2083 கம்யூனிஸ்ட்கள் , முஸ்லிம்களுக்கெதிரான சிலுவைப்போர்

“எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி.”
– Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

“வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை,” என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை. நோர்வேயில் கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். (Youtube உடனுக்குடனே அழித்து விடுவதால், கீழேயுள்ள வீடியோவை சேமித்து வைக்கவும்.) மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது. 2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். “பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்.” – இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், “முஸ்லிம்கள்” என்று தான் குறிப்பிடுவார்கள்.)

“2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்” (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, “கலாச்சார மார்க்சியம்” ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் “கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை” எடுத்துக் காட்டுகின்றது. இரண்டாவது பகுதி, “ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்” பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். “வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி…” என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். “வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்…” என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் “இடதுசாரிக் கட்சிகள்” என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ-நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நான் புரிந்து கொண்ட நபிகளார் அ.மார்க்ஸ்

நூல் மதிப்புரை: ந. முத்துமோகன் ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. மார்க்சியம், ப…ெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது. மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய அவசியங்கள் இருக்கின்றன. ஒரு மார்க்சியராக இருந்து கொண்டு அ.மார்க்ஸ் இந்தப் பணியைச் செய்கிறார் என்பது நல்ல விசயம். நாம் அறிந்து வைத்திருக்கின்ற இஸ்லாத்திற்கு 1400 ஆண்டுகால வரலாறு என்பது ஒரு புறமிருக்க, இந்த வரலாற்றில் அதன் ஆரம்பக் கட்டம், கலிபாக்களின் காலம், அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பேரரசாகப் பரவக்கூடிய காலம், இந்தியாவுக்குள் இஸ்லாம் வந்த காலம், உலக அளவிலான காலனி ஆட்சிக்காலம், காலனி எதிர்ப்புகள் தொடங்கிய காலம், இஸ்லாம் குறித்தான அல்லது அரபு தேசங்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய கற்பிதங்கள், இன்றைய இஸ்லாமின் நெருக்கடிகள் என இவை எல்லாவற்றுக்குள்ளும் புதையுண்ட ஒன்றாக தோற்றகால இஸ்லாம் குறித்த மதிப்பீடு மறைந்து கிடக்கிறது. உள்ளுக்குள் கிடக்கின்ற இந்த இஸ்லாமின் செய்திகளை இன்றைய அரசியல் சமூக பார்வையை கொண்டு மீட்டெடுத்தல் என்பது முக்கியமான பணியாகத் தெரிகிறது. அ.மார்க்சின் இந்தத் தலையீடு நல்ல ஒரு தலையீடு. இஸ்லாம் என்ற மதத்தை அணுகுவது எப்படி என்பதைப் பற்றி முறையியல் ரீதியாக சில கோட்பாடுகளை, சில வழிகாட்டுதல்களை மார்க்ஸினால் இந்த நூலில் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை அ.மார்க்ஸ் எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்க்கும்போது, நபிகள் நாயகம் எல்லா சாதாரண மனிதர்களையும் போலவே கருவானவர், உருவானவர், நோயுற்று மறைந்தவர் என்ற செய்தியைப் பதிவு செய்கிறார். அவர், அற்புதங்களை நிகழ்த்தாதவர், வெற்றி தோல்விகளை அனுபவித்தவர், நபிகளின் வாழ்வில் ஏழ்மை உண்டு, துயரம் உண்டு என்று நபிகளை அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தக் கூடிய பின்புலம் மிக முக்கியமானது. வேறொரு கட்டுரையில் நபிகளின் மரணத்தை அவர் சித்தரிக்கிறார். நபிகள் இறைத்தூதர் என்றாலும் ஒரு மனிதருடைய மரணமாக – ஒப்பீட்டுக்காக சொல்வதாக இருந்தால் அவர் உயிர்த் தெழவில்லை என்ற இந்த மதிப்பீடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் அவதாரக் கடவுள்களை வைத்திருக்கிறோம், அவதாரங்களை வைத்திருக்கிறோம், இறை மைந்தர்களை வைத்திருக்கிறோம். ஒரு மதம் என்று சொன்னால் அதில் அதிசயத் தன்மை இருக்க வேண்டும். அதிசயங்களை நிகழ்த்தவில்லை என்றால் அவர் ஆண்டவனில்லை, ஆண்டவனோடு தொடர்பு கொண்டவரில்லை என்ற பார்வைகள் இருக்கக் கூடிய பின்புலத்தில் நபிகளை மனிதராக வாழ்ந்தவர், வயிறு நிறைய பேரீச்சம் பழங்களைக்கூட உண்ணாதவர், வணிகத்தில் ஈடுபட்டவர் நபிகள் என்று சித்தரிப்பது எல்லாமே வித்தியாசமான ஆனால் அவசியமான சித்தரிப்பு. இறை அனுபவங்களை பெறக்கூடிய நேரத்தில் ‘ஓதுவீர்’ என்ற அந்த இறைச்செய்தி கிடைத்தவுடன் அதனுடைய அர்த்தம் ஓரளவுக்குப் புரியாத நிலையில் மனைவி கதீஜாவிடம் ஓடிவந்தார் நபிகள். கதீஜா அது இறை செய்தியாக இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பிறகுதான் நபிகள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த இறை செய்தியை ஏற்பவராக ஆகிறார். இறைசெய்தி நபிகளிடம் இறங்கும் பொழுது, அவர் அனுபவிக்கக் கூடிய உடல் வாதைகள், என்னுடைய உடம்பிலிருந்து உயிர் கிழித்தெறியப் பட்டது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது என்ற நபிகளி வார்த்தைகள் இவற்றையெல்லாம் மார்க்ஸ் பதிவு செய்கிறார். இறைவெளிப்பாடு என்பதை இந்திய தத்துவமரபில் பேரின்பம் என்று சொல்வார்கள். பேரின்பம் என்று சொல்வது அந்த செய்தி இறைவனிடம் இருந்து வந்தது என்பதை கௌரவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இறைச்செய்தி என்பது மிக சிக்கலான ஒரு அனுபவம். சமூகப் பிரச்சனைகளை சமய மொழியில் அனுபவிக்கக் கூடிய ஒரு மனிதர், நெருக்கடிகளை தன்னிலேயே அனுபவிக்கும் போது, இறைச் செய்தி என்ற ஒன்று அவருள் எப்படி நிகழ்கிறது என்பதை ரியலிஸ்டிக்காக என்று சொல்கிறோமே, அவ்வாறு எடுத்துக் காட்டுகிறார். இந்த தளத்தில் வைத்துப் பார்க்கும்போது நபிகளை அதிசயங்களுக்கு அப்பாற்பட்டவராக, சாதாரண ஏழையாக வணிகச்சூழலில் வாழ்ந்து, அலைந்து, திரிந்து அந்த மக்களின் பிரச்சனைகளை தன்னுடைய நெஞ்சிலே சுமந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று நிரந்தரமாக தேடிக் கொண்டே இருந்து, அதற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அதன் மூலமாக புதியதொரு மதத்தை தொடங்குவது போன்ற ஒரு விடிவை நோக்கி நடந்து சென்ற மனிதராகக் காட்டுகிறார். இது அ.மார்க்சின் சித்தரிப்பு என்பது ஒரு புறமிருக்க இஸ்லாத்தின் தோற்றகாலச் சூழல்களை வெகுவாக நெருங்கிச் செல்லும் முயற்சியாகும். அ.மார்க்ஸின் இந்தச் சித்தரிப்பை முனைப்பாக நாம் முன்னெடுத்தச் செல்ல வேண்டும். இது போன்ற ஒரு சாதாரண மனிதராக நாம் ஏசுவை சித்தரிக்கத் தொடங்கினால் எப்படி சித்தரிப்போம். எப்படிச் சித்தரிக்க முடியும்? என்ற முயற்சிகளில் கூட ஈடுபடுவது நல்லது. இது போன்ற ஒரு சித்தரிப்புக்கு வள்ளலாரையோ, குருநானக்கையோ கூட நாம் ஆட்படுத்த வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு அற்புதமான எடுத்துக் காட்டாக மார்க்ஸ் ரொம்ப அழகாக நபிகள் நாயகத்தை இந்தப் புத்தகத்தில் வளர்த்தெடுக்கிறார். இரண்டாவது இந்த நூலில் பேசப்படும் விசயம், சமூகத் தளத்தை நோக்கி பரவும் பொழுது, இஸ்லாத்தின் சிந்தனை தோற்றம் எப்படி நிகழ்கிறது என்பதற்கான புறச் சூழல்களையும் அ.மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். இனக்குழு மரபுகளும் வணிகக்குழு மரபுகளும் நிறைந்த ஒரு வட்டாரமாக, உள்ளுக்குள் கிட்டத்தட்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்கக் கூடிய நிலைக்கு அராபிய சமூகம் ஏற்கெனவே தயாராக இருந்தது. ஆனால் இனக்குழுக்களின் இடையிலான சண்டைகள், இனக்குழுக்கள் வணிகப் பாதைகளை கைப்பற்றுவது, வணிகக்குழுக்கள் இடையில் உள்ள சண்டைகள் என்ற சூழலில் ஒருங்கிணைந்த சமூக வாழ்வை உருவாக்கக்கூடிய தேடலுக்கு ஆட்பட்ட சமுதாயமாக அது இருந்தது. ஏற்கனவே அங்கு ஏக இறைக் கோட்பாட்டைப் பேசிய ஹனீப்கள் இருந்தார்கள். ‘அரேபியருக்கு ஒரு இறைத்தூதரை அருளுங்கள்’ என்ற ஒரு எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் ஏற்கெனவே தோன்றிவிட்டது என்ற செய்தியை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்த எதிர்பார்ப்பை விடுதலையின் ஊற்றுக் கண்ணாக ஆக்கியவர் நபிகள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். வரலாற்றின் நெருக்கடிகளில் எப்படி பிரம்மாண்டமான மனிதர்கள் தோன்றுகிறார்கள் என்பதைச் சொல்லுகிற இடமிது. திருக்குர்ஆனைப் பற்றி குறிப்பிடும்போது, அந்தக் காலத்தினுடைய சமகால அரசியல் ஆவணமாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதைப்போல நபிகள், இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூக திட்டத்தைத் தந்தவர் என்று குறிப்பிடுகிறார். அறவியல் கூறுகள், அரசியல் கூறுகள், இறையியல் கூறுகள் கொண்ட திட்டமாகத்தான் நமக்கு அது கிடைக்கிறது. நபிகள் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலமாக யூதமதத்தையும், கிறித்தவ மதத்தையும் அதனுடைய சுற்று நிலைகளில் எடுத்துப் பார்த்தோம் என்றால் 7ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய துறவு நிறுவனங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த துறவு நிறுவனங்களின் பலத்தை மட்டுமே அது முன்னிலைப்படுத்திய காலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தில் நபிகள் உலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன்வைத்தார் என்பது முக்கியம். இந்த உலகிலேயே சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை எப்படிக் கொண்டு வருவது என்ற ஒரு கேள்வியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அ.மார்க்ஸ் நன்கு எடுத்துக் காட்டுகிறார். நபிகளின் திட்டம் ஒரு அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதாக இருந்தது என்பதை, நபிகளின் செயல்பாடுகள், அவை போர்களாக இருக்கலாம், அல்லது நபிகள் ஏராளமாக செய்து கொண்ட ஒப்பந்தங்களாக இருக்கலாம். அந்த ஒப்பந்தங்களிலும், போர்களிலும் சமூகத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதுதான் முனைப்பாக இருந்தது என்பதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட இஸ்லாத்திற்குள் துறவு நிறுவனம் கிடையாது என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். சூஃபியத்திற்குள் கொஞ்சம் துறவு நுழைந்திருக்கலாம், இருந்தாலும் துறவு நிறுவனங்களை, அப்பாலை சமயப் பண்புகளை சொல்லாத சமயம் இஸ்லாம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. நபிகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தியவர் என்பதை மிக அழகாக அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். துறவு மூலமாக, துறவினை நிறுவனமாக ஆக்குவதன் மூலமாக, வெறும் அறரீதியான போதனைகளை நிகழ்ததுவதன் மூலமாக, அல்லது அவரவர் தங்கள் மனங்களை செப்பமிட்டுக் கொள்வதன் மூலமாக என்ற தளங்களுக்குள்தான் மதங்கள் வேலை செய்து வந்திருக்கின்றன. நபிகளைப் பொறுத்த மட்டில் மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்தியவர், தன்னுடைய இயக்கத்தை ஒரு ரகசிய இயக்கமாக நடத்தியவர். நபிகள் வாழ்க்கையின் ஒருபகுதி தலைமறைவு வாழ்க்கையாக அமைகிறது. புலம் பெயர்ந்து செல்கிறார். இந்தத் தலைமறைவு, புலம் பெயர்தல், ஆயுதம் தாங்கியப் போராட்டம் இவை எல்லாம் சமகால அரசியல் சொல்லாடல்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமகால அரசியல் சொல்லாடல்களைக் கொண்டு நபிகளை அணுகும் போது நபிகளின் செயல்பாடுகள் புதிய தளத்தில் அர்த்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் பணியை இந்தப் புத்தகத்தில் அ.