நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.
1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.
2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:
1. பொருளாசை.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய கண்ணை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
________________________________________
அனஸ்(ரலி) அறிவித்தார்.
(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.
________________________________________
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, ‘இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; எனவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!’ என்று (பாடியபடி) கூறினார்கள்.
________________________________________
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
________________________________________

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:
1. பொருளாசை.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
________________________________________
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.