வைகறை

இஸ்லாத்தின் இலட்சிய உதயக் கீற்றுக்களுடன்…

2083 கம்யூனிஸ்ட்கள் , முஸ்லிம்களுக்கெதிரான சிலுவைப்போர்

2083 கம்யூனிஸ்ட்கள் , முஸ்லிம்களுக்கெதிரான சிலுவைப்போர்

“எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி.”
– Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

“வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை,” என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை. நோர்வேயில் கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். (Youtube உடனுக்குடனே அழித்து விடுவதால், கீழேயுள்ள வீடியோவை சேமித்து வைக்கவும்.) மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது. 2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். “பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்.” – இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், “முஸ்லிம்கள்” என்று தான் குறிப்பிடுவார்கள்.)

“2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்” (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, “கலாச்சார மார்க்சியம்” ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் “கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை” எடுத்துக் காட்டுகின்றது. இரண்டாவது பகுதி, “ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்” பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். “வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி…” என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். “வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்…” என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் “இடதுசாரிக் கட்சிகள்” என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ-நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply