நாம் அந்நியர்கள்…

நாம் அந்நியர்கள்…

சகோதரர் காலித் யாசின் (Khalid Yasin) அவர்கள், தன் பதினாறாம் வயதில் இஸ்லாத்தை தழுவியவர். பலரையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தவர். அவர், “Strangers” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

“சிறு வயதிலிருந்தே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்மையாளராக, உண்மையாளராக அறியப்பட்டவர்கள்.

அப்படிப்பட்டவர், ஒரு சமயம் தன் மக்களை அழைத்து, ஒ குறைஷிகளே, உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த மலைக்கு பின்னாலிருந்து ஒரு படை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா? என்று கேட்ட போது,
ஆம், நம்புவோம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அந்த மக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி. மக்கா நகர மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள் அவர்கள்.
பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள், அப்படியென்றால் இதையும் கேளுங்கள். இறைவன் ஒருவனே, அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. நான் அவனுடைய தூதர், என்று கூறி சிலை வணக்கங்களை கண்டித்தபோது, அந்த மக்களுக்கு அவர் கூறிய அந்த செய்தி முற்றிலும் அந்நியமாகத் தெரிந்தது.
இது நாள் வரை பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, உண்மையாளராக இருந்த அவர் அந்த நாளிலிருந்து அந்நியராகப் பார்க்கப்பட்டார்.
ஆம், இனி அவர்களில் ஒருவரில்லை நாயகம் (ஸல்) அவர்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தியை ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்த ஏழையும் பணக்காரனும், கருப்பு நிறத்தை கொண்டவனும் வெள்ளை நிறத்தை கொண்டவனும்,அரபியோ அரபி அல்லாதவரோ,அடிமையோ சுதந்திரமானவனோ என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்நியரானார்கள்.
மக்கா நகரில் பெரிதும் மதிக்கப்பட்டாரே அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரும் அந்நியரானார். முஹம்மது (ஸல்) அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை கொன்றொழித்து விட்டுதான் வருவேன் என்று ஆவேசமாக புறப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள். அவர் கொலை வெறியுடன் புறப்பட்ட அந்த நாளிலேயே முஸ்லிமானார். அந்த நாளிலிருந்து அவரது சமூகத்தில் அவரும் அந்நியரானார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரிடத்தில் இந்த மூன்று குணங்கள் இருக்கிறதோ அவர் ஈமானை சுவைத்து விட்டார் என்று கூறி, முதல் குணமாக கூறியது, அவர் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் வேறு யாரையும் விட அதிகம் நேசிப்பார் என்பது.
ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தன் தந்தையிடம் கூறினார்,
“தந்தையே, உங்களை போரில் சந்திக்க நேர்ந்த போது, உங்கள் மீதான பாசத்தாலும், மரியாதையாலும் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டேன்”

அப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள், “வல்லாஹி, நான் உன்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை கொன்றிருப்பேன். ஏனென்றால் நீ அப்போது எதிரிகள் கூட்டத்தில் இருந்தாய்”.
அல்லாஹ்வையும் அவன் தூதரையும் யாரையும் விட அதிகம் நேசித்தவர்கள் அந்த அந்நியர்கள்.
இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். அவர்கள் ஹராமான பொருட்களை விற்று கொண்டிருக்கலாம், ஹராமான செயல்களை செய்து கொண்டிருக்கலாம், உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டு தொழாமல் இருக்கலாம். ஆனால் நீங்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களை பார்த்தால் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்லுவீர்கள், அவர்களுடன் காபி அருந்துவீர்கள், அவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள், அவர்களை கடந்து செல்லும்போது வாழ்த்து சொல்வீர்கள், ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பாக நடக்கும் போது அதை எடுத்து சொல்லமாட்டீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அதிகம் நேசிக்காததே காரணம்.
முஸ்லிம்களே, அந்த அந்நியர்கள் செய்த தியாகத்தை, வாழ்ந்த வாழ்க்கையைத் தான் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும்.