மார்க்ஸால் நன்றாக செய்ய முடிந்துள்ளது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம். அதுபோல் மேலை கிறித்தவம் இஸ்லாமின் தோற்ற காலத்திலிருந்தே நபிகளுக்கு எதிராக, இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டமைத்த கற்பிதங்கள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இறை அனுபவத்தின் போது உடல்வாதைகள் இருந்தன என்று நபிகள் சொல்கிறார் என்றால் அதைக் கொச்சைப் படுத்தக் கூடிய விதத்தில் அது இறை செய்தியல்ல, இது சாத்தானுடைய செய்தி என்று சொல்வது, இஸ்லாத்தை கிறித்துவத்திற்கு எதிரானது என்று சித்தரிப்பது, இதுபோன்ற கற்பிதங்களை எல்லாம் கட்டி எழுப்பினார்கள் என்பதைக் காண முடிகிறது. இந்தக் கற்பிதங்கள் பற்றி பலவேளைகளில் நாம் கவனப்படுத்தியது கிடையாது. ஆனால் உலக வரலாற்றின் மிக முக்கியமான விசயமாக இந்த கற்பிதங்கள் இருந்தன. ஒரு அர்த்தத்தில் ஐரோப்பிய சமூகம் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக, இந்தியர்களுக்கு எதிராக அல்லது கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு எதிராக கற்பிதங்களை உண்டாக்குவதற்கு மிக முன்னதாக இஸ்லாத்தை தனக்கொரு மிகப்பெரிய போட்டி சக்தியாகப் பார்த்தது. இது எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சமூகம் இஸ்லாத்தையும், அரபு சமூகத்தையும், அதன் அரசியல் வடிவத்தையும் மிகப்பெரிய போட்டியாக நினைத்தது என்பதை மனதில் வைத்து பார்ப்போமானால் நமக்கு இந்தக் காலகட்டத்திலிருந்து கிடைக்கின்ற வரலாற்றை முழுவதும் வேறுவிதமாகப் பயிலுவதற்கு பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. கிறிஸ்தவ-இஸ்லாமிய போட்டியின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப் படவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி தனியாகக் கூட ஏராளமாக ஆய்வு செய்ய வேண்டுமென்பது முக்கியம். இந்தப் போட்டியில் ஓரளவுக்கு தோல்வியை சந்தித்தவர்கள் அரேபியர்கள் என்ற தளத்தில்தான் இன்றைய இஸ்லாம் வரையிலான நமக்குக் கிடைக்கக்கூடிய சித்தரிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தத் தோல்வி மனப்பான்மை என்பது அரேபியர்களை, இஸ்லாமியர்களை மேலும் மேலும் தங்களுக்குள்ளேயே, மத எல்லைகளுக்குள்ளேயே தங்களை அடக்கிக் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதையெல்லாம் கருத வேண்டியிருக்கிறது. 16-17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா காலனி ஆட்சியைத் தொடங்கிய போது அந்தக் காலனிய ஆட்சியினுடைய கொடூரமானத் தாக்குதல்களுக்கு அரேபிய சமூகம் / இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டது என்பதும், இந்தக் காலனி ஆட்சியில் பயன்படுத்தப் பட்ட வன்முறையை அரேபியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுடன் அந்த வன்முறையை அவர்களால் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை என்பதெல்லாம் சேர்ந்துதான் பிற்கால இஸ்லாத்தின் வரலாற்றைத் தீர்மானித்தன என்று கூட சொல்ல முடியும். மேற்கு நாடுகள் தாங்கள் உருவாக்கிய இஸ்லாமுக்கு எதிரான கற்பிதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏராளமாக இறக்குமதி செய்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இறக்குமதி செய்தது. ஒட்டுமொத்த உலகின் அபிப்பிராயமாக சார்ந்த பிலாலுக்கு பாங்கு சொல்லும் உரிமையை வழங்கியது, அதைப்பார்த்து பலர் முகம் சுளித்த போதும் நபிகள் அதில் பிலாலின் பக்கமே நின்றது போன்ற விசயங்கள் இவையெல்லாம் இஸ்லாத்தின் சமூக உள்ளடக்கத்தை இன்னும் அதிகமாக பலப்படுத்துகின்றன என்று அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டி இருக்கிறார். முதல் கலீபா அபுபக்கர் ஆட்சி ஏற்கும் பொழுது சொன்ன ஒருவரியை எடுத்துச் சொல்லி இருக்கிறார். உங்களில் பலம் குறைந்தவரே என் கண்ணில் பலம் வாய்ந்தவர், அல்லாவின் விருப்போடு நான் அவருக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை இது தொடரும், உங்களில் பலமிகுந்தவர் என் கண்ணில் பலமற்றவராகவே தெரிகிறார். அல்லாவின் விருப்பத்துடன் அவர்களிடமிருந்து பிறரின் உரிமைகளை ஈட்டிக்கொடுக்கும் வரை. நான் அல்லாவுக்கும் அவன் தூதருக்கும் பணிந்து நடக்காத போது நீங்கள் என்னைப் பணிய வேண்டியதில்லை என்ற வாசகங்களை பதிவு செய்திருக்கிறார். மதங்களின் ஏக இறை கொள்கைக்கும் இன்றைய சில விவாதங்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஏக இறைக் கொள்கை என்பது புனித அதிகாரங்களுக்காக உருவாகி வந்தது என்ற குற்றச்சாட்டு மதங்களை நோக்கி வைக்கப்படுகிறது. ஆனால் நபிகளைப் பற்றி பேசும்போது அவருடைய ஏக இறைக் கொள்கையின் வழி மக்களை ஒன்று படுத்துவதே தவிர அதை அதிகார மையமாக உருவாக்கவில்லை என்பது. அபுபக்கரின் பலமிக்கவர், பலமற்றவர், உரிமைமிக்கவர், உரிமையற்றவர் என்ற சொல்லாடல் அதிகாரம் குறித்த கருத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஏக இறை என்ற விஷயத்தை வைத்து ஒரு அதிகார மையமாக உருவாகாமல் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சமத்துவம் போன்ற தளத்தை உருவாக்க இஸ்லாம் முயற்சி செய்திருக்கிறது என்ற செய்திகளை நமக்கு இந்த நூல் சொல்கிறது. இந்த நூலை முதல் பார்வையில் பார்க்கும் பொழுது, அ.மார்க்ஸ் விமர்சனம் இல்லாமல் இஸ்லாத்தை ஆதரித்து ஒரு நூலை எழுதி இருக்கிறார் என்ற வெளித்தோற்றம் கிடைக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டுமல்ல, ஏசுவை மையமாக வைத்து கிறித்தவர்கள் வரலாற்றை, பௌத்தத்தின் வரலாற்றை, இந்திய நாட்டில் தோன்றிய சமயம் சார்ந்த சில சிந்தனையாளர்களின் வரலாற்றை அணுகிப் பார்ப்பதற்கான ஒரு முறையியலை இந்த நூல் தந்திருக்கிறது. எனவே விமர்சனம் இல்லாமல் ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்று சொல்வதற்கு இடமில்லை என்று நான் வலுவாக நம்புகிறேன். ந. முத்துமோகன் நான் புரிந்து கொண்ட நபிகள் ஆசிரியர் : அ.மார்க்ஸ் வெளியீடு : கருப்பு பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை – 5.விலை : ரூ.80/- பக்கம் : 204 நன்றி: கீற்று

மண்ணறை வாழ்க்கை

-K.L.M. இப்ராஹீம் மதனீ
உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَநிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள “ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍஇன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.
(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَஅவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் “என் இறைவன் அல்லாஹ்” என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் “என் மார்க்கம் இஸ்லாம்” என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். ‘மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்’ என்று அவர்களிடம் கூறப்படும்.
(புகாரி, முஸ்லிம்)ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், “(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்” எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், “(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!” என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு “கீராத்” நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு “கீராத்” நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .
அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.
அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.
அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .
நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?
வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.
உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ ‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)
பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?
மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)

நூற்கள்:- புகாரி, முஸ்லிம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்தது….

அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி) நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .
பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாகSee more
by: Jamal Mydeen

சுய விசாரணை

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய… தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு – உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?

Ö ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

Ö இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?

Ö ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?

Ö தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?

Ö தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?

Ö மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

Ö மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

Ö யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ”யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக – என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

Ö இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?

Ö தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

Ö அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?

Ö செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?

Ö இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?

Ö உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

Ö பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?

Ö அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?
Ö ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

Ö நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

Ö இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ”ஷஹீத்”” என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் – அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)

Ö மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?

Ö உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?

Ö இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?

Ö இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.

Ö இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?

Ö உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?

Ö மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

Ö உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?

Ö இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ”இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”” (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

Ö யா அல்லாஹ், ”நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.””

Ö இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ”விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.””
யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்ற வர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக ..ஆமீன் !!!

திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணிடம் பேசுதல்

அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்தாத்

என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷh அல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிபோன் மூலம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இதனை சில அவருக்கு மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன்,ஸூன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும். வஸ்ஸலாம்

பெண்களோடு பேசுவது அவசியத் தேவையாயின் ஆகுமானதாதும். கற்பித்தல், டாக்டரோடு பேசல், வியாபாரத் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளின் போது மஹ்ரமியத் அல்லாத பெண்களுடன் பேச முடியும். இறைதூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்கள் என்பது மிகப் பல ஹதீஸ்களில் வந்துள்ளது. ஸஹாபாக்களும், ஸஹாபிப் பெண்களுடன் பேசியுள்ளார்கள் என்பது மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு இரண்டொரு ஹதீஸ்களை கீழே தருகிறேன்.

‘தாபித் இப்னு கைஸ் என்பவரின் மனைவி இறைதூதர்(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே தாபித்தின் மார்க்க நடத்தையிலோ, ஒழுக்கத்திலோ நான் குறை காணவில்லை. ஆனால் நான் நன்றி கொன்ற முறையில் அவரோடு நடந்து கொள்வேனோ என்று தான் பயப்படுகிறேன் என்று கூறினார். அப்போது இறைதூதர் (ஸல்) அவரது தோட்டத்தை நீ திருப்பி கொடுக்கத் தயாரா? எனக் கேட்டார்கள். அப்பெண் ஆம் என்றார். அவ்வாறே அவர் தோட்டத்தை திருப்பிக் கொடுக்க இறை தூதர் (ஸல்) தாபிதிடம் அப்பெண்ணை பிரிந்துவிடுமாறு பணித்தார்கள் (ஸஹீஹ் புகாரி)

ஸபீஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா என்ற பெண்ணின் கணவர் ஸஃத் இப்னு கவ்லா ஹஜ்ஜதுல் விதாவின் போது மரணித்தார். அப்போது கர்ப்பவதியாக இருந்த ஸபீஆ மிகச் சில நாட்களிலேயே பிள்ளையை ஈன்றார். பிள்ளைபேற்று நிலையிலிருந்து அவர் தூய்மையானதும் திருமணம் பேசி வருவோருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அந்நிலையில் அவரிடம் சென்ற அபூ ஸலாபில் இப்னு பஃலாக் அவரைப் பார்த்து என்ன திருமணம் பேசி வருவோருக்காக அழகுபடுத்திக் கொண்டீரா? திருமணம் முடிக்க விரும்புகிறீரா? நான்கு மாதங்கள் 10 நாட்கள் சென்ற பின்னரே நீர் திருமணம் முடிக்க முடியும் என்றார்….

(ஸஹீஹ் புகாரி)

இவ்வாறு பேசுவது அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அல்குர்ஆன் கீழ்வரும் விடயத்தை கவனதிற் கொள்ள வேண்டும்.

‘விபச்சாரத்தை நெருங்காதீர்கள்….’ (அல் இஸ்ரா 32)

அதாவது விபச்சாரம் செய்வது மட்டுமல்ல அதனை நெருங்கவும் கூடாது என இவ்வசனம் கூறுகிறது. பேசுவதும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். பார்வை,பேச்சு,தொடுதல் என்ற இவை அனைத்தும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்வதாகும். இதனையே மேற்குறிப்பிட்ட வசனம் தடை செய்கிறது.

திருமண ஒப்பந்தம் முடியும் வரையில் ஒரு பெண் உறவால் ஆகமாட்டாள். திருமணம் பேச்சுவார்த்தை முடிவது குறிப்பிட்ட பெண்ணை மனைவியாக்க மாட்டாது. இந் நிலையில் இருவரும் தனியே சந்திப்பது,உரையாடுவது போன்ற அனைத்தும் கூடாததாகும். ஏனெனில் திருமணம் பேசப்பட்ட இருவரும் பகிடியாகப் பேசல், சிலவேளை மறைமுகமான காம உணர்வைத் தூண்டும் வார்த்தைகளைப் பேசல் என்பன தம்மை அறியாமலேயே நடந்துவிடும்.

திருமணம் பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்திருப்பின் அது இடையில் முறிய முடியும் எனவே ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ளல் மிகவும் முக்கியமானது. கணவன் மனைவி என்ற உறவு கொண்டாட முடியாத நிலையில் அந்த வகையிலான ஆரம்ப நடத்தைக்குக் கூட நாம் வந்துவிடக் கூடாது.

Sheik Usthaz Mansoor.

ஹிஜாப் அணிந்ததால் !!!!!!!!!!

ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்த ஒரே காரணத்தினால், பத்தொன்பது வயதுள்ள புஷ்ரா நோவா என்ற முஸ்லிம் பெண், தான் பணிபுரியும் ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஸாரா டெஸ்ரோஸிர்ஸ் என்பவரால் கடந்த மே-2008 இல் பணி நீக்கம் நீக்கப்பட்டுள்ளார். “பெண் வாடிக்கையாளர்கள் விதவிதமான… அலங்காரம் செய்து கொள்ளும் என் அழகு நிலையத்தில், என் வியாபாரத்திற்கு பாதகமாக தலையினை மறைத்து பணிக்கு வந்ததாலேயே இவரை பணி நீக்கம் செய்ததாக” த சன் இதழுக்கு அளித்த பேட்டியில் கடை உரிமையாளர் ஸாரா ஒப்புக் கொண்டுள்ளார். வேலை போன விரக்தியோடு வெளியேறிய புஷ்ரா நோவா, மனம் சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல், துணிவுடன் நீதிமன்றத்தை அணுகி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். இருவரையும் அழைத்து விசாரித்த இலண்டனில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கான நீதிமன்றம் (British employment tribunal panel) இறுதியில் புஷ்ரா நோவாவிற்கான வேலை பறி போனதற்காகவும் உணர்வுகள் புண்பட்டமைக்காகவும் நஷ்ட ஈடாக 4000 பிரிட்டிஷ் பவுண்ட்களை வழங்கியுள்ளது. அத்துடன் தலையினை மறைக்கும் ஒரு துணி ஒருவரின் பணியை எங்ஙனம் பாதிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், மத ரீதியிலான பிரச்னையாக உருவெடுக்காமல் தவிர்க்க, தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வன்கொடுமையாகத் தான் இதனைக் கருத வேண்டும் என்று இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் இவ்வகைச் செயல்கள் பிரிட்டனில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதற்கும் இஸ்லாமியர்கள் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு சட்ட ரீதியிலான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர் என்பதற்கும் இத்தகைய நிகழ்வுகள் சான்றாக உள்ளன. தொடர்புடைய சுட்டி: ஆடைகளைக் களைவதா சுதந்திரம்?

காதல் எனும் கருத்தாக்கமும் அல்குர்ஆனும் -உஸ்தாத் மன்ஸூர்-

[ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது. அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் …எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது. இரக்கம் அல்லது அருள் – ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன். அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது.] “காதல்” என்ற சொல்லுக்கு அரபு மொழியில் நிகரான சொல் “ஹுப்” என்பதாகும். எனினும் “ஹுப்” என்ற சொற்பிரயோகம் அன்பு, விருப்பம் என்ற கருத்தில் பொதுவாகவே அரபு மொழியில் பிரயொகிக்கப்படுகிறது. இந்த வகையில் “ஹுப்” என்ற சொற்பிரயோகத்தை அல்குர்ஆன் எவ்வாறு பாவிக்கிறது என்பதனை அல்குர் ஆனில் தேடினேன். முதலில் கணவன், மனைவி தொடர்பை விளக்கும் அல்குர்ஆனின் வசனங்களைத் தேடிய போது, அல்குர்ஆனின் வித்தியாசமான பிரயோகத்தைக் கண்டு ஆச்சரியப்படாதிருக்க முடியவில்லை. எங்கெல்லாம் “ஹுப்” என்ற சொற்பிரயோகத்தை பாவிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அல்குர்ஆன் அதனைப் பாவித்திருக்கவில்லை. “உங்களிலிருந்தே உங்களுக்கான ஜோடியை, அவளிடத்தில் நீங்கள் அமைதி காணவேண்டும் என்பதற்காகப் படைத்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே நேசத்தையும் இரக்கத்தையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்” (அர் ரூம்-21). இந்த வசனத்தில் “அமைதி காணல்” என்ற பிரயோகம் ஆண், பெண் தொடர்பின் நோக்கத்ததை மிக ஆழ்ந்து விளக்கிவிடுகிறது. வீட்டுக்கு வெளியே உழைத்து, போராடிவரும் ஆணுக்கு பெண்ணின் தொடர்பே அமைதியை வழங்குகிறது. வெளிப்போராட்டத்தில் சூடுபிடிக்கும் அவன் உடம்பும் நரம்புகளும் அமைதியடைகின்றன. அடுத்த பகுதி அவர்களுக்கு மத்தியில் இரக்கத்தில் நேசத்தையும் அல்லாஹ் ஆக்கியுள்ளதாக அல்குர்ஆன் கூறுகிறது. இங்கு அல்குர்ஆன் பாவித்த சொற்கள் “ரஹ்மத்”, “மவத்தா” என்பவையாகும். இவ்விரண்டு சொற்களும் ஆண், பெண்ணுக்கிடையிலான வித்தியாசமான தொடர்பைக் காட்டும் காதல் என்ற கருத்தில் ஒருபோதும் பிரயோகிக்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக “ரஹ்மத்” என்ற சொல் தாய் தந்தை பிள்ளையிடம் காட்டும் பரிவை, ஏழையிடம் காட்டுகின்ற அன்பை, இறைவன் அடியார்களிடம் கொண்டுள்ள அருளைக் காட்டவே பயன்படுத்தப்படுகிறது. “மவத்தா” என்ற சொல்லும் இயல்பான நேசத்தை, வெறியேதுமற்ற அன்பைக் காட்டவே பாவிக்கப்படுகிறது. வதூத் என்ற இச்சொல் இறைவனின் திருநாமங்களில் ஒன்றாக அல்குர்ஆன் பாவிக்கிறது. காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது. அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. ஆனால் அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது. இரக்கம் அல்லது அருள் – ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன். அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது. “ஹுப்” (அன்பு-காதல்) என்ற சொல்லையும் அல்குர்ஆன் சிலபோது பாவித்துள்ளது. அதனை எப்படிப் பாவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம். ஸூரா யூஸுஃப், இரு வகை அன்பு பற்றி விளக்குகிறது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகன் யூஸுஃபோடு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை அது விளக்குகிறது. அவரது அடுத்த பிள்ளைகள் பொறாமைப்படுமளவுக்கு யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் மீது யஃகூப் அலைஹிஸ்ஸலாம் கவலைப்பட்டார், அழுதார். யஃவுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கவலையை அல்குர்ஆன் தெளிவாக விவரிக்கிறது. அடுத்த வகையான அன்பு, யூஸுஃப், அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு எகிப்து நாட்டு மன்னனின் மனைவி வைத்த தொடர்பு. மன்னனின் மனைவி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது வலையில் வீழ்த்தி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள எவ்வாறு முயன்றாள் என்பதனை அல்குர்ஆன் விவரிக்கிறது. அந்தத் தொடர்பு பற்றிய செய்தி வெளியே எவ்வாறு பரவியது என விளக்கும் போது அல்குர்ஆன் “அவள் யூஸுஃப் மீது காதல் கொண்டு மயங்கினாள்” எனக் கூறுகிறது. இந்த இடத்தில் “ஹுப்” என்ற சொல்லை அல்குர்ஆன் பாவித்துள்ளது. பிழையான தொடர்பு என்ற கருத்தைக் கொடுக்கும் வகையிலேயே அல்குர்ஆன் இக்கதையை விளக்கிச் சொல்கிறது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தனது மகன் கொண்ட அன்பைப் பிழையானது என அல்குர்ஆன் காட்டவில்லை. காதல் ஒரு வகை வெறி, அது ஆசையையும், சுயநலத்தையுமே விளைவிக்கும். பல அனர்த்தங்களுக்கு அது காரணமாக இருக்கும். காதல் கொண்டவனின் கண்களையும் குருடாக்கி அறிவையும் அது மயக்கிவிடும்.பிள்ளைகள் மீது கொள்ளும் இரக்கம் அப்படியானதல்ல. அது பிறர் மீது இரக்கம் கொள்ள வைக்கும், மனதை இலகுவாக்கும், மென்மைப்படுத்தும். இப்பகுதியில் இன்னுமொரு வரலாற்று நிகழ்ச்சியையும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. எகிப்தில் வாழ்ந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னுடைய சமூகத்தோடு மோதிக் கொள்கிறார்கள். அப்படி மோதிய ஒரு சந்தர்ப்பத்தில் நாடு கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்பெண்கள் தமது தந்தையிடம் சொல்கிறார்கள். “அவரை வேலைக்காக நீங்கள் அமர்த்திக் கொள்ளுங்கள். பலமும், நம்பிக்கை, நாணயமுமுள்ள ஒருவரை வேலைக்கமர்த்தலே மிகச் சிறந்ததாகும்” எனக் கூறுகிறாள் ஒரு பெண்.பெண்ணின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட தந்தை அப்பெண்ணை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார். ஆரவாரமின்றி, அமர்க்களமின்றி நடந்து முடிந்த பரஸ்பரத் தொடர்பும் திருமணமும் இங்கு எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்புவது சாதாரணமாக நடக்கக் கூடியது. அது இவ்வாறு மிக இயல்பாக நடந்து முடிய வேண்டிய ஒன்று. அதற்கு மேல் அதனைப் பெரிதுபடுத்தி காதலாக்கி, அதில் தெய்வீகத்தைக் கலந்து லைலாவாகி – மஜ்னூவாகி விடுவதுதான் அர்த்தமற்ற செயலாகிறது. ஆண், பெண் தொடர்பு ஒரு பௌதீகத் தேவை. அதனை நிறைவு செய்யக் குடும்ப வாழ்வு என்ற அமைப்பே பொருத்தமானது. அக்குடும்ப ஒழுங்கை அழகாகக் கொண்டு செல்ல இரக்கமும், அன்பும் அவசியம். இக்கருத்தையே இந்த வசனங்கள் தருகின்றன. அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இந்த வசனங்கள் எவ்வாறு இக்கருத்தை அழகாக விளக்கியுள்ளன என்பதை இங்கே கண்டோம். உண்மையில் இக்கருத்தை அல்குர்ஆன் இந்த மூன்று இடங்களில் மட்டுமல்ல, குடும்பவாழ்வு பற்றி விளக்கும் பல குர்ஆன் வசனங்களிலும் நுணுக்கமாக விளக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். இங்கு நாம் நேரடியாக இக்கருத்தை விளக்கும் வசனங்களை மட்டுமே நோக்கினோம். இவ்வாறு எத்தலைப்பை அல்குர்ஆனில் நாம் ஆராய முற்பட்டாலும் அது அழகாக, தெளிவாக அத்தலைப்பு பற்றிய தனது கருத்தைத் தரும். அல்குர்ஆனின் இந்த சிறப்பம்சம் நாம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

திருமண தினம்

திருமண தினம்
(அறபுச் சிறுகதை)

நஜீப் அல் கைலானி

(தமிழில் அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர்)
அந்நகரத்தின் பெருந்தெருவில் நடந்து கொண்டிருந்தான். வாகனங்களின் சத்தங்களை அவன் பொருட்படுத்தவில்லை. அவனைச் சூழ சிறுவர்கள் எழுப்பும் ஒலிகளும் அவன் காதில் விழவில்லை. இரு புறங்களிலும் இருந்த பல மாடிகள் கொண்ட கட்டிடங்களை பார்க்கவும் அவன் முற்படவில்லை. அவன் தோளில் தொங்கும பெட்டி அதில் உள்ள பல வர்ண போத்தல்கள்… அந்தப் பெட்டி பற்றி கூட அவன் மனம் அலட்டிக்கொள்ளவில்லை. அவன் மகன் சொன்ன ஒரு சிறிய வசனம் அதுதான் அவன் தலையில் விடாமல் ஒலிக்கிறது. உலர்ந்து போன அவன் உடலையும் உசுப்பி விடுகிறது.
‘எனது வாப்பா இறந்துவிட்டார்’

ஹின்தாவி நாநா இந்த வார்த்தையை மறக்கத்தான் முயல்கிறார். திருப்பித் திருப்பி அது ஒலிக்க ஒலிக்க அதனிடமிருந்து ஓடத்தான் முயல்கிறார்…. ஆனாலும் பிரயோசனமில்லை… தன்னை அறியாமலேயே அவர் உள்ளம் ஆழ்ந்த நோவுடன் சொல்கிறது.

என்னருமை மகனே நானிறக்கவில்லை… என்னதான் இருந்தாலும் நான் உயிரோடுதான் இருக்கிறேன்… எனது அந்தப் பலகைப் பெட்டியை சுமக்கிறேன்…
சப்பாத்துக்களை துப்பரவாக்கிக் கொடுக்கிறேன். அதன் மூலம் சில காசுகள் சம்பாதிக்கிறேன்… அப்படித்தான் உன்னைப் படிக்க வைத்துப் பட்டதாரியாக்கினேன்….

உன் தோழர்கள் சொல்வது போன்று உன்னை ஹஸ்ஸான் ஸேர் ஆக்கினேன்…
நான் சாகவில்லை மகனே! நான் என்னை ஆக்கினேன். உன் எதிர்காலத்தை ஆக்கினேன்.
செருப்புத் துடைப்பவன் மகன் என்ற நிலையிலிருந்து ஆங்கில உடை அணிந்த இங்கிதம் தெரிந்த ஹஸ்ஸான் சேர் ஆக்கினேன்.
மகனே நான் உயிரோடிருக்கிறேன். நான் இறந்தாலும் உன்னில் நான் வாழ்வேன். ஏனென்றால் நீ என் மகன் நான் உன் தந்தை.

ஒட்டி உலர்ந்து குழி விழுந்துபோன அவர் கன்னத்தில் ஒரு சூடான கண்ணீர்த்துளி விழுந்து உருண்டது…. அதனைத் துடைக்க அவர் முனையவில்லை… அவர் காதுகளில் ஒரு சோக கீதமிழைப்பது போல் அவருக்குத் தோன்றியது…..
இன்று மறக்க முடியா நாள்… இன்றுதான் அவரின் ஒரே மகனுக்கு திருமணம் நடக்கிறது. அவன் ஓர் அழகிய படித்த பெண்ணைத் திருமண முடிக்கிறான். அவள் யுனிவசிடியில் அவனோடு படித்தவள்… அவள் தந்தை ஒரு பெரிய மனிதர்… சமூகத்தில் இடம்பிடித்தவர்.

ஹஸ்ஸான் அப்பெண்ணை விரும்பினான். அவளும் விரும்பினாள். திருமணத்திற்குத் தடையாக இருந்த ஒரு காரணி அவனது தந்தை செருப்பு துடைப்பவர். மாமா அந்த கண்ணியமிக்க தரத்திற்கு இது பொருந்தாது. இப்பிரச்சினை ஹஸ்ஸானை தூங்கவிடாது செய்தது… கவலையையும் குழப்பத்தையும் கொடுத்தது… ஒரு நாள் இரவு தன்னையறியாமலேயே கத்தினான்…

ஏன்?! இறைவா இந்தத் தண்டனை? எனது தந்தை சப்பாத்துத் துடைப்பவராக அவற்றின் முன்னால் தலை குனிந்து நிற்கவே வேண்டும் தானா? இது ஏன் ஏன்?!

எந்த உபாயமும் புலப்படாதபோது. தீர்வு எதுவும் காணக் கஷ;டமாக இருந்த போது முதற் கட்டமாக தந்தையை விட்டுப் பிரிந்து தனி ஒரு வீட்டில் தங்கியிருப்பது என முடிவெடுத்தான்…. தன் பெண் வீட்டாருக்கு தந்தை நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிட்டார் எனச் சொல்லி விடுவது?! பின்னர் அவன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என ஏற்பதில் கஷ;டமேதுமில்லை…

தாயின் காதில் தான் கண்ட அந்த ஒரே தீர்வை ‘உசாவினான்’ ஆச்சரியமும் வெறுப்பும் அவள் முகத்தில் தோன்றியது அவள் முகம் திடீரென வெளிறியது. எனினும் அவள் சமாளித்துக் கொண்டாள்…
என் அன்பு மகனே உன் கட்டளை! உன் சந்தோச வாழ்வு திருப்தி இவையே எமக்கு முக்கியம். வாப்பா அவருக்கு இந்த நடத்தை கஷ;டமாயிராதா?

வாப்பா நாளும் தெரிந்தவன் மகனே! அவர் தன்னிடமுள்ள மிக உயாந்த பொருளைத் தியாகம் செய்யவும் சித்தமாயிருப்பார். நீ வாழ சந்தோஷமாக இருக்க தன்னுயிரையம் அவர் கொடுப்பார்.
பிரச்சினை இவ்வாறு தீர்ந்தது. ஆழ்ந்த கசப்பும் கவலையும் வேதனையும் உள்ளத்தை வாட்டியபோதும் தம் முன்னால் நிகழ்பவற்றைப் பார்த்துக் கொண்டு தாயும் தந்தையும் மௌனம் காத்தனர். எனினும் தந்தையால் திருமண நாளன்று உள்ளத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. தன் உள்ளத்திற்கினிய மகனை அந்நாளில் பார்க்க வேண்டுன்மென்றவர் அவாவுற்றார். தன் வாழ்வின் எத்தனை துரதிஷ;டம் பிடித்த வரண்ட இரவுகளில் அந்நாளை அவர் கனவு கண்டிருப்பார்.. சுவரோடு ஒட்டி ஊர்ந்து அவர் போனார். அந்த பலகைப் பெட்டி அவர் தோளில் தொங்கியது.

வீட்டு வாயிலில் பல வர்ணக் கொடிகள் ஆடுவதை மனிதர் கண்டார். அவர் உள்ளமும் ஆடியது. வாயிலில் அழகிய உடையணிந்து கவர்ச்சித்த தோற்றத்தில் பலர் நின்றனர். அவர்களது சப்பாத்துக்கள் அழகாக மின்னின. வருவோரை இனிய புன்னகையுடன் தலையை சற்று தாழ்த்தி இங்கிதமாக அவர்கள் வரவேற்று நின்றனர். வீட்டுக்கு வெளியே சில கார்கள் எதிர்பார்த்து நின்றன. ஹின்தாவி ஒதுங்கி நிற்க வெளியே ஓரிடத்தை தேடினார். பெரிய மனிதர்களுக்கு மத்தியில் இறந்தவர்களுக்கெங்கே இடம்?!

சற்று தூரத்தில் தெரு ஓரத்தில் ஒரு வரண்ட மரம் தனியே நின்றிருப்பது அவருக்குத் தென்பட்டது. அதன் பின்னால் போய்க் குந்திக் கொண்டார். நேரம் எவ்வளவு போனதென்று அவருக்குத் தெரியவில்லை. ஹஸ்ஸானும் அவன் மணப்பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி பாட்டுப் பின்பற்ற ஊர்ந்து வருவதை மட்டுமே அவர் கண்டார்… அவர்கள் மீது மலர்கள் விழுகின்றன். கதவு திறக்க ஓர் அழகிய காரில் இருவரும் ஏறி அமர்கின்றனர். ஹின்தாவி தன்னை மறந்தார். தன்னையறியமாலேயே காரை நோக்கி ஓடினார். ஏதோ ஒரு மர்ம சக்தி அங்கே அவரை இழுத்தது போலிருந்தது. காரின் யன்னலூடே தன் தலை நரை மூடிய தலையை நுழைத்து கவலை சொட்டும் நடுங்கும் குரலில் மெதுவாக…

‘அன்பு மகனே உனக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்’ என்றார்.
ஹஸ்ஸானின் கண்களில் எரிச்சல் டிரைவரை நோக்கி
‘டிரைவர் அவசரமாக அவசரமா எடு’ என்றான்.
பல கைகள் எதிர்பாராது பாய்ந்த பிச்சைகாரனை வேகமாக புறப்பட்டு விட்ட அந்தக் காரை விட்டு அப்புறப்படுத்த நீண்டன. அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர்.
‘ஏய் உனக்கு வெட்கமாயில்லை. அது பிச்சை கேட்கும் நேரமல்ல! ஆ இந்த பிடி எனக் கூறி சில சில்லறைகளை நீட்டினார்.
ஹின்தாவி அதனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவர் முணுமுணுத்தார்.
‘ஏன் மகன் என்ன அழகு!…….’
‘எனக்கு எவ்வளவு சந்தோஷமான நாளிது?’

பிரயோசனமென்று கருதாததை
நான் சொல்லவில்லை
பிரயோசமானதை நான்
சொன்னேனா?!
வாழ்ந்தால் உளச் சுதந்திரத்தோடு
வாழ்ந்திருப்பேன்.
நான் செய்தவைப் பற்றித் திருப்பதியுடன்
சந்தோஷமாக…..
இறந்தால் சுதந்திரமாக இறப்பேன்.
ஏனெனில்.
வாழ்வுக்கு ஒரு புதிய விலங்கை
நான் செய்து சேர்த்துவிடவில்லை.
(தத்துவக் கவி மஹ்மூத் அபுல் வபா)
தயவு செய்து இதனை பகிர்வதாக இருந்தால் மூலாதரத்தை குறிப்பிட்டு பகிரவும்

முகத்திரைக்கு தடைவிதித்த பிரான்ஸ் :தடை கூறும் சட்டமென்ன ? -பிரான்ஸ் அஸ்மா –

ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக “ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது” என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.

இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. இந்த சட்டத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்திலுள்ள இந்த இரண்டு வகைகள்தான் :

இவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.

ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு ‘அல் அஜ்ஹர் பல்கலைகழக’த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!