Article

இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த மதத்தவர்களின் விரோதமும், இஸ்ரேல் சதியும்

images

images 150x150 இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த மதத்தவர்களின்  விரோதமும், இஸ்ரேல் சதியும்

இலங்கை முஸ்லிம்கள் பௌத்த மதத்துக்கும், சிங்களவர்களுக்கும் அவர்களது கலாசாரத்துக்கும் மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் முஸ்லிம்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் லதீப் பாரூக் தெரிவித்துள்ளார்.

சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம்கள் ஆபத்தானவரகள் என்று எட்டு சிங்கள இணையதளங்களும் 10 ஆங்கில இணைய தளங்களுமாக 18 இணையதளங்கள் இந்தப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளன. சிங்கள பத்திரிகைகளும் 1915 ஆம் ஆண்டின் கலவரம், மாடு அறுப்பு தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு இந்தப் பணியினை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலைமையினை ஜனாதிபதியினதும் மகாநாயக்க தேரர்களினதும் மற்றும் சிங்கள தலைவர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு உலமாக்கள், புத்திஜீவிகள், இளம் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அனைத்து இனங்களும் ஒன்றுபட்டு ஒரே தாய்நாட்டினராக செயற்படுவதே நாட்டின் இன்றைய தேவையாக உள்ளது.

நாம் முதலில் தமிழர்களைக் கையாள்வோம். அதன் பின் முஸ்லிம்களைக் கவனத்தில் எடுப்போம் என்று கடந்த காலங்களில் இனவாதிகள் கூறி வந்தனர். இதனை இப்போது அவர்கள் அரங்கேற்றப் போகிறார்களோ என்று முஸ்லிம்கள் பீதியடைந்துள்ளனர். தமிழர்கள் தமிழ் நாட்டிற்கும் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்கும் போய் விட வேண்டும். இலங்கை பௌத்த, சிங்களவர்களுக்கே சொந்தமானது என சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. அரசாங்க பாடசாலை அதிபர்கள் முஸ்லிம்களின் கலாசார உடைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கொழும்பைச் சேர்ந்த ஒரு பிரபல மகளிர் கல்லூரி அதிபர், அந்தக் கல்லூரியின் பழைய மாணவியும், சட்டத்தரணியும், தாயுமான ஒருவரை சல்வார் உடையணிந்து பாடசாலையினுள் வர வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். இவைகள் பௌத்த தர்மத்துக்கு எதிரான கொள்கைகளாகும்.

இனமுறுகல்கள் நாட்டில் உயிர்ப்பலியையே ஏற்படுத்தியுள்ளன. 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும் சுயநலம் கருதி, அரசியல் லாபத்தை நோக்காகக் கொண்டு சிலர் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றன. இலங்கையின் அரச படைகளுக்கு பயிற்சியினை வழங்கிய இஸ்ரேல் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பயிற்சியை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இது இஸ்ரேலின் இரட்டைத் தன்மையைக் காட்டுகிறது. இஸ்ரேல் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை உருவாக்க முயற்சிக்கிறது என்பதை நாட்டின் அரசியல்வாதிகள் வர்த்தகர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் அறிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.

இந்தியாவில் இந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தி வரும் இனக் கலவரங்களுக்கு இஸ்ரேல் ஐரோப்பா ஊடாக நிதி உதவி செய்து வருகின்றமையை அது டில்லியிலிருந்து வெளிவரும் `மில்லி கசெட்’ இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு 7877 கோடி ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களுக்கும் குண்டு தாக்குதல்கள் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்நிலைகளை உருவாக்குவதற்குமே இந்நிதி பயன்படுத்தப்பட்டது எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையிலும் இவ்வாறான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இஸ்லாமிய நாடுகள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு பல வகைகளிலும் உதவி வருகின்றன. நெருங்கிய உறவினைப் பேணி வருகின்றன. இலங்கை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவினை வழங்குகிறது. இலங்கை – விடுதலைப் புலிகளுடனான யுத்த மோதல் காலத்தில் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் பொருளாதார உதவிகளை இஸ்லாமிய நாடுகள் வழங்கியுள்ளன. வளைகுடா நாடுகளில் தொழில்புரியும் மில்லியன் கணக்கிலான இலங்கையர்கள் வெளிநாட்டு செலவாணிகளை அனுப்பி உதவுகின்றது. இந்த உறவு நீண்டகால நட்புறவு தகர்த்தெறியப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையெங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள், விடுதலைப் புலிகளுக்கான யுத்தத்தின் போதும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் அவர்கள் தமிழ் பிரிவினைவாதிகளை ஆதரிக்கவில்லை. அவர்கள் நாட்டின் இறைமைக்கு ஆதரவாகவே இருந்தார்கள். எனவே அரசும், நாட்டின் தலைவர்களும் சிங்கள சமூகமும் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பிரசாரங்களை நிறுத்தினால் மாத்திரமே நிகழவிருக்கும் பாரிய அழிவொன்றினைத் தடுக்க முடியும்.

Thanks to : Yarlmuslim

This website its a part of the DA’AWA-FOCUSED NETWORK