Category Archives: prayer

ரமழானின் பயிற்சியை தொடருவோம்


புனித ரமழான் எம்மை விட்டு இன்னும் ஓரிரு தினங்களில் விடை பெறப் போகின்றது. அது நம்மிடமிருந்து விடை பெற்றாலும் இது ஒரு மாத காலமாக எமக்கு வழங்கிய பயிற்சிகள், படிப்பினைகள் எம்மை விட்டும் மறையக் கூடாது.

அது எமது வாழ்வில் தொடர வேண்டும். புனித ரமழானில் நோன்பு நோற்று, இரவில் தராவீஹ் தொழுது, அல்குர்ஆன் ஓதி ஏனைய சுன்னத்தான, நபிலான வணக்க வழிபாடுகளைக் கொண்டு எமது ரமழானை சிறப்பித்தோம்.

இந்தப் பயிற்சிகள் ஏனைய மாதங்களிலும் நம்மிடம் வரவேண்டும். அதுவின்றி புனித ரமழான் முடிந்த கையோடு அதில் நாம் செய்த அனைத்து அமல்களையும் உதறித் தள்ளிவிடக் கூடாது. ரமழான் முழு வாழ்வுக்குமான பயிற்சியை எமக்கு வழங்கி விட்டுச் செல்கின்றது என்பது தான் உண்மை.

புனித ரமழானை சிறப்பாக கழித்த நாம் நோன்புப் பெருநாள் இரவிலோ, அல்லது பெருநாள் தினத்தன்றோ வீண் களியாட்டங்களிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபடக் கூடாது. மாறாக அல்லாஹ் வுக்கு பொருத்தமான நல்ல காரியங்களில் இத்தினத்தை கழிக்க வேண்டும்.

ஒரு மாத கால இந்த மாபெரும் ஆத்மீக பயிற்சியின் பேறாக மலரவுள்ள “ஈதுல் பித்ர்” ஒவ்வொரு விசுவாசியும் கடமையை நிறைவேற்றிய களிப்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்தும் தினமாகவும், இந்த மகத்தான வாய்ப்பை தங்களுக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாகவும் விளங்குகின்றன. இந்த ஈத் பெருநாள் தொழுகையானது முஸ்லிம்களின் சகோதரக் கட்டுக்கோப்புக்கு வலுவூட்டுகின்றது.

இபாதத்களின் இதயம் போன்றது தொழுகை


சாந்தி மார்க்கமாம் இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கலிமா என்ற பிரதான நடுக்கம்பத்தில், தொழுகை, ஸக்காத், நோன்பு, ஹஜ்ஜு எனும் நான்கு தூண்களின் துணை கொண்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்லாத்தின் இரண்டாம் கடமையாகிய தொழுகை இபாதத்களின் இதயம் போன்றதாகும். எல்லாமே நீதான் என்று அல்லாஹ்வையும், அவன் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களையும் இதய சுத்தியோடு ஏற்றுக்கொள்ளும் கலிமாவை மொழிதலோடு இஸ்லாமியக் கட்டடத்துள் நுழைந்த எவருக்கும் அடுத்த ஸ்தானத்தில் உள்ள தொழுகை கட்டாய கடமை ஆக்கப்பட்டுள்ளது.
இதில் ஏழை, பணக்காரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன், அரசன், ஆண்டி என்ற எதுவித வேறுபாடுமின்றி தோளோடு தோள் சேர்ந்து தொழுவதில் யாருக்கும் எப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை. இந்த மேலான வணக்கம் உத்தம நபி (ஸல்) அவர்களின் விண்ணுலக யாத்திரையின் போது அல்லாஹ்வால் ஐம்பது “வக்தா”க வழங்கப்பட்டு அது உம்மத்தின் நன்மை கருதி ஐந்து நேரத் தொழுகையாக அமானிதப் பொருளாக நம்முன் தரப்பட்டுள்ளது.
மறுமையின் விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டு ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் முதற் கேள்வி தொழுகை பற்றியதாகவே அமையும். இது சீராக அமைந்தால்தான் ஏனைய வணக்கங்களும் சீராக அமையும், இன்றேல், எதிர்மாற்றமான துர்ப்பாக்கிய நிலைக்குள் ஆளாக வேண்டிய துரதிர்ஷ்ட நிலைதான் ஏற்படும்.
இதனால் தான் கண்மணியான நாயகம் (ஸல்) அவர்கள் எனது கண் குளிர்ச்சி தொழுகையில்தான் உள்ளது என நவின்றார்கள். தொழுகைக்கு முன் சுத்தம் எனும் “வுழு” அதன் திறவுகோல் ஆகவும், சொர்க்கத்தைத் திறக்கும் திறவுகோல் தொழுகை எனவும் விதந்துரைக்கப்பட்டுள்ளது சிந்திக்கத்தூண்டுவதாக அமைகிறது.
றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ஒருவர் தொழுகையை அந்தந்த நேரத்தில் நல்லமுறையில் வுழூச் செய்து உள்ளச்சத்துடன் ருகூஉ, நிலை, ஸஜ்தா பேணி தொழுதால் அந்தத் தொழுகை பிரகாசிக்கும் ஒரு சக்தியாக மாறி “நீ, என்னைப் பாதுகாத்ததுபோல் அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக” என்று அவருக்கு “துஆ” கேட்கிறது.
இதற்கு மாற்றமாக ஒருவர் தொழுகையில் நேரம் தவறியும், நன்றாக வுழுச் செய்யாமலும், உள்ளச்சமில்லாமலும் ருகூஉ, சுஜுது ஆகியவற்றை நல்ல முறையில் பேணாமலும் தொழுது வருவாராயின் அந்தத் தொழுகை இருளடைந்து விகாரமுடையதாக மாறி நீ என்னை வீணாக்கியது போல் அல்லாஹ்வும் உன்னை வீணாக்குவானாக” என்று சாபமிடுகிறது.
பின்னர் அந்தத் தொழுகை பழைய துணியைச் சுருட்டுவதுபோல் சுருட்டப்பட்டு தொழுதவருடைய முகத்தில் வீசி எறியப்படுகிறது. (நூல் தபறானி) இது எவ்வளவு பாரதூரமான எச்சரிக்கை. இதேபோன்று வேண்டாவெறுப்புடன் அலட்சியமாக விட்டு விட்டுத் தொழுபவருக்கு வைல் எனும் நரகம் காத்திருப்பதாக அறிவிப்பும் அபாய வேட்டுக்களாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாக முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளதாவது; “தொழுகைக்கு முஅத்தினால் பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தன் காதில் விழாமலிருக்க சப்தமாக காற்றை வெளியாக்கியவாறு “சைத்தான்” புறமுதுகு காட்டி ஓடிவிடுகிறான். பிறகு பாங்கு சொல்லி முடிக்கப்பட்டதும் திரும்பி வந்து விடுகின்றான். இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடி விடுகிறான்.
இகாமத் சொல்லி முடிக்கப்பட்டதும் தொழுகையாளியின் மனதில் தேவையற்ற ஊசலாட்டத்தைப் போட திரும்பி வந்து விடுகிறான். தொழுகையாளியிடம் இன்ன இன்ன காரியத்தை நினைத்துப் பார் என்று சொல்கிறான் தொழுகையாளிக்கு தொழுகைக்கு முன் நினைவில் இல்லாத காரியங்களையெல்லாம் ஞாபகமூட்டி விடுகிறான்.
இறுதியில் தொழுகையாளிக்கு எத்தனை றக்அத்துகள் தொழுதோம் என்று கூடத் தெரியாமல் போய்விடுகிறது என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை தொழுகையின் மூலம் அனுபவ ரீதியாக அறிந்து கொள்கிறோம் அல்லவா! தொழுகையின்போது அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அவர்களை அச்சொட்டாகப் பின்பற்றி வாழ்ந்த ஸஹாபாத்தோழர்களும் எவ்வாறு நடந்திருக்கி றார்கள் என்பதற்கு எண்ணில் அடங்காத எத்தனையோ சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கூறலாம். ஆனால் பதச்சோறாக சிலவற்றை இங்கு நோக்கலாம்.
ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள், றசூல் (ஸல்) அவர்கள் தங்களின் இரு பாதங்களின் இருந்து வெடிப்பு ஏற்படும் அளவில் அதிகம் நின்று தொழுபவர்களாக இருந்தார்கள். அப்பொழுது நான் அவர்களிடம் யாறசூலுல்லாஹ்! தங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்திருந்தும் தாங்கள் ஏன் இவ்வாறு செய்கின்aர்கள்? எனக் கேட்டேன். (தொடரும்)

ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்

ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்

கேள்வி: ஜும்ஆத் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இமாம் இருக்கும் போது, தொழுகையில் வந்து சேர்ந்த ஒருவரின் நிலை என்ன? அவர் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்து ளுஹர் தொழ வேண்டுமா? அல்லது ளுஹருக்கு நிய்யத் வைத்து ஜும்ஆ தொழுவதா? ஆதாரங்களுடன் விளக்கம் தருக.

பதில்: ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் முதல் ரக்அத்தைத் தவற விட்டபோதிலும், இரண்டாம் ரக்அத்தை அடைந்து கொண்டால் ஜும்ஆவை முழுமையாகப் பெற்றுக்கொண்டவராக கருதப்படுவார். எனவே அவர் தனது தொழுகையைப் பூரணப்படுத்துவதற்காக மேலும் ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதால் போதுமானதாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இக்கருத்துக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்கள் காணப்படுகின்றன.

‘ஒருவர் ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தை (இமாமுடன்) அடைந்து கொண்டால், அவர் அத்துடன் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். (அதனைக் கொண்டு) அவரது தொழுகை சம்பூரணமாகிவிடும்.’ (நஸாஈ, இப்னு மாஜா, தாரகுத்னி, அறிவிப்பாளர், இப்னு உமர் (றழி)

‘தொழுகையின் ஒரு ரக்கஅத்தைப் பெற்றுக்கொண்டவர் அதனை முழுமையாக அடைந்து கொண்டவராவார்.’ (புகாரி, முஸ்லிம்)

ஆனால் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை விடக் குறைந்த அளவைப் பெற்றவர் (இரண்டாம் ரக்அத்தில் இமாம் ருகூஇலிருந்து எழுந்ததன் பின்னர் வந்து சேர்ந்து கொண்டவர்) ஜும்ஆத் தொழுகையை அடைந்து கொண்டவர் அல்ல. அவர் தனது தொழுகையை ளுஹர்த்தொழுகை என்ற அடிப்படையில் நான்கு ரக்கஅத்துக்களாகத் தொழ வேண்டும். நிய்யத்தைப் பொறுத்த வரையில் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்தல் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) கூறுகின்றார்:

‘எவர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக்கொள்கின்றாரோ, அவர் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக்கொள்ளட்டும். எவருக்கு இரண்டு ரக்கஅத்துக்களும் தவறிப்போய்விடுகின்றனவோ, அவர் நான்கு ரக்கஅத்துகள் தொழட்டும்.’ (அத்தபரானி)

இப்னு உமர் (றழி) அவர்களின் கருத்துப் பின்வருமாறு: ‘நீர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டால், அதனோடு மற்றுமொன்றைச் சேர்த்துக்கொள்வீராக. அவர்கள் (ஜும்ஆத் தொழும் ஜமாஅத்தினர்) இருப்பில் (அத்தஹிய்யாத்தில்) இருக்கும் போது நீர் அவர்களுடன் இணைந்து கொண்டால் நான்கு ரக்அத்துக்கள் தொழுவீராக’ (அல்பைஹகி)