Category Archives: RAMADAN

லைலத்துல் கத்ர்: மகத்துவம் மிக்க இரவு

“கத்ர்” என்பது அரபு மொழியில் மகத்துவம், நிர்ணயம், நெருக்கம் ஆகிய மூன்று கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றது. ‘லைலா’ என்ற பதம் இரவு என்ற கருத்தைக் கொடுக்கும். இந்த வகையில் முழு மனித சமூகத்திற்கும் வழிகாட்டியாக வந்த அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவே லைலத்துல் கத்ர் என வழங்கப்படுகின்றது. ‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) லைலத்துல் கத்ரில் இறக்கிவைத்தோம். (அல்கத்ர்:01)

‘அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் இறக்கிவைக்கப்பட்டது’ (அல் பகரா:185) நிச்சயமாக நாம் இதனை பாக்கியம் பொருந்திய ஓர் இரவில் இறக்கிவைத்தோம்: (அத்துகான்:3) மேற்குறிப்பிட்ட மூன்று வசனங்களும் ஓர் இரவையே சுட்டுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அல்குர்ஆன் அல்லவ்ஹுல் மஹ்பூலிருந்து வானிலுள்ள வைத்துல் இஸ்ஸாவுக்கு முழுமையாக இறக்கிவைக்கப்பட்டது. பின்னர் சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்.

(தப்ஸீருல் குர்ஆனில் அழீம்) லைலத்துல் கத்ர் இரவு எது?

உபாதா பின் ஸாமித் (ரழி) அறிவிக்கின்றார். லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்பொழுது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கதிரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். எனவே அதுபற்றிய விளக்கம் நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்.

(ஸஹீஹுல் புகாரி 2023 ஆவது ஹதீஸ்)

லைலத்துல் கத்ர் இரவு இதுதான் என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொண்டால் அந்த இரவில் மாத்திரம் நற்காரியங்களில் ஈடுபட்டு ஏனைய காலங்களில் வணக்க வழிபாடுகளிலும் நற்செயல்களிலும் ஈடுபடாது முடங்கி விடுவார்கள் என்பதற்காகவே அன்றைய இரவு எது என்பது பற்றிய அறிவு மறைக்கப்பட்டுள்ளது. இதனையே நபி (ஸல்) அவர்கள் அதுபற்றிய விளக்கம் நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்கள்.

இறுதிப்பத்தின் ஒற்றைப்பட இரவுகளில் அதனை தேடுங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார். ரமழானின் கடைசிப்பத்து நாட்களிலுள்ள ஒற்றைப் படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் (ஸஹீஹுல்புகாரி 2017)

ரமழானின் கடைசிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் அதனை இருபத்தோராவது, இருபத்து மூன்றாவது, இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (ஸஹ்ஹுல்புகாரி 2021) பிறிதொரு அறிவிப்பில் அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் தேடுங்கள் என அல்லாஹ்வின் தூதர் கூறியதாக உபாதாபின் ஸாபித் (ரலி) அறிவிக்கின்றார் (ஸஹ்ஹுல் புகாரி 2023 ஆவது ஹதீஸ்) ரமழான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் ஒன்றைப்பட இரவுகளில் ஒன்றாகவே லைலத்துல் கத்ர் அமையும் என்பது மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளிலிருந்து திண்ணமாக தெரிகின்றது.

லைலத்துல் கத்ரின் சிறப்புக்கள்

முன்னைய சமூகங்களுக்கு நீண்ட ஆயுட்காலம் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் செய்த நற்காரியங்களை தனது சமூகத்தினரால் செய்ய முடியாதுள்ளது என நபி (ஸல்) அவர்கள் ஆதங்கப்பட்ட பொழுது இந்த இரவை அல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கினான் என இமாம் மாலிக் தனது முவத்தாவில் பதிவு செய்துள்ளார்.

‘லைலத்துல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது வானவர்களும் ‘ரூஹ்’ எனும் ஜிப் ரீலும் சகல கட்டளைகளுடன் தமது இரட்சகனின் அனுமது பிரகாரம் அதில் இறங்குகின்றர். அதிகாலை உதயமாகும் வரை அது அமைதி பொதிந்திருக்கும். (அல்கத்ர்- 03 முதல் 05 வரையான வசனங்கள்) இன்னும் அந்த இரவில் தான் அந்த வருடத்தில் நடந்தேறவுள்ள அனைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனையே அல்குர்ஆன் இவ்வாறு சொல்கின்றது. அந்த இரவில்தான் தீர்க்கமான காரியங்கள் அனைத்தும் பிரிக்கப்படுகின்றன. அத்துகான் 4)

நபி (ஸல்) அவர்கள் இறுதிப்பத்து நாட்களில் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருந்து லைலத்துல் கத்ரின் பேறுகளை அடைந்து கொள்ள முனைப்புக் காட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார். (ஸஹ்ஹுல் புகாரி 2005 ஆவது ஹதீஸ்) ரமழானின் கடைசிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லற தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள் அல்லாஹ்வை தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை தொழுவதற்காக குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.

(ஸஹ்ஹுல் புகாரி 2024)

இந்த இரவை ஒருவர் அடைந்துக்கொண்டால் அவர் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) மூலமாக முஸ்லிம் உம்மத்திற்கு கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ பஃபு அன்னி (சுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வே நீ நிச்சயமாக மன்னிப்பவனாகவும் மன்னிப்பை விரும்புபவனாகவும் உள்ளாய் என் பாவத்தை மன்னித்து அருள் செய்வாயா லைலத்துல் கத்ரின் பேற்றினை பெற்றுக்கொண்ட நல்லடியார்களின் கூட்டத்தில் அல்லாஹ் எம்மை சேர்த்து அருள்வானாக.

புனித ரமழான் மாத இறுதியில்

ஒரு சமூகத்தில் மனித உரிமை, சமத்துவம், சகோதரத்துவம், மனித நேயம் போன்றவை நிலவ வேண்டும். அச்சமூகத்தை வழிநடத்தும் அறப்போதனைகள் அதற்கு உந்து கோலாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு நோக்குகையில் மனித இனத்தையே உருவாக்கிய வல்லவன் அல்லாஹ் அம்மனித வாழ்வின் ஒழுகலாற்று விதிமுறைகளையும் வலியுறுத்தியுள்ளான்.

அவை அச்சமூகத்தின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும், அமைதிக்கும் சிறப்பான பின்பற்றலாய் அமைகின்றன.

அனைத்தையும் தன் ஆளுமைக்கும் அறிவுக்கும் உட்படுத்திய அல்லாஹ் தன் படைப்புக்களை ஏற்ற இறக்கமுள்ளதாகவும் படைத்திருப்பது மனித சமூகத்தில் கூட்டுறவு, புரிந்துணர்வு, பரிவு, ஈகை, பண்பு முதலியவற்றால் அச்சமூக நல்லிணக்கத்தை உருவாக்கவும் கடமை, கட்டுப்பாடு, கண்ணியம் முதலானவற்றை உணர்வதற்கும், மற்றும் தானே அனைவரிலும் நிறைவுடையவன், தன்னைத் தவிர அனைத்தும் அனைவரும் தேவையானவை என்பதைத் தத்துவமாய் உண்மைப்படுத்துவதுமாகும்.

இவ்வாறு ஸகாத் வரி இறுப்பாளர்கள் தான் கடமை கொண்டிருக்கும் செல் வங்களின் அளவு, காலம் என்பன தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வளவையும் காலத்தையும் அச்செல்வம் கொண்டிருக்க வேண்டும் என்பது மற்றுமொரு விதியுமாகும். செல்வத்தைச் சரியாகக் கணக்கிட்டு கடமையை நிறைவேற்றுவதே முழுமையான நிறைவேற்றல் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இக்கடமைக்கு உட்படுவோர் சமூகத்தில் சில விதத்தவரே! இது போன்ற மற்றுமொரு ஸகாத் ரமழான் மாத முடிவில் கடமையாகுவதையும் காணலாம். இதை ஸகாத்துல் பித்ர் என்று அழைப்போம்.

இது முஸ்லிம்கள் அனைவரும் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடுவதன் முன் அப்பெருநாளை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் விதித்திருப்பதாகும். ஒரே சமூகம், ஒரே குடும்பமாக வாழ வேண்டிய நிலையில் சிலர் உண்டு கழிக்கவும், மறு சிலர் பட்டினியால் வாடி வதங்கிய நிலையில் பெருநாளைக் கழிப்பதும் நியாய நிலையாகாது என்பதை வலியுறுத்தும் இஸ்லாம், பெருநாள் பகல் – இரவுக்குத் தேவையான உணவு, உடை தனக்கும் தன் பராமரிப்பிலுள்ளவர்களுக்கும் போதுமாயிருக்க, மீதமுள்ள தானியத்தை தன் சகோதர முஸ்லிமுக்கு வழங்கி அவனையும் அப்பெருநாளை சந்தோஷமாய்க் கொண்டாட உதவுவதே இக்கொடுப்பனவின் சிறப்பு நோக்கமாகும். பொதுவாக இரக்கம், ஈகை, இணைப்பு என்பன இவற்றால் முஸ்லிம்கள் மத்தியில் இதுபோன்ற நல்ல கடமைப்பாடுகள் இணைப்புப் பாலமாய்க் காணப்படுகின்றன.

“ஸகாத்துல் பித்ர், நோன்பை, தவறு, வீண் ஆகியவற்றை விட்டும் துய்மைப்படுத்தும், ஏழைகளுக்கு உணவாகவும் அமையும்” என்ற அமைப்பில் அகிலத்திற்கோர் அருட்கொடையாக அவனியில் அவதரித்த அண்ணல் நபியவர்கள் அதை நமக்கு கடமையாக்கினார்கள். இறைவன் திருமறையில் “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யாதவறையில் நீங்கள் நன்மையை அடையவேமாட்டீர்கள்” (3:92) எனக் கோட்டிட்டுக் காட்டுகின்றான்.

நோன்புப் பெருநாளன்று நல்கப்படும் தானிய அறத்திற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகின்றன. நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டிலேயே இதுவும் கடமையாக்கப்பட்டது. “ஒருவர் நோன்பு நோற்ற நிலையில் செய்யும் சிறு சிறு தவறுகளால் அந்நோன்புகள் விண்ணை எட்டாமல், மண்ணிற்கும் விண்ணிற்கும் இடையில் தடுத்து நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஃபித்ரா கொடுப்பது அத்தடையை அகற்றி அவற்றை விண்ணுலகை அடையச் செய்கின்றது” என அண்ணலெம் கோமான் நபியவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள். “ஸஜ்தா ஸஹ்பினால் தொழுகையின் குறைகள் நீக்கப்படுவது போன்று பிர்தராவினால் நோன்பின் குறைகள் அகற்றப்ப டுகின்றன” என்று இமாம்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

குறைந்த பட்சம் ரமழான் மாத இறுதியிலும் ஸவ்வால் மாத முற்பகுதியிலும் வாழ்ந்தோர் மற்றும் கழிக்கப்பட வேண்டிய செலவுகளை விட மேலதிக வருமானமுடையோர் ஸகாத்துல் ஃபித்ர் கொடுக்கக் கடமைப்பட்டோர் ஆவர்.

ஒரு முஸ்லிம் தனக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் பெருநாள் பகல் மற்றும் இரவு உணவுக்கும், குடும்பச் செலவுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கும் ஏற்பாடு செய்த பின்பும் அவரிடம் பொருள் வசதி இருப்பின் “தனக்காகவும் அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் ஸகாத்துல் ஃபித்ரா செய்து கொடுப்பது அவர் மீது கடமையாகும்” இதுபோன்றே பெருநாள் இரவில்தான் ஒருவருக்கு வசதி வாய்ப்பு ஏற்படுகிறது என்றால் அவர் மீதும் ஃபித்ரா கொடுப்பது கடமையாகும்.

நபர் ஒன்றுக்கு இரண்டே கால் கிலோ அல்லது ஒரு மரக்கால் (4 இரு கை அளவுள்ள) அல்லது மூன்று லீட்டர் அளவுள்ள புழக்கத்தில் பிரதான உணவாகக் கொள்ளும் தானியத்தை ஃபித்ராவாக வழங்க வேண்டும்.

ஒருவர் தனக்காக ஃபித்ரா நல்கும் போது தான் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும் தன் மனைவி மக்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஃபித்ரா செலுத்தும் போது அவர்கள் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும் அந்தந்த ஊரில் பிரதான உணவாகக் கெள்ளும் தானியத்திலிருந்து ஃபித்ரா செலுத்த வேண்டும்.

தானியங்களின் கிரயத்தையோ ஃபித்ரா வழங்கும் ஊரிலுள்ள பிரதானமில்லாத தானியங்களையோ, குறையுடைய (வண்டு மற்றும் செல்லரித்த) தானியங்களையோ பித்ராவாகக் கொடுப்பது கூடாது. கடைசி நோன்பின் மஃரிபு முதல், பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வரை ஃபித்ரா நல்குவதற்குரிய காலமாகும். ரமழான் மாதம் தொடக்கம் முதலே ஃபித்ரா வழங்குவது ஆகுமானது. பெருநாள் தொழுகைக்கும் பின் காலம் தாழ்ந்துவது கூடாது. அண்டை வீட்டுக் காரரோ, உறவினரோ ஃபித்ரா கொடுக்கும் சமயம் அங்கில்லாதிருப்பின் அன்றைய மாலை சூரியன் மறையும் வரை அவருக்காக அதனை ஒதுக்கி வைத்திருந்து நல்குவது சிறந்தது.

ஆக, நாமும் இந்த ஸகாத்துல் ஃபித்ராவை உரிய நேரத்தில் உரிய முறையில் கொடுத்து இறைவனின் இணையில்லா அருளைப் பெற்றுக் கெள் வோமாக!

ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

நோன்பு
ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2:184
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குர்ஆன் 2:185
மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.
மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.
இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.
நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.