சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே!

சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே!

சீதனம் என்னும் சமூகக் கொடுமை ஏற்படுத்தியுள்ள அவலங்கள் எண்ணிலடங்கா. இது பல்வேறு சமூகத் தீமைகளுக்கு வழி வகுக்கின்றது. விபச்சாரத்திற்கு, குடும்பங்களின் சீரழிவிற்கு, சமூக எண்ணமின்றி தன் சொந்தக் குடும்ப வாழ்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதற்கு இது இட்டுச் செல்கின்றது. உலோப மனப்பாங்கு, நீதி அநீதி நோக்காது பொருள் தேடும் மனோநிலை, சுயநலம் போன்ற தீமைகள் வளர இது உரமிடுகின்றது. தனி மனிதர்களைப் பொறுத்த வரையில் மன நோய்களுக்கும் இப்பிரச்சினை வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கைக்கூலி விளைவித்த தீமைகள் பற்றி ஒரு கணக்கெடுப்பு மேற்கொண்டால் நாம் சாதாரணமாக எதிர்பார்ப்பதைவிட பயங்கரமாக அது அமைந்திடவும் இடமுள்ளது.

கைக்கூலியின் பாரத்தால் சமூகச் சீர்திருத்தம், பொதுவாக சமூக நலன்களுக்காக உழைத்தல் கூட பின்தள்ளப்படுவதை நோக்க முடிகிறது. பொதுவாக இலங்கை முஸ்லீம்களைப் பீடித்துள்ள இத்தீமை கிழக்கு மாகாண முஸ்லீம்களை ஒருபடி மேலாக வாட்டுகிறது. ‘பெண் பிள்ளை பிறந்தாலே சாபக்கேடு’ எனக் கருதும் அளவுக்கு இத்தீமை இட்டுச் சென்றுள்ளது.

இவ்வளவு பயங்கரமாக இத்தீமை சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போதும் சிலர் இதை ஆகுமானதே என்று வாதிட முயல்வதைக் காணும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. வேறு சிலர் இது ஹறாம், இஸ்லாம் கடுமையாக வெறுக்கும் வழக்கம் என்று கூட சொல்லத் தயங்குகின்றனர். மிகத் தெளிவாகத் தெரியும் தீமை கூட சந்தேகத்திற்குரியதாக மாறுவது துரதிஷ்டமே.

அல்குர்ஆன் மனைவிக்காக செலவளித்தலை ஆண்கள் மீது கடமையாக்குகின்றது. பொதுவாக ‘பராமரிப்புச் செலவு’ என்பது ஆண்கள் மீதான கடமை என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனைப் பெற பெருந்தொகைச் செல்வத்தைக் கொடுப்பது எந்த வகையில் ஏற்புடையதாகும்? ‘உங்களுடைய செல்வங்களை உங்களிடையே அசத்திய வழிகளில் சாப்பிட வேண்டாம்’ என அல்குர்ஆன் பொதுவாக அனைத்து வகையான அசத்திய வழிகளில் சாப்பிடுவதையும் தடை செய்கின்றது.

ஒரு ஆண் தனது மனைவியாக வரப்போகும் பெண்ணைப் பெற அவளது குடும்பத்திடமிருந்து பெருந்தொகை சொத்தை, பணத்தை நிபந்தனையிட்டுப் பெறுவது எந்த வகை சார்ந்தது? இது இஸ்லாம் அனுமதித்த வியாபார முறையா? அல்லது எவ்வகைக் கொடுக்கல் வாங்கல்? ஒருவரது சொத்தை அநியாயமாகச் சாப்பிடுவதற்கு இதனை விடச் சிறந்த உதாரணம் வேறென்ன இருக்கிறது?

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சொத்துக்கள் கிடைப்பதாயின் ஒன்று வாரிசுரிமையாக வர வேண்டும். அல்லது இறப்பதற்கு முன்னர் ஒருவர் ‘வஸிய்யத்’ செய்துவிட்டுச் செல்ல வேண்டும். அன்றேல் பரிசாகக் கொடுக்க வேண்டும். அல்லது இம்மூன்று வழிமுறைக்கும் வெளியே இஸ்லாம் அனுமதித்த முறையில் ஏதாவது கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

கைக்கூலி சீதனம் என்பது இதில் எந்த வகையிலும் சேராத அநியாயமாக ஒருவரின் சொத்தைச் சாப்பிடுதலாகும். எனவே சீதனம் எடுப்பவர் ஹராமான சொத்தையே பெறுகின்றார் என்பதில் சந்தேகப்பட எதுவுமில்லை.

