கட்டளையினை பிறப்பிப்பதாகவும் , அதே போன்று ‘உங்களிடம் ஒரு செய்தி கொண்டுவரப்பட்டால் அதனை தெளிபடுத்தி கொள்ளுங்கள்’ , ‘ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?’ , ‘சிந்திக்கமாட்டார்களா?’ என இன்னும் பல வசனங்களும் ஊக்குவிக்கின்றன. ஆக அறிவினை விருத்தி செய்யும் எந்த ஒரு செயற்பாடாக இருந்தாலும் அது இஸ்லாத்தின் பார்வையில் ஒரு வணக்கமாகும்.

வீனான செயற்பாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் பார்வையில் தடுக்கபட்ட விடயம். வீடியோ கேம்களும் , வீனான தொலைத்தொடர்பு ஊடக , சமூக வலைத்தள பாவனைகளும் நேரத்தை வீனடிக்க செய்கின்றன. ஆனால் வாசிப்பு என்பது பொழுது போக்காகவும் , அறிவு , சிந்தனை வளர்ச்சிக்கு அத்திவாரமிடுவதாகவும் உள்ளது. இவ்வாரான சிறப்புமிக்க பொழுபோக்கு அம்சம் மறைந்து போகாமல் உயிப்பிக்கவும், புதிய தலைமுறையினருக்கு அறிமுகபடுத்தவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாக உணரப்படுகின்றது.

எமது அன்றாட செயற்பாடுகளில் ஒன்றாக நாம் வாசிப்பினை அமைத்துக்கொள்ள வேண்டும். நாளிதழ்கள் , மாத இதழ்கள் போன்றவைகளையும் நல்ல புத்தகங்களையும் நாம் எமது நண்பர்களாக ஆக்கி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது எமது அறிவினை சகல துறைகளிலும் கூர்மையாக்கும். எம்மை அறியாமலே எம்முள் பல திறமைகளும் , ஆற்றல்களும் விருத்தியடையும் , எம்மை ஒரு சமயோசித சிந்தனைவாதியாக மாற்றும்.

ஒரு ஆவணத்தை வாசிப்பிற்கு உட்படுத்தும் போது அவதானிக்க வேண்டியவை

ஆவணம் : எழுத்து வடிவில் உள்ள அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்

1. தலைப்பு :
எந்த ஒரு ஆவணமாக இருந்தாலும் அதனை நாம் வாசிப்பிற்கு உட்படுத்த முன் அதன் கருவாய் அமையும் தலைப்பினை முதலில் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில் சில நூல்களின் தலைப்பினை விளங்குவது கடினமாக அமையும் அச்சந்சந்தர்ப்பங்களில் உசாத்துனைகளின் உதவியுடன் விளங்க வேண்டும்.

தலைப்பினை அவதானிக்காமல் வாசிப்பினை தொடர்கின்றபோது தவறான ஆவணங்கள் , கருத்துக்களை அது தவறு என்று அறியாமல் சரிகாணும் சந்தர்ப்பம் ஏற்படும். ஆக தலைப்பின் பொருத்தப்பாடு , கூறப்படும் விடயம் என்பவை வாசிப்பில் அவதானிக்கப்பட வேண்டும்.

2. அணிந்துரை : நூல் ஒன்றிற்கு குறித்த வேறு ஒருவரால் வழிங்கப்படும் உரையாகும். இதில் குறித்த படைப்பினைப்பற்றியும் , படைப்பாளியின் முயற்சி பற்றியும் கூறப்படும்.

3. முன்னுரை : நூலாசிரியரே தனது படைப்பின் ஆரம்பத்தில் வழங்கும் அறிமுகமாகும். இதனை வாசிப்பதன் மூலம் ஆக்குனரின் எதிர்பார்ப்பினை அறியலாம்.

4. உள்ளடக்கம் / பொருளடக்கம் : உள்ளடக்கம் என்பது குறித்த ஆவணத்தினை கோர்வை செய்தவர் உள்ளடக்கியுள்ள விடயங்களின் பட்டியலை குறிக்கும். இதனை வாசிப்பதன் மூலம் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அதனை கட்டாயமாக அவதானிக்க வேண்டிய அவசியமில்லை இருப்பினும் ஒரு ஆவணத்தை வாசிக்கும் போது முன் அட்டை முதல் பின் அட்டை வரை அவதானிப்பதே பூரண வாசிப்பாக கணிக்கப்படும்.

5. தொகுப்பாளர் / ஆக்குனர் : ஒரு ஆவணத்தினை வாசிப்பிற்கு உட்படுத்தும் போது அதன் ஆசிரியர் அல்லது ஆக்குனரை அவதானிப்பது அவசியம். ஏனெனில் குறித்த துறையில் தேர்ச்சியும் அனுபவமும் இல்லாத ஒருவர் அத்துறை பற்றி பேசும் போது போலிகள் இடம் பெற வாய்ப்புண்டு.

அதே போன்று அவரை அறிவது அவர் முன்வைக்கும் கருத்தினை விளங்கி கொள்ளவும் உதவி செய்யும். அதாவது அவரது நிலைப்பாடு குறித்த விடயத்தில் எவ்வாறு உள்ளது என்பதனை அறிவதன் மூலம் முன்வைக்கும் கருத்தினை விளங்கலாம். சிலர் புனைப் பெயர்களிலும் தமது படைப்புக்களை வெளியிடுவதுண்டு. இதனையும் அவதானிப்பது அவசியம்.

6. பதிப்புரை : ஆவணத்தினை பதிப்பு செய்த நிறுவனம் வழங்குகின்ற உரையாகும்.

7. வெளியீடு வெளியீட்டுரை : ஆவணத்தினை வெளியீடு செய்த நிறுவனம் அல்லது அமைப்பின் பெயரை அவதானிப்பது குறித்த ஆக்கம் எவ்வகையானது என்பதனை அறிய உதவும்.
குறித்த ஆவணத்தினை வெளியீடு செய்துள்ள நிறுவனம் வெளியீட்டு உரையினை வழங்கியிருக்கும். இதன் மூலம் வெயியீட்டு நிறுவனம் எந்நோக்கின் அடிப்படையில் வெளியீடு செய்துள்ளது என்பதனை அறியலாம். பதிப்பும் , வெளியீடும் ஒரு நிறுவனத்தினால் செய்யப்பட்டிருந்தால் பதிப்புரை, வெளியீட்டுரை என்பன ஒரே நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருப்பதனையும் அவதானிக்கலாம்

இவ்வாறு ஆவணத்தின் தலைப்பு , உள்ளடக்கம் , அணிந்துரை , முன்னுரை பதிப்புரை , வெளியீடு , வெளியீட்டுரை என அனைத்தையும் நாம் வாசிப்பில் ஈடுபடுகின்ற போது அவதானிக்க வேண்டும். காரணம் இன்று பல்வேறு வடிவங்களில் வழிகேடுகள் இஸ்லாத்தின் போர்வையில் ஒவ்வொரு வீட்டு வாயிலையும் தட்டிக் கொண்டிருக்கின்றன. துண்டு பிரசுரங்கள் , சஞ்சிகைகள் , பத்திரிகைகள் , நூல்கள் என பல அவதாரங்கள் எடுத்து இஸ்லாமிய பெயர்தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை அடையாளம் காணவும் , அதனை சமுகத்தில் அடையாளம் காட்டவும் வாசிக்கின்ற போது மேற் குறித்த விடயங்களை அவதானித்து வாசிப்பது அவசியமாகும்.

அன்மைக்காலமாக தழிழ் பேசும் இஸ்லாமிய உலகில் ஷியாக்களது படைப்புக்கள் ஆக்குனர் பெயர் குறிப்பிடபடாமலும் , புனைப்பெயர்களை தாங்கியதாகவும் , விலாசமிடப்படா வெளியீட்டகங்களின் மூலமும் வெளியிடப்படுவதனையும் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அவை மக்கள் மன்றத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எம்மில் பலர் எமது வீடுகளில் இருக்கும் ஆவணங்கள் யாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என அறியாமலே வாசிப்பினை தொடர்கின்றோம் , புத்தக அலுமாரிகளில் அடுக்கி வைத்துள்ளோம். ஆகவேதான் ஆவணங்கள் என்பவை பல தலைமுறைகளுக்கும் சென்றடைபவை என்பதனால் அவற்றை வாசிக்கும் போது அவதானித்து அடையாளம் காண்பது அவசியம்.

அதேபோன்று இன்றைய நவீன யுகத்தில் தொலைத்தொடர்புசாதனங்களுடன் தொடர்புபடுத்தியும் இதனை பார்க்கவேண்டிய தேவைப்பாடு உள்ளது. காரணம் உலகலாவிய ரீதியில் மிகவும் விரைவாக கருத்துக்களை கொண்டுசேர்ப்பதற்கான , கருத்து மாற்றங்கள் , ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஆயுதங்களாக இணையம் , சமூகவலைத்தளங்கள் தொழிற்படுவதனை அறியலாம். ஆகவேதான் ஆவணங்கள் எந்த வடிவில் இருந்தாலும் அதனை வாசிப்பிற்கு உட்படுத்த முன் மிகவும் நுணுக்கமாக வாசிக்க வேண்டும். தவரான கருத்துக்கள் சரியானதாகவும் , சரியான கருத்துங்கள் தவராகவும் மக்கள்மன்றத்தில் இஸ்லாமிய போர்வையில் இஸ்லாத்தின் எதிரிகளால் பரப்பப்படுகின்றன.

அல்லாஹ் எம்மனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாகவும் , அசத்தியத்தை அசத்தியமாகவும் விளங்கி நடைமுறைப்படுத்தி சுவனம் நுழைய அருள்புரிவானாக!

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply