Category Archives: QURAN

வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில் நுட்பம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலா?லா?


இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால உலகை ‘அறிவியல் யுகம்’ என்று வர்ணிப்பர். கணனி (Computer), மின்அஞ்சல் (E-Mail), இணையம் (Internet) டிஜிட்டல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி, உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகு தொலை விலில்லை என நம்பப்படுகின்றது. மறு பக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் ‘போலாக்கம்’ (Cloning) எனும் செயற்பாடு உலகை பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. இது ‘அறிவியல் யுகம்;;, மதத்திற்குரிய காலமல்ல. மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது. நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை’ என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

1. அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சமகால மேற்குலகின் அனைத்துத்துறை சார்ந்த முன்னேற்றத்திற்கும் அது மதத்தை நிராகரித்து, அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும்.
2. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களை கொண்டது. அவையாவன:

1. சமயம்
2. தத்துவம்
3. அறிவியல்

மூன்றாம் கட்டமே இறுதிக்கட்டமாகும்.

4. மதம் என்பது அபினை போன்றது. மனித சமூகம் அதிலிருந்து விடுபடாத வரை அதற்கு விடுதலை இல்லை. சுபீட்சம் இல்லை.

அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகம் தோன்ற முடியாது என்பது ஒரு பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு முரணானது, அது அறிவியலை ஆட்சேபிக்கின்றது என்ற வாதம் பிழையானதாகும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தவோர் ஐரோப்பிய நோக்காகும். மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உலகில் வேறு எங்கும் போராட்டங்கள் நிகழவில்லை. அது ஐரோப்பாவிலேயே நிகழ்ந்தது. மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்கு தடையாக எங்கும் இருந்ததில்லை. ஐரோப்பாவில் தான் கிறிஸ்தவக் கோயில் அறிவு ஆராய்ச்சிக்கும், சுதந்திரமான சிந்தனைக்கும் எதிராக வரலாற்றின் மத்திய காலப்பிரிவில் செயற்பட்டது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல, அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமுமாகும். அது அறிவு ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும் அதனைக் கற்பவனதும், அதனைக் கற்பிப்பவனதும் சிறப்புகளைப் பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசியுள்ளது. அல்குர்ஆனை ஆராய்ந்து நோக்குகையில் அது அறிவுத்துறைக்கு கொடுத்திருக்கும் அழுத்தத்தையும் முக்கியத்து வத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

‘அறிவு’ எனும் பொருள்படும் ‘இல்ம்’ எனும் பதம் அல்குர்ஆனில் எண்பது இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. இப்பதத்திலிருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தை கொடுக்கும் ‘அல்-அல்பாப்’ எனும் சொல் அல்குர்ஆனில் 16 தடவைகள் இடம் பெற்றிருக்கின்றது. குறித்த பொருளைத் தரும் ‘அந்நுஹா’ எனும் சொல் இரு தடவைகள் இடம்பெற்று இருக்கின்றது. அல்குர்ஆனில் ‘அல்-அக்ல்’ எனும் பதம் அறிவு என்னும் பொருளைத்தரும். அதில் இடம்பெற்றுள்ள இந்த வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுதம் ‘அல்-பிக்ர்’ என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ‘அல்-பிக்ஹ்’ விளக்கம் என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன. ‘அல்-ஹிக்மா’ (ஞானம்) என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் எனும் பொருள்படும் ‘அல்-புர்ஹான்’ என்ற சொல் 7 தடவைகளும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆராய்தல், நோக்குதல், சிந்தித்தல் போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்குர்ஆனில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

இவை அனைத்துக்கும் மேலாக அல்குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய வசனங்களோ, அறிவைப்பற்றியும் அறிவின் அடிப்படைகளகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதை பார்க்கின்றோம்.

ஸூறதுல் அலக்கின் இவ்வாரம்ப வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய ஸூறா ‘அல்கலமின்’ ஆரம்ப வசனமும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.

இது போன்று ஆராயுமாறும், சிந்திக்குமாறும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு ஆர்வமூட்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகின்றது.

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 திருவசனங்கள் காணப்படுகின்றன. அது மட்டுமா?

அல்குர்ஆனில் இயற்கை, விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், மிருகவியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் போன்ற கலைகள் தொடர்பான பல உண்மைகளும் அக்கலைகளுடன் தொடர்பான பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், ”அறிஞர்களே அல்லாஹ்வை சரியாக அஞ்சுவார்கள்” எனக் கூறுகின்றது.

மேலும் அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் பற்றி கூறும்போது, ”அது நரகத்தின் பாதை” என வர்ணிக்கின்றது. பார்க்க: அல் அஃராப்: 79.

பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் ‘கிதாபுல் இல்ம்’ எனும் பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக ‘கிதாபுத்திப்பி’ (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புகாரியில் மாத்திரம் ‘கிதாபுல் இல்ம்’ எனும் அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன.

அல்குர்ஆன் விஞ்ஞான, கைத்தொழில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பதை காணமுடிகின்றது. இன்றைய கைத்தொழில் முன்னேற்றத்துக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ள இரும்பைத் தலைப்பாகக் கொண்ட ஓர் அத்தியாயமே அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. இவ்வத்தியாயம் இரும்பின் சிவில், இராணுவ பயன்பாடுகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. பார்க்க (57:25)

மேலும் இறைத் தூதர்களில் பெரும்பாலானோரும் பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதை வரலாறு உறுதி செய்கின்றது. உதாரணமாக, நபி நூஹ் கப்பல் கட்டும் தொழிலை அறிந்து இருந்தார்;; நபிமார்களான இப்றாஹீமும், இஸ்மாயீலும் கட்டட நிர்மாணிகளாக விளங்கி கஃபாவைக் கட்டினார்; நபி தாவூத் இரும்பை உருக்கி கவசங்கள் செய்யும் திறனைப் பெற்றிருந்தார். நபி ஸுலைமானோ ஜின்களின் உதவியுடன் அதிசயிக்கத்தக்க பல பணிகளை மேற்கொண்டமை பற்றி அல்குர்ஆன் விளக்குகின்றது.

அறிவு ஆராய்ச்சிக்கும், அறிவியல் அணுகுமுறைக்கும் நபி முகம்மது (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்த பாங்கினை அன்னாரின் சீறாவில் (வாழ்க்கை முறையில்) காணமுடிகின்றது.

‘திட்டமிடல்’ என்பது ஒரு பிரதான அறிவியல் அணுகுமுறை ஆகும். அல்குர்ஆன் நபி யூஸுப் (அலை) அவர்களின் பதினைந்தாண்டு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அத்திட்டத்தின் காரணமாக எவ்வாறு அன்று எகிப்தும் அதைச் சூழவிருந்த பிரதேசங்களும் பேரழிவிலிருந்தும், பெரும் பஞ்சத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. நபி (ஸல்) அவர்களும் தனது பிரசார வாழ்க்கையில் எவ்வாறு நுணுக்கமான திட்டங்களைத்தீட்டி செயற்பட்டார்கள் என்பதைக் காண முடிகின்றது. முதலாம் ஹிஜ்ரத், இரண்டாம் ஹிஜ்ரத், யுத்தங்கள் முதலியன இதற்கு சிறந்த சான்றாதாரங்களாகும்.

‘கணக்கெடுப்பு’ என்பது மற்றுமோர் அறிவியல் அணுகுமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்று சில நாட்களிலேயே அங்குள்ள முஸ்லிம்களின் சனத்தொகையை கணக்கெடுக்குமாறு பணித்தார்கள். அவர்களின் தொகை அப்போது 1500 ஆக இருந்தது. (புகாரி).

இன்னுமோர் அறிவியல் அணுகுமுறையான ‘பரிசோதனை’ முறையை ஏற்று அங்கீகரித்தார்கள். ஈத்த மர மகரந்த மணிச் சேர்க்கைச் சம்பவம் இதற்குச் சான்றாகும். (முஸ்லிம்)

அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கைகள், விழுமியங்கள், பெறுமானங்கள், சட்ட திட்டங்கள் முதலானவற்றுடன் தொடர்பற்ற உலகாயத, தொழில்நுட்ப விவகாரங்களில் அந்நியரின் உதவியை நாடுதல், ஆலோசனைகளைப் பெறல் ஆகியன பிழையானவையல்ல என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தன் செயற்பாடுகள் மூலம் எடுத்துக்காட்டி யுள்ளார்கள். பாரசீகரின் வழிமுறையான யுத்தத்தின் போது அகழி வெட்டும் உத்தியை சல்மான் (றழி) அவர்கள் மூலம் அறிந்து, ‘அஹ்ஸாப்’ யுத்தத்தின் போது செயற்படுத்தியமை, குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதற்காக ஓர் உரோம தச்சன் செய்து கொடுத்த மிம்பரை பயன்படுத்தியமை முதலியன இதற்கான சில உதாரணங்களாகும்.

அல்குர்ஆனினதும், சுன்னாவினதும் இத்தகைய போதனைகளாலும் வழி காட்டல்களாலும் உந்தப்பட்டே ஆரம்ப கால முஸ்லிம்கள் அறிவாராய்ச்சித் துறைக்கும், பல கண்டு பிடிப்புகளுக்கும் முன்னோடிகளாக அமைந்தனர். ஐரோப்பா இருளில் சூழ்ந்திருந்த மத்திய காலப் பிரிவில் இஸ்லாமிய உலகில் அறிவுத்தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் அறிவின் அனைத்துத் துறைகளுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்து கலாநிலையங்கள், நூலகங்கள், ஆய்வு கூடங்கள், அவதான நிலையங்கள் என்பவற்றை கட்டியெழுப்பி உலகுக்கு அறிவொளி பரப்பினர்.

முஸ்லிம் ஸ்பெயினுக்கூடாகவே ஐரோப்பா அறிவு ஆராய்ச்சியையும், கலாசாரப் பண்பாட்டையும் பெற்றுக்கொண்டது என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். இது பற்றி கீழைக்தேய வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். (P.K. Hitti)

‘முஸ்லிம் ஸ்பெய்ன் மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் மிக ஒளிமிக்க அத்தியாயங்களில் ஒன்றை உருவாக்கியது. கி.பி. 8ம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கும் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலப் பிரிவில் உலகம் முழுவதும் அறபு பேசும் மக்களே கலாசாரத்தினதும், நாகரிகத்தினதும் ஒளியை ஏந்துகின்றனர். அவர்கள் மூலமாகவே புராதன அறிவியலும் தத்துவமும் அழியாது பாதுகாக்கப்பட்டு, அவர்களது பங்களிப்புக்களும் இணைந்து மேற்கு ஐரோப்பாவைச் சென்றடைந்தது. இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.’

ஜோர்ஜ் ஸார்டன் (George Sarton) என்ற மேற்கத்திய அறிஞர் ‘அறிவியல் வரலாற்றுக்கு ஓர் அறிமுகம்’ எனும் நூலில், மத்திய காலப் பிரிவில் அறபு முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பைப் பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றார். இக்காலப் பிரிவில் பெரும்பாலான மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான அறிவியல் ஆய்வுகள் அக்கால அறிவியல் மொழியாக விளங்கிய அறபு மொழியிலேயே அமைந்தன என அவர் கூறுகின்றார். மேற்கத்திய உலகம் ஆழமான அறிவைப் பெற விரும்பிய போதும் புராதன சிந்தனையோடு அதன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள முற்பட்டபோதும், முதலில் அது கிரேக்க, மூலதாரங்களை நோக்கியன்றி அறபு மூலதாரங்களை நோக்கியே திரும்பியது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பாவில் அறிவியல் துறையில் பரிசோதனை முறையை அறிமுகப் படுத்தியவராகக் கருதப்படும் ரோஜர் பேக்கன் (Roger Bacon) உண்மையில் அதற்கான வழிகாட்டல்களை முஸ்லிம்களிடமிருந்தே பெற்றுக் கொண்டார். ஸ்பெயினுக்கு வந்த அவர், அறபு அறிவியலை ஆழமாகக் கற்றுத் தேர்ந்ததனாலேயே ஐரோப்பாவுக்கு அவரால் அறிவுப் பணி செய்ய முடிந்தது.

ஓளியியல் துறையின் முன்னோடியான அல்ஹஸன் இப்னுல் ஹைஸம் உடைய கருத்துக்கள் அண்மைக் காலம் வரை ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்தின. அத்தூஸியுடைய கணிதம் தொடர்பான ஆய்வுகள் ஐரோப்பாவில் நீண்டகாலம் மேலோங்கி இருந்தன. இப்னு ஸீனாவின் ‘அல்கானூன்’ எனும் மருத்துவ நூல் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் 17ஆம் நூற்றாண்டு வரை மருத்துவத்துறைக்கான பிரதான மூலதார நூலாக விளங்கியது.

எனவே மேற்கண்ட விளக்கங்களிலிருந்து இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதுமல்ல் அறிவியல் ஆராய்ச்சிகளோ, நவீன கண்டு பிடிப்புகளோ அதற்கு அச்சுறுத்தலுமல்ல என்பது தெளிவாகின்றது. மாறாக, இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அதன் கோட்பாடும் நடைமுறையும் வரலாறும் அறிவு முன்னேற்றத்திற்கு அது அளிக்கும் முக்கியத்துவத்திற்கு சான்று பகர்கின்றன.

இஸ்லாத்தில் மார்க்கம் என்பது அறிவாகும். ஏனெனில் இஸ்லாமிய நம்பிக்கையானது சிந்திப்பதை, சீர்தூக்கிப் பார்ப்பதை வேண்டி நிற்பதுடன் குருட்டுப் பின்பற்றுதலை மறுத்து நிற்கிறது. மறுபக்கத்தில் இஸ்லாத்தில் அறிவென்பது மார்க்கமாகும். ஏனெனில் அது அறிவு தேடுவதை முஸ்லிமான ஆண் பெண்ணுக்கு விதியாக்கியிருக்கிறது. மார்க்க அறிவாயினும் உலக அறிவாயினும் பயனுள்ள, ஆக்க பூர்வமான அறிவைத் தேடுவதையும் அதில் ஈடுபடுவதையும் இபாதத்தாகவும், ஜிஹாதாகவும் கருதுகின்றது.

இஸ்லாத்தில் மதத்துக்கும் அறிவுக்குமிடையிலான இறுக்கமான உறவை மேற்குலக அறிஞரான ஹோர்டன் என்பார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘இஸ்லாத்தில் மட்டுமே மதமும் அறிவியலும் இணைந்திருப்பதைக் காணமுடியும். அதுவே இவ்விரண்டுக்குமிடையில் இணக்கம் காணும் ஒரே சமயமாகும்.’

தற்கால விஞ்ஞான, தொழில் நுட்ப முன்னேற்றத்தை இஸ்லாம் வரவேற்ற போதிலும் இம்முன்னேற்றம் மதச்சார்பற்றதும் சடரீதியிலானதுமான போக்கைக் கொண்டிருப்பதை அது கண்டிக்கிறது. இன்றைய அறிவியல் துறையானது இறை நம்பிக்கையையும் ஆன்மீக விழுமியங்களையும் புறக்கணிப்பதனாலேயே அது ஆக்கத்துக்குப் பதிலாக அழிவை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இறை விசுவாசத்துடன் அமைந்த அறிவியல் முன்னேற்றத்தையே இஸ்லாம் வலியுறுத்தி நிற்கின்றது. பல திறன்களையும் அபார ஆற்றல்களையும் பெற்றிருந்த நபி ஸுலைமான் (அலை) அவற்றை வைத்து அத்துமீறலிலோ, அட்டகாசத்திலோ ஈடுபடவில்லை; பெருமையோ இறுமாப்போ கொள்ளவில்லை. மாறாக ‘இது எனது இறைவன் எனக்களித்த அருளாகும்’ என்று பணிவுடன் பகர்ந்தார்கள்.

துல்கர்ணைன் (அலை) அவர்கள் தனது அபார அறிவியல் ஆற்றலைப் பிரயோகித்து ஒரு பெருமதிலைக் கட்டிய போது மக்கள் அதற்காக அவருக்கு சன்மானம் வழங்க முற்பட்ட போதும் மிகவும் அடக்கமாக ‘இது எனது இறைவன் எனக்கு அளித்த அருளாகும். எனது இறைவனின் குறித்த வாக்களிக்கப்பட்ட நாள் வந்து விடும் போது இந்த மதில் தவிடு பொடியாகிவிடும்’ என்றார்கள்.

இத்தகைய ஈமானிய உள்ளம் படைத்தவர்களிடம் அறிவும், ஆராய்ச்சியும் இருக்கின்ற போதே உலகம், அறிவியலால் உன்னதமான பயனைப் பெற முடியும்; அறிவியல் ஆக்கத்திற்கும், மனித வாழ்வின் சுபீட்சத்திற்கும் வழிவகுக்க முடியும். அதற்காக சிந்திப்போம்; செயல்படுவோம்.

குர்ஆனில் கூறப்பட்டவை அனைத்தும் நடைபெறுகின்றன


அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமாக அமைந்திருப்பது திருக்குர்ஆனே. நவீன விஞ்ஞானத்தோடு திருக்குர்ஆன் ஒத்துப்போகிறதா முரண்படுகிறதா என்பதை ஆராய்ந்தால்,

மகத்துவமிக்க திருக்குர்ஆன் ஓர் விஞ்ஞான நூலல்ல. அது ஒரு மெய்ஞ்ஞான நூல். அத்தாட்சிகளை உள்ளடக்கிய நூல். அதாவது திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் ஒருவர் அதை எப்படி அணுகினாலும் சரியான காரண காரியங்களை வைத்து விளக்கங்களைப் பெற்ற பிறகு எந்தவொரு மனிதரும் திருக்குர்ஆனுடைய எந்தவொரு வசனமும் நவீன விஞ்ஞானக் கோட்பாட்டிற்கு முரண்படுவதாக நிரூபிக்க முடியாது.

திருக்குர்ஆன் விண்ணியலைப் பற்றித் தெளிவாக விளங்குகிறது. விஞ்ஞானிகள், விண்ணியல் வல்லுனர்கள் இந்த பூமியும், பிரபஞ்சமும் எப்படிப் படைக்கப்பட்டது என்பதை விளக்க முயற்சித்தனர்.

அதைப் பெரும் வெடிப்பு என்றும், ஆரம்பத்தில் ஒரேயொரு நட்சத்திரம் இருந்ததாகவும், அதுவே பெரும் வெடிப்பினால் பிளவுபட்டு விலகியதாகவும், அதுவே தனித்தனி நட்சத்திரங்ளும், நட்சத்திரக் கூட்டமும், சூரியனும் இந்த பூமியும் பிறக்கக் காரணம் என்றார்கள். இந்தத் தகவலை ஒரு சிப்பிக்குள் அடக்கியிருக்கிறது திருக்குர்ஆன்.

‘நிச்சயமாக வானங்களும் பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் பார்க்கவில்லையா?’ (சூறா அல் அன்பியா அத் 21 : வச 30) இந்தத் தகவல் நமக்கு அண்மைக் காலத்தில் தான் தெரிய வந்து. குர்ஆன் இதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னே சொல்லிவிட்டது.

‘இன்னும் அவனே இரவையும் பகலையும்; சூரியனையும் சந்திரனையும் படைத்தான்; வானத்தில் தத்தமக்குரிய வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன’ (சூறா அல் அன்பியா அத் 21 : வச 33) இந்த வசனத்தை நவீன விஞ்ஞானம் உறுதி செய்கிறது.

விண்ணில் உள்ளவற்றைக் குறிப்பிடுகையில் அவை தன் சொந்த அச்சில் சுழல்கிறது எனலாம். ஆகவே குர்ஆன், சந்திரனும் சூரியனும் சுற்றுவதாகவும் தனது சொந்த அச்சில் சுழல்வதாகவும் சொல்கிறது.

நீர் சுழற்சி பற்றியும் திருக்குர்ஆன் மிகவும் விபரமாகப் பேசுகிறது. திருக்குர்ஆன் சொல்கிறது. ‘திரும்பத் திரும்பப் பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக (சூறா அத்தாரிக் அத் 86 : வச 11) அதாவது நீராவி மாற்றம். பூமியின் மேல் தட்டான ஓஸோன் படலம் நீரை மட்டும் மழையாகத் திருப்பித் தருவதில்லை. அவை மனிதனுக்கு மிக இன்றியாமையாதது என்று அறிவோம்.

அது தண்ணீரை மட்டும் அனுப்பவில்லை என்பது இன்று நமக்குத்தெரிய வந்துள்ளது. வானம் இங்கிருந்து வாங்கிய ஒளியை ஒளி அலைகளைத் திருப்பித் தருகின்றது. அதே போன்று சில தீய கதிர்களும் பூமியை நோக்கி வருவது தடுக்கப்படுகிறது.

உதாரணமாக சூரிய ஒளியோடு வருகின்ற புற ஊதாக் கதிர்களால் சூரிய ஒளி அயன மண்டலத்தால் உறிஞ்சப்படுகின்றது. இது நடைபெறவில்லையெனில் பூமியில் உயிர் வாழ்வது முடியாமல் ஆகிவிடும். ஆகவே அல்லாஹ் ‘ரஜ்ஜுஸ்ஸமா’ திருப்பித்தரும் வானம் என்று சொல்கிறான்.

‘நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்துப்பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்த்து அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவிலிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிaர்.’ (சூறா அந்நூர் அத். 24 : வச 43) இன்னும் பல இடங்களில் திருக்குர்ஆனானது நீர் சுழற்சி பற்றி விரிவாக விளக்கம் தருகிறது.

மண்ணியல் சம்பந்தமாக மண்ணியல் விற்பன்னர்கள் ‘பூமியின் குறுக்கு வாக்கு அரைவட்டத் தூரம் 3750 மைல்கள் உள்ளே செல்வதாக’ சொல்கிறார்கள். ஆழத்தில் இருக்கின்ற தட்டுகள் சூடாகவும் வெறும் நிலையிலும் இருக்கும். அங்கு உயிர் வாழ்வது முடியாது. மேலும் நாம் உயிர் வாழும் பூமியின் மேற்பகுதி உறுதியாக நிற்பதற்கு மலைத் தொடர்களே காரணம்.

திருக்குர்ஆன் சொல்கிறது ‘நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’ (சூறா அந்நபா அத் 78 : வச. 6, 7) நவீன மண்ணியல் மலைகளுக்கு ஆழமான வேர்கள் இருப்பதாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் கண்டுபிடித்தது.

மேலும் ஒத்த மலையின் ஒரு சிறிய பகுதியைத் தான் நாம் பூமியின் மேற்பகுதியில் பார்க்கிறோம். எஞ்சிய பெரும் பகுதி பூமியினுள்ளே ஆழத்தில் உள்ளது. திருக்குர்ஆன் சொல்கிறது ‘மலைகளை நாம் பூமியின் மேல் உறுதியாக நிறுத்தி வைத்திருக்கிறோம்’ (சூறா அந்நாஜிஆத் அத். 79 : வச 32) இன்று முன்னேற்றம் கண்டுள்ள நவீன மண்ணியல் விஞ்ஞானத்தில் மண்ணியலாளர்கள் நமக்கு மலைகள் பூமியை உறுதியாக நிறுத்துவதாகச் சொல்கிறார்கள்.

திருக்குர்ஆன் ஆக்காலகட்டத்தில் இருந்த அறபு மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மட்டுமன்றி முழு மனித இனத்துக்காகவும் அருளப்பட்டது.

யுக முடிவு நாள் வரைக்கும் வழி காட்டுவதற்கு வந்ததே புனித மறையாம் அல்குர்ஆன். திருக்குர்ஆன் பகர்கிறது, ‘மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’ (சூறா அல் பகறா அத். 2 : வச 185) ஆகவே திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் அர்த்தத்தை அந்தக் காலத்துக்கு மட்டுமே என்று வரையறுக்க முடியாது அது எல்லாக காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றது.

‘நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணிலிருந்து படைத்தோம்’ ‘பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.’ ‘பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம் : பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப்பிண்மாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம் : பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை +லிவித்தோம். பின் நாம் அதனை மனிதனாகச் செய்தோம். இவ்வாறு படைத்தவனான அல்லாஹ் மிகப்பெரும் பாக்கியமுடையவன். மிக அழகான படைப்பாளன்.’ (சூறா முஃமினுன் அத் 23 : வச 12 – 14)

திருக்குர்ஆனின் இம்மூன்று வசனங்களும் கருவாக்கக் கட்டங்களை தெளிவாக விளங்குகின்து. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ‘அலகா’ எனும் சொல்லிற்கு 3 அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று தொத்திக் கொண்டிருக்கும் ஒரு பொருள். அதாவது துவக்கத்தில் கரு கருவரைச் சுவரில் ஒட்டிக்கொண்டு தொடர்ந்து அப்படியே இருக்கின்றது. இரண்டாவது அட்டை போன்றது. அதாவது அந்தக் கரு துவக்க நிலைகளில் அட்டைப் போல் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது தாயிடம் இருந்து இரத்தத்தை உறிஞ்சி அட்டையைப் போலவே இயங்குகின்றது. மூன்றாவது இரத்தக் கட்டி.

முன்னேறியுள்ள கருவியல் விஞ்ஞானத்தில் கருவனாது அட்டை போன்று காட்சியளிப்பது மட்டுமல்லாமல் இரத்தக் கட்டியாகவும் காட்சியளிப்பதாகக் கூறுகிறது. ஏனென்றால் ஆரம்பக் கட்டத்தில் கருவின் 3வது வாரத்தில் இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறைந்து விடுகிறது. மேலும் இரத்த ஓட்டம் இருப்பதில்லை.

அது பிறகு தான் இடம்பெறுகிறது ஆகவே இந்தக் கட்டத்தில் கட்டியின் வடிவத்தில் தான் கரு இருக்கும். திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கருவாக்கக் கட்டங்கள் தோற்றத்தின் அடிப்படையிலேயே சொல்லப்பட்டிருகின்றன. 7வது வாரத்தின் முடிவில் தான் அந்தக் கரு மனித தோற்றத்தைப் பெறுகிறது. அதன் பிறகு அலும்புகள் உருவாகின்றன. இன்றைய கருவியல் 42 ஆவது நாட்களின் பின்னர் எலும்புகள் உருவாகி விட்டதாகச் சொல்கிறது. இது சூர்ஆனுக்கு ஒத்ததாக இருக்கின்றது.

இதற்கு முன்னர் மருத்துவர்கள் மூளையிலிருந்து உருவாகின்ற உணர்வே ‘வலி’ என்று நம்பி வந்தார்கள். இன்று தெரிய வந்துள்ளது மூளையைத் தவிர தோலில் உள்ள வலி உணர்வுகள் வலியை உணரக் காரணமாக இருக்கின்றன. அதை நாம் வலி உணர்வுகள் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் சொல்கிறது.

‘யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்ல (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்’ (சூறா அன்னிஸாவு அத் 4 : வச – 56) தோலுக்கு வலியை உணரக் கூடிய சக்தி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இது சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் குர்ஆன் வலி உணர்வுகள் என்கின்றது.

எனவே உடன்பாட்டு முறையில் அல்லது முரண்பாட்டு முறையில் குர்ஆனை அணுகினாலும் அறிவு பூர்வமாகப் பார்த்தால் குர்ஆனின் ஒரு வசனம் கூட முரண்பாடாகவோ, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்துக்கு எதிரானதாகவோ இருக்காது. இன்றைய நவீன விஞ்ஞானம் அண்மைக் காலத்தில் தான் அனைத்து விதமான விஞ்ஞானக் கோட்பாடுகளையும் கண்டுபிடித்தது.

கண்டு பிடித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் இறைவனால் மாபெரும் அருளாக, முழு மனித சமூகத்திற்கும் வழிகாட்டியாக இறக்கியருளப்பெற்ற திருக்குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அவை அனைத்தும் கூறப்பட்டுவிட்டன. ஆகவே திருக்குர்ஆன் தான் அற்புதங்களுக்கெல்லாம் மாபெரும் அற்புதமாக விளங்குகின்ற மெய்ஞ்ஞான நூல் என்றால் அது மிகையாகாது…

நல்வழிகாட்டி அல்குர்ஆன்


இறைவனின் உன்னத படைப்பினமாகிய மனித வாழ்வின் சகல துறைகளுக்குமான நல்வழிகாட்டல்களை, வழங்கி நிற்கும் தூய அல்லாஹ்வின் வாக்கும் தீர்ப்புமான புனித அல்-குர்ஆனை மக்கள் சமுதாயத்தினருக்கு அருட்கொடையாக அருளினான்.
மகத்துவமும், தனித்துவமுமிக்க அருள் மறை, ஏனைய அனைத்து மதங்களினதும், வேத நூல்களையும் விட நித்தியமானதாகவும், மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லாததாகவும், தனிப்பண்புகளுடனும், சிறப்பாகவும் திகழ்கின்றது.
இறையருள் சுரப்பதும், பார்க்கியமுமிக்கதான அருள் மறையை, சிந்தனையில் ஏற்று அநுதினம் ஓதி உணர்ந்து, இன்மை, மறுமை, இரண்டிற்குமான நன்களைச் சேர்ப்பது போன்று மாண்பு மிகு அல்-குர்ஆனின் புனிதம் பேணி அதற்கான சங்கையை அளிப்பதானது அதன் உரிமையாளனும், ஏக வல்ல நாயனுமான அல்லாஹ்வை சங்கை, செய்வதாக அமைகின்றது.
அருள் மறை கூறும், சன்மார்க்க சட்டதிட்டங்களுக்கமைய வாழ்வை அமைத்துக்கொள்வது, அல்-குர்ஆனுக்குச் செய்யும் யதார்த்தமான சங்கையாக இருந்த போதிலும் அதன் முதற்படியாக அதற்குரிய வெளிப்படையான மரியாதை அளிப்பது புனிதம் காப்பது, சிறப்புப் பேணுவது, தூய்மையைக் கையாள்வது, உண்மை விசுவாசிகளின் பொறுப்பும் கட்டாயக் கடமையுமாகின்றது.
புனித அல்-குர்ஆனையையே அச்சொட்டாகக் கொண்டு நல்வாழ்வு வாழ்ந்து நல்வழி காட்டிச் சென்ற அல்லாஹ்வின் தூதர், நபி முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனின் மாண்பினைப் பேணி சங்கை செய்யுமாறு, தன் உம்மத்தினருக்கு வலியுறுத்தி உபதேசித்துள்ளார்கள். அல்-குர்ஆனும் இதனையே விளக்கி நிற்கின்றது.
சுத்தமான நிலையில் உள்ளவர்களன்றி அதனைத் தொடக்கூடாது (56:79) குர்ஆன் தொடர்பான சில சட்ட திட்டங்கள்.
குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாள், பத்திரங்கள் போன்றவற்றை வேண்டுமென்று நஜீஸாக்குவது, ஹராமாகும். அதன் மீது நஜீஸ் பட்டால் உடனே சுத்தப்படுத்தி விட வேண்டும். தாமதித்தல் கூடாது. அதனை சுத்தப்படுத்தும் வேளை, மனிதனின் கைகள், அதன் மீது படுமாக இருப்பின் அதற்கான முன்கூட்டி வுளு செய்து கொள்ள வேண்டும். வுளு செய்து நஜீஸை நீக்கத்தாமதிப்பதாக இருப்பின் அதனால் குர்ஆனின் சங்கை மீறப்படுமாக இருப்பின், வுளு இல்லாமே நஜீஸை நீக்க வேண்டும்.
நஜீஸான இரத்தம், மலம், சலம், இறந்த பிராணி போன்ற வற்றின் மீது குர்ஆனை வைப்பது ஹராமாகும். அவை காய்ந்திருப்பினும் சரியே குறித்த நஜீஸ்களின் மீது வைக்கப்பட்ட குர்ஆனை உடனே எடுப்பது வாஜிபாகும்.
நஜீஸான கைகளால் குர்ஆனின் வசனங்களை எழுதுவது ஹராமாகும்.
குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டதும், அல்லாஹ்வின் திருநாமங்கள், இறை நேசர்களின் பெயர்கள் எழுதப்பட்டதுமான தாள்கள், அட்டைகள், மலசல கூடத்தில் வீழ்ந்து கிடந்தால் அவைகளை எடுத்துச் சுத்தப்படுத்துவது வாஜிபாகும். அதற்காக செலவு செய்ய நேரிடினும் சரியே! குறித்த பொருட்களை மலசல கூடத்திலிருந்து எடுத்து சுத்தப்படுத்தும் நிலையில் அவை இல்லாமல் உக்கிப்போயிருந்தால். அந்த மலசல கூடத்தைப் பயன்படுத்தக்கூடாது.
குர்ஆன் வசனங்கள் கொண்ட செய்தித்தாள்கள், சஞ்சிகைகளை குப்பை கூளங்களில் வீசக்கூடாது.
பாவிக்க முடியாத நிலையிலுள்ள குர்ஆன் பிரதிகளை அல்லது தாள்களை நெருப்பிலிட்டு எரிப்பது ஹராமாகும். ஒன்றில் அவைகளை சங்கையான மண்ணில் புதைத்து விட வேண்டும். அல்லது அவைகளை, ஓடக்கூடிய நீரில் அமிழ்த்தி நிரோட்டத்தில் கரைந்து போகும் படி செய்ய வேண்டும். அல்லது அப்பிரதிகளைப் புதுமைப்படுத்த வேண்டும்.
காபிரான மனிதனின் மேனி குர்ஆனில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்படும் பட்சத்தில் அதனை உடனே எடுத்துவிட வேண்டும். ஒரு காபிரான மனிதனின் கைகளில் குர்ஆனைக் கொடுப்பதால் அதன் சங்கைக்கு பங்கம் ஏற்படுமாக இருந்தால், அதனை கொடுப்பது ஹராமாகும். எனினும் குர்ஆனைப்படித்து விளங்கிக் கொள்ள விரும்பும் காபிரிடம் கொடுப்பதில் தவறில்லை.
குர்ஆனிய எழுத்துக்கள், வசனங்கள், வரையப்பட்ட கட்டடங்களை உடைக்க நேர்ந்தால், அவ்வெழுத்துக்கள், வசனங்கள் வரையப்பட்டிருந்த பகுதியை மண்ணில் புதைத்து விட வேண்டும். அல்லது நீரோடையில் கரைத்து விட வேண்டும்.
வேண்டுமென்று குர்ஆன் மீது பொய்ச்சத்தியம் செய்பவர் தெளபாச் செய்ய வேண்டும்.
முஸ்லிமான ஒருவர் கோபத்தின் காரணமாக தன் சுய உணர்வற்று, குர்ஆனை, அவமதித்தால், அதற்காக அவர் தெளபாச் செய்ய வேண்டும். அவர் உண்மையாகவே, அதனை மேற்கொண்டால் அது நுபுவத்தை மறுத்ததற்குச் சமமாகும். அவர் முர்தத்தாவார்.
குர்ஆனுக்குப் பகிரங்கமாக அவமரியாதை செய்வோரை நன்மையை ஏவி, தீமையைத்தடுக்கும், படி முறைகளை கையாண்டு எச்சரிக்க வேண்டும். (தவ்bஹுல் மஸாயில்:- நன்றி ‘விலாயத்’)
முஃமின்களே! அல்லாஹ்வின் திருவசனங்களை (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், இன்னும் அவை பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் அப்பொழுது அது அல்லாத (வேறு) பேச்சில், அவர்கள் ஈடுபடும் வரை அவர்களுடன் நீங்கள் உட்கார வேண்டாம்” என்று உங்கள் மீது (இவ்) வேதத்தில் திட்டமாக, (அல்லாஹ்) இறக்கி வைத்துள்ளான். (அவ்வாறு அவர்களுடன் நீங்கள் உட்கார்ந்தால்) அப்பொழுது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் நிச்சயமாக அல்லாஹ் முனாபிக்குள் காபிர்கள் அனைவரையுமே நரகத்தில் ஒன்று சேர்க்கிறவனாக இருக்கின்றான். (4:140)
அல்-குர்ஆன் பிரதியையோ, வசனங்கள் எழுதப்பட்ட தாள்கள் அட்டைகளை மலசலகூடம் செல்லும் பொழுது ஒருவர் தன்னிடம் வைத்திருக்கக் கூடாது. குர்ஆன் புனித வசனங்கள் ஆயத்துக்கள் எழுதப்பட்ட பொறிக்கப்பட்ட உலோகத்தட்டுகள், தாயத்துக்குள், மாலைகள் அணிந்து செல்வதுடன், இயற்கைக் கடமைகளை நிறைவேற்றும் போதும் அணிந்திருப்பதும் கூடாது.
வுளு இல்லாத ஒருவர் குளிப்பு கடமையான ஒருவர் குர்ஆனைத் தொடுவதோ அல்லது தனியாகச் சுமப்பதோ ஹராமாகும். ஆனால் அரபியில் அல்லது வேறு மொழியில், மொழி பெயர்ப்பாகியுள்ள குர்ஆன் பிரதிகளை தொடுவதும், தன்னிடம் வைத்திருப்பதும் பாவமன்று. இவ்வாறு வேறு புத்தகங்கள், பொருட்களுடன், குர்ஆன் இருக்குமாயின் அப்பொழுது வுளு இல்லாதவரும், ஜுனூபாளியும் தொடுவதும், சுமப்பதும் அனுமதிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வுளுவுடன் இருந்த போதிலும் இல்லாத நிலையிலும் குர்ஆனை ஓதினார்கள், என ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. எனவே வுளு இல்லாத நிலையில் உள்ளவர்களும் குர்ஆனை மனப்பாடமாக, அல்லது நேரடியாக கையால், தொடாது, தூய்மையான தடி, அட்டைத்துண்டு கொண்டு தாள்களை புரட்டி ஓதுவது ஆகுமானதாகும்.
குளிப்பது கடமையாளர்கள் குர்ஆனைத் தொடுவதும், அதைப்பார்த்து கொண்டே மானப்பாடமாகவோ ஓதுவது ஹராமாகும். என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். நபியவர்கள் ஜுனூபாளியாக இருந்த போது மட்டுமே, அல்-குர்ஆனை ஓதவில்லை என அலி (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். எனவே ஜுனூபாக உள்ளவர்கள் குளித்த அல்லது தயம்மம் செய்து சுத்தமாகிய நிலையில் மட்டுமே குர்ஆனை ஓதவேண்டும்.
ஹைழ் நிபாஸ் (மாதவிடாய் பிள்ளைப்பேறு) நிலையிலுள்ள பெண்களில் குர்ஆனைக் கற்றுக்கொள்வோரும், கற்றுக்கொடுப்போரும், குர்ஆனை மட்டும் தனியாகத் தொடாது பார்த்து ஓதுவது கூடுமென சிலர் கருதுகின்றனர். என ஷைக் பின் பாஸ், அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள். குர்ஆனையோ அதன் ஆயத்துகளையோ, பரிகாசப்படுத்துவதும், ஓதுவதும் அவற்றை முஸ்லிமான அல்லது காபிரான எவரும் அனுமதிக்ககூடிய முறையில் அவற்றை விட்டு வைப்பதும் ஹராமாகும்.