‘வலீமா’ கொடுப்பது ஸுன்னாஹ். ஆனால் பெரும்பாலும் பெண்ணிடமிருந்து பெறும் இந்தக் கைக்கூலி மூலமே இந்த ஸுன்னத்தான வணக்கத்தைக்கூட சிலர் நிறைவேற்றுவர். ஹராத்தினால் நிறைவேற்றப்படும் ஸுன்னாஹ், நாம் இஸ்லாத்தை விட்டு எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்த்துகின்றது. சீதனமாகக் கிடைத்த வீட்டில் நுழையும்போது அந்த மணமகன் எங்கே நுழைகின்றான்? இன்னொருவரால் இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி கட்டப்பட்ட ஒரு வீட்டிலேயே அவன் நுழைகின்றான். எப்படி அது அவனுக்கு ஹலாலான வசிப்பிடமாக முடியும்?

இப்படி பலர் இஸ்லாம் புனிதமானது எனக் கருதும் ஒரு ‘இபாதத்’தாகிய குடும்ப வாழ்வையே சந்தேகமின்றி ஹராத்தின் மீதே அத்திவாரமிட்டு அமைக்கின்றனர். எப்படி இவ்வாறு அடித்தளமிட்டு அமைக்கப்படும் ஒரு வாழ்க்கை பின்னர் சிறந்ததாக முடியும்? எமது குடும்பங்கள் அனைத்தும் இந்தத் தவறான வழியில் உருவானது என்பதும் பயங்கரமான உண்மை.

இங்கு நாம் அவதானிக்க வேண்டிய மிக முக்கியமானதும் பயங்கரமானதுமான இன்னுமொரு உண்மையையும் தவிர்க்க முடியாது இங்கே தருகின்றோம்.

திருமணம் முடிக்கும் போது பெண்ணுக்கு மஹர் கொடுக்குமாறு அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது. இது மிக முக்கியமானதோர் உண்மை. பெண்ணை திருமணம் முடிப்பதில் கொண்டுள்ள உறுதியை இது காட்டுவதாகவும், செலவழிக்கும் சக்தி தனக்குள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைய முடியும். சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியின் போது நாம் பரிசு வழங்குவோம். திருமணம் வாழ்வின் மிக சந்தோஷமான நிகழ்வு. அந்நிகழ்வின் போது தனது வாழ்க்கைத் துணைவியை சந்தோஷமாக வரவேற்றலையும் இந்த ‘மஹர்’ காட்டுகின்றது. இவ்வாறு அல்லாஹ் விதியாக்கிய ‘மஹர்’  பல நோக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்த ‘மஹர்’ என்ற அம்சம் இன்று எவ்வளவு இழிவாக்கப்படுகின்றது? 101 ரூபா, 1001 ரூபா என மிக அற்பத் தொகைகளை மஹராகக் கொடுத்து அல்லாஹ் விதியாக்கிய இறை சட்டத்தை அவமானப்படுத்துவதுடன் தனது வருங்கால வாழ்க்கைத் துணைவியையும் மிகப் பெறுமதியற்றவளாகவே சமூகத்தில் பிரகடப்படுத்துகின்றனர். இலட்சக்கணக்கில் சீதனம் வாங்கும் ஒருவர் இவ்வாறு ஒரு அற்பத் தொகையை மஹராகக் கொடுக்கிறார். உண்மையில் இவர் ‘மஹர்’ கொடுத்தார் எனக் கொள்ள முடியுமா?

‘மஹர்’  கொடுக்காத திருமணம் விபச்சாரமாக அமைய முடியும். ஏனெனில் ‘மஹர்’ என்பது திருமணத்துக்கான ஷரத்துக்களில் ஒன்று. எனவே, நிலைமை இவ்வாறு எவ்வளவு பாரதூரமாகலாம் என்று இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இங்கு நாம் சீதனம் பெற்று நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் விபச்சாரம் என சொல்ல வரவில்லை.

ஏனெனில் சீதனம் பெறுதலும், மஹர் கொடுத்தலும் இரு வேறு அம்சங்கள். என்றாலும் நாம் இங்கு குறிக்கவரும் உண்மை என்னவெனில் ‘மஹர்’கொடுத்தல் என்பது ஒரு வகை போலி நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனடியாக உருவாகும் திருமணமும் சட்ட ரீதியாக சரியாயினும் அல்லாஹ் விடத்தில் எத்தகைய இடத்தை பெறும் என்பது சந்தேகத்துக்குரியதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *