2083 கம்யூனிஸ்ட்கள் , முஸ்லிம்களுக்கெதிரான சிலுவைப்போர்

“எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி.”
– Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

“வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை,” என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை. நோர்வேயில் கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். (Youtube உடனுக்குடனே அழித்து விடுவதால், கீழேயுள்ள வீடியோவை சேமித்து வைக்கவும்.) மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது. 2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். “பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்.” – இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், “முஸ்லிம்கள்” என்று தான் குறிப்பிடுவார்கள்.)

“2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்” (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, “கலாச்சார மார்க்சியம்” ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் “கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை” எடுத்துக் காட்டுகின்றது. இரண்டாவது பகுதி, “ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்” பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். “வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி…” என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். “வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்…” என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் “இடதுசாரிக் கட்சிகள்” என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ-நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நான் புரிந்து கொண்ட நபிகளார் அ.மார்க்ஸ்

நூல் மதிப்புரை: ந. முத்துமோகன் ஒற்றுமை பத்திரிகைக்காக எழுதிய பதினேழு கட்டுரைகளும் கூடுதலாக பதினொரு கட்டுரைகளையும் சேர்த்து ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ என்ற பெயரில் அ.மார்க்சின் இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. மார்க்சியம், ப…ெரியாரியம் என்ற தளங்களிலிருந்து, இஸ்லாத்தை, இன்னும் பல மதங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது நம்முடைய காலத்தில் முக்கியமானதாக ஆகிறது. மதங்களைப் புறக்கணித்துச் செல்கின்ற நிலையிலிருந்து மதங்களுக்குள் புகுந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய அவசியங்கள் இருக்கின்றன. ஒரு மார்க்சியராக இருந்து கொண்டு அ.மார்க்ஸ் இந்தப் பணியைச் செய்கிறார் என்பது நல்ல விசயம். நாம் அறிந்து வைத்திருக்கின்ற இஸ்லாத்திற்கு 1400 ஆண்டுகால வரலாறு என்பது ஒரு புறமிருக்க, இந்த வரலாற்றில் அதன் ஆரம்பக் கட்டம், கலிபாக்களின் காலம், அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பேரரசாகப் பரவக்கூடிய காலம், இந்தியாவுக்குள் இஸ்லாம் வந்த காலம், உலக அளவிலான காலனி ஆட்சிக்காலம், காலனி எதிர்ப்புகள் தொடங்கிய காலம், இஸ்லாம் குறித்தான அல்லது அரபு தேசங்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய கற்பிதங்கள், இன்றைய இஸ்லாமின் நெருக்கடிகள் என இவை எல்லாவற்றுக்குள்ளும் புதையுண்ட ஒன்றாக தோற்றகால இஸ்லாம் குறித்த மதிப்பீடு மறைந்து கிடக்கிறது. உள்ளுக்குள் கிடக்கின்ற இந்த இஸ்லாமின் செய்திகளை இன்றைய அரசியல் சமூக பார்வையை கொண்டு மீட்டெடுத்தல் என்பது முக்கியமான பணியாகத் தெரிகிறது. அ.மார்க்சின் இந்தத் தலையீடு நல்ல ஒரு தலையீடு. இஸ்லாம் என்ற மதத்தை அணுகுவது எப்படி என்பதைப் பற்றி முறையியல் ரீதியாக சில கோட்பாடுகளை, சில வழிகாட்டுதல்களை மார்க்ஸினால் இந்த நூலில் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை அ.மார்க்ஸ் எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்க்கும்போது, நபிகள் நாயகம் எல்லா சாதாரண மனிதர்களையும் போலவே கருவானவர், உருவானவர், நோயுற்று மறைந்தவர் என்ற செய்தியைப் பதிவு செய்கிறார். அவர், அற்புதங்களை நிகழ்த்தாதவர், வெற்றி தோல்விகளை அனுபவித்தவர், நபிகளின் வாழ்வில் ஏழ்மை உண்டு, துயரம் உண்டு என்று நபிகளை அ.மார்க்ஸ் அறிமுகப்படுத்தக் கூடிய பின்புலம் மிக முக்கியமானது. வேறொரு கட்டுரையில் நபிகளின் மரணத்தை அவர் சித்தரிக்கிறார். நபிகள் இறைத்தூதர் என்றாலும் ஒரு மனிதருடைய மரணமாக – ஒப்பீட்டுக்காக சொல்வதாக இருந்தால் அவர் உயிர்த் தெழவில்லை என்ற இந்த மதிப்பீடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் அவதாரக் கடவுள்களை வைத்திருக்கிறோம், அவதாரங்களை வைத்திருக்கிறோம், இறை மைந்தர்களை வைத்திருக்கிறோம். ஒரு மதம் என்று சொன்னால் அதில் அதிசயத் தன்மை இருக்க வேண்டும். அதிசயங்களை நிகழ்த்தவில்லை என்றால் அவர் ஆண்டவனில்லை, ஆண்டவனோடு தொடர்பு கொண்டவரில்லை என்ற பார்வைகள் இருக்கக் கூடிய பின்புலத்தில் நபிகளை மனிதராக வாழ்ந்தவர், வயிறு நிறைய பேரீச்சம் பழங்களைக்கூட உண்ணாதவர், வணிகத்தில் ஈடுபட்டவர் நபிகள் என்று சித்தரிப்பது எல்லாமே வித்தியாசமான ஆனால் அவசியமான சித்தரிப்பு. இறை அனுபவங்களை பெறக்கூடிய நேரத்தில் ‘ஓதுவீர்’ என்ற அந்த இறைச்செய்தி கிடைத்தவுடன் அதனுடைய அர்த்தம் ஓரளவுக்குப் புரியாத நிலையில் மனைவி கதீஜாவிடம் ஓடிவந்தார் நபிகள். கதீஜா அது இறை செய்தியாக இருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பிறகுதான் நபிகள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த இறை செய்தியை ஏற்பவராக ஆகிறார். இறைசெய்தி நபிகளிடம் இறங்கும் பொழுது, அவர் அனுபவிக்கக் கூடிய உடல் வாதைகள், என்னுடைய உடம்பிலிருந்து உயிர் கிழித்தெறியப் பட்டது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது என்ற நபிகளி வார்த்தைகள் இவற்றையெல்லாம் மார்க்ஸ் பதிவு செய்கிறார். இறைவெளிப்பாடு என்பதை இந்திய தத்துவமரபில் பேரின்பம் என்று சொல்வார்கள். பேரின்பம் என்று சொல்வது அந்த செய்தி இறைவனிடம் இருந்து வந்தது என்பதை கௌரவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இறைச்செய்தி என்பது மிக சிக்கலான ஒரு அனுபவம். சமூகப் பிரச்சனைகளை சமய மொழியில் அனுபவிக்கக் கூடிய ஒரு மனிதர், நெருக்கடிகளை தன்னிலேயே அனுபவிக்கும் போது, இறைச் செய்தி என்ற ஒன்று அவருள் எப்படி நிகழ்கிறது என்பதை ரியலிஸ்டிக்காக என்று சொல்கிறோமே, அவ்வாறு எடுத்துக் காட்டுகிறார். இந்த தளத்தில் வைத்துப் பார்க்கும்போது நபிகளை அதிசயங்களுக்கு அப்பாற்பட்டவராக, சாதாரண ஏழையாக வணிகச்சூழலில் வாழ்ந்து, அலைந்து, திரிந்து அந்த மக்களின் பிரச்சனைகளை தன்னுடைய நெஞ்சிலே சுமந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்று நிரந்தரமாக தேடிக் கொண்டே இருந்து, அதற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அதன் மூலமாக புதியதொரு மதத்தை தொடங்குவது போன்ற ஒரு விடிவை நோக்கி நடந்து சென்ற மனிதராகக் காட்டுகிறார். இது அ.மார்க்சின் சித்தரிப்பு என்பது ஒரு புறமிருக்க இஸ்லாத்தின் தோற்றகாலச் சூழல்களை வெகுவாக நெருங்கிச் செல்லும் முயற்சியாகும். அ.மார்க்ஸின் இந்தச் சித்தரிப்பை முனைப்பாக நாம் முன்னெடுத்தச் செல்ல வேண்டும். இது போன்ற ஒரு சாதாரண மனிதராக நாம் ஏசுவை சித்தரிக்கத் தொடங்கினால் எப்படி சித்தரிப்போம். எப்படிச் சித்தரிக்க முடியும்? என்ற முயற்சிகளில் கூட ஈடுபடுவது நல்லது. இது போன்ற ஒரு சித்தரிப்புக்கு வள்ளலாரையோ, குருநானக்கையோ கூட நாம் ஆட்படுத்த வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு அற்புதமான எடுத்துக் காட்டாக மார்க்ஸ் ரொம்ப அழகாக நபிகள் நாயகத்தை இந்தப் புத்தகத்தில் வளர்த்தெடுக்கிறார். இரண்டாவது இந்த நூலில் பேசப்படும் விசயம், சமூகத் தளத்தை நோக்கி பரவும் பொழுது, இஸ்லாத்தின் சிந்தனை தோற்றம் எப்படி நிகழ்கிறது என்பதற்கான புறச் சூழல்களையும் அ.மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். இனக்குழு மரபுகளும் வணிகக்குழு மரபுகளும் நிறைந்த ஒரு வட்டாரமாக, உள்ளுக்குள் கிட்டத்தட்ட ஒரு புதிய சமூகத்தை உருவாக்கக் கூடிய நிலைக்கு அராபிய சமூகம் ஏற்கெனவே தயாராக இருந்தது. ஆனால் இனக்குழுக்களின் இடையிலான சண்டைகள், இனக்குழுக்கள் வணிகப் பாதைகளை கைப்பற்றுவது, வணிகக்குழுக்கள் இடையில் உள்ள சண்டைகள் என்ற சூழலில் ஒருங்கிணைந்த சமூக வாழ்வை உருவாக்கக்கூடிய தேடலுக்கு ஆட்பட்ட சமுதாயமாக அது இருந்தது. ஏற்கனவே அங்கு ஏக இறைக் கோட்பாட்டைப் பேசிய ஹனீப்கள் இருந்தார்கள். ‘அரேபியருக்கு ஒரு இறைத்தூதரை அருளுங்கள்’ என்ற ஒரு எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் ஏற்கெனவே தோன்றிவிட்டது என்ற செய்தியை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்த எதிர்பார்ப்பை விடுதலையின் ஊற்றுக் கண்ணாக ஆக்கியவர் நபிகள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். வரலாற்றின் நெருக்கடிகளில் எப்படி பிரம்மாண்டமான மனிதர்கள் தோன்றுகிறார்கள் என்பதைச் சொல்லுகிற இடமிது. திருக்குர்ஆனைப் பற்றி குறிப்பிடும்போது, அந்தக் காலத்தினுடைய சமகால அரசியல் ஆவணமாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அதைப்போல நபிகள், இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூக திட்டத்தைத் தந்தவர் என்று குறிப்பிடுகிறார். அறவியல் கூறுகள், அரசியல் கூறுகள், இறையியல் கூறுகள் கொண்ட திட்டமாகத்தான் நமக்கு அது கிடைக்கிறது. நபிகள் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலமாக யூதமதத்தையும், கிறித்தவ மதத்தையும் அதனுடைய சுற்று நிலைகளில் எடுத்துப் பார்த்தோம் என்றால் 7ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் தன்னுடைய துறவு நிறுவனங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த துறவு நிறுவனங்களின் பலத்தை மட்டுமே அது முன்னிலைப்படுத்திய காலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காலத்தில் நபிகள் உலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன்வைத்தார் என்பது முக்கியம். இந்த உலகிலேயே சமத்துவமும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை எப்படிக் கொண்டு வருவது என்ற ஒரு கேள்வியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதை அ.மார்க்ஸ் நன்கு எடுத்துக் காட்டுகிறார். நபிகளின் திட்டம் ஒரு அரசியல் கட்டுமானத்தை உருவாக்குவதாக இருந்தது என்பதை, நபிகளின் செயல்பாடுகள், அவை போர்களாக இருக்கலாம், அல்லது நபிகள் ஏராளமாக செய்து கொண்ட ஒப்பந்தங்களாக இருக்கலாம். அந்த ஒப்பந்தங்களிலும், போர்களிலும் சமூகத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதுதான் முனைப்பாக இருந்தது என்பதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட இஸ்லாத்திற்குள் துறவு நிறுவனம் கிடையாது என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். சூஃபியத்திற்குள் கொஞ்சம் துறவு நுழைந்திருக்கலாம், இருந்தாலும் துறவு நிறுவனங்களை, அப்பாலை சமயப் பண்புகளை சொல்லாத சமயம் இஸ்லாம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. நபிகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தியவர் என்பதை மிக அழகாக அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். துறவு மூலமாக, துறவினை நிறுவனமாக ஆக்குவதன் மூலமாக, வெறும் அறரீதியான போதனைகளை நிகழ்ததுவதன் மூலமாக, அல்லது அவரவர் தங்கள் மனங்களை செப்பமிட்டுக் கொள்வதன் மூலமாக என்ற தளங்களுக்குள்தான் மதங்கள் வேலை செய்து வந்திருக்கின்றன. நபிகளைப் பொறுத்த மட்டில் மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்தியவர், தன்னுடைய இயக்கத்தை ஒரு ரகசிய இயக்கமாக நடத்தியவர். நபிகள் வாழ்க்கையின் ஒருபகுதி தலைமறைவு வாழ்க்கையாக அமைகிறது. புலம் பெயர்ந்து செல்கிறார். இந்தத் தலைமறைவு, புலம் பெயர்தல், ஆயுதம் தாங்கியப் போராட்டம் இவை எல்லாம் சமகால அரசியல் சொல்லாடல்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமகால அரசியல் சொல்லாடல்களைக் கொண்டு நபிகளை அணுகும் போது நபிகளின் செயல்பாடுகள் புதிய தளத்தில் அர்த்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் பணியை இந்தப் புத்தகத்தில் அ.மார்க்ஸால் நன்றாக செய்ய முடிந்துள்ளது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம். அதுபோல் மேலை கிறித்தவம் இஸ்லாமின் தோற்ற காலத்திலிருந்தே நபிகளுக்கு எதிராக, இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டமைத்த கற்பிதங்கள் பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இறை அனுபவத்தின் போது உடல்வாதைகள் இருந்தன என்று நபிகள் சொல்கிறார் என்றால் அதைக் கொச்சைப் படுத்தக் கூடிய விதத்தில் அது இறை செய்தியல்ல, இது சாத்தானுடைய செய்தி என்று சொல்வது, இஸ்லாத்தை கிறித்துவத்திற்கு எதிரானது என்று சித்தரிப்பது, இதுபோன்ற கற்பிதங்களை எல்லாம் கட்டி எழுப்பினார்கள் என்பதைக் காண முடிகிறது. இந்தக் கற்பிதங்கள் பற்றி பலவேளைகளில் நாம் கவனப்படுத்தியது கிடையாது. ஆனால் உலக வரலாற்றின் மிக முக்கியமான விசயமாக இந்த கற்பிதங்கள் இருந்தன. ஒரு அர்த்தத்தில் ஐரோப்பிய சமூகம் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக, இந்தியர்களுக்கு எதிராக அல்லது கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு எதிராக கற்பிதங்களை உண்டாக்குவதற்கு மிக முன்னதாக இஸ்லாத்தை தனக்கொரு மிகப்பெரிய போட்டி சக்தியாகப் பார்த்தது. இது எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய சமூகம் இஸ்லாத்தையும், அரபு சமூகத்தையும், அதன் அரசியல் வடிவத்தையும் மிகப்பெரிய போட்டியாக நினைத்தது என்பதை மனதில் வைத்து பார்ப்போமானால் நமக்கு இந்தக் காலகட்டத்திலிருந்து கிடைக்கின்ற வரலாற்றை முழுவதும் வேறுவிதமாகப் பயிலுவதற்கு பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. கிறிஸ்தவ-இஸ்லாமிய போட்டியின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப் படவில்லை. இந்தப் போட்டியைப் பற்றி தனியாகக் கூட ஏராளமாக ஆய்வு செய்ய வேண்டுமென்பது முக்கியம். இந்தப் போட்டியில் ஓரளவுக்கு தோல்வியை சந்தித்தவர்கள் அரேபியர்கள் என்ற தளத்தில்தான் இன்றைய இஸ்லாம் வரையிலான நமக்குக் கிடைக்கக்கூடிய சித்தரிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தத் தோல்வி மனப்பான்மை என்பது அரேபியர்களை, இஸ்லாமியர்களை மேலும் மேலும் தங்களுக்குள்ளேயே, மத எல்லைகளுக்குள்ளேயே தங்களை அடக்கிக் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதையெல்லாம் கருத வேண்டியிருக்கிறது. 16-17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா காலனி ஆட்சியைத் தொடங்கிய போது அந்தக் காலனிய ஆட்சியினுடைய கொடூரமானத் தாக்குதல்களுக்கு அரேபிய சமூகம் / இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டது என்பதும், இந்தக் காலனி ஆட்சியில் பயன்படுத்தப் பட்ட வன்முறையை அரேபியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுடன் அந்த வன்முறையை அவர்களால் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூட முடியவில்லை என்பதெல்லாம் சேர்ந்துதான் பிற்கால இஸ்லாத்தின் வரலாற்றைத் தீர்மானித்தன என்று கூட சொல்ல முடியும். மேற்கு நாடுகள் தாங்கள் உருவாக்கிய இஸ்லாமுக்கு எதிரான கற்பிதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏராளமாக இறக்குமதி செய்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இறக்குமதி செய்தது. ஒட்டுமொத்த உலகின் அபிப்பிராயமாக சார்ந்த பிலாலுக்கு பாங்கு சொல்லும் உரிமையை வழங்கியது, அதைப்பார்த்து பலர் முகம் சுளித்த போதும் நபிகள் அதில் பிலாலின் பக்கமே நின்றது போன்ற விசயங்கள் இவையெல்லாம் இஸ்லாத்தின் சமூக உள்ளடக்கத்தை இன்னும் அதிகமாக பலப்படுத்துகின்றன என்று அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டி இருக்கிறார். முதல் கலீபா அபுபக்கர் ஆட்சி ஏற்கும் பொழுது சொன்ன ஒருவரியை எடுத்துச் சொல்லி இருக்கிறார். உங்களில் பலம் குறைந்தவரே என் கண்ணில் பலம் வாய்ந்தவர், அல்லாவின் விருப்போடு நான் அவருக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வரை இது தொடரும், உங்களில் பலமிகுந்தவர் என் கண்ணில் பலமற்றவராகவே தெரிகிறார். அல்லாவின் விருப்பத்துடன் அவர்களிடமிருந்து பிறரின் உரிமைகளை ஈட்டிக்கொடுக்கும் வரை. நான் அல்லாவுக்கும் அவன் தூதருக்கும் பணிந்து நடக்காத போது நீங்கள் என்னைப் பணிய வேண்டியதில்லை என்ற வாசகங்களை பதிவு செய்திருக்கிறார். மதங்களின் ஏக இறை கொள்கைக்கும் இன்றைய சில விவாதங்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஏக இறைக் கொள்கை என்பது புனித அதிகாரங்களுக்காக உருவாகி வந்தது என்ற குற்றச்சாட்டு மதங்களை நோக்கி வைக்கப்படுகிறது. ஆனால் நபிகளைப் பற்றி பேசும்போது அவருடைய ஏக இறைக் கொள்கையின் வழி மக்களை ஒன்று படுத்துவதே தவிர அதை அதிகார மையமாக உருவாக்கவில்லை என்பது. அபுபக்கரின் பலமிக்கவர், பலமற்றவர், உரிமைமிக்கவர், உரிமையற்றவர் என்ற சொல்லாடல் அதிகாரம் குறித்த கருத்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஏக இறை என்ற விஷயத்தை வைத்து ஒரு அதிகார மையமாக உருவாகாமல் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சமத்துவம் போன்ற தளத்தை உருவாக்க இஸ்லாம் முயற்சி செய்திருக்கிறது என்ற செய்திகளை நமக்கு இந்த நூல் சொல்கிறது. இந்த நூலை முதல் பார்வையில் பார்க்கும் பொழுது, அ.மார்க்ஸ் விமர்சனம் இல்லாமல் இஸ்லாத்தை ஆதரித்து ஒரு நூலை எழுதி இருக்கிறார் என்ற வெளித்தோற்றம் கிடைக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டுமல்ல, ஏசுவை மையமாக வைத்து கிறித்தவர்கள் வரலாற்றை, பௌத்தத்தின் வரலாற்றை, இந்திய நாட்டில் தோன்றிய சமயம் சார்ந்த சில சிந்தனையாளர்களின் வரலாற்றை அணுகிப் பார்ப்பதற்கான ஒரு முறையியலை இந்த நூல் தந்திருக்கிறது. எனவே விமர்சனம் இல்லாமல் ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்று சொல்வதற்கு இடமில்லை என்று நான் வலுவாக நம்புகிறேன். ந. முத்துமோகன் நான் புரிந்து கொண்ட நபிகள் ஆசிரியர் : அ.மார்க்ஸ் வெளியீடு : கருப்பு பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை – 5.விலை : ரூ.80/- பக்கம் : 204 நன்றி: கீற்று

மண்ணறை வாழ்க்கை

-K.L.M. இப்ராஹீம் மதனீ
உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَநிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள “ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍஇன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.
(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَஅவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் “என் இறைவன் அல்லாஹ்” என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் “என் மார்க்கம் இஸ்லாம்” என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். ‘மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்’ என்று அவர்களிடம் கூறப்படும்.
(புகாரி, முஸ்லிம்)ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், “(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்” எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், “(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!” என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு “கீராத்” நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு “கீராத்” நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .
பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .
அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.
அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.
அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .
நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?
வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.
உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ ‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)
பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?
மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)

நூற்கள்:- புகாரி, முஸ்லிம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்தது….

அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி) நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .
பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாகSee more
by: Jamal Mydeen

காதல் எனும் கருத்தாக்கமும் அல்குர்ஆனும் -உஸ்தாத் மன்ஸூர்-

[ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது. அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் …எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது. இரக்கம் அல்லது அருள் – ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன். அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது.] “காதல்” என்ற சொல்லுக்கு அரபு மொழியில் நிகரான சொல் “ஹுப்” என்பதாகும். எனினும் “ஹுப்” என்ற சொற்பிரயோகம் அன்பு, விருப்பம் என்ற கருத்தில் பொதுவாகவே அரபு மொழியில் பிரயொகிக்கப்படுகிறது. இந்த வகையில் “ஹுப்” என்ற சொற்பிரயோகத்தை அல்குர்ஆன் எவ்வாறு பாவிக்கிறது என்பதனை அல்குர் ஆனில் தேடினேன். முதலில் கணவன், மனைவி தொடர்பை விளக்கும் அல்குர்ஆனின் வசனங்களைத் தேடிய போது, அல்குர்ஆனின் வித்தியாசமான பிரயோகத்தைக் கண்டு ஆச்சரியப்படாதிருக்க முடியவில்லை. எங்கெல்லாம் “ஹுப்” என்ற சொற்பிரயோகத்தை பாவிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அல்குர்ஆன் அதனைப் பாவித்திருக்கவில்லை. “உங்களிலிருந்தே உங்களுக்கான ஜோடியை, அவளிடத்தில் நீங்கள் அமைதி காணவேண்டும் என்பதற்காகப் படைத்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே நேசத்தையும் இரக்கத்தையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்” (அர் ரூம்-21). இந்த வசனத்தில் “அமைதி காணல்” என்ற பிரயோகம் ஆண், பெண் தொடர்பின் நோக்கத்ததை மிக ஆழ்ந்து விளக்கிவிடுகிறது. வீட்டுக்கு வெளியே உழைத்து, போராடிவரும் ஆணுக்கு பெண்ணின் தொடர்பே அமைதியை வழங்குகிறது. வெளிப்போராட்டத்தில் சூடுபிடிக்கும் அவன் உடம்பும் நரம்புகளும் அமைதியடைகின்றன. அடுத்த பகுதி அவர்களுக்கு மத்தியில் இரக்கத்தில் நேசத்தையும் அல்லாஹ் ஆக்கியுள்ளதாக அல்குர்ஆன் கூறுகிறது. இங்கு அல்குர்ஆன் பாவித்த சொற்கள் “ரஹ்மத்”, “மவத்தா” என்பவையாகும். இவ்விரண்டு சொற்களும் ஆண், பெண்ணுக்கிடையிலான வித்தியாசமான தொடர்பைக் காட்டும் காதல் என்ற கருத்தில் ஒருபோதும் பிரயோகிக்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக “ரஹ்மத்” என்ற சொல் தாய் தந்தை பிள்ளையிடம் காட்டும் பரிவை, ஏழையிடம் காட்டுகின்ற அன்பை, இறைவன் அடியார்களிடம் கொண்டுள்ள அருளைக் காட்டவே பயன்படுத்தப்படுகிறது. “மவத்தா” என்ற சொல்லும் இயல்பான நேசத்தை, வெறியேதுமற்ற அன்பைக் காட்டவே பாவிக்கப்படுகிறது. வதூத் என்ற இச்சொல் இறைவனின் திருநாமங்களில் ஒன்றாக அல்குர்ஆன் பாவிக்கிறது. காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது. அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. ஆனால் அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது. இரக்கம் அல்லது அருள் – ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன். அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது. “ஹுப்” (அன்பு-காதல்) என்ற சொல்லையும் அல்குர்ஆன் சிலபோது பாவித்துள்ளது. அதனை எப்படிப் பாவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம். ஸூரா யூஸுஃப், இரு வகை அன்பு பற்றி விளக்குகிறது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகன் யூஸுஃபோடு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை அது விளக்குகிறது. அவரது அடுத்த பிள்ளைகள் பொறாமைப்படுமளவுக்கு யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் மீது யஃகூப் அலைஹிஸ்ஸலாம் கவலைப்பட்டார், அழுதார். யஃவுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கவலையை அல்குர்ஆன் தெளிவாக விவரிக்கிறது. அடுத்த வகையான அன்பு, யூஸுஃப், அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு எகிப்து நாட்டு மன்னனின் மனைவி வைத்த தொடர்பு. மன்னனின் மனைவி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது வலையில் வீழ்த்தி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள எவ்வாறு முயன்றாள் என்பதனை அல்குர்ஆன் விவரிக்கிறது. அந்தத் தொடர்பு பற்றிய செய்தி வெளியே எவ்வாறு பரவியது என விளக்கும் போது அல்குர்ஆன் “அவள் யூஸுஃப் மீது காதல் கொண்டு மயங்கினாள்” எனக் கூறுகிறது. இந்த இடத்தில் “ஹுப்” என்ற சொல்லை அல்குர்ஆன் பாவித்துள்ளது. பிழையான தொடர்பு என்ற கருத்தைக் கொடுக்கும் வகையிலேயே அல்குர்ஆன் இக்கதையை விளக்கிச் சொல்கிறது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தனது மகன் கொண்ட அன்பைப் பிழையானது என அல்குர்ஆன் காட்டவில்லை. காதல் ஒரு வகை வெறி, அது ஆசையையும், சுயநலத்தையுமே விளைவிக்கும். பல அனர்த்தங்களுக்கு அது காரணமாக இருக்கும். காதல் கொண்டவனின் கண்களையும் குருடாக்கி அறிவையும் அது மயக்கிவிடும்.பிள்ளைகள் மீது கொள்ளும் இரக்கம் அப்படியானதல்ல. அது பிறர் மீது இரக்கம் கொள்ள வைக்கும், மனதை இலகுவாக்கும், மென்மைப்படுத்தும். இப்பகுதியில் இன்னுமொரு வரலாற்று நிகழ்ச்சியையும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. எகிப்தில் வாழ்ந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னுடைய சமூகத்தோடு மோதிக் கொள்கிறார்கள். அப்படி மோதிய ஒரு சந்தர்ப்பத்தில் நாடு கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்பெண்கள் தமது தந்தையிடம் சொல்கிறார்கள். “அவரை வேலைக்காக நீங்கள் அமர்த்திக் கொள்ளுங்கள். பலமும், நம்பிக்கை, நாணயமுமுள்ள ஒருவரை வேலைக்கமர்த்தலே மிகச் சிறந்ததாகும்” எனக் கூறுகிறாள் ஒரு பெண்.பெண்ணின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட தந்தை அப்பெண்ணை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார். ஆரவாரமின்றி, அமர்க்களமின்றி நடந்து முடிந்த பரஸ்பரத் தொடர்பும் திருமணமும் இங்கு எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்புவது சாதாரணமாக நடக்கக் கூடியது. அது இவ்வாறு மிக இயல்பாக நடந்து முடிய வேண்டிய ஒன்று. அதற்கு மேல் அதனைப் பெரிதுபடுத்தி காதலாக்கி, அதில் தெய்வீகத்தைக் கலந்து லைலாவாகி – மஜ்னூவாகி விடுவதுதான் அர்த்தமற்ற செயலாகிறது. ஆண், பெண் தொடர்பு ஒரு பௌதீகத் தேவை. அதனை நிறைவு செய்யக் குடும்ப வாழ்வு என்ற அமைப்பே பொருத்தமானது. அக்குடும்ப ஒழுங்கை அழகாகக் கொண்டு செல்ல இரக்கமும், அன்பும் அவசியம். இக்கருத்தையே இந்த வசனங்கள் தருகின்றன. அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இந்த வசனங்கள் எவ்வாறு இக்கருத்தை அழகாக விளக்கியுள்ளன என்பதை இங்கே கண்டோம். உண்மையில் இக்கருத்தை அல்குர்ஆன் இந்த மூன்று இடங்களில் மட்டுமல்ல, குடும்பவாழ்வு பற்றி விளக்கும் பல குர்ஆன் வசனங்களிலும் நுணுக்கமாக விளக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். இங்கு நாம் நேரடியாக இக்கருத்தை விளக்கும் வசனங்களை மட்டுமே நோக்கினோம். இவ்வாறு எத்தலைப்பை அல்குர்ஆனில் நாம் ஆராய முற்பட்டாலும் அது அழகாக, தெளிவாக அத்தலைப்பு பற்றிய தனது கருத்தைத் தரும். அல்குர்ஆனின் இந்த சிறப்பம்சம் நாம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்!.,

வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல், மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக ஆட்சியாளர்கள் செயல்படுதல் போன்றவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் மீது வெறுப்புரும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் சர்வாதிகாரிகள் பலரை ஆட்சியைவிட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே துரத்தி அடித்துள்ளனர். சர்வாதிகாரம், மன்னாராட்சிகள் போன்றவை பெரும்பாலான நாடுகளில் 20ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும் சில நாடுகளில் அவை தொடரத்தான் செய்கின்றன.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.

2000 ஜனவரி – ஈக்குவடார்: அதிபர் ஜமில் மஹோத், தனது பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் பதவியிழந்தார்

2000 அக்டோபர் – முன்னாள் யுகோஸ்லாவியா: செர்பிய இரும்பு மனிதர் ஸ்லோபோடன் மிலோசெவிக், தேர்தல் முறைகேடுகளுக் கெதிராக பெக்ராடில் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தால் தனது பதவியிலிருந்து விலகினார், பின்னர் ஹாகுவிலுள்ள ஐ.நா வின் போர் குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார், அங்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்தார்.

2001 ஜனவரி – பிலிப்பைன்ஸ்: அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, 6 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சியில் நாடுமுழுவதும் பரவிய லஞ்ச லாவன்யத்தால், ராணுவ உதவியோடு 30 மாதங்கள் நடந்த மக்கள் புரட்சியால் தனது பதவியை இழந்தார்

2001 டிசம்பர் – அர்ஜென்டினா :அதிபர் பெர்னாண்டோ டி லரா , மக்கள் புரட்சிக்கெதிரான காவல்துறையின் கடும் அடக்குமுறை நடந்து ஒரே வாரத்தில் பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார், காவல்துறையின் கடும் அடக்குமுறையால் மக்கள் 27 பேர் உயிரிழந்தனர்.

2003 அக்டோபர் – பொலிவியா: அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசட சர்வதேச எண்ணெய் கம்பெனிகளிடம் நடத்திய பேரத்தின் விளைவாக ஏற்ப்பட்ட மக்கள் புரட்சியால் பதவிலிருந்து விலகி அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார், இந்த போராட்டத்தில் மக்கள் 65 பேர் உயிரிழந்தனர் ,

2003 நவம்பர் – ஜார்ஜியா : அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே, 30 ஆண்டுகளாக ஜார்ஜியா அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர், மைகேல் சாகஷ்விலி என்பவரது தலைமையில் நடந்த ரோஸ் புரட்சி என்றழைக்கப்பட்ட புரட்சியால் ஆட்சியை இழந்தார், தேர்தலில் அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே யின் கூட்டணி வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மைகேல் சாகஷ்விலி தலைமையில் நாடாளுமன்றத்தில் நுழைந்தனர்.

2004 பெப்ரவரி – ஹைதி : அதிபர் ஜீன் பெர்ட்ராந்து அரிஸ்டைடு மக்கள் போராட்டத்தாலும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்தாலும் தனது ஆட்சியை இழந்து தென்ஆப்பிரிக்காவில் தஞ்சமடைந்தார், நான்கு வாரங்கள் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர்.

2004 நவம்பர் – டிசம்பர் – உக்ரைன் : அதிபர் விக்டர் யானுகோவிச் முறைகேடாக நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த ரஷிய ஆதரவாளர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக ஆரஞ்சு புரட்சி என்றழைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் மேற்க்கத்திய ஆதரவாளர் விக்டர் யுஸ்செங்கோ அதிபரானார்.

2005 மார்ச் – கிர்கிஸ்தான்: அதிபர் அஸ்கர் அகயேவ் – அதிகரித்த லஞ்ச லாவண்யம் மற்றும் தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக பலமணிநேரம் நடந்த மக்களின் போராட்டத்தால் ஆட்சியை இழந்து ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டார்

2005 ஜூன் – பொலிவியா: அதிபர் கார்லோஸ் மேசா, தனக்கு முன் பதவியிழந்த முன்னாள் அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசடசாவை தொடர்ந்து அதிபர் பதவியேற்ற துணை அதிபர் கார்லோஸ் மேசாவும் மக்கள் எதிர்ப்பால் தனது பதவியை ராஜினாமா செய்தார்

2010 ஏப்ரல் கிர்கிஸ்தான் : அதிபர் குர்மன்பேக் பகியேவ், தனக்கு முன் பதவியிழந்த முன்னாள் அதிபர் அகயேவை தொடர்ந்து பதவியேற்ற, குர்மன்பேக் பகியேவ், மக்கள் புரட்சியால் தனது ஆட்சியை துறந்து பெலாரசில் தஞ்சமடைந்தார், இந்த புரட்சியில் மக்கள் 87 பேர் உயிரிழந்தனர்

2011 ஜனவரி – துனீசியா அதிபர் ஜைனுலாபீதீன் பென் அலி, 1987 முதல் ஆட்சியில் இருந்த அதிபர், மல்லிகை புரட்சி என்று அழைக்க்கப்பட்ட மக்கள் புரட்சியால் தனது ஆட்சியை துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார், இந்த புரட்சியில் 200 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்தனர்

2011 பிப்ரவரி – அரபு நாடான துனீசியாவில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து 2011 ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 18 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்

சினிமா! சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்!

சினிமா பற்றி சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை சமநிலைச் சமுதாயம் ஜனவரி இதழில் ஆளுர் ஷாநவாஸ் எழுதியிருந்தார்.

அண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான ‘மம்முட்டி’ அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.

ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியச் சூழலில், குறிப்பாக தமிழகத்தில் தலித்துகளும், முஸ்லிம்களும் இணைந்து அரசியல் சக்தியாக வடிவம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள், முஸ்லிம்களிடமிருந்து தலித்துகளையும், தலித்துகளிடமிருந்து முஸ்லிம்களையும் பிரிக்கின்ற சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சியின் நீட்சிதான் அம்பேத்கர் படத்திலும் எதிரொலிக்கிறது.

அம்பேத்கரை முஸ்லிம்களுக்கு எதிரானத் தலைவராக சித்தரிக்கும் செயலை இந்துத்துவ சக்திகள் நீண்ட காலமாக செய்து வருகின்றனர்.

அம்பேத்கர் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்படவும், முஸ்லிம்களைப் பற்றி தலித்துகளிடம் தவறான எண்ணம் பரவவும் பல்வேறு அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். எந்தக் காலத்திலும் இரண்டு சமூகங்களும் சேர்ந்துவிடாமல் இருக்க, என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் அவர்கள் கையாளுகின்றனர்.

அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்த சமூகம் முஸ்லிம் சமூகம். ஆனால், அந்த வரலாற்றை மறைத்து விட்டு, வட்டமேசை மாநாட்டில் சென்று முஸ்லிம்களுக்கு எதிராக அம்பேத்கர் பேசுவதுபோல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.

பாக்கிஸ்தான் பிரிவினையை ஆதரித்து முதன்முதலில் புத்தகம் எழுதியவர் அம்பேத்கர்.
ஆனால், ஜின்னாவை சந்தித்து பாக்கிஸ்தான் பிரிவினைக்கு எதிராக அம்பேத்கர் பேசுவது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இருப்பது போல எங்களுக்கும் உரிமைகளைத் தாருங்கள் என்று ஒரு முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டி தலித்துகளுக்காக கோரிக்கை வைத்தவர் அம்பேத்கர். ஆனால், ‘முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகை காட்டுகிறார்’ என்று காந்தியை அம்பேத்கர் விமர்சிப்பது போல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கருக்கு சில விமர்சனங்கள் இருந்தது உண்மை. ஆனால் அதை விமர்சனமாகப் பதிவு செய்யாமல், வரலாற்றுத் திரிபு செய்து அவரை முஸ்லிம் விரோதியாக சித்தரிக்கும் போக்கு இங்கே தொடர்கிறது.

அம்பேத்கர் படத்தில்தான் இப்படி என்றால்…சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பெரியார் படத்திலும், அதற்கு முன்னர் வெளிவந்த காமராஜர் படத்திலும் கூட முஸ்லிம்களின் நிலை இருட்டடிப்பு செய்யப்பட்டே இருந்தது. காமராஜர் படத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த எல்லா முக்கியச் சம்பவங்களும் மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருந்தன. காமராஜரின் எளிமையையும், மக்கள் நலன் சார்ந்த அவரது திட்டங்களையும், டெல்லி அரசியலில் அவர் செலுத்திய ஆளுமையையும், அவரது சமகாலத் தலைவர்களுடனான அவரது உறவையும் தெளிவாக படம்பிடித்திருந்தனர்.

ஆனால், காமராஜரின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய குடியாத்தம் இடைத் தேர்தலில், முஸ்லிம் லீக்கின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றது குறித்து படத்தில் எந்தப் பதிவும் இல்லை. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்தபோதும், காமராஜரின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவருக்கு ஆதரவாகத் திருப்பிய காயிதே மில்லத் பற்றி எந்தக் காட்சியும் இல்லை. ‘வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால் நான் தோற்றுப்போயிருப்பேன்’ என்று காயிதே மில்லத்தின் கரம் பிடித்து காமராஜர் நன்றி கூறிய வரலாறு, அந்தப் படத்தில் இடம் பெறவே இல்லை.

கலைஞர் அரசின் மானியத்துடன், கி.வீரமணியின் திராவிடர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட ‘பெரியார்’ திரைப்படத்திலும் இந்த அவலம் தொடர்ந்தது.

திராவிட இயக்கத்திற்கும், தமிழக முஸ்லிம்களுக்குமான உறவை வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும் இஸ்லாமிய நேசமும் முஸ்லிம்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளிலும், மீலாது சொற்பொழிவு மேடைகளிலும் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார். அங்கே அவர் முஸ்லிம்களின் அரசியல் பாதுகாப்பு குறித்து முழங்கினார். அது குறித்து அவரது குடியரசு ஏட்டிலும் எழுதினார்.

பெரியார் வழிவந்த அண்ணாவும், கலைஞரும் முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டனர். நீடித்து நிலைத்த அந்த உறவு அரசியல் அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்குகின்ற ஒரு சிறு காட்சி கூட பெரியார் படத்தில் இல்லை.

‘இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து’ என்று மேடைகள் தோறும் முழங்கினார் பெரியார். மதமாற்றத்தை ஆதரித்து தீவிர பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தவர் பெரியார். மீலாது விழாக்களில் பங்கேற்று ‘நபிகளாரின் சிந்தனைகளும், திராவிட இயக்க சிந்தனைகளும் ஒரே சிந்தனைகளே’ என்று வெளிப்படையாக அறிவித்தவர் தந்தை பெரியார். அவரது இந்த முழக்கங்கள் மருந்துக்குக் கூட அந்தப் படத்தில் இடம் பெறவில்லை.

மிக முக்கியமாக , காயிதே மில்லத் உடனான பெரியாரின் உறவு முழுவதுமாக அப்படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது . காயிதே மில்லத் இறந்தபோது புதுக்கல்லூரியில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலைப் பார்க்க, முதிர்ந்த நிலையிலும் மூத்திரச் சட்டியைக் கையில் ஏந்தியவாறு ஓடோடி வந்தவர். ‘தம்பி போயிட்டீங்களா’ என்று குமுறிக் கொண்டே வந்த அவர், ‘நான் போயி இவரு வாழ்ந்திருக்கக் கூடாதா’ என்று குலுங்கினார். உணர்வுப் பூர்வமான அந்த உறவு குறித்து பெரியார் படத்தில் எந்தக் காட்சியும் இல்லை.

பெரியார் படத்தில் ராஜாஜி வருகிறார்; அண்ணா வருகிறார்; கலைஞர் வருகிறார்; வீரமணி வருகிறார்.
ஆனால் கடைசி வரை காயிதே மில்லத் வரவே இல்லை.

தலைவர்களை புதிய தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் அரசு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது. காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அஞ்சல் தலைகள் வெளியிடப் பட்டுள்ளன. காயிதே மில்லத்தின் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காமராஜரின் வரலாறும், பெரியாரின் வரலாறும், அம்பேத்கரின் வரலாறும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு விட்டன.
காட்சி வடிவில் பதிவு செய்யப்படாத, எஞ்சிய ஒரே ஆளுமை நம் காயிதே மில்லத் மட்டும் தான்.
அவர் அவரது சமகாலத் தலைவர்களைப் பற்றிய படத்திலும் இல்லை; அவரைப் பற்றிய படமும் இல்லை.

காட்சி ஊடகத்தை, குறிப்பாக சினிமாவை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் கைப்பற்றி வைத்திருப்பதும், அத்துறை சார்ந்த புரிதல் முஸ்லிம்களிடம் இல்லாமல் போனதுமே இத்தகைய அவலத்திற்கு காரணம்.

காட்சி ஊடகத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நான் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறேன். சினிமாவின் அசுர பலத்தையும், பொதுச்சமூக மத்தியில் அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், சினிமாவில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் விதத்தையும், சினிமாத்துறை குறித்த முஸ்லிம்களின் சிந்தனைப் போக்கையும் பட்டியலிட்டு, அத்துறையில் பங்களிப்பு செலுத்த முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று நான் பேசுகிற போது எல்லோரும் என்னை ஏற இறங்கப் பார்க்கின்றனர்.

அப்படிப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி..’நாம் எப்படி சினிமா எடுக்க முடியும்?’ என்பது தான்.

சினிமாவைப் புறக்கணிப்பதற்கு முஸ்லிம்கள் சொல்லும் முக்கியக் காரணம் ‘அது ஒழுக்கக் கேடுகள் நிறைந்த சாக்கடை. அந்தச் சாக்கடையில் நாமும் சிக்கி விடக் கூடாதே’ என்பதுதான். முஸ்லிம்களின் இந்த வாதம் பலவீனமான வாதமாகும்.

மீடியாக்களின் பிதாமகனாகவும், வெகுமக்களின் சுவாசமாகவும் விளங்குகின்ற சினிமாவை விட்டு நாம் விலகி நிற்கின்றோம் என்றால், நமது வரலாறுகளை; நமது பண்பாட்டுக் கூறுகளை; நமது கலைகளை; நமது பங்களிப்புகளை; பொதுச்சமூக மத்தியில் எடுத்துச் சொல்வதில் இருந்து நாம் விலகி நிற்கின்றோம் என்றுதான் பொருள். இதனால் இழப்பு யாருக்கு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

சினிமா ஹராமா, ஹலாலா என்னும் மனக்குழப்பம் இன்னும் இங்கே தீர்ந்தபாடில்லை. முஸ்லிம் அறிவு ஜீவிகள் மத்தியில் கூட இந்த நிலையே நீடிக்கிறது. முஸ்லிம்களை கொச்சைப் படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பற்றி விமர்சனக் கட்டுரை எழுதினால் கூட எங்கே ‘சினிமா விமர்சனம்’ என்று கூறி சலசலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் முஸ்லிம் பத்திரிகைகள் மத்தியில் இன்னுமிருக்கிறது.
இதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.

சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது ஒரு ஆயுதம். அது மனித அறிவின், ஆற்றலின் அழகிய வெளிப்பாடு. அப்படிப்பட்ட சினிமா எப்படி ஹராமாக இருக்க முடியும்? நிச்சயமாக இங்கே சினிமா ஹராமானதல்ல. சினிமாவில் காட்டப்படுவது வேண்டுமெனில் ஹராமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

தவறானவர்களின் கையில் ஒரு சரியான பொருள் சிக்கியிருக்கிறது என்றால், அதை மீட்டு சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். அதுதான் தர்மம். அந்த தர்மத்திலிருந்து முஸ்லிம்கள் ஏன் விலகி நிற்கின்றார்கள்?

சினிமா என்னும் ஊடகத்தை முஸ்லிம்கள் புறக்கணித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் இழப்புகள் அளவிட முடியாதவை. கமலஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம், முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய படமாகும். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி, அவர்களுக்கு விசாரணைகள் அற்ற கொடூரமான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்திய படம்.

அந்தப் படம் வெளியானவுடன் கமலுக்கு எதிரான விமர்சன அம்புகள் புயலாய்ப் புறப்பட்டன.
பகுத்தறிவுவாதியான கமல்; முஸ்லிம்களின் தோழனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கமல்; சமரசமற்ற கலைஞனாக தன்னை முன்னிறுத்தும் கமல், இப்படியொரு அநீதியைச் செய்யலாமா? எனும் கேள்விகள் வெடித்துக் கிளம்பின.

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களில் ‘உன்னைப் போல் ஒருவனும்’ ஒன்றே தவிர அதுவே தொடக்கம் அல்ல. மணிரத்னம் ‘ரோஜா’ எடுத்த போதும், பின்னர் அது ‘பம்பாய்’ என்று பரிணாமம் பெற்ற போதும், விஜயகாந்தின் படங்கள் முஸ்லிம்களைக் குறி வைத்துக் குதறிய போதும், அர்ஜுனின் படங்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த போதும் முஸ்லிம்களிடமிருந்து உணர்ச்சி அலைகள் பொங்கி எழுந்திருக்கின்றன. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தி படங்கள் வெளிவருவதும், அவற்றுக்கு முஸ்லிம்கள் எதிர்வினை யாற்றுவதும் வழமையான ஒன்றாகிவிட்டது.

சினிமா ஒரு வலிமையான ஆயுதம் என்பது புரிகிறது. அந்த சினிமாவில் தம்மை கொச்சைப் படுத்துகின்றனர் என்பதும் தெரிகிறது. அப்படி கொச்சைப் படுத்துவதன் மூலம் வெகுமக்களிடமிருந்து தம்மை அன்னியப் படுத்தும் சதியும் கண் முன்னே விரிகிறது. அப்படியிருந்தும் முஸ்லிம்கள் ஏன் சினிமாவைப் பற்றி சிந்திக்கும் மனநிலைக்குக் கூட இதுவரை வரவில்லை?

‘உன்னைப் போல் ஒருவன்’ வெளியான போது கமலஹாசனை சந்தித்த சில முஸ்லிம் நண்பர்கள், படம் குறித்த தங்களின் விமர்சனங்களை அவரிடம் எடுத்துரைத்தனர். கமல் உடனான அந்தச் சந்திப்புக்கு இயக்குநர் அமீர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், கமலைச் சந்தித்து முறையிடக் கூடிய அந்த வாய்ப்பு கூட சினிமாவில் அமீர் என்று ஒருவர் இருப்பதனால் தான் சாத்தியமானது. அமீரும் இல்லையெனில், கமலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டுவதோடு நம் கடமை முடிந்து போயிருக்கும்.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நரசிம்மராவைச் சந்தித்து அவரைக் கேள்விக் கணைகளால் துளைத்தவர் கமல். மணிரத்னம் ‘ரோஜா, பம்பாய்’ என்று படமெடுத்தபோது முஸ்லிம்களின் பக்கம் நின்றவர் கமல். அப்படிப்பட்ட கமல்தான் காலச் சுழற்சியில் மணிரத்னத்தை விட மோசமானவராக மாறி, உன்னைப் போல் ஒருவனை எடுத்து முஸ்லிம்களை குதறினார்.
‘முஸ்லிம்களுக்கு ஆதரவான குரல்’ என்று யாரை நினைத்தோமோ, அந்தக் குரல்களே நம் குரல்வளையை நெறிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனி, எந்தக் களத்திலும் யாரை நம்பியும் பயனில்லை என்பதை காலம் ‘துறை வாரியாக’ நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. படிப்பினை பெறவும், மீள எழவும், இனியும் நாம் தவறினால் அதை விட அவலம் வேறு இருக்க முடியாது.

சினிமாவில் நமக்காக யாரும் பேசாதபோது, பேசுகிற ஒரு சிலரும் மோசமானவர்களாக மாறி நம்மை வஞ்சிக்கிறபோது, நமக்கான குரலாக நாம்தான் ஒலிக்க வேண்டும். காலம் கடத்தாமல் சினிமா குறித்து முஸ்லிம்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

சுமார் மூன்று மணி நேரம் தமது எல்லா அலுவல்களையும் ஒதுக்கிவைத்து விட்டு, செல்போனைக் கூட செயலிழக்கச் செய்துவிட்டு, கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி, சுற்றத்தோடும் நட்போடும் அலையலையாய் மக்களைத் திரையரங்குகள் நோக்கி அணிதிரள வைக்கும் வல்லமை வேறு எந்த ஊடகத்திற்கும் கிடையாது. பூட்டிய இருட்டு அரங்கத்திற்குள் விரியும் வெண்திரையில் என்ன காட்டப் படுகிறதோ அதுதான் செய்தி; அதுதான் சமூக நியதி என்றாகிவிட்டது.

வடிவேலு எனும் நகைச்சுவை நடிகர், திரையில் வாய்திறந்து சொல்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் பேச்சு வழக்காக மாறிப்போகின்ற அதிசயம் நிகழ்ந்து வருவதை நாம் அனுபவ ரீதியாக கண்டு வருகிறோம். நம் வீட்டு பிஞ்சுக் குழந்தைகள்கூட வடிவேலுவின் டயலாக்குகளைப் பேசி மகிழ்கின்றன. தீவிர மார்க்கப் பற்றுள்ள மூத்த ஆலிம் ஒருவருடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது, ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ’ என்று பேச்சு வாக்கில் சொல்லிச் சிரித்தார். ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா.. இவன் ரொம்ப நல்லவன்டா’ என்று பள்ளிவாசல் வராந்தாவில் நின்று கொண்டு இளைஞர்கள் ஒருவரையொருவர் கலாய்க்கின்றனர். இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்வது? பள்ளிவாசல் வராந்தா வரையிலும் வடிவேலுவைக் கொண்டு வந்துவிட்டது எது என்பதை ஆராய்ந்தால் சினிமா எத்தகைய சக்திமிக்க ஆயுதம் என்பது புலப்படும்.

”திரைப்படத்தின் முன்னேற்றம் பிரதி தினம், வாரமென்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு திரைப்படத்தை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். வேறு எந்தக் கலைக்குமே இந்த அளவிலான பரந்து பட்ட வெளிப்பாட்டிற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. இது திரைப்படத்திற்கேயான மிகப்பெரிய சாதகமான அம்சமும், அனுக்கிரகமுமாகும்” என்கிறார், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்
அடூர் கோபால கிருஷ்ணன்.

Adoor Gopalakrishnan

”இந்தியாவிலேயே அதிகமாக திரை அரங்குகள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. அதிகமான சினிமா பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்” என்கிறார் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன்.

”தமிழகத்தில் தொழிற்சாலைகளைவிட திரைஅரங்குகள் தான் அதிகம் உள்ளன. இந்தியாவின் மொத்த திரைஅரங்குகளில் சுமார் 25 % க்கும் மேலான அரங்குகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு திரையரங்கம் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஒரு திரைஅரங்கில் நான்கு காட்சிகளில் சுமார் 3000 பேர் தங்கள் பொழுதை செலவிடுகின்றனர்” என்கின்றன புள்ளிவிபர ஆய்வுகள்.

திரை அரங்கிற்கு உள்ளே மட்டுமின்றி திரை அரங்கிற்கு வெளியேயும் சினிமாவின் ஆதிக்கமே நிலவுகிறது. செய்தி ஊடகங்கள் அனைத்தும் சினிமாவை மைய்யப்படுத்தியே இயங்குகின்றன. எந்தப் பத்திரிகையைப் படித்தாலும், எந்தத் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் சினிமா,சினிமா,சினிமாவே தான். நடிகர் நடிகைகளின் பேட்டிகள், இயக்குனரின் அனுபவங்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், விருது வழங்கும் விழாக்கள், பாடல்கள், காமெடிகள், திரை விமர்சனங்கள், நட்சத்திரங்களின் வீட்டு விஷேசங்கள், திரைக் கலைஞர்களின் அரசியல் நடவடிக்கைகள் என சினிமாவைச் சுற்றியே இன்றைய மின்னணு மற்றும் அச்சு ஊடகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமெனில் திரைத்துறையில் நல்ல அனுபவமும், அங்கீகாரமும் இருந்தால் போதும் என்பதுதான் தம்மை ஆள்பவர்களுக்கு தமிழக மக்கள் நிர்ணயித்து வைத்திருக்கும் ஒரே தகுதி.

தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குத்தான் பெரும் அளவில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. பின்னர் அது அரசியல் சக்தியாக வடிவம் பெற்றது. கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தில் முதலமைச்சர்களாக சினிமாக்காரர்களே வர முடிகிறது. தேர்தல் வெற்றிக்கு நடிகர்களின் ஆதரவு தேவைப் படுகிறது.

ஆட்சியையே பிடிக்க உதவும் ஆயுதம் சினிமா என்றால், அதன் அசுர பலத்தை அளவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. அத்தகைய சக்தி வாய்ந்த ஊடகமான சினிமாவில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன என்பது ஆய்வுக்குரிய விசயம்.

Aloor Shanavas with ‘Kalaimamani’ SM.Umar

தமிழ் சினிமா நடிகர்களை வியட்நாம் மொழி பேசவைத்த அதிசய மனிதர் கலைமாமணி எஸ்.எம். உமர் அவர்களில் தொடங்கி, பருத்திவீரன் மூலம் தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திருப்பிய இயக்குநர் அமீர் வரை, ஏராளமான முஸ்லிம்கள் சினிமாவில் ஆளுமை செலுத்துகின்றனர். ஆனால், உமரைப் போலவும் அமீரைப் போலவும் வெளிப்படையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் வெகு சிலரே.

Aloor Shanavas with Director Ameer
இவர்களைத் தவிர, தமது அடையாளத்தை வெளிக்காட்டுவதற்கு கூட அஞ்சி பெயரை மாற்றிக்கொண்டு இயங்கும் முஸ்லிம்கள் பல நூறுபேர் இருக்கிறார்கள். தங்களின் உண்மையான பெயரைச் சொல்லக் கூட தயங்குபவர்கள் எப்படி கருத்தியல் ரீதியாக முஸ்லிம்களின் குரலாக ஒலிப்பார்கள்? அப்படிப்பட்டவர்கள் சினிமாவில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு துளியும் பயனில்லை.

முஸ்லிம் சமூகத்தின் அசலான முகத்தைப் புரிந்தவர்களை, திரைமொழி அறிந்தவர்களாக மாற்றும் போதுதான் நம்மைப் பற்றிய சினிமாவின் தவறான சித்தரிப்புகளை உடைத்தெறிய முடியும்.

சினிமா என்றாலே நடிகையைக் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போடுவது; குடித்து விட்டு அடிதடி செய்வது என்றே நாம் கருதுகிறோம். நாம் பார்கின்ற; நமது சூழலில் வெளிவருகின்ற சினிமாக்களை வைத்து இத்தகைய முடிவுக்கு நாம் வருகின்றோம். ஒருவகையில் இதுவும் பிழையான பார்வையே. உலகைக் கலக்கிய உன்னத சினிமாக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் விசாலமான பார்வையும், அவை பற்றிய குறைந்தபட்ச அறிமுகமும்கூட நமக்கு இல்லாததால் ஏற்பட்ட விளைவு இது.

இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்ற ஈரானிய சினிமாக்கள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கின்றன. ஈரானில் கேமரா என்னும் கருவியைத் தூக்கிக்கொண்டு ஈரானியப் பெண்கள் சினிமாக்களை எடுக்கின்றனர். தமது படங்களின் மூலம் ஏகாதிபத்தியத்திற்கும், உலகமயத்திற்கும் எதிராகப் போர் தொடுக்கின்றனர். உலகப்பட விழாக்களில் ஈரானியப் படங்கள் மிக எளிதாக விருதுகளை குவித்து வருகின்றன. ஈரானிய சினிமா என்றாலே இப்போது கலைஉலகம் சற்று மிரட்சியோடுதான் பார்க்கிறது.

Iranian Film Makers

யதார்த்தமான வாழ்க்கையை, ஏழையின் வலியை, காதலின் ஆழத்தை, குழந்தையின் கனவை, முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை, ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை என ஒவ்வொன்றையும் கலைப் பூர்வமாக உலகின் முன்னால் விரிக்கும் ஈரானியர்கள் மீது இன்று உலகின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஈரானியர்களுக்கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?

இந்துமதக் கோட்பாடுகளை மைய்யப் படுத்திய பக்திப்படங்களும், மூட நம்பிக்கைகளை விதைக்கும் புராணப் படங்களுமே தமிழ் சினிமா என்றிருந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார்கள் எம்.ஆர்.ராதாவும், என்.எஸ்.கிரிஷ்ணனும்.

வேதமந்திரங்கள் முழங்கிய தமிழ்த்திரையில் தங்களின் கூர்மையான எழுத்துக்களின் மூலம் மிகப்பெரும் வசனப்புரட்சிக்கு வித்திட்டனர் அண்ணாவும், கலைஞரும். திராவிட இயக்க கருத்துக்களைப் புகுத்தி, திரைத்துறையில் பலமிக்க சக்தியாக பரிணாமம் பெற்று, அதன்மூலம் தமிழகத்தின் ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் அவர்கள்.
அண்ணாவுக்கும், கலைஞருக்கும் சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களைத் தந்து, தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ‘இயற்கை’ திரைப்படம் வர்க்க முரண்பாடுகளைப் பற்றி பேசுகிறது. ‘ஈ’ திரைப்படம் உயிரைக்காக்கும் மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும், பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சோதனைக்களமாக பயன்படுத்தி வருவது பற்றியும், அவர்களின் சோதனை எலிகளாக இங்குள்ள தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைக்கப்படுவது பற்றியும் பேசுகிறது.

‘பேராண்மை’ திரைப்படம் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்தும், முதலாளித்துவ நாடுகளின் தாக்குதல்களிலிருந்து இந்தியாவை காக்கப் போராடும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் பேசுகிறது. இப்படி ஜனநாதனின் ஒவ்வொரு படங்களும் வெவ்வேறு கருத்தியலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளன. அவர் எடுத்த மூன்று படங்களுமே முத்திரை பதித்தன. ‘இயற்கை’ என்கிற அவரது முதல் படமே தேசிய விருதைப் பெற்றது.

Director S.P.Jananathan
ஜனநாதன், பெரியாரிய மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர்.
ஏகாதிபத்திய மற்றும் இந்துத்துவ பாசிச எதிர்ப்பாளர். அவர் கூறுகிறார்…”நான் எந்தக் கருத்துக்களால் ஈர்க்கப் பட்டேனோ, அதைப் படத்தில் நேரடியாகக் கையாண்டிருக்கிறேன். சமூகத்தில் அதிகமாக ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞனை படத்தில் நாயகனாக வைத்திருந்தேன்.’பேராண்மை’ படம் என்ன சாதித்தது என்றால், தமிழ்நாடு முழுவதும் 220 தியேட்டர்களில் தொடர்ந்து நான்கு காட்சிகளாக நன்றாக ஓடியிருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு நான்கு முறை பொதுவுடைமை அரசியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்” என்கிறார்.

மார்க்சியக் கருத்துக்களை எடுத்தியம்பும் களமாக சினிமாவை மாற்ற முடியும் என்பதை ஜனநாதன் நிரூபித்திருக்கிறார். மக்களுக்கான சினிமாவை முன்னெடுக்கும் முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜனநாதனுக்கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?

‘அங்காடித் தெரு’ என்றொரு படம். தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள பிரம்மாண்டமான துணிக்கடைகளில் உடலுழைப்பைச் செலுத்தி வெந்து போகும் அடித்தட்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களைப் பற்றிய அற்புதமான சித்திரம். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் குடும்ப வறுமையினால் துரத்தியடிக்கப்பட்டு, தி.நகர் துணிக்கடைகளில் துயரப்படும் அவலங்களைத் துல்லியமாகப் பதிவு செய்திருந்தது, அந்தப் படம்.

‘அங்காடித் தெரு’வில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி இல்லை. நமீதாவின் குத்தாட்டம் இல்லை. ஆபாசமான பாடல் வரிகள் இல்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் இல்லை. கிறிஸ்தவ வில்லன்களும் இல்லை. வழக்கமான தமிழ் சினிமாவின் கூறுகளை உடைத்தெறிந்துவிட்டு ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலைப் படம்பிடித்திருந்தார் இயக்குநர் வசந்த பாலன்.

எந்தப் பத்திரிகைகள் மோசமானப் படங்களைத் தூக்கிக் கொண்டாடுகின்றனவோ; எந்தத் தொலைக்காட்சிகள் ஆபாசமான சினிமாக்களை ஆராதிக்கின்றனவோ; எந்த மக்கள் கேவலமான சினிமாக்களின் ரசிகர்களாக இருக்கின்றார்களோ; அந்தப் பத்திரிகைகள் தான் அங்காடித் தெருவை கொண்டாடின. அந்தத் தொலைக்காட்சிகள் தான் அங்காடித் தெருவை ஆராதித்தன.
அந்த மக்கள் தான் நூறு நாட்களைத் தாண்டி ஓட வைத்து, அங்காடித் தெருவை வெற்றிப் படமாக்கினர்.
வசந்த பாலனுக்கு சாத்தியமானது நமக்கு சாத்தியமாகாதா?

ராமன் என்னும் ஒரு புராணப்பாத்திரத்தை கதை நாயகனாக்கி, ‘ராமாயணத்தை’ இந்துத்துவ சக்திகள் படமாக்கியிருக்கின்றனர். அதை தொலைக்காட்சிகளில் தொடராக வெளியிடுகின்றனர்.
வரலாற்றுச் சான்றுகள் இல்லாத; வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத; காட்சிப்பதிவுக்கான கூறுகள் அற்ற;

நடைமுறை வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத; பகுத்தறிவுக்குப் பொருந்தாத வெற்றுக் கற்பனைப் பாத்திரத்தையே படம்பிடிக்க முடியுமென்றால், வரலாற்று நாயகனாய் வாழ்ந்து மறைந்த பாபரை ஏன் படம் பிடிக்க முடியாது? ‘பாபர் நாமா’வை ஏன் சினிமாவாக்க முடியாது? நமக்கா கதைக்குப் பஞ்சம்?

செழுமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட; வீரமும் தியாகமும் நிறைந்த பாரம்பரியத்தை உடைய; அளப்பெரும் பங்களிப்புகளை உலகிற்கு அள்ளித்தந்த; இழப்புகளுக்கும் இடர்களுக்கும் இலக்காகி, துடிக்கிற நம்மிடமா கதைக்குப் பஞ்சம்?

நாடறிந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், முஸ்லிம் பக்கீர்களின் வாழ்வியலை அழகாக ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பக்கீர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் ஏன் ஒரு திரைக் கதையை தேர்வு செய்யக்கூடாது?

இயக்குநர் ஷங்கரின் படங்கள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும், அவர்களைப் பழிதீர்க்கும் ஹீரோயிசத்தையும் காட்சிப் படுத்துகின்றது. ஷங்கர் தனது படங்களில் சொன்ன விசயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னாலும், அவர் கதையை நகர்த்தும் தன்மையிலும் காட்சியமைக்கும் உத்தியிலும் மக்களை வெகுவாக ஈர்க்கிறார். ஊழலைப் பற்றியும், லஞ்சத்தைப் பற்றியும், ஆக்கிரமிப்பைப் பற்றியும் படமெடுப்பதற்கு ஷங்கர் தேர்வு செய்யும் கதைக் களங்களை விட, நம்மிடம் மிக வலுவான கதைக்களம் இருக்கிறது.

வக்பு நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவது பற்றியும், அதை அபகரித்து வைத்துள்ள அதிகாரவர்க்கம் பற்றியும், வக்பு அதிகாரிகளிடம் புரையோடிப் போயுள்ள லஞ்சம் பற்றியும் எத்தனை விறுவிறுப்பான திரைக்கதையை அமைக்க முடியும்!

விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமை முழுவதையும் சிறையில் இழந்து, குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்ட , இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையில் வாடுகிற பல நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையையும்,
அவர்களின் துடிப்பான இளமையை சூறையாடிய இந்துத்துவ அரசியலையும், அவர்களின் குடும்பங்களின் துயர அவஸ்தைகளையும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விசயத்தில் அரசுகள் நடந்துகொள்ளும் பாரபட்சத்தையும் மைய்யப்படுத்தி, திரைக்கதை எழுதத் தொடங்கினால்…மக்களை உலுக்கியெடுக்கும் பல நூறு சினிமாக்களை நம்மாலும் படைக்க முடியும்.

மேலப்பாளையத்தில் பீடி சுற்றும் முஸ்லிம்களின் வாழ்வியலையும்; வட மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தும் முஸ்லிம்களின் வறுமையையும்; சென்னையில் சேரிகளில் வசிக்கும் அடித்தட்டு முஸ்லிம்களின் அவலங்களையும்; ‘முஸ்லிம்’ என்ற ஒரே காரணத்திற்காகவே வாடகை வீடு கிடைக்காமல் பெருநகர வீதிகளில் அல்லல்படுபவர்களின் துயரத்தையும்;
தகுதியிருந்தும், திறமையிருந்தும் முஸ்லிம் பெயர் இருப்பதனாலேயே வேலை கிடைக்காமல் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகளால் நிராகரிக்கப்படும் முஸ்லிம் இளைஞர்களின் வேதனையையும் என்று… நாம் படம் பிடிப்பதற்கு அடுக்கடுக்கான கதைக் களங்கள்; ஆயிரமாயிரம் கண்ணீர் கதைகள் உள்ளன.

தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில் தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

தமிழ் சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப் படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் ‘ஹரே பாய்..நம்பல் கீ’ என்றுதான் பேசுகிறார்.

இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? ‘நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்’ என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டதை நாம் என்று உணரப்போகிறோம்.ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?

‘சாதம்’ என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் ‘சோறு’ என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை ‘ஆணம்’ என்றும் பழையதை ‘நீர்ச்சோறு’ என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் ‘பசியாறினாயா’ என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் ‘தொழுகை’ என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?

நாம்தானே செய்ய வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும்; வலியும் வேதனையும் புரியும். நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும்.
திரைமொழியைக் கற்றுக் கொண்டால்தான் அதை நம்மால் சாத்தியப்படுத்த முடியும்.

கேரளாவில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வருவதை உலகமே அறியும். அவர் குற்றமற்றவர் என்பதும், அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகியிருப்பவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாக, அனாதைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காக அன்வாருல் உலூம் என்ற பெயரில், ‘அன்வார்சேரி’ எனும் ஊரில் மிகப்பெரும் கல்விச்சாலையை நிறுவிய மனிதநேயர் அவர் என்பது, கேரள மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால், அதே கேரளாவில்தான் அண்மையில் நடிகர் பிருத்விராஜ் நடித்த ‘அன்வர்’ என்ற திரைப்படம் வெளியாகி, கேரள முஸ்லிம்களை தீவிரவாதியாகச் சித்தரிக்கும் வேலையை மிகக் கூர்மையாக செய்து முடித்திருக்கிறது.
‘அன்வர்’ என்ற படத் தலைப்பு, மதானியின் கலாசாலையான அன்வாருல் உலூமை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இத்தனை மோசமான சித்தரிப்புகளுக்குப் பிறகும் நாம் சினிமாவை மீளாய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக, ‘ஹராம்’ என்று ஒதுக்கி வைத்தால் மீள முடியாத இழப்புகளுக்கு நாம் ஆளாகுவோம்.

எப்படி ஒரு காலத்தில் நாம் தொலைக்காட்சியை ‘ஹராம்’ என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட்டு,
பின்னர் உலக அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் தொலைக்காட்சி மூலம் கருத்துருவாக்கம் செய்யத் தொடங்கிய பின்னர், தாமதமாகப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினோமோ, அதேதான் இப்போது சினிமா விசயத்திலும் நமது நிலைப்பாடு.

இன்னும் கொஞ்ச காலத்தில் சினிமா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் வந்த பிறகு, இப்போதே வந்து விட்டது. வேறு வழியே இல்லாமல் அதை எப்படி பயன்படுத்துவது என்று நாம் பரிசீலனையில் இறங்குவோம்; சோதனை முயற்சிகளில் ஈடு படுவோம். அப்போது சினிமா எங்கேயோ போயிருக்கும். அதன் தொழில்நுட்பம் கட்டற்ற வளர்ச்சியை அடைந்திருக்கும்.

அதன் எந்த அம்சத்தையும் நாம் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பரிணாமம் பெற்று நாம் தொடவே முடியாத உயரத்தில் நிற்கும். அப்போதுதான் நாம் சினிமா பற்றி ‘ஏபிசிடி’ கற்கத் தொடங்குவோம். அதுதானே நமது வழக்கம். தொலைக்காட்சி விசயத்தில் அதுதானே நடந்தது.

‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல், தொலைக்காட்சியை காலம் தாழ்த்திப் பயன்படுத்தத் தொடங்கியதால் தானே அதன் வளர்ச்சிக்கு நம்மால் இன்றைக்கு வரை ஈடுகொடுக்க முடியவில்லை. தொலைக்காட்சியின் தொழில்நுட்ப மொழி புரியாமல் அதில் நாம் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி நான் பலமுறை விரிவாக எழுதியுள்ளேன்.

எல்லா தொழில்நுட்பங்களையும், அறிவியல் வளர்ச்சியையும் ‘ஹராம்! ஹராம்!’ என்று சகட்டு மேனிக்கு ஒதுக்கித் தள்ளியதால் ஏற்பட்ட இழப்புகளை நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளத் தொடங்கிய நாள் முதல் நாம் வலிமை இழக்கத் தொடங்கினோம்.

நம்முடைய சாம்ராஜ்ஜியங்களை இழந்தோம்; நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன; நம்முடைய நிலப்பரப்புகள் எளிதில் எதிரிகளின் சூறையாடலுக்கு இலக்காகின; நம்முடைய வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டன; நமது கடந்தகால வரலாறுகள் திரிக்கப்பட்டன; நம்முடைய ஆவணங்களும், அருங்காட்சியகங்களும் அழிக்கப்பட்டன; நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன; ஆதிக்க சக்திகளிடம் கை கட்டி நிற்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளானோம்; வீரம் செறிந்த ஆளுமைகள் வீழ்த்தப்பட்டு போலிகளும், பொம்மைகளும், கைப்பாவைகளும் அதிகாரத்தில் அமர்த்தப் பட்டார்கள்.

அறிவியலையும், வரலாற்றையும், தொழில்நுட்பத்தையும், நவீன உத்திகளையும் நாம் கையாண்ட காலம் வரை நாம் தான் உயர்ந்து நின்றோம். நாம்தான் மதிக்கப்பட்டோம், நாம் தான் முன்மாதிரியாக இருந்தோம். அந்த வரலாறுகளை நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய நேரம் இது.

நடிகையின் கவர்ச்சிப் படங்களுடன் வெளிவருவதனாலேயே, நாம் நாளிதழ்கள், வார இதழ்களைப் புறக்கணிப்பதில்லை. எல்லா சீரழிவுகளையும் ஒன்று திரட்டித் தருவதனாலேயே, நாம் இணைய தளத்தை நிராகரிப்பதில்லை. முறைகேடான உறவு முறைகளை போதிக்கும் தொடர்கள் வருவதனாலேயே, நாம் தொலைக்காட்சி இணைப்பை துண்டித்து விடுவதில்லை.
ஒழுக்கக் கேட்டிற்கு எளிதாக வழியமைக்கிறது என்பதனாலேயே, நாம் செல்போனை தூர எறிவதில்லை.

நாளிதழ்களும், தொலைக்காட்சியும் , இணையதளமும், செல்போனும் தொழில்நுட்பம் வழங்கிய கொடை. இவை அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், அவைகளை விடவும் பல மடங்கு வலிமை வாய்ந்த உயரிய தொழில்நுட்பமான சினிமாவை மட்டும் நாம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறோம்.

இஸ்லாம் எதையுமே கண்ணை மூடிக் கொண்டு ‘ஹராம்’ என்று சொல்லியதில்லை. இஸ்லாம் ஒன்றை ஹராம் என்று தடுத்தால் அதற்கு மாற்றாக வேறொரு ஹலாலான வழிமுறையை சொல்லியிருக்கிறது.
வட்டியை ஹராம் என்று சொல்லும் இஸ்லாம், ‘வட்டியில்லா வங்கி’ முறையை ஹலாலாக்கி இருக்கிறது. நாம் சினிமாவை ‘ஹராம்’ என்கிறோம். அப்படியென்றால் அதற்கு மாற்று? ஒரு பலம் பொருந்திய ஊடகத்தை மிக எளிதாக ஹராம் என்று நிராகரிக்கத் தெரிந்த நமக்கு,
அதே அளவு பலம் மிகுந்த ஒரு மாற்று ஊடகத்தை உருவாக்க முடிந்ததா?

இன்றைய வணிக சினிமாவிலிருந்து முரண்படும் இடது சாரிகள், தங்களின் கருத்துக்களை வெகுமக்களிடம் பரப்புவதற்காக ‘முற்போக்குக் கலை’ என்னும் கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளனர். வைரமுத்து சொன்னதைப் போல பூட்டுகளே கதவுகளாகத் தொங்கும் கோடம்பாக்கத்தில், நுழைய முடியாத ஒடுக்கப் பட்ட தலித் மக்கள், தங்களின் வாழ்வியலை வெகுமக்களுக்குச் சொல்ல ‘தலித் கலை’ என்னும் கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

நாம் என்ன கலை வடிவத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்?

சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் என ஊடகத்தின் அத்தனை வகை பரிணாமங்களிலும் உயர்சாதியினரே கோலோச்சியுள்ளனர். எவராலும் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாத பலமிக்க சக்திகளாய் அவர்களே நிலைகொண்டுள்ளனர். ஆனாலும், அந்தப் பெருமிதத்தோடு அவர்கள் நிறைவடைந்து விடவில்லை. நாளுக்கு நாள் கலைஞர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
டிசம்பர் மாதம் முழுவதும் மியூசிக் அகாடமி நிரம்பி வழிகிறது. சென்னையின் எல்லா சபாக்களும் கச்சேரிகளால் களை கட்டுகின்றன. கலாஷேத்ராவில் கலைஞர்களை வார்த்தெடுக்கும் பட்டறை நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டறைகளிலிருந்து வெளியே வரும் உயர்சாதி கலைஞர்கள்தான், இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷனுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நாம், கலைஞர்களை தேர்வு செய்யும் இடத்திலும் இல்லை; கலைஞர்களாகவும் இல்லை.
நம்மிடம் கலைஞர்களை உருவாக்கும் பட்டறைகளும் இல்லை, கலைகளைப் பற்றிய உருப்படியான புரிதலோ, தெளிவான பார்வையோ இல்லை. லிபியாவில் நடந்த விடுதலைப் போராட்டத்தை சித்தரிக்கும் ‘ஒமர் முக்தார்’ திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வு இன்று வரை நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அத்திரைப்படம் வந்தக் காலத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் எல்லாம் ‘ஒமர் முக்தார்’கள் ஆனார்கள்.
லிபியாவின் போராட்ட வரலாற்றை புத்தகமாக்கிக் கொடுத்திருந்தால், படிக்கும் பழக்கமற்ற நம் சமூக அமைப்பில் அது எந்த, பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. காட்சி வடிவில் படமாக்கிக் கொடுத்ததனால்தான் அது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. இது தான் அச்சு ஊடகத்திற்கும், காட்சி ஊடகத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரும் வேறுபாடு.
காட்சி ஊடகத்திற்கே உரிய தனிப்பெரும் சிறப்பு.

இறுதியாக இயக்குநர் சீமானின் வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறேன்.

” ஈரான், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் அனைத்தும் திரைப்படங்கிற வலிமை மிகுந்த ஊடகத்தை போர்க்கருவியா பயன்படுத்தி சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுறாங்க. நாம மட்டும்தான் அதை கண்ணு வழியே போதையேத்துற விபச்சார விடுதி, சாராயக்கடை மாதிரி பார்க்கறோம். காரணம் கேட்டால் ஒரே வார்த்தையில் அது பொழுது போக்குன்னு சொல்லிடுறான். இந்தியா மாதிரி நாட்டுக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கிடக்கு? பொழுதை ஏன் போக்கணும், பேசாம இருந்தா அது பாட்டுக்கு போயிடாதா? அந்தப் பொழுதை மிக நல்லப் பொழுதாக எப்படி மாத்துறதுங்கிறதைப் பத்திதான் இனி நாம யோசிக்கணும்”

இது, சீமானின் வார்த்தை மட்டுமல்ல..,
இனி நம் வாழ்க்கையும் கூட!

[சமநிலைச் சமுதாயம் ஜனவரி – 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]

சகோதரி சாரா மாலனியின் கைதும் கேள்விக்குறியாகும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலமும்

“அல்லாஹ்வின் ஒளியை அவர்கள் (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர்.இந்நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் கூட அல்லாஹ் தனது ஒளியைப் பூரணப்படுத்தியே தீருவான்”
அல்குர்ஆன் 61 : 08
இலங்கை நாடானது ஜனநாயக சோசலிசக் குடியரசாகும்.தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கும் கருத்து வெளியீட்டிற்கும் பூரண சுதந்தரமுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக்குழுவாக விளங்கும் முஸ்லிம்கள் அரசியல் பொருளாதார சமூக கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 26 ஆகும். இது 8 வீத இலங்கை முஸ்லிம்களின் விகிதாசாரத்தையும் தாண்டிய பிரதிநிதித்துவமாகும்.என்றாலும் அண்மைக்காலமாக இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டமும் சிறுபான்மை மக்களின் இயல்பு நிலையும் சர்வதேச அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளமை யாரும் அறிந்த உண்மையாகும்.பௌத்த தேசியவாதம் தற்ப்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில் பௌத்த இனவாதக் கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.நிறைவேற்றப்படாத அரசியல் அபிலாசைகளைக் கொண்ட இலங்கை முஸ்லிம்களுக்கு அண்மையில் வித்தியாசமான அனுபவத்திற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

பௌத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத்தழுவிய இலங்கைப் பெண் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்கான சந்தேகத்தின் பேரில் கடந்த மார்ச் 17 ம் திகதி கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றான “மிரிஹான போலீஸ்” நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.என்றாலும் அவர் கைது செய்யப்பட்டமைக்கான உண்மையான காரணம் இஸ்லாம் மதத்தைத் தழுவி அது சம்பந்தமாக இரு நூல்களை எழுதியமையாகும்.

வளைகுடா நாடான பஹ்ரைனை வதிவிடமாகக் கொண்ட “மாலனி பெரேரா” எனும் 38 வயதுடைய பௌத்த மத குடும்பத்தில் பிறந்த இப்பெண் 1980களில் பஹ்ரைன் சென்றுள்ளார். 1999ல் சத்திய நெறியான இஸ்லாத்தைத் தழுவியதோடு இவரது பெற்றோர் உட்பட சகோதரிகளும் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.பின் தனது பெயரை “சாரா மாலனி பெரேரா” என மாற்றிக்கொண்டார்.

அண்மையில் மூன்றுமாத விடுமுறையில் தனது தாய் நாடான இலங்கை வந்த மாலனி சத்திய நெறியான இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தமைக்கு தூண்டுகோளாயமைந்த காரணங்கள் அதுபற்றிய தனது அனுபவம் சம்பந்தமாக “அதுரென் எளியட”(இருளிலிருந்து ஒளியை நோக்கி) மற்றும் “பிரஷ்ன ஹா பிளிதுரு”(கேள்வி பதில்) எனும் இரு நூல்களை இலங்கை பெரும்பான்ம மொழியான சிங்கள மொழியில் அச்சிட்டுள்ளார்.பின் இவற்றில் சில பிரதிகளை பஹ்ரைன் நாட்டிற்கு விமான மூலம் அனுப்புவதற்காக வேண்டி சேவை நிறுவனமான “அரமெக்ஸ் கொரியர் சர்வீஸ்”(Aramex Courier Service) – இது இலங்கை பௌத்த தேசியவாத கட்சியும் தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியுமான “ஜாதிக ஹெல உறுமய” இன் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் துறை அமைச்சருமான “சம்பிக்க ரணவக்க” இன் பங்காளி நிறுவனமாகக் கருதப்படுகின்றது.- இற்குச் சென்றுள்ளார். இந்நூல்களை அனுப்புவதற்கு அச்சேவை நிறுவனம் சாரா மாலனியிடம் இலங்கை கலாச்சார அமைச்சின் அத்தாட்சிக் கடிதம் கொண்டு வருமாறு வேண்டியுள்ளது.குறிப்பிட்ட நிறுவனத்தின் முகாமையாளர் கொடுத்த துப்பின் அடிப்படையில் திரும்பவும் பஹ்ரைனை நோக்கி பயணிப்பதற்கு தயாராகுகையில் சாரா மாலனி கைது செய்யப்பட்டதாக அவரது மூத்த சகோதரி மர்யமை மேற்கோள்காட்டி பிபிசி சிங்கள சேவை செய்தி வெளியிட்டது. சாரா கைது செய்யப்படுகையில் பஹ்ரைனிற்கான அவரது வதிவிட வீசா காலாவதியாவதற்கு அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சத்திய நெறியான இஸ்லாத்தை தழுவியமை மற்றும் அது பற்றிய தனது அனுபவத்தை நூலுருவில் தொகுத்தமை ஆகிய இரு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்ட சாராவை விடுவிப்பதற்கு அவரது அவரது உறவினர்கள் வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு பதிவதற்கு முயற்சித்தாலும் போலீசார் அவசரகால சட்டத்தின் (Emergency Law ) கீழால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறி மறுத்துவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் சாரா மாலனி தேச விரோத செயல்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக அபாண்ட பலி சுமத்திய தேசிய போலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் அக்குற்றச்சாட்டு சம்பந்தமான தகவல்களை பிபிசி நிருபர் வினவியபோது அதுபற்றிய தகவல் தன்னிடமில்லை என்று கூறி தடுத்து வைத்துள்ள பொலிசாரிடம் இருக்கலாம் என்றார். ஆனாலும் குறிப்பிட்ட போலிஸ் நிலையம் இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தேக நபரை கைதுசெய்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட வேண்டிய 24 மணிநேரத்தையும் தாண்டி தனது சகோதரியை தடுத்து வைப்பதற்கு போலீசார் நிற்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பின்னணியில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் சாராவின் சகோதரி மர்யமை மேற்கொள்காட்டி “லங்கா ஈ நியூஸ்” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவற்றிலிருந்து தெளிவாவது என்னவென்றால் சாரா மாலனியின் கைதின் பின்னால் அரசியல் செல்வாக்கு உள்ளது. அத்தோடு இது நிறுவனமயப்படுத்தப்பட்டு வரும் இலங்கை முஸ்லிம் இன சுத்திகரிப்பிற்கான முத்தாய்ப்பாகும்.

இலங்கை முஸ்லிம் கவுன்சில் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்காக வேண்டி இராஜதந்திரிகள் , வழக்கறிஞர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு சகோதரி சாரா மாலனியின் விடுதலைக்காக பிரார்த்திக்குமாறு முஸ்லிம் உலகை கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு இன்றைக்கு 15 நாட்களாக நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள சகோதரி சாராவை மீட்பதற்கு முன்வருமாறு பஹ்ரைன் “Discover islam” நிறுவனம் பஹ்ரைன் அதிகாரிகளிடமும் அனைத்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.